search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல் அரசியல்"

    எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    போபால்:

    மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை ‘தேச பக்தர்’ என்று கூறியதன் மூலம் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் பணிகள் முடிந்தநிலையில், இது சிந்திக்க வேண்டிய நேரம். பிராயச்சித்தம் தேடும் செயலாக நான் மவுனம் அனுசரிக்கப்போகிறேன். கடுமையான விரதத்தை தொடங்கி விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போடப்பட்ட வழக்கில், இன்று கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை  கிளையில் கமல்ஹாசன்  மனு தாக்கல் செய்திருந்தார்.

    அம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.



    அப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    கமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 20ம் தேதி வழங்கப்படும் என கூறி ஒத்தி வைத்தது. அதன்படி இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, கமலுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.


    கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கட்சியே இல்லாமல் போய்விடும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற விழாவில் நடிகர் எஸ்.வி. சேகர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொருளாதார அடிப்படையில் தான் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். அவரது ஆசையை மோடி நிறைவேற்றி இருக்கிறார். இப்போது மோடி அஸ்திவாரம் தான் போட்டு இருக் கிறார். அதை கண்டே பலர் ஆடிப்போய் இருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் திருடர்கள், கடத்தல் காரர்களுக்கு தான் பாதிப்பு.

    திருடர்களுக்கு போலீசை கண்டால் பிடிக்காது. அதனால் தான் எதிர்க்கட்சிகளுக்கு மோடியை பிடிக்க வில்லை. வெறும் அரசியல் மட்டுமே செய்து கொண்டு இருக்கக்கூடாது. அடுத்த தலைமுறையை பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறவர்களை தட்டி விடக்கூடாது.

    தமிழ்நாட்டில் மோடியை பற்றி பேசுவது அனைத்தும் கற்பனை கதைகள். மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் கிடையாது. தேர்தலில் மோடி 300 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் பிரதமராக வருவார்.

    மோடி கொண்டு வந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அங்கீகரித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்து மதத்தை கேவலப்படுத்தக்கூடிய எந்த செயலையும் மற்ற மதத்தினர் ரசிப்பது இல்லை என்பது தான் உண்மை.


    இந்துக்கள் பொறுமைசாலிகள். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை 23-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணும்போது தெரிந்து கொள்வார்கள். கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. நான்கூட முன்பு கமல்ஹாசன் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று தவிர்க்க முடியாத இடத்துக்கு வருவார் என்று கூறி இருந்தேன். ஆனால் அவர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கமல்ஹாசனின் கட்சியே இல்லாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    மக்கள் நீதி மய்யம் கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முகமது ரபிக் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 13-ந்தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அவரது நாக்கை அறுப்பேன் என்றும் மற்றும் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் மக்கள் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பார்கள் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். எனவே அமைச்சர் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
    நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவை கொல்வதாக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சாத்வி பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.

    பின்னர் இந்த கருத்து தொடர்பாக கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் சாத்வி பிரக்யா சிங் தாக்குர்
    பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், 'நாதுராம் கோட்சே காந்தியின் உடலைத்தான் சுட்டுக் கொன்றார். ஆனால், நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி  பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை உள்ளிட்ட இந்தியாவின் ஆன்மாவை கொல்கின்றனர்’ என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

    ‘அனைத்து விதமான அதிகாரம் மற்றும் அரசியலுக்கு எல்லாம் உயர்வானவர் காந்தி. குறுகிய கண்ணோட்டத்துடனான அரசியல் ஆதாயங்களுக்கு இடமளிக்காமல் ராஜநீதிக்கு உட்பட்ட வகையில் கட்சியில் இருந்து நீக்க பாஜக தலைமை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்’ எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
    கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
    வேலூர்:

    அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென பேசியிருந்தார்.

    இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் தலைமையில் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டிக்கதக்கது.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

    தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், நந்தகோபால், கிரிராஜ், சேகர், மணி, சிவராமன், சந்தோஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கமல்ஹாசன் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    மகாத்மா காந்தி இந்து மதத்தினரை மட்டுமல்ல எல்லா மதத்தவரையும் அரவணைத்து சென்றார். பிரார்த்தனையில் கூட பகவத் கீதையுடன் திருக்குர்ரானையும் சேர்த்து படிக்க வேண்டும் என்று கூறினார்.

    மத சார்பற்ற கொள்கையில் உறுதியுடன் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த பா.ஜ.க. வினர் தலையில் தூக்கி கொண்டாடுகின்றது. கமல் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. அதனை பா.ஜ.க.வினர் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். கோட்சேவை தேச பக்தன் என்றும் அவர் செய்தது சரிதான் என்றும் கூறுகின்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளரே கோட்சே தேச பக்தன் என்று கூறுகிறார். அதற்காக வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவரை வேட்பாளரில் இருந்து நீக்கவில்லை.

    மோடியும், அமித்ஷாவும் நாடகம் ஆடுகிறார்கள். ஜனநாயக நாட்டில் கருத்துக்கள் கூற உரிமை உண்டு. அதனை மறுப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதை தவிர்த்து செருப்பு, முட்டைகளை வீசி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதை மோடி கண்டிக்கவில்லை.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை கோட்சே தேச பக்தர். காந்தி தேச துரோகி. வரலாற்று உண்மையை சொன்ன கமலை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவரை தனிமைப்படுத்த முடியாது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    பெரியார், அம்பேத்கார் கடந்த காலங்களில் இந்து மதத்தை பற்றி என்ன கருத்துக்களை கூறினார்களோ அதைதான் கமல் ஹாசன் பிரதிபலிக்கிறார். இந்து என்ற பெயரில் ஒரு மதம் இல்லவே இல்லை.

    மதங்களுக்கு இடையில் மோதல்-வன்முறை அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது. இந்தியா என்கிற ஒரு தேசத்தையும் இந்து என்கிற மதத்தையும் ஆங்கிலேயர்களின் ஆட்சிதான் உருவாக்கியது. எனவே கமல் சொல்வது ஒரு வரலாற்று உண்மைதான்.


    அதை இன்று அரசியல் ஆதாயத்திற்கு வசதியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்து என்கிற உணர்வை தூண்டி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதுதான் அவர்களின் உண்மையான நோக்கம். அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் ஒரே இலக்கு.

    கமலின் கருத்து உண்மையானதும், நியாயமானதும் ஆகும். அவரை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுவதாக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ என்று சர்ச்சையை கிளப்பிய கமல் இந்து என்பது இந்துக்கள் பெயர் அல்ல என்று மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர்கூறி இருப்பதாவது:-

    ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.

    முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை என்று குறிப்பிட்டுள்ளார். கமலின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளதாவது:-

    கமல் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

    விஷ்ணுபுராணத்தில் ஒரு ஸ்லோகம் ‘இமயம் தொடங்கி இந்து மகா சமுத்திரம் வரை பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பு இந்துஸ்தானம்’ என்று விவரிக்கிறது. இந்துஸ்தான் என்பது மட்டுமல்ல. இந்த நாட்டின் எல்லையையும் குறிப்பிடுகிறது. இது ஆண்டவனால் உருவாக்கப்பட்ட தேசம்.

    நம்நாட்டில் இருக்கும் மதங்களை சனாதன தர்மம் என்போம். நம் நாட்டில் தோன்றிய எல்லா மதங்களுக்கு இடையேயும் ஒரு ஒற்றுமை உண்டு.

    ஆனால், பின்நாளில் அந்நிய மண்ணில் தோன்றி இங்கு வந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் அடிப்படை கூறுகள் வேறுபட்டவை.

    அந்த இரு மதங்களும் வந்ததால் நம் நாட்டில் தோன்றிய மதங்களை இந்துஸ்தான மதங்கள் என்று வகைப்படுத்தினார்கள். பின்னர் இந்து மதங்கள், இந்து மதம் என்று நமது சவுகரியத்துக்காக நாம் வைத்துக்கொண்ட பெயர்தான் இது. மாற்றான் தரவில்லை. அவன் வருவதற்கு முன்பே நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட பெயர்தான் இந்து.

    சங்கராச்சாரியார் தனது உதவியாளரிடம் பைலை கொடுத்து இதை வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்பது வழக்கம். திடீரென்று ஒரு நாள் இந்த பைலை ‘குடுமி’ வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்றாராம்.

    அதை கேட்டதும் உதவியாளருக்கு ஆச்சரியம். என்ன இப்படி குடுமி வெங்கட்ராமன் என்று சொல்கிறாரே என்று குழம்பிபோனார். அப்புறம்தான் அவருக்கு புரிந்தது அங்கு புதிதாக இன்னொரு வெங்கட்ராமன் வேலையில் சேர்ந்து இருந்தார்.

    எனவேதான் ஏற்கனவே இருந்த வெங்கட்ராமன் குடுமி வைத்திருந்ததை அடையாளப்படுத்துவதற்காக அப்படி கூறி இருக்கிறார். பல மதங்களின் வருகையால் இங்குள்ள மதங்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த நாட்டின் மதம் இந்து மதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.

    இந்து என்று சொல்வதற்கு இங்குள்ளவர்கள் வெட்கப்படலாம். ஆனால், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இன்றும் ‘மோடி பிரைம் மினிஸ்டர் அப் இந்துஸ்தான்’ என்றுதான் சொல்கிறார்கள்.

    இங்கிருந்து ஹஜ் புனித பயணம் செய்பவர்களையும் அங்குள்ளவர்கள் இந்து என்றே சொல்கிறார்கள். நம் தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

    இந்து தீவிரவாதி மற்றும் இந்து என்பது மாற்றான் சொல் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்த கமலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    இந்து என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு கலாச்சாரம். அடையாளம். கருட புராணத்திலேயே இந்துஸ்தானம் உள்ளது. இந்து என்பது வெறும் சொல் அல்ல. வாழ்வியல் நெறியாகும். இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் சுட்டுக்கொன்றார் என்பதற்காக அதனை சீக்கிய தீவிரவாதம் என்று கூற முடியுமா? ராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டி தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று கூறமுடியுமா?

    எனவே இந்து தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பதன் மூலம் கமல் வரலாற்று பிழையை செய்துள்ளார். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது. காந்தியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோட்சேயிடம் இந்து மதம் சொல்லவில்லை.

    விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது கமல் என்ன பாடுபட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி பாதிப்புக்குண்டான கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசுவது மிகவும் ஆபத்தானது.

    இடதுசாரி சிந்தனை கொண்டவர்களுடன் கமலுக்கு ஏற்பட்ட தொடர்பே இதற்கு காரணம். தான் எழுதியுள்ள யார் மகாத்மா? என்கிற புத்தகத்தை கமல் படிக்க வேண்டும். இந்து என்பது மாற்றான் சொல் என்று கூறும் கமலுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஆவணங்களோடு தயாராகவே உள்ளேன்.


    கமல் தயாரா? தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும்.

    இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

    இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை கமல்ஹாசன் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது என அவர் மீண்டும் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

    இந்து மதம் ஆண்டாண்டு பழமையானது- முதன்மையான மதம். கேதர்நாத்தில் உள்ள சிவாலயம் பாண்டவர்கள் வழிபட்டது. அந்த அளவுக்கு இந்து மதம் மிகவும் தொன்மையானது.

    இந்தியாவுக்கு வந்தவர்களும், ஆள வந்தவர்களும், வாழ வந்தவர்களும் இந்து மதத்தின் சிறப்புகளை அழிக்க முற்பட்டனர். அதையெல்லாம் தாண்டி இந்துமதம் தழைத்தோங்கி உள்ளது.


    கமல்ஹாசன் கூறுவது போல இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது அல்ல, இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    புதிய வரலாற்று ஆசிரியர் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி என்று கமலின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
    சென்னை:

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    அவரின் கருத்து இந்திய அரசியலில் விவாதப் பொருளாகி உள்ள நிலையில் கமல் தனது டுவிட்டரில் நேற்று மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை பதிவிட்டு இருந்தார்.

    ‘இந்து’ என்ற சொல் முகலாயர் காலத்திற்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டதாகவும் அதனை ஆங்கிலேயர் வழிமொழிந்ததாகவும், மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் மதமாக பின்பற்றுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தமிழகத்தில் உருவாகி உள்ளன. வரலாற்று உண்மையைத் தான் கமல் கூறியுள்ளார் என்று ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கமல் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-


    ஏற்கனவே கணக்கு வாத்தியார் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தப்பு தப்பா கணக்கை கூட்டல் செய்பவர். இப்போது அந்த வரிசையில் வரலாற்று ஆசிரியர் கமலும் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி.

    நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விட்டு விட்டு வரலாற்று ஆராய்ச்சிகளை செய்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டுமா?

    மக்கள் முன்னேற்றம் பற்றி சிந்திப்பது தான் தலைவர்கள். அதை விட்டு உறுப்படியற்ற வேலைகளை ஸ்டாலினும், கமலும் செய்வது கேலி கூத்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்து மதத்தை விரோதமாக பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி ஏன் பேசுவதில்லை? மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
    மன்னார்குடி:

    மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய தேச தலைவர்கள் 2 பேரும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்ததில் முக்கிய பங்காற்றியவர்கள். காந்தி அகிம்சை வழியை கையாண்டார். சுபாஷ் சந்திரபோஷ் ஆயுதம் ஏந்தினார். இதனால் சுபாஷ் சந்திரபோசை தேசவிரோதி என்று சொல்லி விட முடியுமா?. கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் சொன்னதால் தான், நான் கோட்சே தேசபக்தர் என்று கூறினேன்.

    இந்து மதம் போதிப்பது சகிப்பு தன்மையையும், பொறுமையும் தான். ஆனால் அந்த பொறுமைக்கும் எல்லை உண்டு. கிருஷ்ணர் பொறுமை பொறுமை என்று இருந்திருந்தால் மகாபாரத யுத்தமே நடந்திருக்காது. கோட்சே செய்தது சரி என்று நாங்கள் எங்கேயும் நியாயப்படுத்தவில்லை. கோட்சேவும் தேச பக்தர் என்று தான் கூறினோம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நாம் நினைத்து பார்ப்பதில்லை. ஒரு சிலரை தான் நினைவில் வைத்துள்ளோம். நான் ஒரு இந்து மத சந்நியாசி. இந்து விரோத கருத்துக்கள் வரும்போது அது தொடர்பாக கருத்தை தெரிவிப்பது எனது கடமை.


    இந்துவாக இருந்து கொண்டு இந்து விரோதமாக பலர் பேசி வருகின்றனர். குறிப்பாக ராமசாமி நாயக்கர் (பெரியார்) இந்து பெயரை வைத்து கொண்டு இந்து விரோதமாக தான் பேசினார். தற்போது மு.க.ஸ்டாலின் மசூதிக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறார். ஆனால் தன் நெற்றியில் இடப்படும் விபூதியை மட்டும் அழிக்கிறார். இவரது குடும்பத்தினர் இந்துவாக இருக்கின்றனர். இதை தான் நாங்கள் சுட்டி காட்டுகிறோம். இந்து மதத்தை விரோதமாக பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி ஏன் பேசுவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×