search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    • 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால் பேட் கம்மின்ஸ் சாதனையை அஸ்வின் முறியடிப்பார்.
    • 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வால்ஷ் சாதனையை முறியடிப்பார்.

    இந்தியா வந்துள்ள வங்கதேச அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தொடரில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகளை படைவிருக்கிறார். இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் முதலிடத்தில் உள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் இதுவரை 43 போட்டியில் விளையாடியுள்ள அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போது 174 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்தில் அஸ்வின் இருக்கிறார். 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கம்மின்சை பின்னுதள்ளி விடுவார்.

    மேலும் 14 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார். அதோடு மட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தும் வாய்ப்புள்ளது.

    இந்தியாவில் 126 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 455 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். அவர் வங்கதேச தொடரை 22 விக்கெட்டுகளுடன் முடித்தால், இந்திய மண்ணில் விளையாடிய போட்டிகளில் 476 சர்வதேச விக்கெட்டுகள் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார்.

    இதை தவிர, 4 மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்தினால், டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கர்ட்னி வால்ஷ் (519), ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் (530) ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார். மேலும் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஷேன் வார்னேவின் (37 முறை) 5 விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார். 5 விக்கெட்டுகள் அதிக முறை எடுத்தவர்கள் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (67) முதல் இடத்தில் உள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2023-25-ல் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த தொடரில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினால் WTC-l அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை அஸ்வின் பெறுவார்.

    • ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்.
    • நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்திய சமி, கடந்த நவம்பருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் சமி விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 34 வயதான முகமது சமி தற்போதைய தனது உடல்தகுதி குறித்து கூறியதாவது:-

    நான் சில காலமாக இந்திய அணிக்கு விளையாடாமல் இருப்பதை அறிவேன். அதனால் அணிக்கு விரைவாக திரும்ப கடுமையாக முயற்சித்து வருகிறேன். இருப்பினும் நான் அணிக்கு திரும்பும் போது, உடல் அளவில் எந்த வித அசவுகரியமும் இன்றி இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது.

    அடுத்து வரும் வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என எந்த அணிக்கு எதிரான தொடராக இருந்தாலும் அவசரப்பட்டு அணிக்கு வந்து, மறுபடியும் காயமடைந்தால் சிக்கலாகி விடும். அதனால் இந்த விஷயத்தில் நான் எந்த 'ரிஸ்க்'கும் எடுக்க விரும்பவில்லை.

    ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன். ஆனால் 100 சதவீதம் உடற்தகுதியை அடையும் வரை அணிக்கு திரும்புவதில் எந்த ஒரு வாய்ப்பையும் எடுக்கபோவதில்லை. எனது உடற்தகுதியை சோதிக்க உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் அதற்கும் தயார். எந்த அணிக்கு எதிராகவும், எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

    இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. கடந்த தொடரில் அங்கு நாம் இளம் வீரர்களுடன் விளையாடினோம். சில சீனியர் வீரர்கள் இல்லை. ஆனாலும் நாம் தான் சிறந்த அணி என்று நிரூபித்து காட்டினோம். இந்த முறை கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறேன். ஆனால் இந்தியா வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு சமி கூறினார்.

    இதுவரை 64 டெஸ்டுகளில் விளையாடி 229 விக்கெட் வீழ்த்தி இருக்கும் முகமது சமி அடுத்த மாதம் நடக்கும் ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக ஏதாவது ஒரு ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.

    • நிச்சயம் இது மிகவும் சவாலான தொடராக எங்களுக்கு இருக்கப்போகிறது.
    • வெற்றி பெறும் வேட்கையோடு விளையாடுவோம்.

    சென்னை:

    வங்கதேசம் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்கதேசம்ம் இடையிலான முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்கதேசம் அணியினர் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். முன்னதாக புறப்படும் போது டாக்கா விமான நிலையத்தில் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நிச்சயம் இது மிகவும் சவாலான தொடராக எங்களுக்கு இருக்கப்போகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ளோம். ஒட்டுமொத்த தேசமும் இப்போது எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒவ்வொரு தொடரும் நாம் சாதிப்பதற்கு ஒரு வாய்ப்பு. இவ்விரு டெஸ்டிலும் வெற்றி பெற விரும்புகிறோம். எங்களது திட்டமிடல், அணுகுமுறையை களத்தில் சரியாக செயல்படுத்த வேண்டும். எங்களது பணியை கச்சிதமாக செய்தால், சாதகமான முடிவை பெற முடியும்.

    அவர்கள் (இந்தியா) தரவரிசையில் எங்களை விட முன்னணியில் இருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். டெஸ்டில் 5 நாட்களும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்களது இலக்கு. டெஸ்டில் கடைசி பகுதியில் (5-வது நாள் தேனீர் இடைவேளைக்கு பிறகு) முடிவு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கடைசி பகுதிக்கு போட்டி நகர்ந்தால் அதன் பிறகு எதுவும் நடக்கலாம். அப்போது எங்களுக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

    வெற்றி பெறும் வேட்கையோடு விளையாடுவோம். ஆனால் ரொம்ப அதிகமாக சிந்திக்க விரும்பவில்லை. 5 நாட்களும் ஆட வேண்டும், எங்களது பலத்துக்கு ஏற்ப விளையாட வேண்டும். அது தான் முக்கியம்.

    அணியில் வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் சரியான கலவையில் இருக்கிறார்கள். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுபவம் குறைவு தான். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் அனுபவசாலிகள். அவர்களால் எந்த சீதோஷ்ண நிலையிலும் சிறப்பாக பந்து வீச முடியும். ஆனால் ஒரு அணியாக முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களும் பங்களிப்பு அளிக்க வேண்டியது அவசியம். ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்ததற்காக வங்கதேசம் அரசு எங்களுக்கு ரூ.3.2 கோடி (இந்திய மதிப்பில் ரூ.2¼ கோடி) ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது. அந்த தொகையில் ஒரு பகுதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுக்கு எதிராக இதுவரை 13 டெஸ்டில் விளையாடி உள்ள வங்கதேசம்ம் அதில் 11-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
    • டெஸ்ட் தொடருக்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிராக டி20 தொடர் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி 27-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடருக்கு பிறகு டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    வங்கதேசத்தைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

    எனவே அந்த முக்கியமான தொடர்களில் சுப்மன் கில் பங்கேற்க வேண்டும் என்பதால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    • முதலில் ஆடிய சாமர்செட் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய குளோசெஸ்டர் அணி 15 ஓவரில் வெற்றி பெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் டி20 பிளாஸ்ட் தொடரும் ஒன்று.

    இந்நிலையில், டி20 பிளாஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சாமர்செட் மற்றும் குளோசெஸ்டர்ஷைல் அணிகள் மோதின. டாஸ் வென்ற குளோசெஸ்டர்ஷைல் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சாமர்செட் அணி 19.4 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லூயிஸ் கிரெகோரி அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குளோசெஸ்டர்ஷைல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதமடித்தனர்.

    இறுதியில், 15 ஓவரில் குளோசெஸ்டர் ஷைல் அணி 129 ரன்கள் எடுத்து வென்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

    • இந்தியா பி முதல் இன்னிங்சில் 332 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 157 ரன்கள் குவித்தார்.

    அனந்தபூர்:

    துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நேற்று நிறைவடைந்தன.

    கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா டி அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா சி 525 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி 332 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 157 ரன்கள் குவித்தார்.

    இந்தியா சி அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ் 8 விக்கெட் வீழ்த்தினார்.

    193 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது இந்தியா சி அணி. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 128 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் அரை சதமடித்தார். இதனால் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகன் விருது இந்தியா சி அணியின் அன்ஷுல் கம்போஜ்க்கு வழங்கப்பட்டது.

    • முதல் இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றது.
    • மழையால் 3-வது டி20 போட்டி ரத்தானது.

    மான்செஸ்டர்:

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டோன் தொடர் நாயகன் விருது வென்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் தொடர் 19-ம் தேதி நடைபெறுகிறது.

    • அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருாள் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.

    வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஸ் பட்லர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதன் காரணமாக ஆல்-ரவுண்டர் வீரரான லியம் லிவிங்ஸ்டன் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு லிவிங்ஸ்டன் முக்கிய காரணமாக செயல்பட்டார்.

    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 19 ஆம் தேதி துவங்குகிறது. பட்லருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி புரூக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக மாறியிருக்கிறார். 

    • இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.
    • இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்தியாவில் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து வந்த இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.

    இதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணி 380 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 487 எனும் கடின இலக்கை துரத்திய இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்தியா டி அணிக்கு ரிக்கி புய் 113 ரன்களையும், அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 41 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு களமிறங்கியவர்களில் சௌரப் குமார் 22 ரன்களையும், ஹர்ஷித் ராணா 24 ரன்களையும் எடுத்தனர்.

    இந்தியா ஏ அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய தனுஷ் கொடியன் 4 விக்கெட்டுகளையும், ஷாம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குகிறார்.
    • ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ரவிசந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 100 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    அந்த வகையில், ரவிசந்திரன் அஸ்வின் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குகிறார். 37 வயதான அஸ்வின் ஓய்வு பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசிய அஸ்வின் அவர் கூறுகையில், "ஓய்வு குறித்து தற்போதைக்கு என் மனதில் எந்த நினைப்பும் இல்லை. ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன்."

    "எதிர்காலத்தை கணக்கில் கொண்டது கிடையாது. வயதாகும்போது கூடுதல் முயற்சி, பயிற்சி தேவை. அந்த வகையில் நான் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகமான முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டு வருகிறேன்."

    "எனது ஓய்வு குறித்து இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் இது போதும் என்று தோன்றும்போது நான் ஓய்வு பெற்று விடுவேன்," என்று தெரிவித்தார்.

    • விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா?
    • எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது.

    பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி எனது கேப்டன்சியின் கீழ் கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்று பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு பேசியுள்ளார்.

    ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய தேஜஸ்வி யாதவ், "நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடினார். இதைப் பற்றி யாராவது பேசியதுண்டா? நான் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறேன். எனது இரண்டு தசைநார்களில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் விலகி நேரிட்டது" என்று தெரிவித்தார்.

    தேஜஸ்வி யாதவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலியும் தேஜஸ்வி யாதவும் ஜூனியர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக பல ஆட்டங்களில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேட்டி சட்டையுடன் ஓணம் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    ×