என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சட்டம் ஒழுங்கு"
- ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை: ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு வெட்டு - தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே? முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் நுழைந்து மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே தஞ்சாவூருக்கு அருகில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும், வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் தான் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. ஆனால், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சருக்கு இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை.
மக்களுடன் கொஞ்சமும் ஒட்டாத வகையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். மக்களிடமிருந்தும், தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இருந்தும் முதலமைச்சர் எவ்வளவு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதற்கு இவை தான் சான்றுகள்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குக் கூட முதலமைச்சர் செல்லவில்லை. காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் எவ்வாறு விற்க முடியும்? என்று உயர்நீதிமன்றம் இன்று வினா எழுப்பியுள்ளது. நீதித்துறை, மக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்படும் அவல நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளது.
காவல்துறையை அதன் தலைமை இயக்குனர் தான் இயக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள். காவல்துறையின் பின்னடைவுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் இது தான் காரணம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள இந்த அரசாங்கம் முற்றிலுமாக சட்டம் ஒழுங்கு சீரழிந்த நிலையில் தான் இருக்கிறது.
- கருத்து சொல்லும் பொழுது பொறுப்பற்ற வகையில் பதில் அளிப்பதே இங்குள்ள சட்டத்துறை அமைச்சர் மற்றும் பலருக்கும் வழக்கமாக உள்ளது.
நெல்லை:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார்.
பாளை வி.எம் சத்திரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்றங்கள் ஒட்டு மொத்தமாக சமூகத்தில் நடக்கவே நடக்காது என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல இயலாது. ஆனால் ஒரு அரசாங்கம் குற்ற செயல்களை தடுப்பதற்கும், குற்ற செயல்கள் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி என்பது குறித்தும் உள்ள அரசின் நடவடிக்கையை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் தமிழகத்தில் உள்ள இந்த அரசாங்கம் முற்றிலுமாக சட்டம் ஒழுங்கு சீரழிந்த நிலையில் தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நடைபெறக்கூடிய கொலைகள், நெல்லை மாவட்டத்தில் கூட காங்கிரஸ் தலைவர் ஒருவர் இறந்திருக்கிறார். அவர் எவ்வாறு இறந்தார் என்பது கூட இதுவரை தெரியவில்லை.
தமிழகத்தில் எப்போதும் பாதுகாப்பு இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு கூட இங்கு உத்திரவாதம் இல்லை. அதாவது கட்சியின் மேல் மட்டத்தில் உள்ள தலைவர்கள் உயிருக்கும் கூட பாதுகாப்புக்கு இல்லாத சூழ்நிலை தான் நிலவுகிறது.
இதுகுறித்து கருத்து சொல்லும் பொழுது பொறுப்பற்ற வகையில் பதில் அளிப்பதே இங்குள்ள சட்டத்துறை அமைச்சர் மற்றும் பலருக்கும் வழக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.
- எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என்ற புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல. கலை மற்றும் அறிவுசார் மாநிலம் தான் தமிழ்நாடு. சமூக விரோதிகளை களை எடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பழனிச்சாமி உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவரது ஆட்சியில் நடந்த சம்பவங்கள் ஆட்சியில் தொடர்பு உடையவை. ஆனால் தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.
அதிமுக தொடர்பான சம்பவம் என்று எடுத்துக் கொண்டால் அது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவினுடய கேம்ப் அலுவலகமாக இருந்தது. அங்கு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அது ஆட்சியாளரினுடைய திறமையின்மையை காண்பிப்பதாக இருந்திருக்கிறது அல்லது ஏதோ சதி திட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது.
அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார். 13 பேர் உயிரிழந்தது டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் கூறியிருந்தார். அன்று அதை ஒப்பு கொள்ளவில்லை.
ஆனால் எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.
26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைப்பெற்ற சம்பவங்களில் ஒன்று புதுச்சேரியை சேர்ந்தது. அதையும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருக்கிறார்.
மீதம் உள்ள 4 வன்முறை சம்பவங்கள் எதுவும் அரசாங்கத்திற்கு தொடர்புடையவை அல்ல. இந்த சம்பவங்கள் அனைத்து அவர்களுக்குள் முன்விரோதம், பகைமை அடிப்படையில் ஏற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறதே தவிர இதில் எதுவும் சட்டவிரோதம் சம்பவம்மும் இல்லை.
ஒரு காலத்தில் 4 கோடி மக்களுக்கு தலைவர் என்று தலைவர் கலைஞரை சொல்லுவோம். இன்றைக்கு 8 கோடி மக்களுக்கு தலைவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் தொகையும் உயர்ந்திருக்கிறது இதுபோன்ற சம்பவங்களும் கூடவும் செய்யும் குறையவும் செய்யும். ஆனால் அதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.
அதே வேளையில் யார் யாருக்கு முன் விரோதம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். ரவுடிகளின் பட்டியலை வைத்து அவர்களுக்குள் ஏதாவது விரோதம் இருக்கிறதா என்பதை குறித்து விசாரணை நடத்த காவல் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு அப்படி ஏதாவது பிரச்சனை இருப்பின் அதை தீர்த்து வைக்க முன்நடவடிக்கை எடுப்பவதாக முதலமைச்சர் இருக்கிறார்.
ஆகவே சட்டம் ஒழுங்கை நாங்கள் சிறப்பாக பேணி பாதுகாப்பதால் தான் இந்தியாவிலேயே முதன்மையாக மாநிலமாக நமது தமிழ்நாடு இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது, மறுக்கவும் முடியாது
அதனால்தான் நிறைய தொழிலதிபர்கள் நம்மை நாடி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் இதை வேறு கோணத்திலே மாற்றிவிட்டு இந்த சமூகத்தை பின்நோக்கி தள்ளிவிட முடியுமா என கனவு காண்கிறார்கள். அவர்களுடைய கனவு ஒரு காலத்திலும் பலிக்காது. இவை அனைத்தையும் முதலமைச்சர் வென்று காட்டுவார். தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த அமைதி பூங்கா என்பதை நிருப்பித்து காட்டுவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை.
- கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தினார்.
கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
3 மாவட்டத்திற்கும் சவாலாக உள்ள புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
சட்டம்- ஒழுங்கு குறித்தும் கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பொது மக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆளும் கட்சியினர் பதில் அளிப்பது தொடர்கதை தான்.
- செவி கொடுக்கப்படாத பிரச்சினைகள் பூதாகாரமாக வெடிக்கும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், அதற்கு ஆளும் கட்சியினர் பதில் அளிப்பதும் தொடர்கதை தான்.
தீர்க்கப்படாமல் இருக்கும் மக்கள் பிரச்சினை, ஆர்ப்பாட்டம் முதலானவை அரசு இயந்திரத்தில் சகஜமான ஒன்றுதான். இதற்கான அளவீட்டில் மாறுபாடு ஏற்பட்டாலோ, பிரச்சினை அல்லது போராட்டத்தின் வீரியம் அதிகரித்தாலோ சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக அது உருவெடுக்கும். சமயங்களில் செவி கொடுக்கப்படாத பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும்.
அந்த வகையில், உளவுத்துறை, காவல் துறை, சட்டம் ஒழுங்கு என அரசு இயந்திரத்தில் ஏதோ ஒன்றின் தோல்வியால் கடந்த வாரம் தேசிய கட்சி ஒன்றின் மாநிலத் தலைவர் அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்ட கோர சம்பவம் அரங்கேறியது.
ஸ்விக்கி, சொமாட்டோ ஊழியர்களை போன்ற உடை அணிந்து, இருசக்கர வாகனங்களில் வந்த 6பேர் நின்று கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ஐ சரமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த கும்பல் வந்த வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றது. கடுமையான தாக்குதலுக்கு ஆளான ஆம்ஸ்ட்ராங் உடனே உயிரிழந்தார்.
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னையின் மத்திய பகுதியில், அதுவும் பொது வெளியில் வைத்து ஒரு கட்சியின் மாநில தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிலைமை கைமீறி செல்லும் தருவாயில், காவல் துறையினர் இந்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கையை துவங்கிவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும், ஒரே இரவில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய கைது நடவடிக்கைகளும் அரங்கேறின. இதனிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் கடந்த 31 நாட்களில் மட்டும் 131 படுகொலைகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அரசியல் கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையெனில், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்றும் கேள்வியெழுப்பினார்.
முன்னதாக கடந்த மே மாதத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதுதவிர நெல்லையில், பிரபல ரவுடி தீபக் ராஜா அவரது காதலி கண் முன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டவர் சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று மாதங்கள் வரை பின்னோக்கி செல்லும்போது இதே போன்று மேலும் சில படுகொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. படுகொலை தவிர கள்ளச்சாராய விவகாரம் மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையை கூட்டுவதில் பங்கு வகித்தது. அரசியல் படுகொலைகள், கள்ளச்சாராயம் என அடுத்தடுத்த குற்ற சம்பவங்களே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளன.
புதுப்புது பிரச்சினைகள் எழும்போதெல்லாம் மாநிலம் முழுக்க அரசு நிர்வாக அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். மேலும், தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிகாரிகள் மாற்றம், அவசர ஆலோசனை மற்றும் புது உத்தரவுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சீர்செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்புகிறார். பொது மக்களும் இதே நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர் என கூறினார்.
டெல்லி:
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்ற சம்பவத்தை பட்டியலிட்டு மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-
* தமிழகத்தில் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
* சட்டம் ஒழுங்கை காக்க தமிழக அரசு தவறிவிட்டது.
* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர் என கூறினார்.
- சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
- டி.ஜி.பி.சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர்.
இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி.சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பொற்கொடி விரிவாக எடுத்துக் கூறினார்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
- சரியான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஜி.கே வாசன் வெளியிடுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தை திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்துவதில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, பொது மக்களைப் பாதுகாக்க, அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை என ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தவறிவிட்டது.
எனவே தமிழக அரசே, காவல் துறையே சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க தங்கள் துறையின் மூலம் முறையான, சரியான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- காவல் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
- இன்று மாலை 6 மணியளவில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலும் பங்கேற்கிறார்.
மேலும் காவல் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இன்று மாலை 6 மணியளவில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
- ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.
இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த வேண்டியது உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலுக் கான அட்டவணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் வாரியாக தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியன குறித்து அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையக் குழுவினர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் ஆணையக் குழுவினரின் வருகை தள்ளிப்போயுள்ளது.
இதனிடையே, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை அந்தந்த மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் விளக்க உள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்படும்.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏதேனும் முக்கிய பண்டிகைகள் வருகிறதா என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநில சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்க இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக்கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு டெல்லி சென்றுள்ளார்.
- தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
- விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரம், மருத்துவக் கல்லூரி பகுதி 46,47, 48,49- வது வார்டிற்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர், மாநகர செயலாளர் என்.எஸ். சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பகுதி பொறுப்பாளர் டி. மனோகரன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ரத்தினவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அ.தி.மு.க. தனித்துவம் வாய்ந்த கட்சியாகும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி திறம்பட வழி நடத்தி வருகிறார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் நிலம் எடுப்புக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தி.மு.க அரசு குண்டர் சட்டம் போட்டது.
உடனடியாக இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டம் தெரிவித்து தானே தலைமை தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என எச்சரிக்கை விடுத்தார்.
அதன் பிறகே விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டது.
இதேபோல் தி.மு.க ஆட்சியில் கடுமையான மின்வெட்டு, வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இப்படி மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அடுத்து மக்களின் பேராதரவோடு மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையும். எனவே பூத் கமிட்டி நிர்வாகிகள் சரியான முறையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பகுதி துணைச் செயலாளர் சிவகுமார், வட்ட செயலாளர்கள் கிருபாகரன் (46-வது வார்டு), மோகன் (47-வது வார்டு), பழனிவேல் (48-வது வார்டு), அண்ணாதுரை (49-வது வார்டு), தகவல் தொழில்நுட்ப பிரிவு நடராஜன், மருத்துவக் கல்லூரி பகுதி சிறுபான்மை பிரிவு சையது முகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விருதுநகரில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட பலர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
சாலைகளில் உரிய அனுமதியின்றி அமைத்துள்ள வேகத் தடைகளை அகற்றவும், சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டது. பள்ளிகளில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதம் முதல் வெள்ளிக் கிழமை அன்று தொடர்ந்து காவல்துறை மூலம் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை பணியாளர்கள் தக வல் தெரிவிக்க வேண்டும், போதை பொருள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்தல் தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் குழு கண்கா ணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கோட்டப் பொறியாளர்(நெடுஞ்சாலை மற்றும் கட்டிட பராமரிப்பு) பாக்கியலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்