search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • நான் கடந்த 20 வருடத்துக்கு முன்னாடியே சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி 5 வருடத்து வரும் போகும்.
    • பொதுச்செயலாளர் என்பது முகவரி தான்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    வருகிற வழிகளில் எல்லாம் வைக்கப்பட்ட பேனர் மற்றும் வரவேற்பு சிறப்பாக இருந்தது. ஆனால் அதில் ஒன்றில் நிரந்தர பொதுச்செயலாளர் என்று போடப்பட்டு இருந்தது. தலைவர் எனக்கு பொதுச்செயலாளர் பதவி மட்டும் கொடுத்து இருக்கார்.

    அது நிரந்தரமா இல்லையா என்பதை முடிவு பண்ண வேண்டியது நமது தலைவர் தளபதி தான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நான் கடந்த 20 வருடத்துக்கு முன்னாடியே சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி 5 வருடத்து வரும் போகும். தளபதியோட ரசிகன் என்ற பதவி கடைசி காலம் வரைக்கும் என்று நான் சொன்னேன். அந்த பதவி தான் இன்று என்னை இந்த இடத்தில் தளபதி நிறுத்தி இருக்கிறார். அதனால தயவு செய்து பொதுச்செயலாளர் என்பது முகவரி தான். எப்பவும் நம்ம எல்லாரும் தளபதிக்கு கீழ தளபதி தொண்டனாகவும், தோழனாகவும் கடைசி காலவரைக்கும் நாம் இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • ரெயில் விபத்து திட்டமிட்ட சதி என்ற கோணத்தில் இதுவரை ரெயில்வே ஊழியர்கள் 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    • பாக்மதி விரைவு ரெயிலுக்கு முன்னால், 3 நிமிடத்திற்கு முன்பு சென்ற சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் சென்றுள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த 11-ந்தேதி இரவு 8.30 மணியளவில் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்தன. அதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

    சென்ட்ரலில் உள்ள சென்னை ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் 15 பேரிடமும், 2-ம் கட்டமாக நேற்று மீதமுள்ள 15 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர்களிடம் ரெயில் விபத்துக்கான காரணம், ரெயிலின் இயக்கம், சிக்னல், இன்டர்லாக்கிங் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் தண்டவாள பராமரிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணையில் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி பாலமுரளி உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கவரப்பேட்டை தண்டவாளத்தில் போல்ட் நட்டை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ரெயில் விபத்து திட்டமிட்ட சதி என்ற கோணத்தில் இதுவரை ரெயில்வே ஊழியர்கள் 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ரெயில்வே ஊழியர்களில் யாரோ ஒருவரோ, முன்னாள் ஊழியர்களோ செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    பாக்மதி விரைவு ரெயிலுக்கு முன்னால், 3 நிமிடத்திற்கு முன்பு சென்ற சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் சென்றுள்ளது.

    3 நிமிட இடைவெளிக்குக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுகளை கழற்ற முடியுமா என சோதனை நடத்தப்பட்டது. சிறுசிறு பகுதியாக கழற்றி இருக்கலாம் என்று விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பகுதி போல்ட் நட்டுகளை கழற்றும்போது சிக்னல் மாறும் வகையிலான தொழில்நுட்பம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

    சூலூர்பேட்டை ரெயில் கடந்ததும் முழுமையாக போல்ட் நட்டை கழற்றும்போது பாக்மதி ரெயில் விபத்தில் சிக்கி உள்ளது.

    • மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சுற்றி வளைத்து அவர்கள் சோதனையிட்டனர்.
    • உரிய ஆவணங்களின்றி 65 பேரல்களில் பயோ டீசல் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறி வைத்து கள்ளசந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு மீன் பிடித்துறை முகத்திற்கு பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சுற்றி வளைத்து அவர்கள் சோதனையிட்டனர். அதில் தென்காசி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி 65 பேரல்களில் பயோ டீசல் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. மேலும் இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் என்றும், சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் என்பதும் தெரிய வந்தது.

    இதை்தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கந்தன் மற்றும் கே.வி.கே. நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல் மற்றும் கைதான 2 பேரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடத்துகின்ற திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து மேற்கொள்ளும்.

    சென்னை:

    2024-2025-ம் நிதி ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கிட உள்ளார்.

    அதேநாளில் மாநிலம் முழுவதும் 304 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளன.

    சென்னையில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் பட்டு புடவைகளை வழங்கினார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை இறையன்பர்கள் மகிழ்ச்சி கொள்கின்ற வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இதுபோன்ற பக்தர்களின் நலன் காக்கும் திட்டங்களை இந்த அரசுதான் நிறைவேற்றி வருகிறது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    அந்த வகையில் கோவில்கள் சார்பில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடத்துகின்ற திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒரு நபருக்கு ஆகின்ற செலவின தொகை ரூ.800-ல் நான்கில் ஒரு பங்கான ரூ.200 மட்டுமே பக்தர்களிடம் பெறப்படுகிறது. இதர தொகை அந்தந்த கோவில்களே செலவிடுகின்றன. இதன்மூலம் 47,304 பெண் பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கோவில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தில் 20 கோவில்களிலும், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் 9 கோவில்களிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டு 20 கோவில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், சுந்தரானந்த சித்தர், பாம்பாட்டி சித்தர் போன்ற சித்தர்களுக்கும், திருவருட் பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், தமிழ் மூதாட்டி அவ்வையார், சமய குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசர், நாலாயிர திவ்ய பிரபந்தம் மறைநூலினை தொகுத்தவரான ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பெயரன் ஆளவந்தார் ஆச்சாரியார், 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்து பெருமை சேர்த்த அரசு திராவிட மாடல் அரசாகும்.

    எந்த ஒரு கோவில் சார்பிலும் மகா சிவராத்திரி விழா தனியாக கொண்டாடப்படாத நிலையில் இந்த அரசு பொறுப்பேற்றபின் 7 கோவில்களில் பக்தர்கள் பங்கேற்புடன் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேலும் 2 கோவில்களில் கொண்டாடப்பட உள்ளது.

    அதேபோல சென்னை மயிலாப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழாவும், சுவாமி ஐயப்பனுக்கு மலர் பூஜை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்-காசி ஆன்மிகப் பயணத்தை ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே முதல் முதலில் செயல்படுத்திய அரசு திராவிட மாடல் அரசாகும். 2 ஆண்டுகளில் 500 பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு 1,003 மூத்த குடிமக்களும் மற்றும் புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கு 1,014 மூத்த குடிமக்களும், அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் 1,008 மூத்த குடிமக்களும் பயன்பெற்றுள்ளனர்.

    இத்திட்டங்களுக்கான நிதி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைதுறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2,226 கோவில்களுக்கு இதுவரையில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதோடு, கோவில்களுக்கு சொந்தமான ரூ.6,792 கோடி மதிப்பிலான 7,069.30 ஏக்கர் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பில் கட்டணமில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    2022-2023-ம் ஆண்டில் 500 ஜோடிக்கும், 2023-2024-ம் ஆண்டில் 600 ஜோடிகளுக்கும் என 1,100 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களின் இல்லங்களில் ஒளி ஏற்றிய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேரும்.

    இந்தாண்டு 700 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை, திருவான்மியூரில் வருகிற 21-ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31 ஜோடிகளுக்கு மங்கல நாண் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பதோடு சீர்வரிசைப் பொருட்களையும் வழங்க உள்ளார். அதே நாளில் தமிழகம் முழுவதும் 304 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற உள்ளன.

    இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்ட கோவில்களில் வடகிழக்கு பருவமழையினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு உடனுக்குடன் நீரினை வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவில்கள் சார்பில் 3 நாட்கள் அன்னதானம் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியில் கட்டுமான பணிகள் தொடரலாம் எனவும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிடவும் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே விரைவில் பணிகள் தொடங்கப்படும். ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து மேற்கொள்ளும்.



    சிதம்பரம் நடராசர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை பொறுத்தளவில் கோர்ட்டு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளதோடு, அதனை ஆய்வு செய்வதற்கு வெளி மாநிலத்தை சேர்ந்த மாவட்ட கலெக்டரை நியமித்திருக்கிறது. ஆகவே சிதம்பரம் கோவிலில் தவறுகள் நடந்திருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறையும், திராவிட மாடல் அரசும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட ரீல்ஸ் பிரச்சனை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதித்துறை காட்டுகின்ற திசையை நோக்கி பயணிப்போம். புழல் கோவில் பூசாரி ஒருவர் மீது மின்சாரம் தாக்கியது எதிர்பாராமல் நடந்த விபத்தாகும். அனைத்து கோவில்களிலும், முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களது துயரங்களை களைவதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார். என்னுடைய பணிகளால் இந்த பொறுப்பு எனக்கு தகுதியான பொறுப்பு என்பதை நான் நிரூபித்து காட்டுவேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கின்றார். அவர் பொறுப்புக்கு வந்த உடனேயே சவாலாக இந்த பெருமழை வந்த போதும் அதனை திறமையாக சமாளித்தவர் என்ற நற்சான்றிதழ் மக்களிடம் கிடைத்திருக்கின்றது.

    கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமண விழாவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்ற மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் கடுமையான ஓய்வில்லாத உழைப்பாளிகளாகவும், மங்காத புகழுக்கு சொந்தக்காரர்களாகவும் நீங்கள் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

    இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் சுகுமார், திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், மங்கையர்க்கரசி, வான்மதி, ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரிஸ்பேன் நகரங்களில் ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
    • ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகிற 27-ந்தேதி ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    உலகின் எந்த மூலையில், எந்த வடிவில் தமிழர் மூதாதை இராவணப்பாட்டன் இழிவுப்படுத்தப்பட்டாலும் அது உலகத்தமிழர் அனைவரையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். மானத்தமிழினம் அதனை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தம்முடைய பண்பாட்டு பாசறையான வீரத்தமிழர் முன்னணி மூலம் உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் ராவணப்பெருவிழாவை விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

    ஆகவே, ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். ராவண வதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக உணர்ந்து, நிகழ்வுப் பணிகளை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறது?
    • அவலநிலை நீடிக்குமேயானால் நாட்டு மக்களின் கடும் கோபத்திற்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2014, 2019 பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகளின் போது 2024-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்துவதோடு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கில் உறுதி செய்வோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார்.

    கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் அவர் கொடுத்த வாக்குறுதியின்படி இந்தியாவில் வளர்ச்சி ஏற்படவில்லை. தற்போது உலக நாடுகளில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் இருப்பதாகவும், அதை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவோம் என்றும் பேசி வருகிறார்.

    இந்தியாவை பொருளாதார வல்லரசாக உயர்த்துவேன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் வாழ்க்கை தரமும், மனிதவளமும் குன்றி வறுமையின் கோரப்பிடியில் எந்த அளவிற்கு சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஐ.நா. சபையின் தரவரிசை பட்டியல் அம்பலப்படுத்தியிருக்கிறது.

    எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறது? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.வினர் மக்களின் உண்மையான வளர்ச்சி மீது அக்கறையில்லை என்பதையே ஐ.நா. சபையின் புள்ளி விவரம் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய அவலநிலை நீடிக்குமேயானால் நாட்டு மக்களின் கடும் கோபத்திற்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்
    • 20, 21 ஆகிய தேதிகளில் வட உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கனமழையை கொடுத்து சென்னை அருகே கடந்து சென்றது.

    இதையடுத்து வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கன மழையும் பெய்து வருகிறது.

    தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் டெல்டா பகுதிகள் உள்பட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுகளில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    20, 21 ஆகிய தேதிகளில் வட உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் சிலை.
    • சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகத்துடன் கூடிய கலைஞரின் நினைவிடம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளில் பல்லாயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரம், 7000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை 9 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் நிறுவி 2000, ஜனவரி-1 அன்று திறந்துவைத்த திருப்பணியாகும். அவர் அய்யன் திருவள்ளுவர் சிலை போல எண்ணற்ற சிலைகள் மற்றும் மணி மண்டபங்கள் நிறுவி தியாகிகளைப் போற்றியுள்ளார்.

    அவரது வழியில், திராவிட மாடல் ஆட்சியைப் பார்முழுதும் பாராட்டும் வண்ணம் நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய இந்தியத் திருநாட்டின் எழுச்சிக்கு விதையாக வித்தாக அமைந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட ஆரூயிர்கள் தந்து போராடிய அற்புதத் தியாகிகள் அனைவரையும் போற்றிப் பாராட்டும் பெருமைக்குரிய சின்னங்களாக சிலைகளையும், மணிமண்படங்களையும் தமிழ்நாட்டில் ஏராளமாக எழுப்பி வருகிறார். இவை அனைத்தும் வருங்கால இளைஞர்களுக்கு நல்வழி காட்டி உணர்வூட்டிடும் உயிரோவியங்களாகும். அவற்றுள் சில வருமாறு:-

    எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகளின் சிலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிலை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் க.அன்பழகன் சிலை, நாவலர் ரா.நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், வெண்கலச் சிலை, அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கர் சிலை.

    கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ராஜ நாராயணனுக்கு கோவில் பட்டியில் சிலையுடன் நினைவரங்கம், காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்பட்டு பாரதியாரின் மார்பளவுச் சிலை, நாமக்கல் ஜேடர் பாளையத்தில் அல்லாள இளைய நாயகர் சிலை, பெருங்காம நல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்ட சிலைகள் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்கள், வ.உ.சி., ஆகியோருக்கு சிலைகள், கிண்டியில் வ.உ.சி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை வ.உ.சி. பூங்காவில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பர னாருக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில் சமூகச் சீர்திருத்த வேங்கை டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் சிலை, டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் சிலை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை, அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு சிலை.

    கடலூர் காந்தி பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு சிலை, தூத்துக்குடியில் தராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் குவி மாடத்துடன் கூடிய சிலை சென்னையில் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலை.

    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதர் சிலையுடன் கூடிய மணிமண்டபம், காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் சிலையுடன் மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் சிலை.

    சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகத்துடன் கூடிய கலைஞரின் நினைவிடம், திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்கள், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் தங்கோ-டாக்டர் மு.வ.வீரன் சுந்தரலிங்கம் சிலைகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    தென்காசி விசுவநாதப் பேரியில் வெண்ணி காலாடி சிலை, சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலியின் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலை யாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் சிலை மற்றும் அரங்கம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை 10 நினைவரங்கங்கள் 36 சிலைகள் அமைத்துள்ளார். மேலும் பல தியாகிகளுக்குரிய நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார்கள். இவை இந்தியாவிற்கே வழிகாட்டத் தக்கவையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய 3 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
    • 7 தமிழர்கள் மீட்கப்படுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் பக்கபலமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    பெரம்பலூர், மதுரை, கடலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த ஆர்.வினேஷ், ஆர்.திபாக்கரன், கே.ரிஸ்வந்த், கே.திருமாவளவன், டி.ச ரவணன், கே.வெங்கடேஷ், அ.அசேன் ஆகிய 7 வாலிபர்கள் தனியார் நிறுவனம் மூலம் குவைத்துக்கு வேலைக்கு சென்றனர்.

    இதற்காக வாணியம்பாடியை சேர்ந்த சபீர்கான் என்ற ஏஜெண்டிடம் ஒவ்வொருவரும் தலா ரூ.1 லட்சம், 2 லட்சம் என கொடுத்து கடந்த ஜூலை மாதம் குவைத்துக்கு சென்ற அவர்களுக்கு டிரைவர் வேலை கொடுப்பதாக கூறப்பட்டிருந்தது. முதலில் 8 மணி நேரம் வேலை என சொல்லியதில் 18 மணி நேரம் வேலை கொடுக்கப்பட்டது

    இதில் திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய வினேஷ், சரவணன், வெங்கடேஷ், அசேன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது. திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய 3 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

    இதனால் சரியான தூக்கம் இல்லாமலும், சாப்பிட வழி இல்லாமலும் தவித்த 7 பேரும் தப்பி வந்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டு தங்களை தாயகம் அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டனர்.

    இதனிடையே 7 தமிழர்கள் நிலையை அறிந்த தொழிலதிபர் ஹைதர் அலி 7 பேருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்ததோடு தனது நிறுவனத்தில் வேலையும் தருவதாக கூறினார். இந்திய தூதரகத்தில் பணிபுரியும் தென்காசி ஷாஜகான் என்பவர் எடுத்த கடும் தொடர் முயற்சியில் பாதிக்கப்பட்ட 7 தமிழர்களின் பாஸ்போர்ட்களை அவர்களது ஸ்பான்சரை தூதரகம் வரவழைத்து பெற்று கொடுத்தார்.

    7 தமிழர்கள் மீட்கப்படுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் பக்கபலமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. 332 கனஅடி நீர் வருகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் பருவமழை கை கொடுத்ததால் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து பெரியாறு பாசன பகுதி மற்றும் திருமங்கலம் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களான 1 லட்சத்தி 5 ஆயிரத்தி 2 ஏக்கருக்கு கடந்த செப்.15ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    மேலும் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள 45,041 ஏக்கர் இருபோக பாசன நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக ஜூலை 3ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் கடந்த 14ம் தேதி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை பொழிவு இல்லை. இதனால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே அணையிலிருந்து பாசனத்திற்கு மீண்டும் 800 கனஅடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி என மொத்தம் 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 56.79 அடியாக உள்ளது. அணைக்கு 971 கனஅடி நீர் வருகிறது. 3018 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. 332 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2648 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.24 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் 7வது நாளாக நீர்வரத்து சீராகாததால் தடை தொடர்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • ரெயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    • விபத்தின்போது பணியில் இருந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    சென்னை:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த 11-ந்தேதி இரவு 8.30 மணியளவில் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்தன. அதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள தண்டவாளத்தில் நட்டுகள் கழன்று கிடந்தன. ரெயில் தண்டவாளங்களை இணைக்கும் 'டி' வடிவ கம்பி இணைப்பு தளர்வாகவும், சில இடங்களில் இணைப்பு இடம் மாறி இருந்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நட்டுகளில் சுத்தியலால் அடித்த தடங்கள் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். மேலும், ரெயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 3 தனிப்படைகளை அமைத்தும் விசாரணை நடத்தினார்கள். விபத்தின்போது பணியில் இருந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கவரப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரெயில் லூப் பாதையில் சென்று விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில், விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ரெயில் விபத்து குறித்து, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரெயில் பாதுகாவலர், பயணச்சீட்டு பரிசோதகர், ஏ.சி. பெட்டி பணியாளர்கள், அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளை சேர்ந்த 30 ரெயில்வே அலுவலர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.


    சென்ட்ரலில் உள்ள சென்னை ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் 15 பேரிடமும், 2-ம் கட்டமாக நேற்று மீதமுள்ள 15 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர்களிடம் ரெயில் விபத்துக்கான காரணம், ரெயிலின் இயக்கம், சிக்னல், இன்டர்லாக்கிங் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் தண்டவாள பராமரிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணையில் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி பாலமுரளி உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

    விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் எழுத்து பூர்வமாக பதிவு செய்யப்பட்டன. இந்த 2 நாள் விசாரணை நேற்று இரவு நிறைவடைந்தது. விசாரணை அறிக்கை 15 நாட்களில் தயார் செய்யப்பட்டு, இந்திய ரெயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பேரில், ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ரெயில்வே ஊழியர்கள் 30 பேரிடம் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துஉள்ளன.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பிரதான பாதையை விட்டு லூப் பாதைக்கு மாறும் வகையில் நட்டுகள் கழற்றப்பட்டிருப்பதால் இது நாசவேலை என்கிற தகவல் விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த ஒருவர் இந்த 6 நட்டுகளையும் கழற்ற 30 நிமிடங்கள் ஆகும். அதற்குரிய சாதனத்தை பயன்படுத்தி கழற்றினால் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். விபத்து நடந்த அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தண்டவாள பராமரிப்பாளர் பணியில் இருந்தார். அந்த நேரத்தில் இதுபோன்ற சதிச்செயல் ஏதும் நடைபெறவில்லை. அதன்பிறகு தண்டவாளத்தை கண்காணிக்க வேறு யாரும் பணியில் இல்லை.

    எனவே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.26 மணிக்கு அந்த பகுதியை கடந்து செல்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பு பிரதான பாதையில் இருந்து லூப் பாதைக்கு ரெயில் தடம் மாறும் வகையில் தண்டவாள நட்டுகளை கழற்றி மர்ம நபர்கள் இந்த நாசவேலையில் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 12 நிமிடங்கள் தாமதமாக பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.

    பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கிய லோகோ பைலட் பச்சை சிக்னலை பார்த்து விட்டு தான் ரெயிலை ஓட்டி சென்றுஉள்ளார். ஆனாலும் ரெயில் எப்படி லூப் பாதைக்கு மாறியது என்பது அவருக்கு தெரியவில்லை. கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபுவும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிரதான பாதையில் செல்வதற்கே பச்சை நிற சிக்னல் போட்டதாக தெரிவித்துஉள்ளார்.


    இந்த விசாரணையின் போது விபத்து தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக விபத்தை நேரில் பார்த்த பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது வெளியாட்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரெயிலை கவிழ்ப்பதற்கான இதுபோன்ற நாசவேலை இதற்கு முன்பு பொன்னேரி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி நடைபெற்றது. அப்போது தண்டவாள பராமரிப்பாளர் அங்கு வழக்கமான ஆய்வில் ஈடுபட்டபோது தண்டவாள நட்டுகள் கழற்றப்பட்டு கிடந்தன.

    எனவே சதி நடந்திருப்பதை கண்டறிந்து அவர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனால் அப்போது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. ஆனால் இப்போது தண்டவாள பராமரிப்பாளர் பணி முடிந்து சென்ற பிறகு சதித்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இது நாசவேலை என்பது உறுதியாகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜரான ரெயில்வே அதிகாரிகள், தண்டவாள பராமரிப்பாளர், லோகோ பைலட் மற்றும் கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரி ஆகியோர் ரெயில் விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் இல்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் விபத்து நடந்த பகுதியில் நட்டுகள் கழற்றப்பட்டு இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். ஆனாலும், அந்த அறிக்கையானது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையே கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக ரெயில்வே பணியாளர்கள் 11 பேருக்கு கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து ரெயில்வே டி.எஸ்.பி. கர்ணன் விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் ரெயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேலும் ரெயில்வே பணியாளர்கள் 10 பேருக்கு கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்களிடமும் டி.எஸ்.பி. கர்ணன் விசாரணை நடத்த உள்ளார்.

    இதற்கிடையே கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை மோத வைத்து விபத்தை ஏற்படுத்தி நாசவேலையில் ஈடுபட்டது பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துஉள்ளது. இதையடுத்து அந்த கோணத்திலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    • திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது.
    • அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதிக லாபம் ஈட்டுவதற்காக அநீதியான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை உறை பாலில் உள்ள அதே 4.5% கொழுப்புச் சத்து, அதே 9 % கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் (Solids Not Fat -SNF) கொண்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது. கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.

    ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கிரீன் மேஜிக் 500 மிலி உறைகளில் ரூ.22க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்படும். அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத சத்துகளுக்கும், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலில் உள்ள சத்துகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பால் உறையின் வண்ணத்தை மாற்றி பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.

    ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் கூடுதல் வகையாக மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அதை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால், தமிழ்நாடு முழுவதும் இந்த வகை பாலை அறிமுகம் செய்து விட்டு, லிட்டர் ரூ.44க்கு விற்கப்படும் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தி விடுவது தான் ஆவின் நிறுவனத்தின் திட்டம் ஆகும். இதன் மூலம் ஆவின் பச்சை உறை பாலை நுகர்வோர் வேறு பெயரில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

    விலை உயர்வை விட கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், விலை உயர்வு அதிகமாக தெரியக்கூடாது என்பதற்காக ஓர் உறையின் விலையை ரூ.3 உயர்த்தி விட்டு, பாலின் அளவை 50 மிலி குறைத்திருப்பது தான். இது வணிக அறம் அல்ல. வழக்கமாக தனியார் நிறுவனங்கள் தான் விலை உயர்வை மக்கள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கான அளவைக் குறைக்கும் மோசடியில் ஈடுபடும். தனியார் நிறுவனங்கள் கையாளும் அதே மோசடியை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனமும் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிந்தைய மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி ஆரஞ்சு வண்ண உறையில் விற்கப்படும் நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆவின் பச்சைப் பாலுக்கு மாற்றாக அதே விலையில் 3.5% என்ற குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் டிலைட் பாலை அறிமுகம் செய்து மறைமுக விலை உயர்வை அரசு திணித்தது. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் அப்போது ஆவின் பச்சைப் பாலின் விற்பனை கைவிடப்படவிருந்தது தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.11 உயர்த்தப்படுகிறது.

    அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதிக லாபம் ஈட்டுவதற்காக அநீதியான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது. அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ×