என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
- பருப்பு கடத்தி வரப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல்.
- 60 மூட்டை 3 ஆயிரம் கிலோ ரேசன் துவரம் பருப்பை பறிமுதல்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் அத்தியாவசிய பொருட்கள் கடத் தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் உணவுப் பாொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் மும்முரமாக ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை பகுதிக்கு வெளியூரில் இருந்து ரேஷன் அரிசி மற்றும் பருப்பு கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அருப்புக் கோட்டையில் குடிமை பொருள் தனி வட்டாட்சியர் அறிவழகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அதிரடியாக வாகனத் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வேனில் மூட்டை, மூட்டையாக ரேசன் துவரம் பருப்பு கடத்தி வந்தது தெரியவந்தது. வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் அதிகாரிகளை பார்த்ததும் குதித்து தப்பி சென்ற நிலையில், அந்த வாகனத்தில் இருந்த 60 மூட்டை 3 ஆயிரம் கிலோ எடையுள்ள ரேசன் துவரம் பருப்பை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த ரேஷன் துவரம் பருப்பானது, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் இருந்து விருதுநகர் தனியார் மில்லிற்கு கொண்டு செல்ல இருந்ததாக தனி வட்டாட்சியர் அறிவழகன் கூறினார்.
இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- இறந்த இடத்தையும், தெய்வானை யானையையும் பார்வையிட்டார்.
- முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கி யதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.
இந்த துயர செய்தியை கேட்டவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சம்பவ இடத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்தார்.
அதை யானை வாங்கி சாப்பிட்டு தலையை அசைத்தது. பின்னர் அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சென்று சுவாமி மூலவர் மற்றும் சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியில் இருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து அவர் சிசு பாலன் மகள் அஷ்யாவிடம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3லட்சம் என ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-
யானை பாகன் இறந்த 10 நிமிடத்தில் யானை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. யானை பாகன் உயிரிழப்பு பாதிப்பில் இருந்து இன்னும் அது மீள வில்லை. யானை சரிவர உணவை உட்கொள்வதை தவிர்க்கிறது. தற்போது யானை நலனுடன் உள்ளது. 5 துறை சார்ந்த அதிகாரிகள் குழு யானையின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் கோவில் சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. யானைகள் குளிப்பதற்கு பிரத்யேக நீச்சல் குளம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
யானைகளுக்கு தேவையான அனைத்தும் செய்யக்கூடிய நிலையில் ஆண்டுதோறும் நடக்கும் புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பாக வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை செய்து முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்துணர்வு முகாமிற்கு அனுப்புவதற்கான பரிந்து ரைகள் வந்தால் அந்த பணி மேற்கொள்ளப்படும். கோவிலில் நடந்த சம்ப வத்தில் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுளளது.துறை சார்ந்த குழு தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது.
கால்நடை, வனத்துறை மருத்துவர்கள் குழு தொடர்ந்து அங்கேயே இருந்து கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு பணிகள் முடிந்த உடன் அடுத்தகட்ட நடவடிக்கை முதல்-அமைச்சரின் ஆலோ சனை படி எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 28 கோவில்களில் யானைகளுக்கு தேவையான அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணி மருத்துவர்களின் பரிந்து ரைப்படி உணவுகள், தேவையான மருத்துவ சிகிச்சைகள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது
யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சர் சேகர் பாபுவுடன் கோவில் தக்கார் அருள் முருகன், இந்து சமய அறநிலைய முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், வன கால்நடை மருத்துவர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்
- நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
- முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக வருகிற 28-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்கிறார். 29-ந்தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அரசு சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
விழுப்புரத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 21 சமூக நீதி போராளிகளுக்கான மணி மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியும் அப்போது நடைபெறுகிறது.
29-ந் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சமூக நீதி போராளிகள் குடும்பத்தினர் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சியினர் என முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராம தாஸ் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்ப ஏற்பாடு கள் நடந்து வருகிறது.
இதையொட்டி நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், சமூக நீதி போராளிகள் மணிமண்ட பம் திறப்பு விழாவில் பங்கேற்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அவருக்கும் மற்ற பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.
தற்போது பா.ம.க., பா.ஜனதா கூட்டணியில் இருந்து வருகிறது. தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பா.ம.க.க்கும் தலைவர்கள் தி.மு.க. அரசு விடுத்துள்ள அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பா.ம.க. நிர்வாகி கூறியதாவது:-
சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் நிகழ்ச்சி இது. பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கையும் கூட. அதனால் இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ள போவாரா? இல்லையா? என்பது இனி மேல் தான் தெரியவரும். ஆனால் இதில் அன்புமணி ராமதாசை பங்கேற்குமாறு கண்டிப்பாக அனுப்பி வைப்பார்.
அடுத்து ஆளப்போகும் கட்சியுடன்தான் கூட்டணி என்று அன்புமணி தொடர்ந்து கூறி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பா.ம.க. பங்கேற்க இருப்பது அரசியலுக்கான கூட்டணி அச்சாரம் என்று பலர் பேசுவார்கள். அது போக போகத்தான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
- அந்தந்த மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
சென்னை:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இது படிப்படியாக நகர்ந்து நாளை (25-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறுகிறது.
இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்-இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அப்போது மேலும் வலுப்பெற்று அது புயலாக விசுவரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உருவானால் அதற்கு 'பீன்ஜல்' என பெயர் சூட்டப்படலாம்.
இதைத் தொடர்ந்து வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாளை (25-ந்தேதி) முதல் வருகிற 28-ந்தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த, மிக பலத்த மழை பெய்யும்.
மேலும் கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் முதல் குமரிக் கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் வருகிற 29-ந்தேதி வரை மிதமான மழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கன மழையை பொறுத்த வரை சென்னை முதல் ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் 26 முதல் 28-ந்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (25-ந்தேதி)யும், கடலூர் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 26-ந்தேதியும் பலத்த மழை பெய்யும்.
இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தந்த மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
- ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- பிங்கர் போஸ்ட் முதல் வெலிங்டன் வரையுள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி:
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 27-ந் தேதி தமிழகம் வருகிறார்.
அன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வருகிறார்.
ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கும் அவர் 28-ந் தேதி குன்னூர் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரிக்குச் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 29-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.
30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு செல்லும் அவர் திருவாரூரில் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு டெல்லி திரும்புகிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் தீட்டுக்கல் ஹெலிகாப்டர் மைதானம் பகுதியில் வெளி ஆட்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதேபோல் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவு போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன் தீட்டுக்கல் முதல் ராஜ்பவன் வரை உள்ள சாலைகள், பிங்கர் போஸ்ட் முதல் வெலிங்டன் வரையுள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும்.
- அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சின்னியம்பாளையத்தில் நடந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தை எங்களது கோரிக்கையை ஏற்று சின்னியம்பாளையம் வரை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கோவை மாவட்டத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஒருவர் கூட முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை வைக்கவில்லை. சென்னை மாநகராட்சி 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதுபோல், கோவை மாநகராட்சியை 2-ஆக பிரிக்க வேண்டும்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என சில அரசியல் கட்சி தலைவர்கள் சுயநலத்துடன் பேசி வருகிறார்கள். விளைநிலங்கள் வழியாக கியாஸ் லைன் பதிப்பது விவசாயிகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சியிலும், சீமானிடமும் வித்தியாசத்தை காண முடிகிறது. சீமான் போக்கில் மாற்றம் தெரிகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. அதற்குள் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றியெல்லாம் கேட்கிறார்கள்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும். அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்களை நிறைவேற்றி கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும். விமானநிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயுள்ளனர்.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூடுபனி மற்றும் குளிர் நிலவி வருகிறது.
அதேபோல், பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு உள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயுள்ளனர்.
மேலும் தருமபுரி, அதியமான் கோட்டை, தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் அதிகாலை முதல் பனிப்பொழிவு, இருந்து வருகிறது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.
தமிழ் மாதமான கார்த்திகை மாதம் தொடங்கி, மாசி மாதம் என 4 மாதங்கள் வரை பனிப்பொழிவு அதிக மாக காணப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கார்த்திகை மாதத்தில் இன்று அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவியது. தற்பொழுது மாவட்டத்தில் சீதோஷ்ன நிலையானது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகள் போன்று உள்ளது. இந்த பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை அதிகளவு குளிர் இருக்கும். அந்த வகையில் தற்போது நவம்பர் மாத இறுதியில் ஓசூர் பகுதியில் கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
நேற்று அதிகாலை முதல் ஓசூர், சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.
இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை மெதுவாக ஓட்டிச்சென்றனர். பனிப்பொழிவு நேரங்களில் சாலை விபத்துக்கள் அதிக அளவும் நடை பெறும். அதனை தடுக்க பொதுமக்கள் சாலையோரம் நடந்தும், வாகனங்களிலும் மெதுவாக பயணித்தனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக, ஓசூர் பகுதியில் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள், பொதுமக்கள், தொழிற்சாலைகளுக்கு பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலதரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். காலை 9 மணி வரை இந்த நிலை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
- பனியன் உற்பத்தியாளர்களும் ஆர்டருக்கு ஏற்றவாறு ஆடைகளை அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.
திருப்பூர்:
சேலம் சொர்ணபுரி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 48). இவர் ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இணையதளம் மூலம் ஜவுளி ஆர்டர் தேவைப்படுவதாக திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டார்.
இதைத்தொடர்ந்து திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் விசாரித்தபோது, சாம்பிள் ஆடைகளை பார்த்து தேர்வு செய்து பாலமுருகன் ஆர்டர் கொடுத்துள்ளார்.
திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்களும் ஆர்டருக்கு ஏற்றவாறு ஆடைகளை அனுப்பி வைத்தனர். சிலருக்கு ஆர்டர் கொடுத்த தொகையில் பாதியளவு பணம் கொடுத்து வர்த்தகம் செய்ததாக தெரிகிறது.
இவ்வாறு திருப்பூரில் உள்ள பல பனியன் உற்பத்தியாளர்களிடம் கோடிக்கணக்கில் ஆடைகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் பாலமுருகன் திருப்பூர் வந்தபோது, அவரால் பாதிக்கப்பட்ட பனியன் உற்பத்தியாளர்கள் அவரை பிடித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆடை வாங்கிக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. முதல்கட்டமாக 5 உற்பத்தியாளர்கள் தங்களுக்கு ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். பாலமுருகனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகிறார்கள்.
- ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
- சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றால அருவிகளுக்கு வரும் தண்ணீரின் வரத்தும் சீரானது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை முதல் மிதமான வெயில் அடித்த தால் அருவி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மட்டும் இன்றி ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலைமோதியது.
விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் நீராடி குற்றாலநாதர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து சபரிமலைக்கு சென்றனர்.
மெயின் அருவி பகுதியில் இன்று காலை முதலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
- பொருட்கள் ஏலம் விடுவதற்கு தடை நீடிப்பு.
- விசாரணை ஜனவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
பெங்களூரு:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் கர்நாடக அரசு வசம் உள்ளது. அந்த பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை ஜெயலலிதாவின் அபராத தொகையை செலுத்தும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு அந்த கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் அவரது பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ.தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபாவின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வக்கீல் கிரண் ஜவளி ஆஜரானார்.
அப்போது அவர், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜராகி வாதிட மூத்த வக்கீல் சந்தேஷ் சவுட்டா தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு கடிதத்தை நீதிபதியிடம் வழங்கினார். அதை நீதிபதி சிவசங்கர அமரன்னவர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனவே ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் ஏலம் விடுவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.
- அணைக்கு 1183 கன அடி நீர் வருகிறது. 3381 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்த நிலையில் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 65 அடி வரை உயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் 1699 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து 58.79 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு 1183 கன அடி நீர் வருகிறது. 3381 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது. 395 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2955 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறையின் அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
- போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்லூர் அடுத்த எலுட்லாவை சேர்ந்த 13 தொழிலாளர்கள் திம்மம்பேட்டையில் உள்ள வாழைத்தோட்டத்தில் வேலைக்கு சென்றனர்.
நேற்று மாலை வேலை முடிந்து அனைவரும் ஒரே ஆட்டோவில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.
தலைகாரி பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ வந்தபோது எதிரே வந்த ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது.
ஆட்டோவில் இருந்த நாகம்மா, ராமாஞ்சினம்மா, பாலபெத்தைய்யா மற்றொரு நாகம்மா உட்பட 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரை சேர்ந்த 7 கூலி தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்