search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார்.
    • ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    நெல்லை:

    பங்குச்சந்தை மோசடி, பணம் இரட்டிப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு வகையிலான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களை குறிவைத்தும் இணையதள மோசடிகள் அரங்கேற்றம் தொடங்கி உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து அவர்களது ஆசைகளை தூண்டி பணம் பறிக்கும் நூதன மோசடிகளில் கும்பல்கள் களம் இறங்கி உள்ளன.

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகவும், அதற்கான தகவல்களில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் சரியாக இருக்கிறது. ஆனால் ஜிபே போன் நம்பர் தவறாக இருப்பதாக கூறி மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களிடம் ஜிபே எண்ணை பெற்றுக்கொள்கின்றனர்.

    பின்னர் அந்த நம்பருக்கு ஒரு ரகசிய எண் குறுந்தகவலாக வரும். அதனை சொல்லுங்கள் என்று கூறி கேட்டு வாங்கி அந்த வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முழுவதும் பறித்துவிடுகின்றனர். இந்த வகை மோசடிகளில் தமிழகத்தில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பணத்தை ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை இழந்துள்ளனர்.

    குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து போனில் அந்த மோசடி கும்பல் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் அந்த கும்பல் போன் செய்து ஆதார், வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை வாங்கி கொண்டு பணத்தை பறித்து வருகிறது.

    இதில் சமீபத்தில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவியின் தந்தைக்கு மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். அவர்கள் தங்களது மகளுக்கு மத்திய அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். அதில் வங்கி கணக்கு எண் தவறாக உள்ளது என கூறியுள்ளார். அதே நேரத்தில் அந்த மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை அவரது ஆதார் கார்ட்டில் இருப்பது போலவே அந்த நபர் தெளிவாக கூறியுள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பி அந்த மாணவியின் தந்தை தொடர்ந்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் மர்ம நபர் ஜிபே நம்பரை கேட்கவும், அவர் உஷாராகிவிட்டார். இதுகுறித்து நான் ஒருமுறை பள்ளிக்கு சென்று நேரில் விளக்கம் கேட்டுக்கொண்டு அதன் பின்னர் எனது நம்பரை தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்த உடன் மர்மநபர் போனை வைத்து விட்டார். அதன்பின்னர் அவரை அந்த நபர் தொடர்பு கொள்ளவே இல்லை.

    அதன்பின்னர் மாணவியின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வேறு ஒருவர் மூலம் போன் செய்து கேட்கும்போது, அப்படி எந்த உதவித்தொகைக்கும் விண்ணப்பம் இதுவரை பெறப்படவில்லை என்பதும், அது மோசடி செய்வதற்காக வந்த செல்போன் அழைப்பு என்பது தெரியவந்தது.

    இதனிடையே மாணவியின் தந்தை தன்னிடம் பேசிய அந்த நபரின் ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்களில் பரப்பினார். இதனால் ஏராளமான பெற்றோர்கள் உஷாரான நிலையில், நெல்லை மாநகரில் ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என பலர் பணத்தை இழந்துள்ளனர். ஏமாற்றப்பட்டதை அறிந்தபோதிலும், புகார் அளித்தால் அவமானம் என கருதி பலரும் போலீசை நாடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    இதனிடையே இந்த மோசடிகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்போது மோசடிகள் குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோரின் செல்போன் எண்களுக்கும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் வாட்ஸ் அப் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    தங்கள் மகனுக்கு பள்ளிக்கல்வித் துறையிலிருந்து உதவி பணம் வழங்க இருக்கிறோம். ஆகவே தங்கள் ஜிபே நம்பர் மற்றும் ஓடிபி-யை சொல்ல வேண்டும் என்று யாராவது தொலைபேசியில் கேட்டால் அந்த நபரிடம் ஏதும் தகவலை பகிர வேண்டாம். பண இழப்பை தவிர்க்கவும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், நெல்லையில் இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பெரிய அளவில் புகார்கள் வரவில்லை என்றாலும், மாநகரில் 5-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை குறிவைத்து அவர்களது ஆசையை தூண்டி மோசடி நடக்கிறது.

    இதனை வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் தான் அரங்கேற்றுகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தால் நமக்கு தான் கஷ்டம். அவர்கள் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் சென்று பதுங்கி விடுவார்கள். பணத்தை மீட்பது கடினம். எனவே மக்களாகத்தான் தெளிவாக இருக்க வேண்டும் என்றனர்.

    • நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது.
    • அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.

    விளாத்திகுளம்:

    மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பவுர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தனர்.

    குலதெய்வத்தை தரிசனம் செய்து விட்டு இன்று காலை 6 மணி அளவில் பெரியசாமிபுரம் கடற்கரைக்கு குளிப்ப தற்காக 20 பேர் சென்றுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்களாக இருந்தனர்.

    நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. அந்த நேரத்தில் 20 பேரும் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

    அதிகமான காற்றுடன் கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில் கடலில் குளித்த மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த இலக்கியா (வயது 21), கன்னியம்மாள் (50), முருக லட்சுமி (38), ஸ்வேதா (22), அனிதா (29) ஆகிய 5 பெண்களும் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர்.

    அப்போது அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் இலக்கியா, கன்னியம்மாள் ஆகிய இருவரும் அலையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேம்பார் போலீசார் அவர்களுக்கு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

    பவுர்ணமியை முன்னிட்டு குலதெய்வம் வழிபாடு செய்வதற்காக வந்த பெண்கள் குளிக்கும்போது கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • சாலையோரம் தேங்கிய மழை நீரை அகற்றவும், லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் ஈடுபட்டனர். இதனால் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

    500-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய நீரை வெளியேற்றினார்கள். கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை ராட்சத மோட்டார் பம்பு செட் மூலம் வெளியேற்றினார்கள். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது.

    ஓரிரு இடங்களில் மட்டும் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் மழைநீர் வடிந்தாலும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் நீடிக்கிறது.

    1819 இடங்களில் ராட்சத மோட்டார் பம்பு செட்டுகள், டிராக்டர்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற தாழ்வான பகுதிகளில் நிலையாக வைக்கப்பட்டுள்ளது. பருவமழை முடியும் டிசம்பர் மாதம் வரை இவை அந்தந்த இடங்களில் தொடர்ந்து செயல்படும்.

    இதுகுறித்து துணை கமிஷனர் (பணிகள்) கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. ஆனாலும் தொடர்ந்து மழைநீர் கால்வாய் மற்றும் கழிவு நீர் கால்வாயில் இருந்த அடைப்புகள் எடுக்கப்பட்டு தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. 243 இடங்களில் டிராக்டர் மோட்டார் மூலம் தண்ணீர் அடைப்பு உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

    தாழ்வான பகுதியில் மீண்டும் மழைநீர் தேங்கக்கூடும் என்பதால் அங்கு டிராக்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2 மாதம் வரை இந்த பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

    பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் வெளியேறும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தவிர சாலையோரம் தேங்கிய மழை நீரை அகற்றவும், லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணி முழுவீச்சில் தற்போதும் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 24-ந் தேதி மாமன்னர் மருதுபாண்டியரின் 223-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை.
    • மருது பாண்டியர் மணிமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாமன்னர் மருதுபாண்டியரின் 223-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜையையொட்டி வருகிற 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது பாண்டியர் மணிமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்படுகிறது.

    அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர் நந்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா, விஜயபாஸ்கர், பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கீர்த்திகா முனியசாமி, மணிகண்டன், செந்தில்நாதன், முனியசாமி, கணேசராஜா, சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவிக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.
    • விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    விக்கிரவாண்டி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜரானார்.

    கடந்த 2019-ம்ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 6-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமலும், பரிசலில் பயணம் செல்ல முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கரையில் இருந்தவாறு நின்று ரசித்து பார்த்தனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • காரில் சோதனையிட்டபோது காரில் 2 நாட்டு துப்பாக்கிகள், 25 சணல் வெடிகள்,2 வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது.
    • முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது உளவுத்துறைக்கு தெரியவந்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே கடந்த 15ம் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சிலர் கரூர்-திருச்சி சாலையில் வருவதாக தகவல் கிடைத்தது. உடனே பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

    பின்னர் சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்த முயன்ற போது, அந்த கார் வேகமாக சென்று பேரி கார்டில் மோதி நின்றது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஒரு நபர் போலீசாரை பார்த்து நான் பெரிய ரவுடி நான் தான் குமுளி ராஜ்குமார் என் காரையே நிறுத்துவீங்களா என கேட்டு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் தனிப்படை போலீசார் பரமக்குடி அருகே ஆதி ஏந்தல் பகுதியில் குமுளி ராஜ்குமார் (வயது 45) மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த இன்கானூர் பாலு என்கிற பாலசுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் குமுளி ராஜ்குமார் காரில் சோதனையிட்டபோது காரில் 2 நாட்டு துப்பாக்கிகள், 25 சணல் வெடிகள்,2 வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது.

    கைதான குமுளி ராஜ்குமார் மீது ஏற்கனவே 5 கொலை வழக்கு, தலா 2 கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது கடந்த 2021 ம் ஆண்டிலிருந்து தற்போது வரை காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவர் திருச்சி போலீசாரிடம் சிக்கினார்.

    அவரைப் பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது, நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜ்குமார். தனது 16 வயதில் டீக்கடைக்காரர் ஒருவரின் மண்டையை உடைத்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் தச்சநல்லூர் பகுதியில் இருந்து தப்பி தேனி மாவட்டம் குமுளிக்கு சென்றார்.

    அங்கு நண்பர்களுக்காக அடிக்கடி தகராறு ஈடுபட்டார். கடந்த 1999 ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19. பின்னர் 2010-ல் ராஜ்குமார் தேவேந்திரகுல மக்கள் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கி அதற்கு தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

    சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் ஆங்காங்கே ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

    இவர் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில் திருச்சியில் சிக்கியுள்ளார் என அவர் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து குமுளி ராஜ்குமாரின் ஆதரவாளர்களான மாகாளிக்குடி அலெக்ஸ், அருண், சமயபுரம், ராமு, லட்சுமணன், துறையூர், வெங்கடாசலபதி,கணேசன், விநாயகமூர்த்தி, வள்ளி அருணன், கார்த்திக் ஆகிய 9 பேரை சமயபுரம் போலீசாரும், சக்திவேல் குளித்தலை பொன்னடி சங்கீத்குமார் ஆகிய 3 பேரை முசிறி போலீசாரும் கைது செய்தனர். மேலும் சோமரசம்பேட்டையில் கோபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தம் ஆதரவாளர்கள் 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருவதாக தனி படை போலீசார் தெரிவித்தனர்.

    • அரசுக்கு எதிராக துணை காவல் கண்காணிப்பாளர் ஏதாவது அறிக்கை தாக்கல் செய்திருப்பாரோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
    • காவல் துறையினர், தங்களுடைய ஏவல் துறையினராக மட்டுமே செயல்பட வேண்டும் என்ற இந்த ஆட்சியாளர்களின் எண்ணம் ஏற்கத்தக்கதல்ல.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரையும், மற்றும் ஒருவரையும் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் கொடுமைப்படுத்தியதாக ஒரு புகார் எழுந்தது.

    இந்தப் புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான மணிக்குமார் ஆணையத்தின் துணை காவல் கண்காணிப்பாளரை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

    அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீஸிங் ராஜா ஆகிய மூவர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்க அதே துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கப்பட்டிருந்தார்.

    சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இரு நேர்வுகளிலும் விசாரணையை முடித்து ஆணையத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகச் தெரிகிறது. இந்த நிலையில், எந்தவித காரணமும் இல்லாமல் அந்த துணை காவல் கண்காணிப்பாளரை மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவிற்கு தி.மு.க. அரசு பணி மாறுதல் செய்துள்ளது. இந்த நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    அரசுக்கு எதிராக துணை காவல் கண்காணிப்பாளர் ஏதாவது அறிக்கை தாக்கல் செய்திருப்பாரோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தி.மு.க. அரசால் ஆணையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளரை, மாநில மனித உரிமை ஆணையத்தில் பொறுப்பேற்கவிடாமல் திருப்பி அனுப்பியதாகவும் தகவல் வந்துள்ளன.

    தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    காவல் துறையினர், தங்களுடைய ஏவல் துறையினராக மட்டுமே செயல்பட வேண்டும் என்ற இந்த ஆட்சியாளர்களின் எண்ணம் ஏற்கத்தக்கதல்ல. இதற்கொரு விடிவு காலத்தை தமிழக மக்கள் விரைவில் ஏற்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்தவும் ஆலோசனை நடந்துள்ளது.
    • இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு விற்பனையும் அதிகரித்து வருகிறது.

    பஸ் நிலையம், ரெயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகம் கூடும் பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் எப்போதும் அதிகம் வருவதால் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 2 கவுண்டர் திறக்கப்பட்டு மதுபாட்டிலை விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 4,829 மதுக்கடைகளில் கிட்டத்தட்ட 3,500 கடைகளில் தினசரி ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் சில கடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கவுண்டர்கள் உள்ளன. கடையில் 2 பேர் மது பாட்டில்களை விற்பனை செய்கின்றனர். ஆனாலும் எல்லா கடைகளிலும் இவ்வாறு செய்ய முடியவில்லை.

    இடப்பற்றாக்குறை, வேலைக்கு ஆள் கிடைக்காத சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு தினசரி ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 3,500 மதுக்கடைகளிலும் கூடுதல் விற்பனை கவுண்டர்களை ஒரு வாரத்திற்குள் அமைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    தீபாவளி பண்டிகைக்காக விதவிதமான ரகங்களில் கூடுதல் சரக்குகள் டாஸ்மாக் கடைகளுக்கு வர உள்ளதால் அதை வைப்பதற்கு தேவையான இட வசதிகளை உருவாக்குமாறு விற்பனை மேலாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்கும் மதுக்கடைகளில் விற்பனை என்பது 3 மடங்கு அதிகமாக இருக்கும். கடந்த வருடம் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்தது. அதிலும் மதுரை மண்டலத்தில் தான் ரூ.53 கோடிக்கு விற்பனை நடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 30, 31-ந்தேதி, நவம்பர் 1, 2, 3 ஆகிய 5 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் களை கட்டும் என்பதால் கூடுதல் சரக்குகளை இருப்பு வைக்க இப்போதே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்தவும் ஆலோசனை நடந்துள்ளது.

    இட வசதி உள்ள கடைகளில் தீபாவளி கூட்டத்தை சமாளித்து விடும் நிலையில் சிறிய கடைகளில் கூட்டத்தை சமாளிக்க கூடுதல் பணியாளர்களை உதவிக்கு வைத்துக் கொள்வது குறித்து கடை விற்பனையாளர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • ஒற்றை காட்டு யானை ஒன்று செம்மேடு கிராமத்திற்குள் புகுந்தது.

    பேரூர்:

    கோவை ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகள் குடியிருப்புகள், கடைகளை சேதப்படுத்துவதோடு, விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயரிடப்பட்டிருக்கும் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பூண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று செம்மேடு கிராமத்திற்குள் புகுந்தது.

    அங்கு நீண்ட நேரமாக சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அங்குள்ள தினகரன் என்பவரது மளிகைக் கடையின் முன் பகுதியை உடைத்து உள்ளே இருந்த இரண்டு 25 கிலோ அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து போட்டு தின்றது.யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்த யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது. வனத்தை விட்டு வெளியேறும் யானை கூட்டங்கள் அடிக்கடி குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்துகிறது.

    எனவே யானை நடமாட்டத்தை கண்காணித்து யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை.
    • இந்திக்கு மட்டும் கொண்டாட்டங்களை நடத்துவது பிற மொழிகளை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலானவர்களால் பேசப்படும் 122 மொழிகளும், 1599 பிற மொழிகளும் உள்ளன. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு எனும் போது ஒரு மொழியை மட்டும் கொண்டாடுவதற்கு எந்த நியாயமும் இல்லை. 1700-க்கும் கூடுதலான மொழிகள் பேசப்படும் நாட்டில், அதிலும் குறிப்பாக உலகின் மூத்த மொழியான தமிழ் பேசப்படும் மாநிலத்தில் இந்திக்கு மட்டும் விழா எடுக்கப்பட்டால் அது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கும். இதற்கு மத்திய அரசே காரணமாக இருக்கக் கூடாது.

    இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. இந்தி நாட்டின் அலுவல் மொழியாக 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி இந்தி நாளும், இந்தி மாதமும் கொண்டாடப்படுவது நியாயம் என்றால், அதே கொண்டாட்ட உரிமை தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26.01.1950-ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதே அதன் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன. அந்த நாளை தமிழ் மொழி நாளாக மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அந்த நாளை செம்மொழி தமிழ் நாளாக மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். அவற்றை செய்யாமல் இந்திக்கு மட்டும் கொண்டாட்டங்களை நடத்துவது பிற மொழிகளை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பா.ஜனதா ஆட்சி செய்தாலும் இந்தியைத் திணிப்பதில் மட்டும் வேறுபாடு காட்டுவதில்லை. சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஐம்பதாண்டுகளில் அது தமிழுக்கு என்ன செய்தது? எந்தெந்த வகைகளில் தமிழ்மொழி சிறந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சென்னைத் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருக்கலாம். அதை விடுத்து இந்தியை மட்டும் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இரு விழாக்களில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பணியாகும்.
    • மழை வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பருவ மழை தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வடிகால்களை முறையாக கண்காணித்து, சரி செய்து, தயார் நிலையில் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

    குறிப்பாக டெல்டா மாவட்டப்பகுதிகளில் காவிரி பாசனப் பகுதிகளில் வடிகால்கள் மண் எக்கல் அடித்து நீர் வடிவதற்கு வழியில்லாமல் உள்ளது. எனவே அப்பகுதிகளில் மண்ணை தூர்வாரி மழைநீர் வடிவதற்கான வகையில் ஏற்பாடு செய்து கொடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு கடந்த கால பருவ மழையின் போது விவசாய நிலங்கள், பயிர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே மழைக்காலப் பாதிப்பில் இருந்து விவசாய நிலங்களை, பயிர்களை, விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பணியாகும்.

    மேலும் தமிழக அரசு தொடர்ந்து மழைப்பெய்ய இருக்கின்ற வேளையில் மழை வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×