என் மலர்
நீங்கள் தேடியது "Farmer"
- வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது.
- 4 பக்கமும் மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பரம்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயி.
இயற்கை மீதும் இயற்கை சார்ந்த பொருட்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஊருக்கு அருகில் உள்ள தனது நிலத்தில் இயற்கை சார்ந்த புதிய வீடு கட்ட திட்டமிட்டார்.
அதன்படி சிமெண்ட் வீட்டுக்கு பதிலாக முழுக்க முழுக்க மரப்பலகைகளை பயன்படுத்தி தனது வீட்டை கட்டமைக்க சிவசுப்பிரமணியன் திட்டமிட்டுள்ளார்.
எனவே மரச்சிற்ப கலை படித்துள்ள தனது நண்பரான சோமசுந்தரத்திடம் சிவசுப்பிரமணியன் தனது ஆசையை கூறியுள்ளார். அதேசமயம் அதிக செலவு செய்து கட்டப்படும் வீடு என்பதால் எந்த குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சோமசுந்தரம் முதலில் தயக்கம் காட்டினார்.
இருப்பினும் சிவசுப்பிரமணியன் என்ன நடந்தாலும் நடக்கட்டும். நீங்கள் வேலையை தொடங்குங்கள் என சோம சுந்தரத்தை ஊக்கப்படுத்தி உள்ளார்.
இதனால் கடந்த 2021-ம் ஆண்டு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அடித்தளம் மட்டும் கற்கள், சிமெண்ட், மணல் கலவையை கொண்டு கட்டிய நிலையில், தொடர்ந்து அடித்தளத்திற்கு மேல் பகுதியில் 4 புறத்திலும் மற்றும் மேற்கூரை சேர்த்து முழுக்க முழுக்க மரப்பலகைகளை கொண்டு வீடு கட்டி உள்ளனர்.
மொத்தம் சுமார் 500 சதுர அடி பரப்பளவில் இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. போர்டிகோ, வரவேற்பறை, ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு சமையல் அறை ஆகிய அறைகளை இந்த வீடு கொண்டுள்ளது. மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மரப் பலகைகளுக்கு இடையே வாட்டர் ப்ரூப் பேஸ்ட் பயன்படுத்தி உள்ளனர்.
அதேபோல் கூடுதல் பாதுகாப்புக்காக வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலும் சிமெண்ட் வீடு கட்டும்போது நான்கு பக்கமும் காலாம்பாக்ஸ் எனப்படும் காங்கீரிட் தூண்கள் அமைக்கப்படும். இது தான் கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்யும்.
எனவே சோமசுந்தரம் வீட்டின் உறுதித்தன்மைக்காக 4 பக்கமும் மிக கனமான மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.
மேலும் படுக்கை அறையில் துணி உள்ளிட்ட பொருட்களை வைத்து எடுப்பதற்கு வசதியாக அதே மரக்கட்டைகளை கொண்டு கபோர்டு அமைத்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் இயற்கை சூழலோடு அமைந்துள்ள பரம்பு கிராமத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் மரக்கட்டைகளால் சிவசுப்பிரமணியன் அமைத்துள்ள வீடு பார்ப்போரை கவர்ந்து உள்ளது.
இதுகுறித்து சோமசுந்தரம் கூறுகையில், வெளிநாடு களில் இது போன்று மரக்கட்டை வீடுகள் அமைப் பது வழக்கம். தமிழ்நாட்டில் தென் தமிழக பகுதியில் இது போன்ற மரக்கட்டை வீட்டை எனக்கு தெரிந்தவரை யாரும் கட்டவில்லை.
இங்கு நான் தான் முதலில் கட்டியுள்ளேன். செலவை பொறுத்தவரை 2-க்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 600 சதுர அடியில் மரக்கட்டையால் வீடு கட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை ஆகி உள்ளது. அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்து விடலாம். அனைவரும் இது போன்ற இயற்கை சார்ந்த மர வீடுகளுக்கு மாற வேண்டும் என்று கூறினார்.
- ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஒட்டன்குட்டை பகுதியில் கரியாங்காட்டு தோட்டத்தில் வசித்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (74). இவ்வூரின் அருகில் தோட்டத்து வீட்டில் விவசாயி முத்துசாமியும், அவரது மனைவி சாமியாத்தாளும் தனியே வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டில் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துசாமி மற்றும் அவரது மனைவி சாமியாத்தாள் இருவரையும் இரும்பு ராடு மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு பீரோவை உடைத்து அதிலிருந்து 15 பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதேபோல் கடந்த 2022-ல் சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையம் பகுதியில் குட்டையகாட்டு தோட்டத்தில் வசித்து வந்த விவசாயி துரைசாமி கவுண்டர் என்பவரை நள்ளிரவில் கொலையாளிகள் படுகொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.
இந்த 2 படுகொலை சம்பவங்களை சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு இந்த கொலை-கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் கண்ணன் (25). இவர் இந்த 2 படுகொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையை அவரும் மற்ற சிலரும் சேர்ந்து செய்ததாக ஒப்புக்கொண்டனர். பிடிபட்ட கண்ணனிடம் இருந்து அரை பவுன் நகை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் உப்பிலிபாளையம் பகுதியில் குட்டைய காட்டுத் தோட்டத்தில் விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டி, பொதிகை நகரை சேர்ந்த காளியப்பன் மகன் இளையராஜன் (28). இவர் மற்றும் கண்ணன் ஆகிய இருவரிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு மாதங்களாக வேறொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை போலீசார் சென்னிமலை அழைத்து வந்து தீவிர விசாரணை செய்து இந்த 2 வழக்குகளிலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
- 'தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது'
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள GT ஷாப்பிங் மாலுக்கு கடந்த செய்வாய்க்கிழமை இரவு வேட்டி கட்டி வந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முதியவர் விவசாயி என பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் GT ஷாப்பிங் மாலுக்கு 7 நாட்களுக்கு மூடி சீல் வைக்க கர்நாடக அரசு நேற்று [ஜூலை 18] உத்தரவிட்டுள்ளது. விவசாயிக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையை வன்மையாக கண்டிப்பதாகவும் தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு அம்மாநில அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
- இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர்.
- ஆட்சியர் அலுவலக அறையில் அழுதபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தனது நிலம் தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைகளை குவித்தபடி புரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மந்சவுர் மாவட்டத்தில் உள்ள சங்கர்லால் என்ற விவசாயி வைத்திருந்த நிலத்தில் பாதி அவருக்கு சொந்தமில்லை என்றும் அந்த பாதி நிலத்தை அதன் அப்போதய சொந்தக்காரர்கள் ஏற்கனவே பக்கத்து கிராமத்தில் உள்ளவருக்கு 2010 ஆம் ஆண்டில் விற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தாசில்தார் முன்னிலையில் நடந்த பத்திரப்பதிவுக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி தற்போது நிலத்தை வாங்கியவரின் மகன் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அந்த நிலம் தன்னுடையதே என்றும் தனது குடும்பமே அதில் இத்தனை காலமாக விவசாயம் பார்த்து வந்ததாகவும், எனவே இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் படியும் பல முறை சங்கர்லால் அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி சங்கர்கர்லால், தனது நிலத்தை மாஃபியாக்கள் தன்னிடம் இருந்து பறித்துவிட்டனர், தாசில்தாரின் தவறினால் விவசாயியான நான் பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர். அரசாங்கத்தால் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர் என்று ஆட்சியர் அலுவலக அறையில் கைகளை குவித்தபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.
- குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாக பண்ணையார் கூறியுள்ளார்
கர்நாடகாவின் தும்கூரு நகரைச் சேர்ந்த சகோதரியின் 11 வயது மகளை விற்று பெண் ஒருவர் தனது கடனை அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் இப்போது மகளை திருப்பி அழைத்துசெல்ல தாய் வந்தபோது அவ்வூர் பண்ணையாரிடம் வாங்கிய தனது ரூ.35,000 கடனை அடைப்பதற்காக சகோதரி தனது குழந்தையை அவரிடம் விற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியில் உரைத்தார். அந்த நிலக்கிழார், 11 வயது சிறுமியை வீட்டு வேலைகள் செய்யவைத்து கொடுமைஇப் படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் தாய் வந்து கேட்டும், தான் குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாகவும், தனது பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை அழைத்துசெல்லும்படி கூறியுள்ளார். இதனால தாய் சென்று போலீசில் புகார் அளிக்கவே, குழந்தையை மீது போலீசார் தாயுடன் அனுப்பி வைத்தனர் இதுதொடர்பாக வழக்கு பதித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன்.
- பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான அவர், துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் அந்த திட்டங்களால் பயன் அடைந்தார்.
இதனால் பிரதமர் மோடி மீதான அதிக ஈடுபாட்டின் காரணமாக அவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் அவர் மோடிக்கு சிலை அமைத்து கோவில் எழுப்பினார். ரூ.1.25 லட்சம் செலவு செய்து 6 மாதமாக கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.
இவர் கட்டியுள்ள கோவிலில் பிரதமர் மோடிக்கு அழகிய மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் சாமி படங்களுடன், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்களையும் வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்தால் சிறப்பு வழிபாடு செய்வது என்றும்,பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் எனவும் வேண்டுதல் வைத்தார்.
அவரது வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து மோடிக்கு தான் கட்டிய கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன். இப்போது தேங்காய், மாங்காய், மரவள்ளி போன் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைப்பதால், மோடியை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன்.
ஒவ்வொரு விவசாய சாகுபடியிலும் கிடைத்த லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, 5 ஆண்டுகளாக கணிசமான தொகை வைத்துள்ளேன். அவர் 3-வது முறை பிரதமாக வேண்டும், என்று பழநி முருகனிடம் வேண்டுதல் வைத்தேன்.
அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், பழனியில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன். இது தவிர, என் வயலில் விளைந்த 10 மூட்டை நெல்லில், கிடாவெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளேன்.
பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எனக்கு பிறகும், நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோவிலுக்காக நிலத்தை எழுதி பத்திரம் போட்டு வைத்துள்ளேன். பிரதமர் நீடுழீ வாழ வேண்டும். 2030-ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்.
- நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கால்நடைத் துறை சார்பில் மாடு வளர்ப்போருக்கு கறவை எந்திரம் வழங்கும் விழா காரைக்கால் மதகடி கிராமத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் திருமுருகன் பயனாளிகளுக்கு எந்திரத்தை வழங்கி பேசியதாவது:-
வறட்சி, கனமழை, புயல் போன்ற காலங்களில் பெருமளவில் பாதிக்கப்படுவது விவசாய பூமியான காரைக்கால்தான். விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்
காரைக்காலில் ஒரு மாதத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் வெளி சந்தையில் இருந்து வாங்குகிறோம். காரைக்காலில் நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது. காரணம் இயற்கையாக கிடைக்க கூடிய புற்கள் கிடைப்பதில்லை.
மாடு வளர்க்காதவர்களுக்கு திட்டங்களை கொடுக்காதீர்கள். தகுதியானவர்களை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துங்கள்.
நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியாத இன்றைய காலகட்டத்தில் மாடுகளை வளர்த்து தரமான பால் கொடுக்கும் விவசாயிகளை கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பேசிய விவசாயி ஒருவர் தாய்ப் பாலுக்கு இணையானது மாட்டுப்பால். ஆனால் இதை பலரும் உணரவில்லை. மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மரியாதை இல்லை. மாட்டை பிடித்து கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் ஓரமா போயா...? என்று அலட்சியப்படுத்துகிறார்கள்.
ஆனால் நாய் பிடித்து நடைபயிற்சி செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். நாய்க்கு கொடுக்கும் மரியாதை பால் தரும் மாட்டிற்கு இல்லை என கூறினார்.
விவசாயி பேச்சை விழாவில் கூடியிருந்தோர் கைத்தட்டி வரவேற்றனர்.
- தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
- விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர், இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக தர உத்தரவிட்டும் தற்போது வரை கர்நாடக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வேண்டும்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு குறியாக உள்ளது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 17-ந் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழ்துளை மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள், உரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் .
தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய முழு பரப்பளவிற்கும் திட்டம் சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
சூலூர்:
பீகாரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி அஞ்சலி.
இவர்கள் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் பீகாரில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்தி வந்து விற்பனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது. யாரிடம் இருந்து குழந்தை கடத்தி வரப்பட்டது. வாங்கியவர்கள் யார்? என்பது உள்ளிட்ட விரிவான விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தங்கராமன் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
தனிப்படை விசாரணையில், குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்ட மகேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி சட்டப்படியான குழந்தையை பெற்று தருவதாக கூறினார். ஆனால் அவர் போலியான ஆவணங்களை கொடுத்து எங்களிடம் ஏமாற்றி குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்று விட்டார் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் விஜயனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- திடீரென்று காதில் மாட்டி இருந்த புளூடூத் ஹெட் போன் வெடித்தது.
- முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாத்துக்கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு புளூடூத் மூலம் பாட்டு கேட்டு உள்ளார். திடீரென்று காதில் மாட்டி இருந்த புளூடூத் ஹெட் போன் வெடித்தது.
இதனால் அவருக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
'புளூடூத் ஹெட்போன்' மூலம் பாட்டு கேட்டபோது வெடித்து விவசாயியின் காதில் காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயிகளின் உழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக வேதனை.
- வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வெங்காயம் மற்றும் பூண்டு விலையில் கடும் பின்னடைவைச் சந்தித்த பிறகு, மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பச்சை மிளகாயின் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்துள்ளனர்.
ஒரு கிலோ மிளகாய், 6 முதல் 7 ரூபாய் வரையிலும், சந்தை விலை கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.
விவசாயிகள் பச்சை மிளகாய் நிரப்பப்பட்ட மூட்டைகளை சாலைகளில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளுக்கு இடையிலான இந்த பரந்த வேறுபாடு காரணமாக விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர். விவசாயிகளின் உழைப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- இளம் வாலிபர்களும், பெண்களும் வெள்ளை எருமையுடன் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
- வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (55). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று சினை பிடிக்காததால், கால்நடை மருத்துவரை அணுகி, சினை ஊசி போட்டுள்ளார். இதன் காரணமாக எருமை மாடு சினையானது. உரிய நாட்களுக்கு பின்னர் அந்த எருமை, கன்று ஒன்றை ஈன்றுள்ளது. எருமை ஈன்ற கன்றை பார்த்த முருகேசன் ஆச்சரியம் அடைந்துள்ளார். காரணம் அந்த கன்று வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த கன்றை மிகவும் கவனமாக அவர் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் வெள்ளை எருமை மாட்டை பார்ப்பதற்கு நாள்தோறும் அப்பகுதி மக்கள் விவசாயினுடைய வீட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் முருகேசன் வீட்டில் எப்போதும் பொருட்காட்சி நடப்பதை போல கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இளம் வாலிபர்களும், பெண்களும் வெள்ளை எருமையுடன் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து கால்நடை வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த முதியவர் ஒருவர் கூறும்போது:-
சினை பிடிப்பதற்காக போடப்படும் ஊசி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அவ்வாறு வந்த ஊசியில், வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம். எனவே எருமை வெள்ளையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவரீதியாக இதற்கான காரணம் மெலனின் என்று சொல்லப்படுகிறது. உடம்பில் மெலனின் சுரக்காதபோது இவ்வாறு வெண்மை நிறம் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. இப்படிப் பிறக்கும் விலங்குகளை அல்ஃபினோ வகை விலங்குகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 10 ஆயிரத்து ஓர் உயிரினம் இப்படிப் பிறப்பதாக அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.