என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோயம்புத்தூர்
- கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது.
- நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.
பொள்ளாச்சி:
கோடை மழைக்கு பிறகு ஜூன் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆழியார் அணைக்கு வழக்கத்தை விட நீர்வரத்து அதிகமாக இருந்தது.
பல நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து பெய்த மழையால் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் 110 அடியை அணை எட்டியது.
அதன்பிறகும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. 118 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது. இருப்பினும் மலைமுகடுகள், நீரோடைகள் வழியாக அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்தது.
இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 75 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் 115 அடிக்கு மேல் நிரம்பியவாறு கடல்போல் காட்சியளிக்கிறது.
நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.
2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆழியார் அணையின் நீர்மட்டம் முழு அடியை எட்டி கடல்போல் ததும்புகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை வலுத்தால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் பாசனத்திற்கு போதுமான தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆழியார் அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளது. நடப்பாண்டில் பெய்த தென்மேற்கு பருவமழையால் ஜூலை மாதம் இறுதியில் முழு அடியை எட்டியது. தொடர்ந்து சில மாதமாக அவ்வப்போது மழை பெய்வதால், 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் 2 மாதமாக 118 அடியாக இருந்தது.
தற்போது 115 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 83 அடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் 75 நாட்களுக்கு மேலாக 115 அடியையும் தாண்டி இருக்கிறது. வரும் நாட்களில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது.
- லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் புளியகுளம் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது. அதில் முதியவர் மருதாசலம் என்பவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
?LIVE : லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை https://t.co/MsblJU9OhO
— Thanthi TV (@ThanthiTV) October 12, 2024
- கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கோவை:
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் கனமழை கொட்டுகிறது.
நேற்றும் மழை நீடித்தது. கோவை மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், காந்திபார்க், சிங்காநல்லூர், உக்கடம், குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து சாரல் மழை அடித்து கொண்டே இருந்தது.
இந்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாகனத்தை இயக்கி சென்றனர்.
புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வடவள்ளி, தொண்டாமுத்தூர், பேரூர், சூலூர், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் கடும் குளிரும் நிலவியது. இன்று காலையும் லேசான சாரல் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இருந்து வருகிறது.
இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 9.82 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:
சோலையார்-59, சின்னக்கல்லார்-49, சின்கோனா-42, வாரப்பட்டி பி.டபிள்யூடி அலுவலகம்-34, பெரிய நாயக்கன்பாளையம்-29, வால்பாறை பி.ஏ.பி-27, பொள்ளாச்சி தாலுகா-25, வால்பாறை தாலுகா-24, கோவை தெற்கு-22 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை.
- பிழையை மாற்றக் கோரி முதலமைச்சருக்கு கடிதம்.
கோவை:
கோவை பீளமேடு அடுத்த காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கிருத்திகா. இந்த தம்பதிக்கு பிரணவிகா (வயது10). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள பிரபல மாலில் படம் பார்க்கச் சென்றார்.
தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதில், "புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரைக் கொள்ளும் என்ற வாசகம் வந்தது.
அதை பார்த்த சிறுமிக்கு கொல்லும் என்பதற்கு பதிலாக கொள்ளும் என தவறாக இருப்பதாக சிறுமி தனது தந்தையிடம் கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த வாசகம் எழுத்துப் பிழையுடன் வருவதால் இதனை பார்க்கும் பல லட்சம் மக்களும், குழந்தைகளும் எழுத்துப் பிழையுடனே அதனை எழுத வாய்ப்புள்ளதாக கருதிய சிறுமி, தனது தந்தையுடன் சென்று திரையரங்கு மேலாளரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.
அதற்கு அவர், இந்த படத்தின் காப்பி மும்பையில் இருந்து வந்துள்ளது. அதனை தங்களால் மாற்ற இயலாது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவி இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் உள்ள எழுத்து பிழையை சுட்டிக்காட்டியும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கடிதம் எழுதி அனுப்பினார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை பழனிச்சாமி கூறியதாவது:-
கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்கச் சென்றபோது, படம் துவங்கும் முன்பு வந்த விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப் பிழை இருப்பதை எனது மகள் பார்த்தார்.
அதனை என்னிடம் தெரிவித்த அவர், எழுத்துபிழையை சரி செய்யாவிட்டால் அதனை பார்க்கும் அனைவரும் அதே எழுத்துப் பிழையுடன் எழுத வாய்ப்புள்ளது. அதனால் அதனை மாற்ற கோரி தமிழக முதலமைச்சருக்கு எனது மகளே கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
தமிழை ஊக்குவிக்க தமிழக முதலமைச்சர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். எழுத்து பிழையை உடனடியாக மாற்றுவார்கள். மேலும் தன்னுடைய மகள் கொரோனா காலத்திலும், மழை வெள்ள பாதிப்புகளுக்கும் தான் சேர்த்து வைத்திருந்த தொகையைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வாகனங்கள் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது.
- அரசு மருத்துவமனை கேண்டீனுக்குள் மழைநீர் புகுந்தது.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்தது.
நேற்று 2-வது நாளாக கோவை மாநகர் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழையானது இரவு வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
அதிகளவிலான தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல அடி தூரத்திற்கு காத்து நின்று ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து விடும்.
மழைநீர் புகாமல் இருக்க அந்த பகுதி உயர்த்தி தளம் அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று பெய்த மழைக்கு அரசு மருத்துவமனை கேண்டீனுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கிருந்து மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து எம்.எம். 4 கட்டிடத்தின் வார்டுகளுக்குள் புகுந்தது.
இதனால் அங்கு கடும் தூர்நாற்றம் வீசியது. நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர். உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் வார்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
- குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவி வந்தது. இரவிலும் கடுமையான அனல் காற்றடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
கடந்த 2 நாட்களாக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் மிதமான வெயிலும், மாலை நேரத்தில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வந்தது.
நேற்று காலை முதலே கோவை மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவியது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு, மழை பெய்ய தொடங்கின.
கோவை பாப்பநாயக்கன்பாளையம், ரெயில் நிலையம், அவினாசி சாலை, உப்பிலிபாளையம், காந்திபுரம், காந்திபார்க், சிங்காநல்லூர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் உள்பட மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே மாலை முதல் இரவு வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இரவில் மாநகரில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டியதும். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. அதன்பின்னர் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது.
இந்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி, லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சூலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இன்று காலை மழை பெய்யாவிட்டாலும் குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது. மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு தொடங்கி விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
குன்னூர் மற்றும் கிராமப்புற பகுதிகளான வெலிங்டன், அருவங்காடு, எல்லநள்ளி, சேலாஸ், குன்னக்கம்பை, தூதூர் மட்டம், கொலக்கம்பை, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
மழையால் மேகமூட்டம் அதிகரித்துள்ளதால் இன்று காலை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாக சென்றனர். கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில், ஜூன் மாதம் 37.2 மி.மீ மழையும், ஜூலையில் 43.8 மி.மீ மழையும், ஆகஸ்டில் 47.3 மி.மீ மழையும், செப்டம்பரில் 69.2 மி.மீ மழையும் சராசரியாக பெய்யும்.
நடப்பாண்டில் ஜூனில் சரிவர மழை பெய்யவில்லை. ஜூலையில் அதிகளவில் மழை பதிவாகியது. அதன்படி ஜூனில் 2 மழை நாளில் 27 மி.மீ மழையும், ஜூலையில் 8 நாளில் 89.3 மி.மீ மழையும் பெய்தது.
ஆகஸ்டில் 31 மி.மீ மழையும், செப்டம்பரில் 11.2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது 197.5 மி.மீ பெய்ய வேண்டும். ஆனால் நடப்பாண்டு 159.3 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரியை விட 19 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
- இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போர் கண்டனத்துக்கு உரியது.
- வனத்துறை அமைச்சர் பழங்குடி மக்களையும், வனங்களையும் பாதுகாக்க வேண்டும்.
கோவை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போர் கண்டனத்துக்கு உரியது. இது உலகளவில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் நேரு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டார்.
ஆனால் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் எதிரானது. எனவே நமது தேசம் இனஅழிப்புக்கு எதிராக செயல்பட வேண்டும். இதை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் 1500 தொழிலாளர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கு அவர்களுக்கு சட்டரீதியாக உரிமை உண்டு. இந்த விஷயத்தில் தலையிட்டு 3 அமைச்சர்கள் குழுவை அமைத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி.
கோவை மாவட்டத்தில் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை அபகரித்து ஆக்கிரமிக்கும் போக்கு அதிகளவில் நடந்து வருகிறது. மேலும் வனத்துறையினர் பழங்குடியிருனக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து நவீன விடுதிகளை அமைத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தரப்பட்டு உள்ளது. இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தனிப்பட்ட உரிமையாளருக்கு ஆதரவாக செயல்படுவது ஆபத்தானது. எனவே வனத்துறை அமைச்சர் பழங்குடி மக்களையும், வனங்களையும் பாதுகாக்க வேண்டும்.
மின்கட்டண உயர்வு சிறு-குறு தொழில்களை பாதித்து உள்ள விஷயத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று உள்ளோம். தேர்தலுக்கு பிறகு மின்கட்டண உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென சொன்ன மாநில அரசு, மின்கட்டண உயர்வில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ராஜபாளையம் பகுதியில் மூடப்பட்ட நூற்பாலை தொழிலை காப்பாற்ற, மூலப்பொருட்கள் கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். ஆனால் அனைத்திலும் அரசியல் செய்கிறீர்கள். கடவுளையாவது விட்டு வையுங்கள் என சுப்ரீம் கோர்ட்டு கண்டித்து விசாரணை குழுவும் அமைத்து உள்ளது. அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து விட்டது. நிறைய பிரச்சனைகள் உள்ள நிலையில் மக்களை திசை திருப்ப அற்பத்தனமாக அரசியல் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் அந்த ஓட்டலில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை:
கோவை அவினாசி ரோட்டில் உள்ள 3 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஓட்டல் ஒன்றில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதனால் போலீசார் அந்த ஓட்டலில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
ஓட்டல்களுக்கு வந்த இ-மெயில் மிரட்டலில் கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஜமேஷா முபின் இறந்து இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஐ.எஸ்.அமைப்பினர் அந்த ஓட்டல்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், காலை 10.30 மணிக்கு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வெடிகுண்டு சோதனையில் அது புரளி என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
காரணம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் தான் கோவையில் கார்குண்டு வெடித்து ஜமேஷா முபின் பலியானான். கோவையில் தீபாவளி கூட்டத்தில் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பெரும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியில் ஜமேஷா முபினே சிக்கி பலியானான்.
இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக 5-க்கும் மேற்பட்ட முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தற்போது தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புதுத்துணிகள், நகைகள் எடுப்பதற்காக கோவையின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் இப்போதே கூடத் தொடங்கி விட்டனர். இதை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் அதிகம் கூடும் கோவை ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி மற்றும் காந்திபுரம் கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு போன்ற இடங்களில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் நின்றவாறும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமாறும், சந்தேக நபர்கள் யாராவது தென்பட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் ஒலிபெருக்கிகள் மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
தீபாவளியை நெருங்கும் வேளையில் ஆயிரக்கணக்கான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
- விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் குலத்தொழில் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வானதி சீனிவாசன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு அனுமதிக்கவில்லை. குலத்தொழிலை திமுக அனுமதிக்க மறுக்கிறது. விஸ்வகர்மா சமுதாயத்திற்குரிய பெருமையான விஷயத்தையே குலைக்க நினைக்கிறார்கள். பெருமையை குலைக்க நினைப்பவர்களை கேள்வி கேட்க யாராலும் முடியவில்லை.
கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும், ஒரு பெருமை இருப்பதை போல குலத்தொழிலுக்கும் பெருமை உள்ளது என்றார்.
விஸ்வகர்மா சமூகத்தினர் முன்பாக குலத்தொழில் குறித்து பேசிய வானதி சீனிவாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
வானதி சீனிவாசனின் பேச்சு ஆணவத்தின் உச்சம். குலத்தொழிலை பற்றி பேசும் அனைவரும் அவர்களின் குலத்தொழிலை செய்யப்பட்டும். வானதி தனது குலத்தொழிலை செய்ய தயாரா என்று திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
- சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது.
- யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள், மான், காட்டு மாடு, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை சிறுமுகை வனச்சரகத்துக்கு இடையே அமைந்து உள்ளதால், வனவிலங்குகள் இந்த ரோட்டை கடந்து வனத்தின் மறுபுறம் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலைகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சாலையில் உள்ள முதல் வளைவு அருகே, ஒற்றை காட்டு யானை சாலையோரம் உலா வந்தது.
இதனை கண்ட வாகனஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு வனத்துறைக்கு தகவலளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்ட முயன்றனர்.
இருப்பினும் அந்த யானை 2-வது வளைவு அருகே சென்று நீண்ட நேரம் சுற்றி திரிந்தது. பின்னர் வனத்துறையின் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் வாகனஓட்டிகள் நிம்மதி அடைந்து, தங்களின் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-
கோத்தகிரி சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே கோத்தகிரி சாலை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்க வேண்டும்.
சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது. அதேபோல யானை அருகே சென்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது. மேலும் யானையை துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம். மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது.
வடவள்ளி:
வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை இன்னும் சில நாட்களில் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவு பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு முன்னறிவிப்பு பெறப்பட்டது.
இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக பெய்யும் சராசரி மழை அளவு, எதிர்பார்க்கப்படும் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சென்னை 810-850, கோவை 338-360, மதுரை 370-390, நெல்லை 515-540, திருச்சி 379-410, சேலம் 331-360, நீலகிரி 501-510, திருப்பூர் 306-330, கரூர் 313-330, கன்னியாகுமரி 533-540, நாமக்கல் 270-270, மயிலாடுதுறை 888-900, நாகப்பட்டினம் 935-950, தஞ்சை 579-610, திருவாரூர் 725-760, திருவண்ணாமலை 450-490, தூத்துக்குடி 442-450, ராணிப்பேட்டை 406-420, கிருஷ்ணகிரி 278-290, தர்மபுரி 314-340, கடலூர் 702-720.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பூசாரி விக்னேஷ் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.
- தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.
இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் பலருக்கும் சம்மன் அனுப்பியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநாடு எஸ்டேட் மற்றும் சென்னை போயஸ் கார்டனில் பல வருடங்களாக பூசாரியாக பணியாற்றி வந்த கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் புதுச்சேரியை தனியார் வங்கிக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்படி கோத்தகிரியை சேர்ந்த பூசாரி விக்னேஷ் இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.
அவரிடம் கொடநாடு சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை பற்றி தெரியுமா? எவ்வளவு நாட்களாக அங்கு வேலை பார்க்கிறீர்கள்.
கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தெரியுமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.
இதேபோல் தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் வங்கி கணக்கு மற்றும் பரிவர்த்தனைகள் பற்றி கேட்டு விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை முடிந்த பின்னரே அவர்களிடம் எது தொடர்பாக விசாரித்தனர் என்ற தகவல் தெரியவரும்.
ஒரே நாளில் 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்