search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பஸ் நிலையம்"

    • பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை.
    • புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய காலத்தில் வருசநாடு பகுதிக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான இடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வருசநாட்டில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. அதேபோல வருசநாடு கிராமத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இடங்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் சின்னமனூரைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தாமாக முன்வந்து வருசநாடு கிராமத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக ஆளுநர் பெயருக்கு பத்திரம் பதிவு செய்து வழங்கினார். அதற்கான ஆவணங்களை வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவிடம் வழங்கினார். பஸ் நிலையம் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

    • புகழ்பெற்ற நகராமான மாமல்லபுரத்தில் நவீன வசதியுடன் பஸ்நிலையம் இல்லாமல் உள்ளது.
    • மாமல்லபுரம் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு தற்போது நினைவாகி உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் புகழ்பெற்றவை. கடந்த 1984-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக புகழ் வாய்ந்த புராதன சின்னங்கள் அடங்கிய சுற்றுலா நகரமாக அங்கீகரிக்கப்பட்டது.

    தினந்தோறும் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து புராதன சின்னங்களை ரசித்து செல்கிறார்கள். புகழ்பெற்ற நகராமான மாமல்லபுரத்தில் நவீன வசதியுடன் பஸ்நிலையம் இல்லாமல் உள்ளது. இது கடந்த 50 ஆண்டு காலமாக அப்பகுதியில் பெரும் குறையாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் தற்போது நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு கடந்த 27-ந் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு தற்போது நினைவாகி உள்ளது.

    இந்த புதிய பஸ் நிலையம் மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோவில் எதிரில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு மாடி கட்டிடமாக ரூ.90.5 கோடி செலவில் நவீன வசதியுடன் கட்டப்பட உள்ளது. இது மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மாதிரியாக கொண்டு வடிவமைப்பட்டு உள்ளது.

    தரைத்தளம் இ.சி.ஆர் புறவழி சாலையுடன் இணைக்கப்பட்டு அதில் 100 கார்கள், 300 மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ நிறுத்தும் இடமாகவும், முதல் தளம் இ.சி.ஆர் புதிய பாலத்துடன் இணைக்கப்பட்டு சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தட பஸ்கள் 50-க்கும் மேற்பட்டவை நின்று செல்லும் வசதியுடனும் அமைகிறது. மேலும் நேரக்காப்பாளர் அறை, சில்லரை கடைகள், கழிப்பறை, குடிநீர் சுத்திகரிப்பகம், டிக்கெட் கவுண்டர், சுற்றுலாத்துறை அறை, உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகிறது. இரண்டாவது தளத்தில் உணவகம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறை, பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைகிறது.

    அடுத்த ஆண்டு (2025) செப்டம்பர் 25-ந்தேதிக்குள் பணிகளை முடித்து புதிய பஸ் நிலையத்தை திறக்க சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு உள்ளது. வரும் காலங்களில் இந்த பஸ் நிலையம் கிழக்கு கடற்கரை சாலையின் முக்கிய போக்குவரத்து மையமாக அமையும். தொடர்ந்து மாமல்லபுரம் நகரத்திற்கான 100 சதுர கி.மீ., பசுமை மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி களை அதற்கான நிபுணர்கள் குழுவுடன் அரசு ஆலோ சித்து வருவதாக தெரிகிறது.

    • சுமார் 88 ஏக்கரில் ரூ.394 கோடி செலவில் நவீன வசதிகளுடன் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
    • தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 88 ஏக்கரில் ரூ.394 கோடி செலவில் நவீன வசதிகளுடன் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே சமீபத்தில் பெய்த மழையின்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தின் முன்பகுதியில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வெளியேற சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்கி பார்க்கும் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. அரசு விரைவு பஸ்கள், மாநகர பஸ்கள் என சுமார் 100 பஸ்கள் அனைத்தும் வெளியில் இருந்து புறப்பட்டு கிளாம்பாக்கம் புதிய நிலையத்திற்குள் வந்தது. பின்னர் அனைத்து பஸ்களும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் கழித்து புறப்பட்டு சென்றன. பஸ்கள் நிறுத்தும் இடங்களில் அந்தந்த ஊர்களின் பெயர் பலகைகள் இருந்தன. பஸ்கள் உள்ளே வந்து பின்னர் வெளியே செல்லும் போது ஏற்படும் இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல், தேவையான கூடுதல் வசதிகள் குறித்து டிரைவர், கண்டக்டர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இந்த வெள்ளோட்டம் பார்க்கும் நிகழ்ச்சி நாளையும் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. அங்கு மேலும் செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் போக்குவரத்தில் உள்ள பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய பஸ்களை இயக்கி ஒத்திகை நடைபெற்றது. நாளையும் இது நடைபெறும் என்றார்.

    • தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் புதிய பஸ் நிலையத்தை கடலூரின் மையப்பகுதியில் அமைக்க வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் மாயவேல், முனுசாமி, ராஜேந்திரன், கல்யாண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொது செயலாளர் தேவநாதன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி, திருமார்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

    தலைவர் பாலு பச்சையப்பன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டமை ப்பின் சிறப்பு தலைவர் மருதவாணன் பேசினார். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜசேகரன், பன்னீர்செல்வம், செல்வகணபதி, கோமதிநாயகம், கோபால், பாஸ்கர், காசிநாதன், தில்லைநாயகம், வீராசாமி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ரமணி நன்றி கூறினார். 

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
    • ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதி உள்ள கால்வாய் பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் கால்வாய் பணியை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பகுதி தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியை தாண்டி இப்போது செங்கல்பட்டு பகுதியில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னைக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மின்சார ரெயில் சேவை உள்ளதால் செங்கல்பட்டு பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    தற்போது செங்கல்பட்டு பஸ்நிலையம் ஜி.எஸ்.டி.சாலையை ஒட்டி ரெயில் நிலையம் அருகே உள்ளது. இங்கிருந்து மதுராந்தகம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தாம்பரம், அச்சரப்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் போதிய இடவசதி இல்லாததாலும், வாகன பெருக்கம் காரணமாகவும் செங்கல்பட்டு பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெண்பாக்கம் பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு சுமார் ரூ.40 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய பஸ்நிலையம் அமைய இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரி உள்ளது. பஸ்நிலைய பணிகளை ஒரு ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 பஸ்களை நிறுத்தும் வகையிலும், சுமார் 67 நான்குசக்கர வாகனங்கள், 782 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் வகையிலும் பார்க்கிங் பகுதி அமைய இருக்கிறது. மேலும் 30 கடைகள், ஓட்டல்கள், பெரியவளாகம், சுற்றுலா தகவல் மையம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வெடுக்கும் அறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, செங்கல்பட்டு நகரின் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. நிலம் கையகப்படுத்தும் செலவு திட்டத்திற்கு அதிகமாக இருப்பதால், சாலையை விரிவாக்கம் செய்ய முடியாது. எனவே, புதிய கலெக்டர் அலுவலகம் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் நகருக்குள் நெரிசல் குறையும் என்றார்.

    செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிலையம் மாற்றலாகி வெண்பாக்கம் பகுதிக்கு பஸ்நிலையம் மாற்றபடும். பொது பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது.

    இதற்காக ரெயில்வே குடியிருப்பில் உள்ள ஒரு பகுதியும் மற்றும் அருகில் உள்ள சில பகுதிகளை அப்புறப்படுத்தி நகர பஸ்கள் ரெயில் நிலையத்தில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் படி பணிகள் நடைபெற்று வருகின்றன.

    • வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
    • புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பொண்ணுபாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசியதாவது:-

    மாணவர்கள் பஸ் படிக்கட்டில் செய்வதால் அதிக விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனை தடுக்க பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

    படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தட்டி கேட்கும் போது, டிரைவர், கண்டக்டர்களுடன் மாணவர்கள் தகராறில் ஈடுபடுகின்றனர். அது குறித்து உடனடியாக டிரைவர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும்.

    மாணவர்கள் பஸ்சில் அதிகம் ஏறும் இடங்களான வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பாகாயம், தொரப்பாடி, ஒடுகத்தூர் உள்ளிட்ட இடங்களில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளிகள், பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக சேரும்போது செல்போன் பறிப்பு, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கிறது.

    அதனை தடுக்க போலீசார் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் அடிக்கடி தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பஸ் உரிமையாளர்கள் பேசுகையில்:-

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    அதில் ஒரு கேமரா கூட தற்போது வேலை செய்யவில்லை. பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை தடுக்க போலீசார் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும்.

    ஆந்திரா மற்றும் சித்தூரில் இருந்து வரும் பஸ்கள் கிரீன் சர்கிள் வழியாக வந்து முத்து மண்டபம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக புதிய பஸ் நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.

    ஆனால் அந்த பஸ்கள் செல்லியம்மன் கோவில் வழியாக எதிர் திசையில் வந்து பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது என குற்றம் சாட்டினர்.

    இதற்கு பதில் அளித்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.

    • வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விமான நிலைய மாதிரியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புற நகர் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடி செலவில் பிரமாண்டமாக நவீன வசதிகளுடன் அமைகிறது.

    தினந்தோறும் 1½ லட்சம் பயணிகளை கையாளும் வகையில் ஒரே நேரத்தில் 200 பஸ்கள், 270 கார்கள், 3500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் புதிய பஸ் நிலைய பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை முதல் முறையாக தனியாரிடம் வழங்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்து உள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளதாக தெரிகிறது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விமான நிலைய மாதிரியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    தூய்மை பணிகளை தினந்தோறும் மேற்கொள்ளவும், பஸ் நிலையத்தை பராமரித்து செயல்படுத்தும் பணிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும். சரியான நிறுவனம் தேர்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "பஸ் நிலைய பராமரிப்பை தனியாருக்கு விடும்போது சி.எம்.டி.ஏ. கண்காணிக்க வேண்டும். பயணிகள் மற்றும் பொது மக்களிடம், வாகனங்கள் நுழைவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், கடைகள், ஓட்டல்களில் தரமான உணவு பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

    சமீபத்தில் பெய்த மழையின் போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் முன்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் தேங்குவதை தடுக்க ஜி.எஸ்.டி. சாலையை தாண்டி கால்வாய் மூலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 'கல்வெட்டு' அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    இந்த பணி முடிந்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு இருக்கும் என்று தெரிகிறது.

    • புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் 13 ஏக்கரில் ரூ 20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.

    தொடர்ந்து அவர் கூறியதா வது: நாமக்கல் புதிய பஸ் நிலையம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பஸ் நிலைய பணிகள் முடிய காலம் உள்ள நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சண்முகம் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., கலெக்டர் தொடங்கி வைத்தனர்.
    • ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் நகராட்சிநிர்வாகம் மூலம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாக ராமநாதபுரம் உள்ளதால் பெரிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 16909.5 சதுரடி பரப்பில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும். ஒரு ஆண்டுக்குள் பஸ் நிலைய பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைகளை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர்
    • கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர்.

    தற்போது பயணிகளின் வசிக்காக பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ்

    ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

    பஸ் நிலையம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.

    செங்கல்பட்டில் இப்போது உள்ள பஸ் நிலையம் மிகுந்த நெருக்கடியான இடத்தில் உள்ளது. இதனால் அங்கு புதிய பஸ் நிலையம் வெம்பாக்கம் ஏரி அருகே மெயின்ரோட்டுக்கும் பி.வி.களத்தூர் ரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த புதிய பஸ் நிலையத்திற்கான இடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு ஆகிய இருவரும் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர்.

    பஸ் நிலையம் 14 ஏக்கரில் அமையும் பகுதியில் ரோட்டுக்கு மருத்துவக் கல்லூரி மைதானம் அருகே எதிர்புறம் காலி இடம் ஏக்கர் கணக்கில் உள்ளதால் அங்கு 5.64 ஏக்கரில் பஸ் டெப்போ (பணிமனை) அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டில் புதிதாக அமையவிருக்கின்ற இப்பேருந்து நிலையத்தில் சுமார் 46 பேருந்துகள் நிற்கும் வகையிலும், அதேபோன்று 69 பணி மனைகள் நிறுத்துவதற்குண்டான வகையிலும் அமைக்கப்பட இருக்கின்றன. இப்பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.

    மேலும், இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்லவும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளோடு இப்பேருந்து நிலையம் அமையும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ×