என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Governor banwarilal purohit"
திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி கண்மாயில் பனைமர விதைகளை நடும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடந்தது. இதில் நடிகர் மன்சூர்அலிகான் கலந்து கொண்டு பனைமர விதைகளை நட்டார். இதில் ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 27 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக எச்.ராஜா போன்றோர் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் சுப்பிரமணியசாமி, சந்திரசாமியை விசாரிக்காமல் அப்பாவிகள் மீது வழக்கு போட்டு 27 வருடம் சிறை வைத்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை குறையும்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #MansoorAlikhan
அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதியன்று நடந்த சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார். இதன் 125-வது ஆண்டு தொடக்க விழா கோவையில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி கூறியதாவது:-
சுவாமி விவேகானந்தர் ஒரு ஆன்மிக ஒளி. அதீத சிந்தனையாளர். சுவாமி விவேகானந்தர் பழங்காலம், நவீன உலகம், அறிவியல் உள்ளிட்டவைகளை அறிந்த பன்முக தன்மைகள் உணர்ந்த மனிதராக திகழ்ந்தார். இந்தியாவில் மனித செயல்பாடுகள் மற்றும் ஆன்மிகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்.
அதற்கு கடவுள் உறுதுணையாக இருப்பார் என்றும் அவர் கூறினார். அமெரிக்காவில் நடந்த துறவிகள் மாநாட்டில் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு உதவி பெற வேண்டும் என்ற நோக்கமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் இந்துத்துவத்தை அறிமுகப்படுத்தி அனைத்து மதத்தையும் நேசிக்கும் உணர்வை அவர்களுக்கு போதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு பிரதானமாக இருந்தது. அமெரிக்காவில் அவர் பல்வேறு துன்பங்களை முதலில் அனுபவித்தாலும் துறவிகள் மாநாட்டில் அவருடைய முதல் நாள் சொற்பொழிவு அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அமெரிக்க மக்களின் இதயங்களில் நிறைந்தவர் ஆகிவிட்டார். சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க பயண வெற்றி இந்தியாவில் சோம்பி கிடந்த மக்களை புது நம்பிக்கையுடன் எழுப்புவதாக அமைந்தது. அது ஒட்டுமொத்த இந்தியாவையும் தட்டி எழுப்புவதாக இருந்தது.
இந்தியாவில் ஊழல் பரவி கிடக்கிறது. ஜப்பானில் ஊழல் அறவே ஒழிக்கப்பட்டு விட்டது. எனவே இந்தியாவிலும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அதற்கு மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும். மக்கள் எளிய வாழ்க்கையும், போதும் என்ற திருப்தி உள்ள மனதோடு வாழும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நேர்மையாகவும், எளிமை, மனதிருப்தியுடன் வாழ்பவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் வரலாம். ஆனால் அவர்கள் தான் கடைசியில் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
வேதாந்தமே மனித குலத்தின் எதிர்கால மதம் என்றார் சுவாமி விவேகானந்தர். அவருடைய தீர்க்க தரிசன பார்வையில் நவீன அறிவியல் மற்றும் கல்வியால் நாடுகளுக்கு இடையே உள்ள தடைகள் தகர்க்கப்படும். அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஒரே உலகம் உருவாகலாம். ஆனால் அவை அவரவர்களின் இனங்கள், கலாசாரம், மதகோட்பாடுகளை கடந்தால் மட்டுமே சாத்தியம். தூய ஆன்மாவால் மட்டுமே இது சாத்தியம். புதிய உலகில் அறிவியலும், மதமும் இணைய வேண்டும். மனிதனுடன் உள்ளுணர்வு இணைய வேண்டும். மத வேற்றுமைகள் அகன்று மத ஒற்றுமை மேம்பட வேண்டும். மதங்கள் ஒற்றுமையை வளர்க்க வேண்டும். வேற்றுமைகளை கைவிட வேண்டும். ஒவ்வொரு மதமும் உயர் பண்புகள் உடைய மனிதர்களை தான் உருவாக்குகின்றன. ஒவ்வொருவரும் தங்களுடைய குணநலன்களுடன் இருப்பதோடு பிற மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய சொற்பொழிவு மத நல்லிணக்கம் மற்றும் உலக ஒற்றுமையை வலியுறுத்துவதாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கவர்னர் பேச்சை தொடங்கும் போது ‘அனைவருக்கும், மாலை வணக்கம். ஆங்கிலத்தை ஒப்பிடுகையில் தமிழ் மொழி சிறந்தமொழி’ என்றும், பேச்சை முடிக்கும் போது ‘நன்றி வணக்கம்’ என்றும் தமிழில் பேசினார்.
உத்திரமேரூரை அடுத்த சித்தமல்லி பகுதியில் உள்ள கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த உகோ பூஜையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.
உத்திரமேரூர் வந்த கவர்னருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது, கோட்டாட்சியர் ராஜு, சுந்தர் எம்எல்ஏ உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கோ பூஜை செய்து கவர்னர் பன்வாரிலால் வழிபட்டார். பின்னர் அங்குள்ள பசுக்களுக்கு உணவு அளித்தார்.
பின்னர் அவர் அங்கிருந்த திரளான கிராம மக்களுக்கு கோகுலாஷ்டமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களிடம் கூறும்போது, “நாடு முழுவதும் பசுக்கள் பேணிக்காக்கப்பட வேண்டும். பசுக்களை திரளானோர் வழிபட்டு வருகின்றனர். பசுக்களை பாதுகாக்க அதிக அளவில் கோசாலைகளை அமைக்க வேண்டும்” என்றார். #TNGovernor #BanwarilalPurohit
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள டி.எஸ்.ராமன் விடுதியில் தியாகி லட்சுமணன் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தியாகி லட்சுமணன் உருவ சிலையை திறந்து வைத்து பேசினார்.
சுதந்திரம் பெறுவதற்காக நமது நமது நாட்டில் எத்தனையோ தியாகிகள் உள்ளனர். அவர்களில் நாடு சுதந்திரம் பெறுவதற்காக பாடுபட்டவர்களில் ஒருவர் தான் லட்சுமண அய்யர்.
மனித கழிவுகளை மனிதனே அள்ள வேண்டும் என்ற முறையை அகற்ற பாடுபட்டவர் தியாகி லட்சுமணன் ஆவார். அவரது சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன்.
கலாசாரம் பண்பாட்டை நாம் பேணி காக்க வேண்டும். விவேகானந்தர் சகோதரர்-சகோதரிகள் என ஏன் அழைத்தார்? அது நம் கலாசாரம் ஆகும்.
அதுபோல அரிசன், சேவா சங்கத்துக்கு அயல்நாட்டுக்காரர்கள் ஏன் இங்கு வந்து சேவை செய்ய வேண்டும்?
நமக்கு நாமே சேவை செய்ய வேண்டும். அந்த நோக்கில்தான் காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட அரிசன் சேவா சங்கம் கோபி என்ற இந்த கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தியாகி லட்சுமணன் உழைத்து அதை வளர்த்துள்ளார்.
நன்றாக படித்து நமது கலாசாரத்தை காக்க வேண்டும். தமிழகத்தில் கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டுகிறேன்.
கடவுளை வழிபடுவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். கடவுளை வழிபட்டால் குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படும். வன்முறையும் குறையும்.
எளிமையான வாழ்க்கை வாழுங்கள். இப்படிப்பட்ட வாழ்க்கைதான் நம் நாட்டில் நிலவும் 100 சதவீத ஊழலை ஒழிக்க முடியும். தற்போது நமது நாட்டில் எளிமையான வாழ்க்கை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இரவு தூங்கும் முன் கூட கடவுளை அனைவரும் வழிபட வேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் கடவுளுக்கு பயப்பட வேண்டும்.
இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
முன்னதாக கவர்னர் பேசும்போது தமிழில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சை ஆரம்பித்தார். #TNGovernor #BanwarilalPurohit
ஈரோடு:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று ஈரோடு வந்தார்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த அவரை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், ஏ.டி.எஸ்.பி. பாலாஜி சரவணன், டவுண் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்றனர்.
மேலும் அதே ரெயிலில் வந்த மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணியும் கவர்னர் பன்வாரிலாலை வரவேற்றார்.
வரவேற்பை பெற்றுக்கொண்ட கவர்னர் பிறகு நேராக காலிங்கராயன் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.
அங்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து காலை 9 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் கோபிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
கவர்னர் வருகையையொட்டி கோபிக்கு செல்லும் இரு வழியிலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள டி.எஸ். ராமன் விடுதியில் உள்ள தியாகி லட்சுமணன் சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில் தியாகி லட்சுமணன் சிலையை கவர்னர் பன்வாரிலால் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கலெக்டர் பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
விழா முடிந்ததும் மதியம் மீண்டும் காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.
அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்கிறார்.
மாலை 4.30 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார பணியை மேற்கொள்கிறார். #TNGovernor #BanwarilalPurohit
சென்னை அடையாறில் டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் உள்ளது. இதன் துணைவேந்தராக தம்மா சூரியநாராயண சாஸ்திரி பதவி வகித்து வருகிறார்.
சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சட்டக் கல்லூரிகளில் ராகிங் கொடுமைகள் நடைபெற்று வருவது தமிழக கவர்னர் பன்வாரிலால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சமீபத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ராகிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இதில் கே.கே.பிரசாந்த் என்ற மாணவர் தாக்கப்பட்டதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விலகியது.
இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அதன் பேரில் இதுபற்றி விசாரிக்க ஆர்.சிங்காரவேலன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நாளை (சனிக்கிழமை) கூடி விசாரணை நடத்துகிறது.
இதற்கிடையே இந்த குழுவில் இடம் பெற்ற சிண்டிகேட் உறுப்பினர்கள் ராகிங் தொடர்பான புகார்களை விசாரிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதே போல் மற்றொரு 2-ம் ஆண்டு மாணவர் கே. தனுஷ் என்பவரும் ராகிங் கொடுமைக்கு ஆளானார். இவரையும் இவரது நண்பரையும் மூத்த மாணவர்கள் சிலர் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு வரவழைத்து பீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி குடிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இதுபற்றியும் வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நடந்த ஒரு சம்பவத்தில் கடந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவரை பரீட்சை எழுத விடாமல் தடுத்து இருக்கிறார்கள்.
ராகிங் கொடுமை தொடர்ந்து நீடிப்பதாலும், சரியான நடவடிக்கை எடுக்காததாலும், கவர்னர் பன்வாரிலால் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்க அறிக்கை கேட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் நாளை ராகிங் தொடர்பான விசாரணை குழு கூட்டம் நடைபெறுகிறது. #StudentRagging
திண்டுக்கல்லில் 2 நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்தள்ளார். இன்று திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
பல்வேறு நாடுகளுக்கு செல்லும் போது அங்கிருக்கும் ஒவ்வொரு நல்ல பழக்கமும் என்னை மிகவும் கவர்ந்து விடும். குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் கூட தூய்மை மற்றும் சுகாதாரத்துக்கு சிறந்த முக்கியத்துவம் அளிப்பதை காணலாம். குறிப்பாக அமெரிக்காவில் சுகாதாரத்துக்கு முதலிடம் கொடுத்து தங்கள் நகரை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர்.
எனவே அமெரிக்காவைப் போல நாமும் நமது இந்தியாவை தூய்மையான நாடாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும். தூய்மை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால்தான் சுகாதார சீர்கேடு உருவாகி நமது வருமானத்தில் பாதி மருத்துவ செலவுக்கு போகிறது. அது போன்ற நிலையை மாற்றி தூய்மையான நகரை உருவாக்க ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம் என்று பேசினார்.
அதன் பிறகு தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி படிவத்தை அவர் வாசிக்க அரசு அதிகாரிகள் மற்றும் சுய உதவிக்குழு, தொண்டு நிறுவனத்தினர், மாணவ-மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் வினய், டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் மருதராஜ், மாநகராட்சி ஆணையர் மனோகர் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். #TNGovernor #BanwarilalPurohit
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் பயணமாக நேற்று திண்டுக்கல் வந்தார். காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று விட்டு மாலையில் பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இன்று அரசின் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே கவர்னர் வருகைக்கு எதிராக தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்த தயார் நிலையில் இருந்தனர். இதற்காக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கவர்னருக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை கைது செய்யவும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால் கவர்னரின் வருகை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பார்வையிடுவதற்காக மட்டுமே என்றும் கள ஆய்வு நடத்த வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் போலீசார் நிம்மதியடைந்து மண்டபத்தை விட்டு வெளியேறினர். மேலும் போராட்டம் நடத்த இருந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டன. #DMK #TNGovernor #BanwarilalPurohit
அவனியாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடி பகுதியில் அம்பேத்கர் நகர். கணபதி நகர், விருசமரத்து ஊரணி, மீனாட்சி நகர் பகுதிகளுக்கு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் பெண்கள் குடி தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டனர். குடம் தண்ணீர் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.
மேலும் இந்தப்பகுதியில் தனியார் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிதண்ணீரை லாரி மூலமாக ஆஸ்பத்திரி, ஓட்டல்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதனால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதனை கண்டித்து பொதுமக்கள் விமான நிலைய சாலையை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். கார் மூலம் புறப்பட்ட அவரை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. பீர் முகைதீன், இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் முற்றுகையிட சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
முடிவில் பெருங்குடி பகுதிக்கு லாரி மூலமாக குடிதண்ணீர் வழங்கவும் மேலும் 4 இடங்களில் போர்வெல் போடுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பின்னர் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். #TNGovernor #BanwarilalPurohit
திருச்சி தனியார் மருத்துவமனையில் இன்று உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உடலுறுப்பு தானம் என்பது ஒரு நபரின் உடல் பாகம் நீக்கப்பட்டு சட்டபூர்வமாக, உயிருடன் இருக்கும் போதோ? அல்லது இறந்த பின்னர் உறவினர்கள் அனுமதியுடன் செய்யப்படுகிறது. இந்த தானம் ஆராய்ச்சிக்கோ? அல்லது பிற நபர்களுக்கு பொறுத்துவதற்காகவும் இருக்கலாம்.
பொதுவாக சிறுநீரகம், இதயம், கல்லீரல், கணையம், குடல், நுரையீரல், எலும்பு மஜ்ஜை ,தோல் போன்றவை தானம் செய்யப்படுகின்றன. நுரையீரல் , சிறுநீரகம் அல்லது குடல்களின் பாகங்கள் அல்லது திசுக்களை தானம் செய்யலாம். ஒரு நபர் இறக்கும் போது முழுவதுமாக தானம் பெறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்ட உடல் உறுப்புகள் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு தயாராக இருக்கும் நபர்களுக்கு பொருத்தப்படுகிறது.
பெரும்பாலான உடல் உறுப்புகள் உடலை விட்டு எடுத்த பின்னர் சில மணி நேரங்களே செயல்படும். அவ்வாறான உறுப்புகள் அருகில் உள்ள நபர்களுக்கு பொருத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNGovernor #BanwarilalPurohit
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை ரெயிலில் திருச்சி வந்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்ற அவர் அங்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்மார்களுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தினை வழங்கினார்.
புதுக்கோட்டைமாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 5 மணிக்கு கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சிக்கு புறப்பட்டார். திருக்கோகர்ணம் அருகே முத்துடையான்பட்டி என்ற கிராமம் அருகில் கவர்னர் கார் வந்த போது, எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி அரசு பஸ் வந்தது.
திடீரென எதிர்பாராத விதமாக அரசு பஸ் கவர்னர் காரின் வலது பக்க கதவில் மோதியது. இதில் கார் பாகங்கள் உடைந்து ரோட்டில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த கவர்னர் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் கவர்னரை பின்னால் வந்த காரில் ஏற்றி, பாதுகாப்பாக திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
கவர்னர் காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் சென்ற நிலையில் அரசு பஸ் மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
அரசு பஸ்சை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த டிரைவர் விஜயசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனக்கு முன்னால் சென்ற கல்லூரி பஸ்சை முந்த சென்றபோது எதிர்பாராத விதமாக கவர்னர் கார் மீது மோதிவிட்டதாக கூறினார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பிறகு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தலைமை செயலகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கவர்னர் கார் மீது மோதிய அரசு பஸ்சை ஓட்டி வந்த விஜய சுந்தரம் தி.மு.க. தொழிற் சங்கத்திலும் பொறுப்பில் உள்ளார் என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தி வரும் கவர்னருக்கு தி.மு.க.வினர் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று புதுக்கோட்டையிலும் கவர்னருக்கு தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் 500 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவற்றையெல்லாம் கடந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருச்சிக்கு திரும்பிய போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.
நேற்று இரவு திருச்சி வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலை 10 மணிக்கு திருச்சி சங்கம் ஓட்டலில் நடைபெற்ற உயிருக்கு உறுதிமொழி என்ற உடலுறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதன்பிறகு தஞ்சையில் நடைபெறும் பல்கலை கழக விழாவில் பங்கேற்க கார் மூலம் தஞ்சை புறப்பட்டு சென்றார். மாலை 4.30 மணிக்கு மீண்டும் கார் மூலம் திருச்சி வரும் கவர்னர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். நேற்று நடைபெற்ற எதிர்பாராத விபத்து சம்பவத்தை தொடர்ந்து திருச்சியில் இன்று கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், சென்ற இடங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கவர்னர் கார் செல்லும் போது அச்சாலையில் மற்ற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். #TNGovernor #Banwarilalpurohit
புதுக்கோட்டை:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தூய்மை இந்தியா- வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
அவரது ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக கவர்னர் பங்கேற்க செல்லும் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கவர்னர் அடக்கு முறையை கையாள்வதாகவும், மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன.
இந்தநிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று புதுக்கோட்டையில் தூய்மை மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வினர் அறிவித்திருந்தனர்.
தடையை மீறி போராட்டம் நடத்தினால் கவர்னர் மாளிகை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஐ.பி.சி. 124-ன் கீழ் கைது செய்யப்படுவதோடு, அதன் மூலம் 7ஆண்டுகள் சிறை தண்டனைக்குள்ளாகும் நிலை ஏற்படும் என திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி தி.மு.க.வினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் தடையை மீறி கவர்னருக்கு எதிராக புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என தி.மு.க.வி னர் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சுற்றிலும் 10 அடி உயரத்திற்கு போலீசார் தடுப்புகளை அமைத்தனர். மேலும் அங்கு தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கவர்னர், தூய்மை பணிகளை ஆய்வு செய்து முடித்ததும் மற்ற பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கிருந்து புறப்பட தயாராக இருந்தார்.
இதற்கிடையே அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் கவர்னருக்கு எதிராக கறுப்பு கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி சாலைக்கு வர முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கவர்னர் வருகை, தி.மு.க. வினர் கறுப்பு கொடி போராட்டத்தையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தலைமையில், 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இதையடுத்து கவர்னர் ஆய்வு பணிக்கு வருவதற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கவர்னர் வருகைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க.வினர் 100-க் கும் மேற்பட்ட காவி நிறத்தில் பலூன்களை வானில் பறக்க விட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பலூன்களை பறிமுதல் செய்ததோடு பா.ஜ.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவங்களால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. #DMK #GovernorBanwarilalPurohit
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்