search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bridge"

    • வாகனங்கள் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.
    • பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே தளியில் இருந்து எரிசனம்பட்டி வழியாக தேவனூர்புதூர் வரை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள், ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.

    இந்த ரோட்டில் தீபாலபட்டி அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. இந்த கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் ,தொடர் பயன்பாடு, நீண்ட காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதது உள்ளிட்ட காரணங்களால் வலுவிழந்து வருகிறது.

    பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அருகிலுள்ள குடிநீர் குழாய் உடைப்பில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் தேங்குவது பாலத்தின் உறுதித்தன்மையை பாதிக்கிறது.இவ்வாறு படிப்படியாக வலுவிழந்து வரும் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுனர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் கூறுகையில், தளி- எரிசனம்பட்டி ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே பி.ஏ.பி., பாலத்தை புதுப்பிக்க வேண்டும். உடனடி நடவடிக்கையாக ஓடுதளத்தை சீரமைக்காவது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
    • 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் சிராஜூதீன் நகர் பெரியசாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வாய்க்காலான ஆதாம் வடிகால் வாய்க்கால் செல்கிறது.

    இந்த வாய்க்காலின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிதாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலவில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

    பாலம் கட்டப்பட்டு 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலம் புனரமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
    • பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள விச்சனூர் படுகை கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்ற கூறி இன்று காலை பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பாக காலிகுடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் கிளைச் செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் நிர்வாகிகள் தேவதாஸ், வைத்தியநாதசுவாமி, முருகையன், ஜெயராஜ், திருநாவுக்கரசு, மணிகண்டன், விஜயகுமார், பகத்சிங் ஆகியோர் பேசினர்.

    மேலும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும், மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், சாலை வசதியை மேம்படுத்தி வேண்டும், பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூதலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • மதுரை பறக்கும் பாலத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    • அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.3 கி.மீ நீளத்திற்கு ரூ.751 கோடி மதிப்பில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை (பறக்கும் பாலம்) அமைக்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகவும் நீளமான இந்த உயர்மட்ட சாலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து மதுரை பறக்கும் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி பொங்க பாலத்தில் சென்றனர். பலர் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்ததும், பாலத்தில் செல்ல வந்த வாகன ஓட்டிகளை பா.ஜ.க.வினர் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

    பின்பு பா.ஜ.க.வினரும் வாகங்களில் பறக்கும் பாலத்தில் சென்றனர். அவர்கள் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை வாகனங்களில் அணிவகுத்து சென்றார்கள். உற்சாகம் பொங்க காணப்பட்ட அவர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    இந்த பாலத்தில் வாகனத்தில் பயணித்தவர்கள் கூறுகையில், ''இந்த சாலையில் பயணிப்பது புதுவித அனுபவத்தை தருகிறது. இந்த பாலத்தால் வாகன ஓட்டிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். மதுரை மாநகரில் போக்குவரது நெருக்கடி குறையும்'' என்றனர்.

    பிரதமர் மோடி மதுரை பறக்கும் பாலம் மட்டுமின்றி மேலும் பல திட்டங்களையும் நேற்று தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து வடுகப்பட்டி பிரிவு வரையிலான ரூ.1,077 கோடி மதிப்பிலான 36 கி.மீ தூர நான்கு வழிச்சாலை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    மதுரையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் வாடிப்பட்டி முரளி ராமசாமி, பா.ஜ.க. ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்தி குமாரி, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஊடக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் என்கிற செல்வமாணிக்கம், புறநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதுரை பறக்கும் பாலம் திறக்கப்பட்டதையடுத்து இன்று அங்கு வழக்கமான போக்குவரத்து தொடங்கியது. அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.

    • கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலம் பழுதடைந்த காரணத்தால், அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஆனால் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நாகப்பட்டினம் நாகூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனால் வெட்டாறு பாலத்தின் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில் வெட்டாறு பாலம் சீரமைப்புப் பணி யினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • மழை காலங்களில் தண்ணீர் பெருகி பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
    • 10 மீட்டர் அகலம், 63 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலம் கட்ட ரூ. 6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு.

    பேராவூரணி:

    பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் ஆண்டவன்கோவில் பூனைகுத்தி காட்டாற்று பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    குறுகிய பாலமாக இருப்பதால் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள் செல்லும் நிலையில் உள்ளது.

    மழை காலங்களில் தண்ணீர் பெருகி பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

    இதனால் பேராவூரணி தனித் தீவாக மாறிவிடுகிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஆண்டவன் கோவில், இந்திராநகர், கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேராவூரணி மருத்துவமனைக்கு வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    பலத்த மழையால் பாலம் சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆய்வு குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்து உயர் மட்ட பாலம் கட்ட பரிந்துரை செய்தனர்.

    இதன் பேரில் தமிழ்நாடு அரசு 10 மீட்டர் அகலம் 63 மீட்டர் நீளம் கொண்ட உயர் மட்ட பாலம் கட்ட ரூபாய் 6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உயர்மட்ட பாலம் கட்டும் பணியை பேராவூரணி எம்.எல்.ஏ நா.அசோக்குமார் பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சேதுபா வாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமா ணிக்கம், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், திமுக ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி தெற்கு க.அன்பழகன், பேராவூரணி வடக்கு கோ.இள ங்கோவன், சேதுபாவாசத்திரம் தெற்கு வை.ரவிச்சந்திரன், நகர செயலாளர் சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி, அப்துல் மஜீது, தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் (திட்டங்கள்) சுதாகர், பேராவூரணி உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி பொறியாளர் அருண்கு மார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.10 லட்சம் செலவில் கல்வெட்டு பாலம் கட்டப்பட்டது.
    • ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்பதேவன்காடு பகுதிலிருந்து அருகிலுள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலையில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தையும், அதே பகுதியில் ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நகராட்சி கவுன்சிலர் நமசிவாயம், முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, ராஜகிளி, மாரியப்பன் உள்பட பிரமுகர்கள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    • இடியும் நிலையில் உள்ள தொண்டி ஜெட்டி பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் மீன்பிடி இறங்குதளம் சிறு துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்த வரும், மனிதநேய மக்கள் கட்சி வக்கீல் அணி துணை அமைப்பாளருமான கலந்தர் ஆசிக் அகமது மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் மீன்பிடி இறங்குதளம் சிறு துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக தொண்டி கடல் பகுதியில் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறிய ஜெட்டி பாலம் கட்டப்பட்டது. கடலில் இருந்து கொண்டு வரப்படும் பொருள்களை இறக்கி வைக்கவும், படகுகளை கட்டி வைத்துக் கொள்ளவும் இந்த பாலம் பயன்பட்டு வந்தது.

    சேது சமுத்திரத் திட்டம் திரும்ப பெறப்பட்ட நிலையில் ஜெட்டி பாலம் பராமரிப்பின்றி சேதம் அடையத் தொடங்கியது. அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் கப்பல் படை வீரர்கள் இந்த பாலத்தை ஹெலிகாப்டர் இறங்குதளமாக பயன்படுத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பின்னர் கப்பல் படையும் அங்கிருந்து இடம் மாறியதால் மீண்டும் ஜெட்டி பாலம் பராமரிப்பின்றி உள்ளது.

    தற்போது தொண்டி பகுதி மக்கள் பொழுதுபோக்கு இடமாக பயன் படுத்தி வருகின்றனர்.

    ஆனால் அந்த பாலம் தற்போது காரைகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. எனவே இந்த பாலம் அடைந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் ஜெட்டி பாலத்தை சீரமைத்து தொண்டி மக்களின் பொழுதுபோக்கு தளமாக ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, சேத மடைந்த நிலையில் உள்ள பாலம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். அவற்றை பார்த்த நீதிபதிகள், பாலத்தின் தன்மை குறித்து போலீஸ் மற்றும் உரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்கள் யாரும் பாலத்தில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பாலத்தின் உறுதி தன்மையை ஆராயும் வரை அதை பொதுமக்கள் பயன்படுத்த க்கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.
    • பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.

    புதிய பால பணி

    கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இணைப்பு பாலமாக அமைந்துள்ள இந்த பாலம் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு கோரிக்கை வலுத்தது.


    இதையடுத்து அந்த பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தினமும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பிரானூர் பார்டர் வழியாக செல்லும் வாகனங்கள், கனரக லாரிகள், அய்யப்ப பக்தர்களின் கார்கள் அனைத்தும் ெசங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி, கணக்கப்பிள்ளை வலசை, தேன்பொத்தை, பண்பொழி, குத்துக்கல்வலசை வழியாக வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் பிரானூர் பார்டர் பாலம் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு இன்று முதல் போக்குவரத்து சீராக நடைபெற்றது.

    • சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது.
    • வாகன ஓட்டிகள் கைபிடி சுவர் இல்லாததால் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை -கும்பகோணம் பிரதான சாலையில் பாபநாசம் பகுதியில் உள்ள அன்னுகுடி பாசன வாய்க்கால், அன்னுகுடி பிரிவு வாய்க்கால் மீது கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் சேதமடைந்து தடுப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக தரைமட்ட பாலமாகவே உள்ளது. அதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள், கைபிடி சுவர் இல்லாததால் சில நேரங்களில் வாய்க்காலில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

    ஆகையால் பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தரைமட்ட நிலையில் உள்ள அன்னுகுடி, வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால் பாலத்தின் மீது தடுப்பு அமைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இணைப்பு ரோட்டில் குறுக்கிடும் மழை நீர் ஓடையில் மழை காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் ஆலம்பாளையம் கிராமத்தில் இருந்து பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சிக்கு 3 கி. மீ., தொலைவுக்கு இணைப்பு ரோடு அமைந்துள்ளது. பல்வேறு விளைபொருட்களை எடுத்துச்செல்ல இந்த ரோட்டை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த வழித்தடத்தில் பவளபுரம் என்ற குடியிருப்பு அமைந்துள்ளது . இந்த இணைப்பு ரோட்டில் குறுக்கிடும் மழை நீர் ஓடையில் மழை காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது இரு சக்கர வாகனங்கள் கடந்து செல்ல முடிவதில்லை. பல கிலோமீட்டர் தூரம் சுற்றி கொங்கலக்குறிச்சிக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக ஊரக வளர்ச்சி துறை சார்பில் பாலம் கட்ட வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 -வது வார்டு சுடலை போத்தி தெருவில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சரவணன், நியமனக்குழு உறுப்பினர் முனீஸ், சுமங்கலி கோமதி சங்கர், பொறியாளர் பாலகிருஷ்ணன், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×