search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நீக்கம்"

    • மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர்.
    • குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்ட மாணவ-மாணவிகள் என பலர் படித்து வருகிறார்கள்.

    இந்த கல்லூரியில் வணிகவியல் துறை தற்காலிக கவுரவ விரிவுரையாளராக பிரேம்குமார் (40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் விசாரணை நடத்தினார். மேலும் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பாரதியார் பல்கலைக்கழத்தில் உள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பாராதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து மாணவர்கள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்ன்ர் கல்லூரி முதல்வரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

    மேலும் புகார் அளிக்கப்பட்ட பேராசிரியர் பிரேம்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மாணவ-மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியதும், தரக்குறைவாக பேசியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பேராசிரியர் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து அவரை உயர் அதிகாரிகள் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டனர்.

    • கடந்த ஒரே மாதத்தில் [ஜூலையில்] சுமார் 380 நிறுவனங்களில் இருந்து 1,90,9049 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    • Unacademy, Pocket FM,WayCool உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பணி நீக்கத்தில் ஈடுபட்டுள்ளன.

    தொழிநுட்ப நிறுவனங்களில் லே ஆப் எனப்படும் ஊழியர்கள் பணி நீக்கம் சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பணியின் நிலைத்தன்மை குறித்த அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.

    மறுபுறம் இந்தியா போன்ற இளம் தலைமுறையினர் அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் பட்டதாரிகளைக் குறைந்த சம்பளம் கொடுத்து பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் செயல் என்ற விமர்சங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

    ஆனால் அரசுகளுக்கும் அதிகார மையங்களுக்கும் மிகவும் நெருக்கமாக உள்ள இந்நிறுவனங்கள் லே ஆப்களை தொடரவே செய்கிறது. அந்த வகையில் உலகம் முழுவதிலும்கடந்த ஒரே மாதத்தில் [ஜூலையில்] சுமார் 380 நிறுவனங்களில் இருந்து 1,90,9049 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரே மாதத்தில் 34 நிறுவனங்களால் மொத்தம்  8,383 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக Unacademy, Pocket FM,WayCool உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பணி நீக்கத்தில் ஈடுபட்டுள்ளன.

    பொருளாதார நிச்சயத் தன்மை இல்லாதது, கொரோனா காலத்தில் நடந்த அதிக ஊழியர் சேர்க்கை , வணிக லாப நோக்கம் உள்ளிட்ட காரணங்களாலேயே சமீப காலங்களாக பணிநீக்கம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

    • நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்.
    • பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் நீண்ட காலமாக எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது. இதை துணை முதல்-மந்திரியும், சுகாதார மந்திரியுமான பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த 17 டாக்டர்களையும் அதிரடியாக பணி நீக்கி அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்ததாவது:-

    நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும். மக்களுக்கு சேவை செய்வதும், சுகாதார பணிகளை வழங்குவதும் மிகப்பெரிய பாக்கியம்.

    அதில் எந்தவித அலட்சியத்துக்கோ, ஒழுக்கக் கேட்டுக்கோ இடம் இல்லை.

    ஆனால் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவ அதிகாரிகளாக பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அலட்சியம் காட்டியுள்ளனர். அத்துடன் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் நீண்ட நாட்களாக பணிக்கு வராமல் இருந்துள்ளனர்.

    எனவே அந்த 17 டாக்டர்களையும் பணியில் இருந்து நீக்குமாறு சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

    இவ்வாறு துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியுள்ளார்.

    துணை முதல்-மந்திரியின் இந்த உத்தரவு கிடைத்திருப்பதாகவும், அதன்படி நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    எனினும் பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.

    • 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.
    • டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார்.

    2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அப்பொழுது அவரது நெருங்கிய நண்பர்களான ஸ்டீவ் டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் மஸ்க்- ஐ டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் நாம் தரும் சம்பளத்திற்கு தகுதியானவர்களா? என்று ஆராய கூறினார்.

    அதன்படி டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார். இந்த முடிவு காரணமாக ப்ராடக்ட் அண்ட் டிசைன் பிரிவில் பணியாற்றி வந்த பலர் பாதிக்கப்பட்டனர்.

    உலகின் பெரிய நிறுவனமான டுவிட்டர் தனது பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது, மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களையும் இது குறித்து பரிசீலனை செய்ய வைத்தது. இந்நிகழ்வை தொடர்ந்து வேலை வாய்ப்பு எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.

    இதே ஃபார்முலாவை பெரும்பான்மையான நிறுவனங்கள் கையில் எடுத்தனர். கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற பிரபல நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு மட்டும் 1.5 லட்சத்திற்கு அதிகமானோரை பணி நீக்கம் செய்தது.

    இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் மிட்டில் மேனேஜர்ஸ் எனப்படும் ஊழியர்கள் மற்றும் தலைமை பொறுப்புகளில் வகிப்பவர்களுக்கு இடையில் பணியாற்றும் மேலாளர்கள் தான். ஒரு நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கி, உடனடியாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்த எலான் மஸ்க்-இன் நடவடிக்கை தொழில்நுட்ப துறையில் பேசுபொருளாக மாறியது.

    இந்த நிலையில், எலான் மஸ்க்-இன் இந்த நடவடிக்கை காரணமாகவே தொழில்நுட்ப துறையில் இயங்கி வரும் இதர முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த காரணமாக அமைந்தது என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி.
    • 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு சொந்த மாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு வாங்கியது.

    இதற்கிடையே ஊதியம், போனசில் பாகுபாடு காட்டு வதாகவும், புதிய வேலை வாய்ப்பு விதிமுறைகளை எதிர்த்தும் ஏர் இந்தியா ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் திடீரென்று உடல் நலக்குறைவு விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    ஊழியர்கள் இன்று 2-வது நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஊழியர்கள் 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அவர்களுக்கு அனுப்பப் பட்ட பணிநீக்க கடிதத்தில், அதிகளவில் விடுப்பு எடுத்தது எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் ஒருங்கிணைக்கப்பட்ட வேலையில் இருந்து விலகியிருப்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் கூறி விடுமுறை எடுத்துள்ள மீதமுள்ள ஊழியர்கள் இன்று மாலை 4 மணிக்குள் பணியில் சேர வேண்டும். இல்லையென்றால் பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே கேபின் குழு உறுப்பினர்களுடன் ஏர் இந்தியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் போராட்டம்.
    • அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்.

    கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

    இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன், கூகுள் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

    இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்ற ஊழியர்களை வேலை செய்யவிடாமல் இடையூறு செய்வது, அலுவலகத்திற்குள் வர விடாமல் தடுப்பது நிறுவன கொள்கைகளை மீறும் செயலாகும். இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    அதனால், போராட்டம் செய்தவர்களை அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. அதனால், விசாரணைக்கு பிறகு 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 30 விமானங்களை இயக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 9000 ஊழியர்கள் உள்ளனர்
    • பணிநீக்கத்தால் ரூ.100 கோடி சேமிக்க முடியும் என்றார் செய்தி தொடர்பாளர்

    குறைந்த கட்டண தனியார் விமான சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, அரியானா மாநிலம், குர்காவோன் பகுதியை தலைமையிடமாக கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet).

    புது டெல்லி மற்றும் ஐதராபாத் நகரங்களை தளமாக கொண்டு 60 இந்திய நகரங்களையும், 13 சர்வதேச நகரங்களையும் இணைக்கிறது ஸ்பைஸ்ஜெட்.

    30 விமானங்களை கொண்டு சேவையாற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சுமார் 9,000 பணியாளர்கள் பணி புரிகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வந்தது.

    ஜனவரி மாத சம்பளம் பல ஊழியர்களுக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட், தனது ஊழியர்களில் 15 சதவீதம் பேரை பணிநீக்க உள்ளதாக அறிவித்தது.

    இந்த உத்தரவு சுமார் 1,400 பணியாளர்களை பாதிக்கும் என தெரிகிறது.

    இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது:

    அனாவசிய செலவுகளை குறைக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.

    இதன் மூலம் மனித வளம் முறையாக பயன்படுத்தப்படவும், வருவாயை அதிகரிக்கவும், இந்திய வான்வெளி போக்குவரத்து துறையில் முன்னே செல்லவும் நிறுவனம் முயன்று வருகிறது.

    இந்த பணிநீக்க நடவடிக்கையின் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.100 கோடி வரை சேமிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில் நுட்பத்துறையில் நீடித்த பின்னடைவால் செலவுகளை குறைத்து மறுசீரமைக்க 'பேடிஎம்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்றவற்றுடன் 'ஸ்விகி' இணைகிறது.
    • 'ஸ்விகி' நிறுவனம் உணவு விநியோக சந்தையில் அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது.

    பிரபல உணவு டெலிவரி நிறுவனமான 'ஸ்விகி'யில் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 'ஸ்விகி' நிறுவனம் 380 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

    இந்நிலையில் தற்போது 'ஸ்விகி' நிறுவனம் இந்த ஆண்டில் மேலும் சுமார் 400 ஊழியர்களை அதாவது பணியாளர்களில் 7 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கி வரும் 'ஸ்விகி' நிறுவனம் தற்போது 2-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கி உள்ளது.


    தொழில் நுட்பத்துறையில் நீடித்த பின்னடைவால் செலவுகளை குறைத்து மறுசீரமைக்க 'பேடிஎம்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்றவற்றுடன் 'ஸ்விகி' இணைகிறது. இதைத்தொடர்ந்து 'ஸ்விகி' நிறுவனம் உணவு விநியோக சந்தையில் அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் செலவின குறைப்பு நடவடிக்கையாக மேலும் 400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

    • தமிழக அரசே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது.
    • மீதமுள்ள 18 பேர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமான பணியாளர்களை நியமனம் செய்ததாலும், போதுமான நிதி இல்லாததாலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத இக்கட்டான சூழ்நிலை நிலவியது. இதை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள் பல கட்ட போராட்டங்களில் இறங்கினர். இதையடுத்து, தமிழக அரசே இப்பல்கலைக்கழகத்தை ஏற்க முடிவு செய்தது. அதன்படி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2013-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது.

    அதன்பிறகு தமிழக அரசே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது. மேலும் நிதி நெருக்கடியை சமாளிக்க பல்கலைக்கழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட உதவி பேராசிாியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அதில் 56 உதவி பேராசிரியர்கள் உரிய கல்வித்தகுதி மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    அதாவது, உதவி பேராசிரியர்கள், அவர்கள் நியமனத்தின்போது குறைந்தபட்ச தகுதியை பெற்றிருக்கவில்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    இருப்பினும் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படாமல், அதில் 38 பேர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு பணி நிரவல் மூலம் மீண்டும் பணி அமர்த்தப்பட்டனர். மீதமுள்ள 18 பேர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர்.

    இந்தநிலையில், திடீரென 56 உதவி பேராசிரியர்களையும் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு மற்றும் தமிழக அரசு உயர் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி பணி நீக்கம் செய்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட 56 உதவி பேராசிரியர்களும் உரிய கல்வி படிக்காமலும், உதவி பேராசிரியருக்கான போதுமான கல்வி தகுதி இல்லாமலும் பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டது.

    இவர்கள் மீது ஆட்சி மன்றக் குழு முடிவின்படியும், தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அறிவுறுத்தலின்படியும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றார்.

    • மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
    • மணிகண்டனை பணி நீக்கம் செய்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மருத்துவமனையின் ஆபரேசன் அறையில், அறைகுறை ஆடையுடன் படுத்திருந்த நோயாளியுடன், கையில் கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு செல்பி எடுத்தார்.

    அப்போது ஒரு டாக்டர், 2 நர்சுகளும் உடன் இருந்தனர். பின்னர் அந்த புகைப்படத்தை மணிகண்டன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதர சமூக வலைதளங்களிலும் அதை வெளியிட்டார்.

    இதை உயர் அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் ஆனந்தவேல், மருத்துவக்கல்லூரி டீன் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

    அப்போது மணிகண்டன், அவரது மனைவி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவமனை ஆபரேசன் அறையில் பணியில் இருப்பதை போட்டோ எடுத்து அனுப்பியதாகவும், இது இணையத்தில் எப்படி வைரலானது என எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மணிகண்டனை பணி நீக்கம் செய்து ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். மணிகண்டன் போட்டோ எடுத்தபோது பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரது மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • ஆவணங்களை திருத்தியது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
    • முறைகேடான நியமனங்களை ரத்து செய்து அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2019-20ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் என 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி ஆகிய இடங்களிலும் ஆவினில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் முறையாக தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பலருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்படவில்லை.

    "முறையாக விண்ணப்பிக்காத பலர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒரு பணியிடத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை பணி அமர்த்தியதாகவும்" ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் குழு மதுரை, தேனி, திருப்பூர் நாமக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்

    இந்த விசாரணையின்போது அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் குழு ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் வழங்கியது.

    இந்த அறிக்கையை பரிசீலித்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் பிறப்பித்துள்ளார்.

    இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

    இதையடுத்து, பணி இடம் நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இந்த சம்பவத்தில் ஆவணங்களை திருத்தியது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. முறைகேடான நியமனங்களை ரத்து செய்து அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், முறைகேடு தொடர்பாக உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்தில் ஆவின் பொது மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • ரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    • போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் போலீஸ் சரகத்தில் பணிபுரிந்த சிலர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.

    அவர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்த போலீசார் பற்றி ரகசிய விசாரணை நடத்தினார். அதில் கோழிக்கோடு ரூரல் பகுதி ஜாய் தாமஸ், கண்ணூர் ரூரல் கோகுலன், கண்ணூர் நகரம் நிசார், கோழிக்கோடு ஷிபின், கண்ணூர் கிராமம் ஷெஜிர், காசர்கோடு ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

    அவர்களில் ஜாய் தாமஸ், கோகுலன் ஆகிய இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆவார். மற்ற 5 பேரும் சிவில் போலீஸ் அதிகாரிகள் ஆவார். அவர்கள் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 7 பேரையும் டிஸ்மிஸ் செய்து கண்ணூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. புட்டா விமலாதித்யா உத்தரவிட்டார். கடமை தவறியது, ஒழுக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கேரள மாநில காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×