search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை கால்வாய்க்குள் கார் ஒன்று விழுந்த விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை அடுத்த ஜத்புரா என்ற கிராமத்தின் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த கார் ஒன்று அந்த பகுதியில் ஓடும் கங்கை ஆற்று கால்வாய்க்குள் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று காரில் இருந்து 5 பேரை மீட்டனர். அதில் இருந்த மற்ற 5 பேர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் அந்த காரில் குருகிராமில் இருந்து ஹரித்துவாருக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கால்வாய்க்குள் பாய்ந்ததில் அதில் இருந்த சந்தீப் குப்தா(வயது 30), ரிங்கி(25), அனுஷா குப்தா(8), அசுதோஷ் குப்தா(5) மற்றும் டிரைவர் விக்கி ஆகியோர் பலியாகி உள்ளனர் என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட 5 பேரும் பெண்கள் ஆவார்கள்.
    பெரியநாயக்கன்பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ள பிளிச்சி பெட்டதாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 50). இவரது சொந்த ஊர் பொள்ளாச்சியை அடுத்த தொழில்பேட்டையாகும். கணவர் இறந்ததையடுத்து இங்கு வந்து வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை.

    இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஒட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியவில் வீட்டில் இருந்து மளிகை கடைக்கு செல்ல மேட்டுப்பாளையம் சாலையை கடந்துள்ளார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

    காரிமங்கலம் பெரியாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் இவர் நேற்று மாலை தனது சைக்கிளில் செல்லும்போது, பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது பின்னால் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த காரிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அங்கமுத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 33). நாமக்கல் மாவட்டம் மோகனூர் சின்னத்தம்பி பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் பூபதி (32). இருவரும் பொக்லைன் எந்திர டிரைவர்கள். நேற்று முன்தினம் இரவு இருவரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலை காரை நகர் அருகே சென்றபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற கீழையூர் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருக்குவளை தாலுகா மேல வாழக்கரை முனியன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜ் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் புளிய மரத்தில் மோதிய விபத்தில் பெண் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    நெல்லை மாவட்டம் சிவகிரியில் மாரிமுத்து என்பவர் இறந்து விட்டார். அவரது இறப்பை அறிந்து திருப்பூரில் இருக்கும் உறவினர்கள் துக்க வீட்டிற்கு செல்ல திருப்பூரிலிருந்து கார் மூலம் கிளம்பினர். காரை சரவணகுமார் (வயது 42) ஓட்டினார்.

    காரில் சரவணகுமாரின் சகோதரர் சந்திரசேகர் (38) அவரது மனைவி சீதாலட்சுமி (33), ரஞ்சித் (10), அமிர்தா (7),மற்றும் கோதை நாச்சியார் (45), பாண்டீஸ்வரி (28), சேது அம்மாள் (65) ஆகியோர் இருந்தனர்.

    இன்று காலை ஆம்னி கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லூரி அருகே வரும் போது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரில் வந்த அனைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் சேது அம்மாள் (65) என்பவர் மட்டும் உயிரிழந்தார்.

    காயமடைந்த அனைவரையும் கிருஷ்ணன் கோவில் போலீசார் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    காலை 6½ மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தினால் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணன் கோவில் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி காரை ஓட்டி வந்த சரவணகுமாரும், அவரது சகோதரர் சந்திரசேகரும் திருப்பூரில் டைனிங் நிறுவனம் நடத்துவதாக விசாரணையில் தெரியவந்தது.

    ஜப்பானில் மழலையர் பள்ளியில் மாணவர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். #Japan #KinderGarden #CarAccident
    டோக்கியோ:

    ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் மழலையர் பள்ளி உள்ளது. நேற்று காலை இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர், 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு அருகே உள்ள சாலையோர நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

    அப்போது, அந்த சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று மற்றொரு கார் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி, தறிக்கெட்டு ஓடிய கார் சாலையோரமாக நடந்து சென்ற மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

    இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். சிலர் கார் சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு 2 குழந்தைகள் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 3 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்துக்கு காரணமான 2 கார்களை ஓட்டி வந்த 62 மற்றும் 52 வயதான 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த மாதம் தலைநகர் டோக்கியோவில் 82 வயதான முதியவர் ஓட்டிய கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 2 வயது குழந்தை பலியானது நினைவுகூரத்தக்கது.   #Japan #KinderGarden #CarAccident 
    கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர்  அடுத்துள்ள பெரிச்சூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது65). விவசாயியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கம்பைநல்லூரில் இருந்து திப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே போகும் போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு முனியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பைநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற முனியப்பன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமணம் ஆன 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி, சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சீனிவாசன் (வயது 23). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சீனிவாசன், அரியானூர் பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சீனிவாசன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனிதாவை திருமணம் செய்து கொண்டு அரியானூர் பகுதியில் குடியேறினார். அங்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தினர்.

    தினமும் சீனிவாசன் இங்கிருந்து நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பினார்.

    இரவு 11 மணி அளவில் அரியானூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி அவர், வீட்டிற்கு செல்வதற்காக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது, அந்த வழியாக அதிவேகமாக சென்ற வாகனம் சீனிவாசன் மீது மோதி விட்டு நிற்காகமல் சென்று விட்டது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனது கணவர் உடலை பார்த்து அனிதா கதறி அழுதார்.

    பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கணினியில் வரிசையாக பார்த்தனர்.

    அதில், சீறி பாய்ந்து செல்லும் அந்த காரையும், அதன் பின்பக்கத்தில் இருக்கும் பதிவு எண்ணையும் அடையாளம் கண்டனர்.

    இதையடுத்து, பதிவு எண்ணை வைத்து போலீசார் அந்த கார் எந்த ஊரை சேர்ந்தது? அதை ஓட்டிய நபர் யார்? என்பது குறித்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திசையன்விளையில் பள்ளி நிர்வாகி கார் மோதி சைக்கிளில் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதை அறிந்த உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    திசையன்விளை:

    திசையன் விளைமணலிவிளை சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீஜன் (வயது 13).இவர்கள் குடும்பத்துடன் வள்ளியூரில் வசித்து வருகின்றனர். ஸ்ரீஜன் வள்ளியூரில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று ஸ்ரீஜன் திசையன்விளையில் தனது பாட்டி வீட்டுக்கு வந்தான். மாலையில் சைக்கிளில் திசையன்விளை புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தான்.

    அப்போது, பின்னால் தனியார் பள்ளி நிர்வாகி வந்த கார் அவன் மீது மோதியது. இதில் ஸ்ரீஜன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து ஸ்ரீஜன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் சரண்ராஜை (25) கைது செய்தனர்.

    இதனிடையே மாணவன் ஸ்ரீஜன் காயமடைந்த நிலையில் கிடக்கும்போது அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி நிர்வாகி உதவவில்லையாம்.

    இதை அறிந்த ஸ்ரீஜனின் உறவினர்கள் இன்று காலை மணலிவிளை எம்.ஜி.ஆர். பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர்.

    தனியார் பள்ளி நிர்வாகியை கண்டித்தும், சிறுவன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு திசையன்விளை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த மறியல் காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது. பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடததிலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாஸ்(வயது 37), சதீஷ்(25), சுனில்(31). இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அதே கம்பெனியில் சேலத்தை சேர்ந்த மகாலிங்கம்(32), அருண்குமார்(35), மன்னார்குடியை சேர்ந்த கண்ணதாசன்(37) ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று மாலை ஒரு காரில் திருப்பூரில் இருந்து சென்னைக்கு சென்றனர்.

    காரை சேலத்தை சேர்ந்த டிரைவர் பாலமுருகன்(40) ஓட்டிசென்றார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு மும்பை- சென்னை அணிகள் மோதின. இந்த கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு அங்கிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு காரில் புறப்பட்டனர்.

    காலை 5 மணியளவில் அவர்கள் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு லாரி ஒன்று வளைவில் திரும்பியது. அந்த லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரின் உள்ளே இருந்தவர்கள் கூச்சல்போட்டு அலறினர். இந்த விபத்தில் காரில் இருந்த அருண்குமார், சதீஷ், கார் டிரைவர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தாஸ், மகாலிங்கம், கண்ணதாசன், சுனில் ஆகிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் விபத்தில் இறந்த அருண்குமார், சதீஷ், பாலமுருகன் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பொம்மையார்பாளையத்தில் கார் மோதியதில் 7ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். பிறந்த நாளில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
    சேதராப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான பொம்மையார் பாளையம் வெண்ணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் தருண் (வயது12). இவன் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் தருணுக்கு பிறந்த நாளாகும். அன்று காலை பெற்றோருடன் பிறந்தநாளை கொண்டாடிய தருண் அன்று மாலை தனது மாமா திருமால் என்பவருடன் வெளியூருக்கு செல்ல பஸ்சுக்காக பொம்மையார் பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான்.

    அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவன் தருண் மீது மோதிவிட்டு அருகில் உள்ள கோவிலை இடித்துவிட்டு நின்றது. இதில் படுகாயம் அடைந்த தருணை அருகில் இருந்த அவரது மாமா திருமால் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்து போனான்.

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது70). இவர் நாவற்குளத்தில் உள்ள மினரல் வாட்டர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு பணி முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். 

    திண்டிவனம்- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த கார் எதிர்பாரதவிதமாக மணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். 

    இந்த 2 விபத்துகள் குறித்தும் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    மதுராந்தகம் அருகே கார் விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    மதுராந்தகம்:

    திண்டிவனத்தை சேர்ந்தவர் குமரன். இவர் தனது நண்பருடன் காரில் இன்று காலை சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தார். மதுராந்தகத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று கார் மீது திடீரென மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.இதில் குமரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்து உருண்டது.

    இதில் காரில் இருந்த குமரன் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்து 2 பேர் உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    குமரன் எதற்காக சென்னை வந்தார் என்பதும் அவருடன் பயணித்த நண்பரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×