search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kandhu vatti"

    • தினேஷ் குமாரை அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
    • கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்த செல்வி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (29). இவர் சி.சி.டி.வி. விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. பெண் குழந்தை உள்ளது. தினேஷ் குமார் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முருகனிடம் வட்டிக்கு பணம் வாங்குவது வழக்கம். ஏற்கனவே பணம் வாங்கி அதனை வட்டியுடன் கட்டி உள்ளார்.

    தற்போது தினேஷ் குமார், முருகனிடம் ரூ. ஒன்றரை லட்சம் பணம் கடனாக வாங்கி இருந்தார். அதற்கு வாரம் ரூ. 6 ஆயிரம் கட்ட வேண்டும் என முருகன் கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தினேஷ்குமாரால் பணம் கட்ட தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர் கும்பல் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தினேஷ் குமாரை அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

    பின்னர் தினேஷ் குமாரை அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

    பின்னர் தினேஷ் குமாரை விடுவித்தனர். கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்த செல்வி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கந்து வட்டி கும்பல் திட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை கே.புதூரில் உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புடைய ஓட்டலை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி வருகின்றனர்.
    • கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை:

    மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 46). இவர் கே.புதூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அழகுராஜாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்கொலைக்கு முயன்ற ஓட்டல் அதிபர் அழகுராஜா போலீசாரிடம் கூறுகையில், "நான் கே.புதூரில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில் அபிவிருத்திக்காக மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரிடமும் ரூ.6 லட்சம் கடன் வாங்கினேன். இதற்கான வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்டி விட்டேன். இருந்தபோதிலும் அவர்கள் என்னிடம் மேலும் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் கந்து வட்டிக்கு ஈடாக, மதுரை கே.புதூரில் உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புடைய ஓட்டலை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமார் மேற்பார்வையில் கே. புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுராஜாவிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நான் ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.44 லட்சத்தை திருப்பி செலுத்தினேன்.
    • நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    பீளமேடு

    கோவை சின்னியம்பா ளையம் ஜி.கே.ஆர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 64).

    இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் சொந்த தேவைக்காக கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சிவகுமார் சந்திரன் (48), கே.கே.புதூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (50), திருப்பூரை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.44 லட்சம் கடன் பெற்றேன்.

    அதனை நான் ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.44 லட்சத்தை திருப்பி செலுத்தினேன். ஆனால் அவர்கள் நான் வாங்கிய கடனுக்கு ரூ.61 லட்சம் வட்டி செலுத்துமாறு கேட்டனர்

    அதற்கு நான் மறுத்தேன்.இதனால் அவர்கள் எனக்கு நோட்டீஸ் அனுப்பி விடுவதாக மிரட்டி வருகிறார்கள்.

    எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டி வரும் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து பீளமேடு போலீசார் சிவகுமார் சந்திரன், ஹரிகிருஷ்ணன், ஜெயசந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 6 வருடங்களாக வட்டி செலுத்தி வரும் நிலையில் ஒரு மாதமாக மட்டுமே வட்டியை செலுத்தவில்லை.
    • தற்போது அவர்கள் பணத்தை முழுமையாக செலுத்துமாறு எனக்கு மிரட்டல் விடுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளித்து சென்றனர்.

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த வளன் என்பவரது மனைவி பியோனி தனது 4 மகன்களுடன் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் நின்று இருந்த போலீசார் அந்த பெண்ணின் கையில் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு கேனில் பெட்ரோல் இருந்தது. உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்து பியோனியிடம் விசாரித்தனர். அவர் பையில் இருந்த மனுவை எடுத்து பார்த்தபோது அதில் கூறியிருந்ததாவது:-

    வளன் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சிகள் எடுத்துள்ளார். அங்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் இடிந்தகரை பகுதியை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டு அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே மாத சம்பளம் கொடுத்துள்ளனர்.

    மேலும் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார். அதே நேரத்தில் வட்டிக்கு பணம் கொடுத்திருந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக பணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். நான் 4 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறேன்.

    கடந்த 6 வருடங்களாக அவர்களுக்கு வட்டி செலுத்தி வரும் நிலையில் ஒரு மாதமாக மட்டுமே நான் வட்டியை செலுத்தவில்லை. ஆனால் தற்போது அவர்கள் பணத்தை முழுமையாக செலுத்துமாறு எனக்கு மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்களது பணத்தை திருப்பிக் கொடுக்க எனது வீட்டை நான் விற்க வேண்டும். அதற்கு 6 மாதம் அவகாசம் அவர்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • ராவேந்திரனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
    • பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த சிலர் கந்துவட்டி தொழில் செய்து வருகின்றனர். இவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள், அதை திரும்ப செலுத்த காலதாமதம் ஆகும் போது, அவர்களை மிரட்டியும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசியும், அடித்து துன்புறுத்தியும் வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கந்து வட்டி கும்பலை சேர்ந்த ஒருவரை, அப்பகுதியை சேர்ந்த ராவேந்திரன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், இன்று ராவேந்திரன் ஆட்டோ ஓட்டிக்கொண்டு டி.பெருமாபாளையம் அருகே ஆத்துப்பாலம் பகுதியில் வரும்போது, ஆட்டோவை வழிமறித்த அந்த கும்பல் ராவேந்திரனை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த ராவேந்திரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவல் அறிந்த ராவேந்திரனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராவேந்திரனை தாக்கிய கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் தெரிவித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவகம் அருகே சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான இளங்கோவன் பொள்ளாச்சியை சேர்ந்த பஷீர் என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
    • பணத்தை திருப்பி செலுத்திய பிறகும், அசலுக்கு மேல் வட்டி, அதிக தொகை கேட்டார்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் கந்துவட்டி வசூலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார்.

    இதைதொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி.முத்துசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மேற்பார்வையில் 6 டி.எஸ்.பிக்கள், 17 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 17 தனிப்படையினர் ஆபரேஷன் கந்துவட்டி 2.0 திட்டத்தின் கீழ் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

    கே.ஜி.சாவடி, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர் உள்பட மாவட்டம் முழுவதும் 41 இடங்களில் சோதனை நடந்தது.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது 11 மணி வரை நடைபெற்றது. இதில் கந்து வட்டிக்காக பலரிடம் எழுதி வாங்கி வைத்து இருந்த சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கே.ஜி.சாவடியில் தொழில் அதிபர் நடராஜன் வீட்டில் இருந்து ரூ.1கோடியே 10 லட்சம் மற்றும் சொத்து பத்திரங்கள், புரோ நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கவுண்டம்பாளையம் ராமசாமி நகர் தேமையன் வீதியை சேர்ந்த செல்வி(42) என்பவர் கந்து வட்டி வசூலித்ததாக வந்த தகவலின் பேரில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கிருந்து சொத்து ஆவணங்கள், ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.2லட்சத்து 70 ஆயிரமும் பறிமுதல் செய்தனர்.

    கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(45) என்பவர் திருப்பூரை சேர்ந்த மோகன் குமார் என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து விட்டு அதற்கு அசலுக்கு மேல் கூடுதல் வட்டி வசூலித்துள்ளார்.

    அதேபோல கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான இளங்கோவன் (52), பொள்ளாச்சியை சேர்ந்த பஷீர் என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பி செலுத்திய பிறகும், அசலுக்கு மேல் வட்டி, அதிக தொகை கேட்டார்.

    இதையடுத்து போலீசார் சரவணகுமார் மற்றும் மருந்து கடை உரிமையாளர் இளங்கோவன் மீது கந்துவட்டிக் கொடுமை மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலித்தவர்களிடம் இருந்து மொத்தம் 379 சொத்து பத்திரங்கள், 3 பாஸ்போர்ட்டுகள், 127 காசோலை புத்தகங்கள், 48 ஏ.டி.எம். கார்டுகள், 18 வங்கி கணக்கு புத்தகங்கள், 54 கையெழுத்திட்ட வங்கி பத்திரங்கள், 211 வாகன ஆர்.சி.புத்தகங்கள், 35 பைனான்ஸ் புத்தகங்கள், 7 ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் 1 கோடியே 26 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கந்து வட்டி வசூலித்ததாக மாவட்டம் முழுவதும் செல்வி, நடராஜன், வேலுச்சாமி, பட்டை சவுந்தரராஜன், உதயகுமார், இளங்கோ, சரவணன், சுபாஷ், பார் நாகராஜ் என்ற முத்துசாமி, மகேந்திரன், திருசிற்றம்பலம் குமார், சதீஷ்குமார், மாணிக்கம், ராமர், மாடசாமி, செல்வராஜ், ஜனார்த்தனன், ரமேஷ் மணியன் என்ற கிருஷ்ணசாமி ஆகிய 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில் வேலுச்சாமி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை தவிர மற்ற 18 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலம் முழுவதும் கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
    • கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கடலூரை சேர்ந்த போலீஸ்காரர் செல்வகுமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.

    அனிதா என்ற பெண்ணிடம் வாங்கிய ரூ.3 லட்சம் கடனுக்காக அதிக அளவில் செல்வகுமார் வட்டி செலுத்திவிட்ட நிலையிலும் கந்துவட்டி பெண்ணான அனிதா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாலேயே காவலர் செல்வகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கந்துவட்டி வசூலித்த அனிதாவை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அனைத்து போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகள் மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் 2003-ம் ஆண்டு கந்துவட்டி தடை சட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நிலுவையில் உள்ள வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    கந்துவட்டிக்கு விடுபவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி அவர்கள் வைத்திருக்கும் கந்துவட்டி தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற வேண்டும். கையெழுத்து போடப்பட்ட வெற்று பேப்பர்கள், கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் அதுதொடர்பான ஆவணங்கள் இருந்தால் அவைகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

    கந்துவட்டி தொடர்பான இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் கந்து வட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை போலீசார் திறம்பட வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.

    கந்து வட்டி தொடர்பான நடவடிக்கைகளில் சிறப்பாக முன்மாதிரியாக பணியாற்றுபவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் தனித்தனியாக அளிக்கப்படும்.

    இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×