search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விலை"

    • டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தோல்வி அடைந்துவிட்டது.
    • ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய தமிழக அரசும் இத்தேர்வை திணித்த மத்திய அரசும்தான் இதற்கு காரணம்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரேஷன் கடை பணியாளர்களை போட்டித்தேர்வின் மூலம் நியமிக்கவேண்டும். இதில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். முதல் ஒரு ஆண்டுக்கு தொகுப்பு ஊதியத்திலும் பின் பணி நியமனம் செய்யபட்டு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்த பணி நியமனத்திலும் நேர்காணலில் முறைகேடு நடைபெறுகிறது. போட்டித்தேர்வின் அடிப்படையில் இப்பணி நியமிக்கப்பட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனையாளர் பணி நியமனத்தில் நேர்மையாக இருந்த கூட்டுறவு அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் கதிரேசன் ஓய்வுபெற உள்ளார். ஏற்கனவே சென்னை, காமராசர், பாரதியார், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. சில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பதவி நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் பணி நியமனத்தில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் ஏற்பட்ட மோதலால் துணை வேந்தர் பணி நியமிக்கப்படவில்லை.

    தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 120-க்கும், வெங்காயம் ரூ. 80-க்கும் உயர்ந்துள்ளது. தீபாவளியையொட்டி இதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மொத்தமாக கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் விற்க வேண்டும்.

    மின்வாரியத்தில் ஆள் குறைப்பு செய்ய உள்ள திட்டத்தை கைவிட வேண்டும். மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 95 விழுக்காடு பயனாளிகள் ஆன்லைனில் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ரூ.5 ஆயிரம் வரை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்ற நிலையை திரும்ப பெற வேண்டும். இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. வரும் 15-ந் தேதி 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்துவது போதுமானதல்ல. 5 ஆயிரம் முகாம்கள் நடத்தவேண்டும். இந்நோய்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கம் அமைக்க அரசும், நிறுவனமும் அங்கீகரிக்க வேண்டும். கட்சிகள் சார்ந்த தொழிற் சங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று துணை முதல்-அமைச்சர் கூறியிருப்பது சரியல்ல. தொழிலாளர்களை விட சாம்சங் நிறுவனத்தின் நலனே பெரிது என அமைச்சர் உதயநிதி கூறியிருப்பது சரியல்ல.

    சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கீழ்முகம் கிராமத்தில் புனிதா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய தமிழக அரசும் இத்தேர்வை திணித்த மத்திய அரசும்தான் இதற்கு காரணம்.

    சிதம்பரம் நடராசர் கோவில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகியை தாக்கியது கண்டிக்கதக்கது. கோவில்களில் தீட்ஷிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானத்தை அரசு அமைத்து கொடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரில் சென்ற கும்பல் சோமண்டே பள்ளி என்ற இடத்தில் வேனின் முன்பாக காரை நிறுத்தினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. அப்போது தக்காளி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை குறி வைத்து கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்டனர்.

    தோட்டங்களில் புகுந்து விவசாயிகளை தாக்கி நள்ளிரவு நேரங்களில் தக்காளி பழங்களை பறித்து சென்ற சம்பவங்களும் நடந்தன.

    அதே நிலை தற்போது ஆந்திராவில் மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் கொள்ளை கும்பல் தக்காளி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை குறிவைத்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகலிலை சேர்ந்தவர் நயாஸ்.

    தக்காளி வியாபாரியான இவர் தனது வேனில் தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு ஐதராபாத் சென்றார். ஐதராபாத் மார்க்கெட்டில் தக்காளியை விற்றுவிட்டு மீண்டும் முல்பாகல் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தார்.

    ஆந்திரா மாநிலம் கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் வேனை நிறுத்திவிட்டு அங்குள்ள கடையில் டீ குடித்தார். அங்கிருந்த கும்பல் ஒன்று நயாஸ் தக்காளி விற்றுவிட்டு வருவதால் அவரிடம் ஏராளமான பணம் இருக்கலாம் என எண்ணினர்.

    டீ குடித்து முடித்த பின்னர் நயாஸ் வேனை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அப்போது டீக்கடையில் இருந்த கும்பல் தங்களது காரில் நயாஸ் வேனை பின் தொடர்ந்து சென்றனர். நயாஸ் வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். கும்பல் அவரை 250 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்றனர். காரில் சென்ற கும்பல் சோமண்டே பள்ளி என்ற இடத்தில் வேனின் முன்பாக காரை நிறுத்தினர்.

    காரில் இருந்து இறங்கிய கும்பல் நயாசை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த காரில் மீண்டும் தப்பிச் சென்றனர். இது குறித்து நயாஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    தக்காளி வியாபாரியை குறிவைத்து கும்பல் கொள்ளையடித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தக்காளி வியாபாரிகள் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

    • வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தக்காளி விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து விற்பனையானது.

    இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த மார்க்கெட்டில் இந்த விலை என்றால், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது.

    தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், வெங்காயம், தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், அவற்றை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்து பண்ணை பசுமை கடைகளில் தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறது.

    கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.55 வரை, தக்காளி ரூ,60 வரை விற்பனையாகும் நிலையில், இங்கு வெங்காயம் கிலோ ரூ,40-க்கும், தக்காளி கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    • மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது.
    • தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மையப் பகுதியில் இருக்கும் காந்தி மார்க்கெட் மாநகர் மற்றும் புறநகர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அண்டை மாவட்ட மக்களின் காய்கறி தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இங்கு தினமும் 15 லோடு தக்காளி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள்.

    தற்போது வெளி மாநிலத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ள காரணத்தினால் ஆந்திர, கர்நாடக தக்காளி வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெளிமாநில தக்காளி வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் தக்காளியும் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

    இது தொடர்பாக தக்காளி மண்டி வியாபாரிகள் சங்க தலைவர் கலீலுல் ரகுமான் கூறும்போது, திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று 25 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.900 முதல் ரூ.1100 வரை விற்பனை ஆனது. தற்போது திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட உள்ளூர் தக்காளி வரத்தை மட்டுமே உள்ளது. ஆந்திரா தக்காளி ஒரு பெட்டிக்கு அங்கேயே ரூ. 1500 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும்போது ரூ.2000 வரை விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும்.

    ஆகவே இங்குள்ள வியாபாரிகள் வெளி மாநில தக்காளி வாங்குவதை நிறுத்திவிட்டனர். இன்று 8 லோடு உள்ளூர் தக்காளி மட்டுமே திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வந்தது. அவ்வளவும் உடனடியாக விற்பனையாகி விட்டது. கடுமையான வெயிலின் காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மேலும் உயரம் வாய்ப்பு உள்ளது என்றார்.

    திருச்சி காந்தி மார்க்கெட் சில்லரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று 50 முதல் 60 வரை விற்கப்பட்டது.

    இதேபோன்று மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று மேலும் வரத்து குறைந்து நல்ல தேங்காய் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சில்லரை சந்தைகளில் ஒரு தேங்காய் ரூ.30 முதல் 40 வரை விலை நிர்ணயம் செய்திருந்தனர். தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • தக்காளியை பறிக்க பயன்படுத்தும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட தக்காளி விற்ற தொகை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
    • இன்னும் சில நாட்களில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் என்பதால் தக்காளி விலையானது சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே காய்கறிகள் விலை சீரற்ற நிலையில் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் உள்ளூர் வரத்து தக்காளிகள் அதிகமாக வருகிறது.

    இதனால் தக்காளி விலை நாள்தோறும் இறங்குமுகமாக காட்சியளிக்கிறது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.14 முதல் ரூ.17 வரை விற்பனையானது. உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்பட்டது. மொத்த மார்க்கெட்டில் 6 கிலோ தக்காளி ரூ.100 என்று கூவி கூவி வியாபாரிகள் விற்றனர். தக்காளி விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இதேபோல் 3 கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்பட்டது. சின்ன வெங்காயமும் நெல்லை, தென்காசியில் இருந்து மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் வருவதால் விலை வெகுவாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் சில்லறை விற்பனைக்காக வாங்கி செல்பவர்கள் ஒரு கிலோ தக்காளி ரூ.20 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தின் பிரதான காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்து அவை ஏலம் விடப்பட்டு வருகிறது. காய்கறிகளை ஏலம் எடுப்பதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் பாவூர்சத்திரம் காய்கறி சந்தைக்கு வருவார்கள்.

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான பெத்த நாடார்பட்டி, மகிழ்வண்ண நாதபுரம், அடைக்கலப்பட்டணம், மேலபட்டமுடையார்புரம், ஆலங்குளம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டிருந்தனர். தற்பொழுது விளைச்சல் அதிகரித்துள்ளதால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் வரை தக்காளி கிலோ ரூ.20 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.8 ஆக வீழ்ச்சி அடைந்தது.

    இதனால் தக்காளியை பறிக்க பயன்படுத்தும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட தக்காளி விற்ற தொகை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதேநேரம் விலை குறைவால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் என்பதால் தக்காளி விலையானது சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • எப்போதும் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் தற்போது அரை கிலோ வரை மட்டுமே தக்காளி வாங்கி செல்கின்றனர்.
    • ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு தக்காளி விலை ரூ.200 வரை உயர்ந்தது. இதனால் தக்காளி வியாபாரிகள், விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்களாக மாறினார்கள்.

    தக்காளிக்காக கொலை, கொள்ளையும் நடந்தன. இந்த நிலையில் தற்போது தக்காளி மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டன. தற்போது கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் நெல்லூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில பகுதிகளில் இருந்து இந்த 2 மாநிலங்களிலும் தக்காளி வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக தற்காளி வரத்து குறைந்துள்ளது.

    இதனால் தக்காளி விலை உயர்வு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டை போல தக்காளி விலை உயரும். லட்சாதிபதி கோடீஸ்வரர்களாக மாறலாம் என்று கனவில் விவசாயிகள், வியாபாரிகள் தக்காளி உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

    விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் தக்காளி பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர். எப்போதும் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் தற்போது அரை கிலோ வரை மட்டுமே தக்காளி வாங்கி செல்கின்றனர்.

    ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிகப்பெரிய தக்காளி மார்க்கெட்டான மதனப்பள்ளிக்கு குறைந்த அளவிலேயே தக்காளி வரத்து உள்ளது.
    • தற்போது வேலூரில் தக்காளி கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தக்காளி பயிர்கள் வாடி பழங்கள் உருவாகாமல் பிஞ்சிலேயே உதிர்கின்றன.

    இதன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள பெரிய மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் மொத்த விலையில் கிலோ ரூ.40 முதல் 50 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    மிகப்பெரிய தக்காளி மார்க்கெட்டான மதனப்பள்ளிக்கு குறைந்த அளவிலேயே தக்காளி வரத்து உள்ளது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே தற்போது தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தமிழ்நாடு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் தக்காளி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது வேலூரில் தக்காளி கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டால் தக்காளி விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான அமரபூண்டி, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மொத்த விலையில் விவசாயிகளுக்கு 1 கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.8 வரை மட்டுமே கிடைக்கிறது.

    கிராம பகுதியில் இருந்து தக்காளியை சந்தைக்குப் பறித்து எடுத்துச் செல்லக்கூடிய செலவிற்கு கூட போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் தோட்டத்திற்கு அருகில் சாலை ஓரங்களில் தக்காளி பழங்களை கொட்டி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    தக்காளி விலை கடந்த சில மாதங்களில் உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் மத்திய, மாநில அரசுகள் தக்காளியை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று அதனை கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.60 வரை விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வு காரணமாக விவசாயிகள், தக்காளிகளை அதிகளவில் பயிரிடத் தொடங்கினர். இதன் காரணமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்தது.

    உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் மொத்த விலைக்கு கொள்முதல் செய்யும் போது ரூ.10-க்கும் குறைவாக விலை கேட்கின்றனர்.

    இதனால் விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே காரமடை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு நேற்று எடுத்துச் சென்ற போது மிகவும் குறைந்த விலையில் மட்டுமே விலை போனதால் மனவேதனை அடைந்தார். இதையடுத்து தக்காளியை விற்பனை செய்யாமல் காந்திநகர் பகுதியில் சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளுக்கு தீவனமாக போட்டு சென்றார்.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுக்கும் தேவையான தக்காளியை எடுத்து சென்றனர்.

    • ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.

    திருப்பதி:

    தக்காளி வரத்து கடந்த மாதம் குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் ரூ.200க்கு விற்பனையான தக்காளி தற்போது 3 ரூபாயாக குறைந்து உள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    விவசாயிகள் எதிர்பார்த்த அளவு தக்காளி விலை போகாததால் தக்காளி பறிக்கும் கூலி மற்றும் போக்குவரத்து செலவு கூட மிஞ்சவில்லை எனக்கூறி தக்காளியை சாலையோரங்களில் கொட்டி சென்றனர். ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.

    • கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தக்காளி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஏழைகளுக்கு எட்டாத கனிகளில் ஒன்றாக மாறியிருந்தது. ஆப்பிள், மாதுளை பழங்கள் இடையே போட்டி போடும் அளவிற்கு தக்காளி விலை கடும் உச்சத்தை தொட்டது.

    தங்கத்தின் விலை போல தக்காளி விலையை தினசரி கேட்டு வாங்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ஆசியாவில் மிகப்பெரிய தக்காளி சாகுபடி பகுதியாக உள்ளது.

    இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, மும்பை, ஒரிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.

    இதனால் தக்காளி விலை கிலோ 200-க்கு மேல் விற்பனையானது. தக்காளி விவசாயிகள் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறினார்கள். இதனால் தக்காளி விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆட்டம் போடும் அளவிற்கு நிலைமை இருந்தது.

    தக்காளி விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு வந்த வியாபாரிகளிடம் வழிப்பறி மற்றும் கொலை சம்பவங்களும் அரங்கேறின. கடையில் புகுந்து தக்காளி திருட்டு தோட்டத்திற்குள் புகுந்து தக்காளிகளை பறித்து கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தற்போது அன்னமய்யா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிகளவு உற்பத்தியாகி மார்க்கெட்டுகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. சித்தூர் பலமனேர் புங்கனூர் பகுதிகளில் இருந்தும் அதிகளவு தக்காளி வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 90 டன்னுக்கும் குறைவாக வரத்து இருந்த தக்காளி தற்போது தினமும் 300 டன்னுக்கு அதிகமாக வரத்தொடங்கி உள்ளது. இதனால் தற்போது கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.

    ஆந்திராவின் அன்னமய்யா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது தக்காளி காய்களாக உள்ளன. இன்னும் 2 வாரத்தில் இந்த தக்காளிகள் பழமாக மாறிவிடும்.

    கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது தக்காளி கிலோ விலை ரூ.2-க்கும் குறைவாக இருக்கும் என கணித்துள்ளனர். இது விவசாயிகளை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:-

    இந்த காரி பருவத்தில் அதிக அளவில் தக்காளிகளை பயிரிட்டுள்ளோம். இந்த மாத இறுதியில் அதிக அளவு தக்காளி அறுவடை செய்யப்படும். அப்போது தக்காளி விலை மிக குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டுவிடுவது தவிர வேறு வழியில்லை என்றார்.

    மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    கொஞ்ச ஆட்டமாடா போட்டீங்க... இப்போ உங்க நிலைமையை பார்த்தீர்களா என்ற வசனங்களுடன் சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாகி வருகிறது.

    • கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
    • மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    போரூர்:

    தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.200வரை விற்கப்பட்டது.

    இதனால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியை குறைந்த அளவே பயன்படுத்தும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டனர்.மேலும் தக்காளி விலை உயர்வு காரணமாக பல ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி ரசம் ஆகியவை அதிரடியாக நிறுத்தப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 55 முதல் 60 லாரிகள் வரை தினசரி தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்தமாதம் மழையால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து 25 லாரிகளாக குறைந்ததால் விலை திடீரென அதிகரித்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

    இதனால் கடந்த வாரத்தில் தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. இந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 43 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. இதனால் தக்காளியின் விலை மேலும் சரிந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×