search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student dead"

    • சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
    • ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பம், ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவியரசன். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்தி சரவணன் (வயது9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக சக்தி சரவணன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரை கடந்த 8-ந்தேதி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சக்தி சரவணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிறுவன் சக்தி சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள். ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

    அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கிரியின் உறவினர்களான சூரம்பட்டியைச் சேர்ந்த சம்பத், அரசு, அழகு, குமார், ரமேஷ், அழகேசன், கண்ணையன், வினோத் குமார், தாமோதரன், சீனிவாசன் மற்றும் ஜடையம்பட்டியைச் சேர்ந்த ரவி உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை மறியலின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தகவலறிந்த வட்டாட்சியர் பெருமாள் இறந்து போன கிரியின் தந்தை மற்றும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகரசன் மகன் கிரி (வயது22) என்பவர் கடந்த சிலதினங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அவர் சிகிச்சைக்கு வந்தபோது உடல் நலிவுற்று இருந்ததை பார்த்து தனியார் மருத்துவமனை டாக்டர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தார்.

    உடனே கிரியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அங்கு கிரியை பரிசோதனை செய்த போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர்கள் கிரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும் தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உடலை வாங்க மறுத்து அரூரில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த வட்டாட்சியர் பெருமாள் இறந்து போன கிரியின் தந்தை மற்றும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு கிரியின் இறப்பிற்கு மருத்துவர்கள் தான் காரணம் என தெரிய வந்ததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததார்.

    இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கிரியின் தந்தை அழகரசன் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் கிரிக்கு சிகிச்சை அளித்த 2 தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆதித்யா சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஆதித்யா பரிதாபமாக இறந்தார்.

    இரணியல்:

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆத்திவிளையை அடுத்த ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஶ்ரீ குமார். இவரது மகன் ஆதித்யா (வயது 16). இவர் மாங்குழி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் ஆதித்யா திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஆதித்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீசில் ஶ்ரீகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி மரணங்கள் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடல்நிலை பாதிப்பு காரணமாக மாணவி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி எம். நாதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கந்தேஸ்வரி (வயது 14). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த கந்தேஸ்வரி, இறைவணக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆசிரியர்கள் மீட்டு அவிநாசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கந்தேஸ்வரி உயிரிழந்தார்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    • கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா (வயது19). கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து கோயம்பேடு நூறடி சாலையில் தே.மு.தி.க. அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார்.

    பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியே வந்த மாநகர பஸ்சில்(எண்48சி) முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினார். அப்போது திடீரென டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதாக தெரிகிறது. இதனால் படிகட்டில் நின்ற சூர்யா எதிர்பாராதவிதமாக கால் தவறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் மாரடைப்பில் இறந்தாரா அல்லது கோழிக்கறி சாப்பிட்டதால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் ரோகித். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் கோழி கறி சமைத்தனர். இதனை ரோகித் சாப்பிட்டார். பின்னர் ஜூஸ் அருந்தி விட்டு இரவு தூங்கச் சென்றார். காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல ரோகித்தை எழுப்பினர். படுக்கையை விட்டு எழுந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரோகித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் மாரடைப்பில் இறந்தாரா அல்லது கோழிக்கறி சாப்பிட்டதால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு.
    • பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் முகேஷ், ரூபேஷ் (வயது15). இவர்களில் ரூபேஷ் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரூபேஷ், வீட்டின் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    இதனை அறியாமல் ரூபேஷ் மின்கம்பத்தை தொட்டார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே ரூபேஷ் இறந்து போனார்.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பலியான ரூபேசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி மாணவன் பலியானது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி மீஞ்சூர் -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்கம்பம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
    • கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா, படமடா ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் உள்ளார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக லட்சுமணன் இரவு நேரங்களில் பைக் டாக்ஸி ஓட்டி வந்தார்.

    லட்சுமணனும் அவரது நண்பரும் நேற்று பைக் டாக்ஸியில் பானு நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்களது பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். சீனிவாச ராவ் படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் சீனிவாச ராவை மீட்டு விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் வந்த வாலிபர்கள் சிலர் காரில் ஒட்டப்பட்டு இருந்த எம்.எல்.சி. ஸ்டிக்கரை கிழித்து எடுத்துச் சென்றனர்.

    கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    காரை ஓட்டி வந்தவர் அவரது உறவினர் ஜமீல். அவர் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும் காரில் 2 மது பாட்டில்கள் இருந்தன.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது எம்எல்சி யின் கார் இல்லை. ஜமீலின் சகோதரி ஷேக் நாகினாவின் கார் என தெரிவித்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமீலை கைது செய்தனர்.

    இறந்த மகனின் உடலை கண்டு தர்மராஜ் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    மதுரை:

    மதுரை கடச்சனேந்தல் காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அன்பரசன் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை அன்பரசன் தனது நண்பர்கள் சிலருடன் யானை மலை அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால், கரை ஓரமாக நின்று குளித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது அன்பரசன் எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் விழுந்து மூச்சுத்திணறியபடி மூழ்கினார். அங்கிருந்த சிலர் உடனடியாக தண்ணீருக்குள் குதித்து சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால் அன்பரசனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து தல்லாகுளம் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் நீச்சல் வீரர்கள், யானை மலை குவாரி குட்டையில் குதித்து சிறுவனை தேடினர்.

    அதற்குள் வெளிச்சம் குறைந்ததால் விளக்கு ஒளியை பயன்படுத்தி தேடும் பணியை தொடர்ந்தனர். பல மணிநேரம் போராட்டத்துக்கு பின் குவாரி குட்டையில் அன்பரசனின் உடல் மீட்கப்பட்டது.

    இறந்த மகனின் உடலை கண்டு தர்மராஜ் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பூபதியின் அண்ணன் தருணும் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பலியாகி இருந்தார். இப்போது அதே போல் பூபதியும் இறந்து விட்டார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள அந்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பூபதி (வயது14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பூபதி பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    அப்போது அதே பகுதியில் செல்லும் கிருஷ்ணா கால்வாய் அருகே பூபதியின் செருப்பு மட்டும் கிடந்தது. இதனால் அவர் கிருஷ்ணா கால்வாயில் இறங்கிய போது அடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    தற்போது கிருஷ்ணா நீர் அதிக அளவு வந்து கொண்டு இருப்பதால் பூபதியை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னாலூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய பூபதியை கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர். ஆனால் அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே பூண்டி ஏரி அருகே கிருஷ்ணா தண்ணீர் சேரும் இடத்தில் இன்று காலை பூபதி பிணமாக மிதந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த 8 ஆண்டுக்கு முன்பு இதே போல் பூபதியின் அண்ணன் தருணும் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பலியாகி இருந்தார். இப்போது அதே போல் பூபதியும் இறந்து விட்டார். இரண்டு மகன்களையும் கிருஷ்ணா கால்வாயில் பறிகொடுத்த ரமேஷ் மிகுந்த சோகத்தில் உள்ளார்.
    • கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • மாணவர் இறந்த தகவல் ராஜஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு, உறவினர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.

    கோவை:

    ராஜஸ்தான் மாநிலம் சவாய்மடபூரை சேர்ந்தவர் கமல்ஸ்ரீமல். இவரது மகன் விஷால் ஸ்ரீமல் (வயது 23).

    இவர் ராஜஸ்தானில் உள்ள கோட்டா ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் வனவியல் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விஷால் ஸ்ரீமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது ஆராய்ச்சி படிப்புக்காக கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தார்.

    அவர் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி, விஞ்ஞானியான ரித்திகா கலை என்பவரிடம் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு விஷால் ஸ்ரீமல் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். பின்னர் அங்குள்ள உணவு கூடத்தில் இருந்து பாட்டிலில் தண்ணீரை நிரப்பி கொண்டு அறைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அங்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் விஷால் ஸ்ரீமல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக விஷால் ஸ்ரீமல் யானையிடம் சிக்கிக் கொண்டார்.

    யானை அவரை தூக்கி வீசியதுடன், காலால் மிதித்தது. இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஷால் ஸ்ரீமலை மீட்டு சிகிச்சைக்காக கேரள மாநிலம் புட்டத்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மாணவர் இறந்த தகவல் ராஜஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு, உறவினர்கள் கோவைக்கு வந்துள்ளனர். அவர்களிடம் உடலை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×