என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஈரோடு
- வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.
- விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப் பாளையம் கிராமத்தில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சென்றவாரம் ஊர் கவுண்டரின் 2 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இன்று விடியற்காலையில் மலைக்காரி ஆயா அலமேலு என்பவரின் 5 ஆடுகளை பல நாய்கள் சேர்ந்து கடித்து கொன்றுள்ளது. எனவே காட்டுப்பாளையம் பிரம்மதேசம் புதூர் பகுதியில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுவதால் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
- கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
எனவே நீர் திறப்பை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர். தொடக்கத்தில் 250 கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு தற்போது 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நேற்று மாலை 57-வது மைலைக் கடந்த நிலையில் 47 ஆவது மைல் பகுதியாக உள்ள நல்லாம்பட்டியில் உள்ள மழைநீர் வடிகால் பாலத்தில் நேற்று மாலை விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சிறிது சிறிதாக அதிகரித்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது.
தொடர்ந்து விரிசல் அதிகரித்தால் மழைநீர் கால்வாய் உடையும் அபாயம் இருப்பதாக கருதி அப்பகுதி விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டது.
இது குறித்து மழைநீர் வடிகால் விரிசலை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் இரவோடு இரவாக தொடங்கினர்.
இதுக்கு அடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், நல்லாம்பட்டி வாய்க்காலுக்கு அடியே மழை நீரும் வாய்க்கால் கசிவு நீரும் வடிந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை உள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் வழியாக மழை பெய்யும் போதும் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும் போதும் வழக்கமாக தண்ணீர் வெளியேறுவது வழக்கம் தான். இதைத்தான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதாக சிலர் வதந்தி கிளம்பி விட்டிருக்கிறார்கள். தற்போது சுரங்கப்பாதைக்குள் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை கண்டுபிடித்து அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை நல்லாம்பட்டி அருகே ஒட்டங்காடு பகுதியில் கீழ்பவானி கால்வாயின் 47வது மைலில் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள கசிவு பகுதியை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கீழ்பவானி கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த மழைநீர் வடிகால் மிகவும் பழமையானது.இந்தாண்டு மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணிக்கு போதிய அவகாசம் இல்லை. அடுத்தாண்டு இந்த வடிகாலை சீரமைக்க திட்டம் உள்ளது.
இதில் எப்போதும் தண்ணீர் செல்லும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தாண்டு சற்று கூடுதலாக செல்வதாக சந்தேகம் எழுந்ததால் இடையில் நிறுத்தி சீரமைக்கும் பணியானது முடிக்க வேண்டும் என்பதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்விற்கு குறைந்த பட்சம் 15 நாட்கள் ஏற்படும் என்பதால் தற்காலிக பணிகள் மூலம் இந்த போகத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால் உள்ளது. அவற்றில் எந்தவித பாதிப்பும் இல்லை. இனி தண்ணீர் செல்லும் போது மழைநீர் வடிகாலில் கசிவு ஏற்பட்டால் அங்கும் தற்காலிக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழ்பவானி கால்வாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதன் கசிவு நீரை பயன்படுத்தும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் கூடுதலாக கசிவு சென்றுகொண்டிருக்கிறது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முழு ஒத்துழைப்பு அளித்த விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் பாராட்டுகிறோம்.
- ஒரு சிலர் நிலம் தர விருப்பம் இல்லாமல் இருந்தார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் முதலாவது நீரேற்று நிலையத்தில் இன்று வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. அதன் பிறகு பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் விவசாயிகள் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பவானி அடுத்த காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரி நீரை பம்ப் செய்ய 3 மோட்டார் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால் பைப்லைன் போடப்படவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை விரைவுப்படுத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த 3 முதல் மோட்டார் பம்ப் ஹவுஸ் பகுதிகளில் இடம் வாங்கப்பட்டது. அதன் பிறகு பணிகள் துரித படுத்தப்பட்டு கடந்த ஜனவரி 2023 முடிவடைந்தது. ஆனால் பவானி ஆற்றில் உபரி நீர் வரவில்லை. தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வருகிறது. நேற்று ஆயிரம் கன அடி வந்தது.
காலிங்கராயன் அணைக்கட்டு பகுதி கால்வாயில் இருந்து 1.5 டிஎம்சி மொத்தம் உள்ள 6 நீரேற்று நிலையங்கள் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் பகுதியில் உள்ள 1045 குளங்களுக்கும் அனுப்பப்படும். முக்கிய பைப் லைன் 8 அடி விட்டம் உள்ளது. அது 105 கிலோமீட்டர் உள்ளது. இதை தவிர குளங்களுக்கு செல்லும் பீடர் லைன் சுமார் ஆயிரத்து 65 கிலோ மீட்டர் உள்ளது. நாங்கள் சோதனை செய்தபோது சில இடங்களில் பழுதடைந்து இருந்தது. அதை எல்லாம் நாங்கள் சரி செய்தோம். கீழ்பவானி பாசன கால்வாய்க்கு 15-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதிலிருந்து வரும் கசிவு நீர் 10 அல்லது 15 நாட்களுக்குள் காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதிக்கு வந்துவிடும். அதன் பிறகு தொடர்ந்து 70 நாட்களுக்கு இங்கிருந்து 1.5 டிஎம்சி நீர் 1045 குளங்களிலும் நிரப்பப்படும். இதை தவிர பவானி ஆற்றில் பெய்த மழையால் தற்போது அணைக்கட்டு பகுதிக்கு உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மொத்தமுள்ள 1045 குளங்களில் 1020 குள ங்களுக்கு நீர் சென்றுவிடும். ஒரு சில இடங்களில் பைப் லைனில் பழுது உள்ளதால் அங்கு தண்ணீர் செல்லவில்லை. அதுவும் சரி செய்யப்பட்டு விடும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஏன் இதை திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கேட்டுள்ளார். உபரி நீர் தற்போது தான் வந்துள்ளது. அதனால் தான் திட்டத்தை இப்போது துவக்கி வைத்துள்ளோம். உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வராமல் இருந்தால் இத்திட்டத்தை துவக்கி வைத்து குளங்களுக்கு நீர் அனுப்ப முடியாது. ஒரு தடை ஏற்பட்டிருக்கும்.
அப்போது அரசை அண்ணாமலை குறை சொல்வார். எனவே தான் இந்த அரசு கவனமாக உபரி நீர் வந்த பிறகு திட்டத்தை துவக்கி வைத்துள்ளது. இந்த அரசு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டது. விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நிலங்களுக்கு நட்ட ஈடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஒரு சிலர் நிலம் தர விருப்பம் இல்லாமல் இருந்தார்கள். அவரிடம் பேசி நிலத்தை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கென்று தனி அரசாணை வெளியிடப்படும். இன்னும் சில தினங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு விடும். மற்ற திட்டத்தைப் போல் அல்லாமல் இத்திட்டத்தில் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்த விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் பாராட்டுகிறோம். முழுமையாக பணிகள் முடிந்துள்ளது. ஒரு சில பணிகள் பாக்கி உள்ளன. ஒப்பந்ததாரர் லாசன் ட்யூப்ரோ நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு திட்டத்தை பராமரிக்கும் பணியையும் மேற்கொள்ளும். சில குளங்கள் விடுபட்டுள்ளன.
அந்த குளங்களுக்கு திட்டத்தின் மூலம் நீர் வழங்கும் வாய்ப்பு இல்லை. இப்போது வரும் நீரை கொண்டு 1045 குளங்களுக்கு நீர் நிரப்பப்படும். விடுபட்ட குளங்களுக்கு என்றால் தனியாக திட்டம் போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள், மாணவர்கள் பல்வேறு அமைப்பினர் மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி வேண்டியும், மருத்துவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 400 மருத்துவமனைகள், 2 ஆயிரம் மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பாக தனியார் மருத்துவமனை முன்பு போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று தீவிர சிகிச்சை பிரிவு தவிர மற்ற அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் நடைபெறவில்லை.
இதனால் இன்று அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பெண் பயிற்சி டாக்டர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பணி புரிந்து வருகின்றனர்.
- கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி-சத்தியமங்கலம் சாலை கள்ளிப்பட்டி பகுதியில் சாலையோரம் பல வணிக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
இந்நிலையில் சாலையோரத்தில் உள்ள உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர்கள் இன்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்றனர். அப்போது 2 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது டேபிள் டிராயரில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கோமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பூட்டி இருந்த உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகளுக்கு டிப்டாப் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் வந்தது பதிவாகி இருந்தது. அந்த மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை. அக்கம் பக்கம் பார்த்து நோட்டமிட்டவாறே கடைகளில் அமர்ந்து அடுத்தடுத்து உள்ள 2 கடையின் சட்டர்களையும் இரும்பு கம்பி கொண்டு நெம்பி 2 கடைகளுக்குள் சென்று பணத்தை கொள்ளையடித்து சென்றது சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி உள்ளது.
இந்த காட்சி தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் பிடித்து கைது செய்வதோடு, இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
- கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பொழிந்தது. நள்ளிரவு 2 மணி வரை பொழிந்த இந்த மழையால் செலம்பூர் அம்மன் கோவிலில் இருந்து எண்ணமங்கலம் செல்லும் பாதையில் பேச்சுப்பாறை பாலம் காற்றாற்று ஓடை நீரால் ஏற்கனவே உடைந்திருந்த நிலையில் இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு இருந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
எண்ணமங்கலம் கிராமத்தில் 2 வீடுகளில் தண்ணீர் புகுந்திருந்தது. விடிய ற்காலை 4 மணி அளவில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் செட்டி நொடி பள்ளம் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனம் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வாகனம் என சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.
மேலும் சம்பவ இடத்திற்கு பவானி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் பாபு, சரவணன், நெடுஞ்சாலை ஆர்.ஐ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஜே.சி.பி. உதவியுடன் சாலையில் உள்ளமண் சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகி ன்றார்கள். நெடுஞ்சாலை துறையுடன் பர்கூர் காவல் துறையினரும் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.
- காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன.
- வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும், வாகனங்களை வழி மறித்து உணவு இருக்கிறதா? என்று தேடுவதும் தொடர்கதை ஆகிவருகிறது.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தனது குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையோரம் முகாமிட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். சிலர் தங்களது செல்போன்களில் யானை கூட்டத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
சிறிது நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டுயானை கூட்டம் சாலையைக் கடந்து பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
எனினும் அதே பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
- கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை வெகுவிமர்சியாக மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தையுடன் நடைபெற்றது.
இதையடுத்து தேர்த்திருவிழா நடந்தது. இதை தொடர்ந்து குருசாதசாமி கோவிலில் தேர்நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். விழாவில் அமைக்கப்பட்டு உள்ள பொழுது போக்கு அம்சங்களை காணதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் தினமும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து குருநாதசாமி கோவில்விழா இன்று பால் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த பண்டிகைக்காக 9 இடங்களில் பக்தர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன. மாடுகளை ஏற்றி வருவதற்காக 45,000 டெம்போக்களும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து 1 லட்சம் கார்களில் பக்தர்கள், வியாபாரிகள் வந்திருந்தனர்.
மேலும் 12 ஆயிரம் மாடுகள், ஆயிரம் குதிரைகள் கால்நடை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. குதிரைச் சந்தை பகுதிகளில் சூதாட்டம் உள்ளிட்ட 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு தஞ்சாவூர் சாஷ்டராயூனிவர் சிட்டியில் இருந்து 5 பேர் கொண்ட டீம், ஏ, டெக்னாலஜி பயன்படுத்தி பழைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் பிக் பாக்கெட் உள்ளிட்ட வழக்குகளில் 8 பேர் கைது செய்து சறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த முறை 4 இடங்களில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளான ராட்டணம், சாகச கிணறு, குழந்தைகள் விளையாட்டு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன். இதனால் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் அண்ணா மடுவு ஜி.எச் கார்னர், பஸ் நிலையம் ரவுண்டானா, வெள்ளப்பிள்ளையார் கோயில், வனம், கெட்டி சமுத்திரம் ஏரி பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டு போக்குவரத்தில் சிரமம் இன்றி தங்கு தடை இன்றி செல்ல வழிவகை செய்திருந்தனர்.
கடந்தாண்டு வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப் பட்டு இருந்தது. இந்த ஆண்டு அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ரவுண்டான பகுதியில் இருந்து நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் இந்த மாற்றத்தினால் போக்குவரத்து நெரிசல் சற்று சரி செய்யப்பட்டது.
- மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சுமார் 15 கிலோ தூரம் சுற்றி சாலை மார்க்கமாக பஸ்களில் சென்று வருகிறார்கள்.
அம்மாபேட்டை:
கர்நாடகா மாநிலம் மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், கொடிமுடி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை - பூலாம்பட்டிக்கு காவடிரி ஆற்றில் படகு போக்குவரத்து இருந்து வருகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு போக்குவரத்து நிறத்தப்பட்டது.
இதை தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதையடுத்து நெரிஞ்சிபேட்டை - பூலாம்பட்டிக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கி நடந்து வந்தது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது அணையில் இருந்து காவிரி ஆற்றில் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி நெரிஞ்சிபேட்டை - பூலாம் பட்டிக்கு செல்லும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து படகுகள் நெரிஞ்சிபேட்டை காவிரி கரையோரங்களில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தபட்டு உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தால் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அம்மா பேட்டை, நெரிஞ்சிபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சுமார் 15 கிலோ தூரம் சுற்றி சாலை மார்க்கமாக பஸ்களில் சென்று வருகிறார்கள்.
- சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.
- சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவண்ணா என்பவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். வனப்பகுதியை ஒட்டி இவரது தோட்டம் அமைந்துள்ளது.
நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சிவண்ணா தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை கடித்துக் கொன்றது. காலையில் எழுந்து சிவண்ணா பார்த்த போது ஆடு கொடூரமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தை கால் தடம் என்பதை உறுதி செய்தனர். இதனைக் கேட்டு விவசாயிகள் பீதி அடைந்தனர்.
தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது.
- நூல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கி வருகிறது. 1 கோடியே 79 லட்சம் வேட்டி-சேலை உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 238 கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் நூல் வழங்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் 50 சதவீத உற்பத்தி ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் நூல் வழங்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் உற்பத்தி முடிக்கப்படும். ஜனவரி முதல் வாரத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கு இதுவரை நூல் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி திட்டத்தில், இந்த ஆண்டு சேலை உற்பத்திக்கு பருத்தி நூலுக்கு பதிலாக பாலிஸ்டர் நூல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விசைத்தறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் பகுதியில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டிருந்தன. இதை போல் பள்ளிபாளையம், திருச்செங்கோட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதை தொடர்ந்து இன்று காலை ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர். கே.இ.பிரகாஷ் தமிழ்நாடு விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கடந்த வருடம் இலவச வேட்டி-சேலை தயாரிக்க எந்த நடைமுறை பின்பற்றபட்டதோ அதே நடைமுறை இந்த வருடமும் பின்பற்றபடும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற தமிழ்நாடு விசைத்தறியார்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதை தொடர்ந்து விசைத்தறிகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கின.
- இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட எதிர்ப்பு.
- அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பவானிசாகர் பேரூராட்சி பகுதியில் ஏற்கனவே 420 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.
இதற்கிடையே மேலும் 120 வீடுகள் கட்டுவதற்காக பவானிசாகர் பேரூராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பவானிசாகர் பகுதியில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பவானி சாகர் மார்க்கெட் சதுக்கத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், 15 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பவானிசாகர் அண்ணா நகர் கடை வியாபாரிகள் சங்கம் அனைத்து வணிகர் சங்கம் மூத்த குடிமக்கள் சங்கம் கட்டிட பொறியாளர்கள் சங்கம் பொதுப்ப ணித்துறை ஊழியர்கள் சங்கம் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பெரும்பா லும் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் 100 குடும்பங்கள் முதல் 300 குடும்பங்கள் வரை மட்டுமே உள்ளனர்.
ஆனால் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ஆயிரம் குடும்பங்கள் உள்ளதால் இங்கு பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது.
எனவே இப்போது உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.
ஏற்கனவே இங்கு வகிக்கும் 420 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கோழிப்பண்ணை பகுதியில் புதிதாக வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 120 வீடுகள் கட்ட அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இங்கு இலங்கை தமிழர் முகாமில் மக்கள் தொகை அதிகரித்துள்ள சூழ்நிலையில் இங்கு உள்ள முகாம் குடும்பங்களை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் பவானி சாகர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 120 வீடுகள் கட்டுவதை தவிர்த்து திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மேலும் தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ளது போல் பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில் உள்ள ஆயிரம் குடும்பங்களை 300 குடும்பங்களாக குறைக்க வேண்டும் என்பது எங்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதோடு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்