search icon
என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
    • கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் எஸ்.பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம், திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகிய 3 பேர் அவர்கள் வகித்து வரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இவர்களை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நீக்கி உள்ளார்.

    நீக்கப்பட்ட 3 பேரும் குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஆவர். குடவாசல் காவனூர் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் பா.ஜ.க.வில் விவசாய பிரிவு மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர். இவர் ஓகை என்ற இடத்தில் அடகு கடை நடத்தி வந்த நிலை நிலையில் பைக்கில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அதில் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே கூலிப் படையினர் தனது கணவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாஸ்கர், செந்திலரசன் ஆகியோரை கைது செய்தனர். பின்பு அவர்கள் ஜமீனில் வெளியில் வந்தனர்.

    தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலை தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.
    • ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகர பகுதியையொட்டி காவல் நிலையங்களில் முக்கியமானது கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலையம். இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சில மாதங்களாக மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதாக புகார் எழுந்தது.. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஆதாரத்துடன் சிலர் புகார் அளித்தனர்.

    அதை தொடர்ந்து, எஸ்பியின் தனிப்படை போலீசார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.

    அதில் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து எஸ்பி வருண்குமார், ஓபன் மைக்கில், "கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர மீதமுள்ள போலீசார் 22 பேரையும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு நேரடியாகச் சென்று ஒரு மணிநேரத்துக்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும்"என்று உத்தரவு பிறப்பித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் நேற்று இரவுக்குள் மாவட்ட ஆயுதப்படைக்கு சென்று ரிப்போர்ட் செய்தனர். ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.

    • திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.
    • ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர்.

    திருச்சி:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் இஸ்லாமியர்கள் உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆடுகள் குர்பானி கொடுத்து தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பண்டிகைக்கு அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை இன்று களை கட்டியது. இங்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.

    அதேபோன்று திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி வழக்கத்துக்கு மாறாக வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது.

    100-க்கும் மேற்பட்ட டெம்போக்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சந்தை நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை 9 மணி வரை நடந்தது. இதில் ரூ. 2½ கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வழக்கமாக இந்த சந்தையில் நாளொன்றுக்கு ரூ.1 கோடி முதல் 1½ கோடி வரை வியாபாரம் நடைபெறும். நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை நடைபெறுவதால் இன்று ரூ.1 கோடி அளவுக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது.

    ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர். பொதுவாக ஒரு ஆடு ரூபாய் 8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகும்.

    இன்று நடைபெற்ற சந்தையில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ 22 ஆயிரம் வரை அதிகபட்சமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் செம்மறி ஆடுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. இன்று நடைபெற்ற சந்தையில் 5 ஆயிரத்து 500 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

    • பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.
    • குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திருச்சி:

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் உடல் கருகி பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் உடல்கள் விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதில் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜு எபினேசர் (வயது 54) என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இவர் அங்குள்ள பெட்ரோலியம் மற்றும் ஆயில் நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் ட்ரெய்லர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

    இவர் அந்த நிறுவனம் வழங்கிய தங்குமிட தொழிலாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது தீ விபத்தில் சிக்கியுள்ளார். அவர் இறந்ததாகவும், அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் வந்த முரண்பட்ட தகவல்களால் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.

    தனது தந்தையின் நிலை அறிய வேண்டி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை அவரது மகன் குணசீலன் ஒரு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் கூறும் போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலமாக தந்தையிடம் பேசினேன். பின்னர் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்து. அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.

    ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அரசு கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை ஆனால் இதுவரை அவருடைய நிலையை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. இதற்கிடையே அப்பா பணியாற்றி வந்த தனியார் நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது என்னுடைய தந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் தூதரக அதிகாரி இதை உறுதி செய்யவில்லை என தெரிவித்தார்.

    இதற்கிடையே கலெக்டரிடம் மனு அளித்து சென்ற பின்னர் நேற்று இரவு சென்னையில் இருந்து தமிழக அரசின் அயலக தமிழர்கள் நல வாழ்வு துறை அதிகாரி ஒருவர் குணசீலனை தொடர்பு கொண்டு அவரது தந்தை எபினேசர் உயிரிழந்ததை உறுதி செய்தார்.

    அப்போது தந்தையின் உடலை விமான மூலம் கொச்சிக்கு கொண்டு வந்து பின்னர் திருச்சிக்கு கொண்டு வருவதாகவும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து தரும் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு ராஜூ எபினேசரின் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.

    எபினேசரின் மனைவி ராஜேஸ்வரி கூறும்போது, கடந்த 11-ந் தேதி மாலை கணவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். விசா முடிவதால் அடுத்த மாதம் ஊருக்கு வருவதாக கூறியிருந்தார். அவர் பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.

    குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • பிரசவவலி அதிகமாகவே தனலட்சுமிக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    • தாய் சேய் இருவரும் நலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    மணப்பாறை:

    மணப்பாறையை அடுத்த கே பெரியபட்டி அருகில் உள்ள தெற்கு சேர்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி தனலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியகா இருந்த தனலட்சுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனே அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மணப்பாறையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு சென்று தனலட்சுமியை ஏற்றிக் கொண்டு மணப்பாறை நோக்கி சென்றது.

    வரும் வழியில் பிரசவவலி அதிகமாகவே தனலட்சுமிக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனலட்சுமிக்கு 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நிபுணர் நல்லழகர், ஓட்டுனர் காளிமுத்து பணியில் இருந்தனர்.

    பின்னர் தாய் சேய் இருவரும் நலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
    • சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் கடத்தல் தங்கம் கடத்தப்பட்டு வருவது, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஜூஸ் மிக்சருக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி (தோராயமாக) மதிப்பிலான 2.579 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்புகளை தாண்டி குதித்து அஞ்சல் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர்.
    • போலீசாரும், மாணவர்களும் சாலையில் புரண்டு உருண்டனர்.

    திருச்சி:

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநாடு மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். திருநகர் மாவட்ட தலைவர் வைரவளவன், மாவட்ட செயலாளர் ஆமோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நீட் தேர்வு குளறு படிகளை சுட்டிக்காட்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர் சங்கத்தினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது, மாணவர் சங்கத்தினர் சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சூர்யா மற்றும் சிலர் அஞ்சல் அலுவலகம் முன்பு அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி குதித்து அஞ்சல் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் கே.முருகவேல் தலைமை யிலான போலீசார் தடுப்புகளை தாண்ட முயன்ற மாணவர்களை இழுத்தனர். இதில் போலீசாரும், மாணவர்களும் சாலையில் புரண்டு உருண்டனர்.

    ஒரு மாணவர் தடுப்பு களை தாண்டி அஞ்சல் அலுவலக நுழைவாயில் கதவு மீது ஏற முயன்றார். அவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி வந்தனர்.

    பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு போலீசார் நான்கு மாணவிகள் உட்பட 11 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும்.
    • பயணிகளுக்கும், பயணிகளுடன் வருபவர்களுக்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 2-ந்தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவுபெறாததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. தற்போது, பணிகள் நிறைவு பெற்றன. இதனால் இன்று முதல் புதிய முனையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

    முன்னதாக திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 100 சதவீத பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து இன்று காலை 6 மணி முதல் அனைத்து விமானங்களும் இயக்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் புதிய முனையத்தை பயன்படுத்த வேண்டும்.

    உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும். 75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44½ லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு 3,480 பயணிகளை கையாள முடியும். புதிய முனையத்தில் 104 குடியுரிமை கவுண்ட்டர்கள் செயல்பட உள்ளது.

    பயணிகளுக்கும், பயணிகளுடன் வருபவர்களுக்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய முனையத்தில் முதல் கட்டமாக 5 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்த உள்ளோம். மீதமுள்ள 5 ஏரோ பிரிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். புதிய முனையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் பஸ் இயக்க போக்குவரத்து துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17 லட்சத்து 60 ஆயிரம் பயணிகளை கையாண்டுள்ளோம். அதில் சர்வதேச பயணிகள் மட்டும் 13 லட்சத்து 50 பேர் ஆவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினமும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கடத்தி வரப்படும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது 3 பயணிகள் தங்களது லேப்டாப்பில் தங்க தகடுகள், தங்க கட்டி, தங்க செயின் ஆகியவற்றை மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம். அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு 26 லட்சம் ஆகும். இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வருகிற 11-ந் தேதி காலை 6 மணி முதல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டு அதற்கான நிறைவு பணிகள் நடைபெற்று வந்தது. இதன் பயன்பாட்டிற்கான தேதி நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெறாத காரணத்தினால் செயல்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் ஜூன் 11-ந் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து புதிய விமான நிலையம் முனையத்தின் செயல்பாடுகளை தொடங்கும் வகையில் அதற்கான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்து வருகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து வருகிற 11-ந் தேதி காலை 6 மணி முதல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் விமான நிலையத்தில் அலுவலகங்கள், விமான நிறுவனத்தின் அலுவலகங்கள், தீயணைப்பு துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அலுவலகம் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • துறையூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    திருச்சி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி, கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    அந்த வகையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. திருச்சி மாநகரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தில்லை நகர் பகுதியில் வாகனங்கள் மழை நீரில் நீச்சல் அடுத்தபடி சென்றன. இந்த மழையினால் கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி, கிராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

    துறையூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் துறையூர் பஸ் நிலையம், திருச்சி ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதேபோன்று லால்குடி, மணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, முசிறி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் நேற்று இரவு குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவியது. மானாவாரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 545.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பகுதி வாரியாக பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கள்ளக்குடி 17.2, லால்குடி 9.4, நந்தியாறு அணைக்கட்டு 25 .6, புள்ளம்பாடி 33, தேவிமங்கலம் 13.4, சமயபுரம் 14.2, சிறுகுடி 10.2, வாத்தலை அணைக்கட்டு 8.4, மணப்பாறை 29, பொன்னணியாறு அணை 8.2, கோவில்பட்டி 20.2, மருங்காபுரி 36.4 ,முசிறி 37, புலிவலம் 10, தாப்பேட்டை 5, நவலூர் கொட்டப்பட்டு 39.5, துவாக்குடி 22.2 கொப்பம்பட்டி 43, தென்பர நாடு 29, துறையூர் 17, பொன்மலை 29.4, திருச்சி ஏர்போர்ட் 34.3, திருச்சி ஜங்ஷன் 34, திருச்சி டவுன் 20.

    • என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை.
    • . நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது வரை நான் முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன். தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள். யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர்.

    என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை. எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றதும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி,சேரன், மணவை தமிழ் மாணிக்கம், மாநில துணை செயலாளர் ரொசையா நிர்வாகிகள் கவுன்சிலர் அப்பீஸ் முத்துக் குமார், எல்லக்குடி அன்புராஜ், துரை வடிவேல், பகுதி செயலாளர்கள் ராமமூர்த்தி, ஆசிரியர் முருகன், ஆடிட்டர் வினோத் மற்றும் பலர் உள்ளனர்.

    ×