search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishekam"

    • 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும்.

    இந்தநிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதற்காக கோவில் கோபுரங்கள் புனரமைப்புபணிகள் நடைபெற்றது. தற்போது புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்து வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    வருகிற டிசம்பர் 12-ந்தேதி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உத்தரவின் பேரில், தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசப்பட்டு மகா கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

    இதையடுத்து வரும் டிசம்பர் 12-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மகா கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சியின் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்க மணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து, கண்காணிப்பாளர்கள் அர்ஜூன், புவனேஸ்வரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    • ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
    • ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா. 7 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன.

    ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி மங்கலம் இஸ்லாமியர்களின் பூர்வீக பள்ளிவாசலான மங்கலம் சுன்னத்வல் ஜமாஅத் பெரியபள்ளிவாசல் சார்பில் மங்கலம் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 7 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    அவை கோவில் திருப்பணிக்குழு மற்றும் கும்பாபிஷேக விழாக்கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற நிகழ்வு காண்போரை ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
    • இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமேலம்பட்டி கிராமத்தில் கந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புறனமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து கோவில் கட்டுமான பணிகள் மற்றும் வண்ணம் தீட்டும் பணிகளை செய்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து விரதம் இருந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில் காலை, மாலை என கடந்த 15 நாட்களாக பூஜை நடந்து வந்த நிலையில் வட மலைப்பட்டி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.

    இதில் சாமிக்கு சீர் கொண்டு வந்து அதனை மேளதாளம் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலின் முன்பு இந்து, இஸ்லாமிய மக்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஆரத்தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    பின்னர் சீர்வரிசைகளை கோவில் நிர்வாகத்திடம் வழங்க அதனை பூசாரியிடம் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். இரு சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்து கோவிலுக்கு சீர் கொண்டு வந்து பூஜை செய்து அன்னதான வழங்கிய சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது. 

    • யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.

    இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீ ஊரகத்தான் சன்னதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ கார்வானப் பெருமாள் சன்னதி என 4 திவ்ய தேச சன்னதிகள் அமைந்துள்ள ஒரே கோவிலாகவும், திருமழிசையாழ்வாரால் பாடப்பட்ட திருத்தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.

    கடந்த 2007-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று இருந்தது.

    இந்தநிலையில் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து உலகளந்த பெருமாள் சன்னதி, ஆரணவல்லித் தாயார் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது.

    இந்தநிலையில் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு 6 யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்கா வலர்கள் அப்பன் அழகிய சிங்கர், கோமடம் ரவி, பேரகத்தி பட்டர் ரகுராம் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

    • கோவில் அல்ல சமாதி என கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
    • இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை, திருவான்மியூர், மயூரபுரம், ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோவில் 3 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இந்த சொத்தும், இதில் அமைந்துள்ள கோவி லும் நிர்வகிக்க ஸ்ரீமத்பாம் பன் சுவாமிகள், தமது உயிலில் தேஜோ மண்டல் சபா என்ற அமைப்பினை ஏற்படுத்தியிருந்தார். அதன் காரியதரிசி டி.டி.குப்புசாமி செட்டியாரால் 9.9.1984 அன்று தாமாக முன் வந்து இந்து சமய அறநிலையத் துறை வசம் கோவில் ஒப்படைக்கப்பட்டு அன்று முதல் தொடர்ச்சியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    1985-ம் ஆண்டு முதல் மகா தேஜோ மண்டலத் தாரால் இது கோவில் அல்ல சமாதி என கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளை கொண்ட அமர்வானது வழக்குகளின் இறுதி தீர்ப்பை கடந்த 27.3.2024 அன்று வழங்கியது. இத்தீர்ப்பில் ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தாசர் கோவில் எனவும் அதன் நிர்வாகம் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    இதற்கிடையில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சின்னசாமி சமாதி நிலையத் தில் கோவில் நிர்வாகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத உழவாரப்பணிக் குழு என்று அழைத்துக் கொள்ளும் ராஜா என்பவர் அருண், முருகேசன், சிவா மற்றும் ரமேஷ் ஆகியோர் ஆதரவு டன் தொடர்ந்து சட்ட விரோ தமான ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்.

    இது சட்ட விரோ தமான செயலாகும். மேலும் இந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பானதாகும்.

    எனவே, மேற்குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியும், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் மற்றும் விதிமுறை களுக்கு உட்பட்டும் கோவில் நிர்வாகம் நடைபெறுவதற்கு ஏதுவாக கோவில் நிர்வாகத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் அமைப்பினை சின்னசாமி சமாதி நிலையத்திலிருந்து வெளியேற்றி ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோவில் நேரடி ஆளுகை யின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    இதை தொடர்ந்து பொது மக்கள் சுமார் 36 ஆண்டு களாக ஆவலுடன் எதிர் நோக்கும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி அன்று நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வரும் நிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கோவில் பட்டாச்சாரியார் முன்னிலையில்சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வரும் நிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் கலந்து கொண்டு பந்தக்கால் நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவில் பட்டாச்சாரியார் முன்னிலையில்சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் செயலர் மதனா, ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன் மற்றும் கிராம மக்கள், கோவில் பணியாளர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

    • கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
    • சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் ராஜா நகரில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் மும்மதத்தினர் சீர்வரிசையுடன் வந்து கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கச்சி மடத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் இணைந்து மத நல்லிணக்கத்துடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் தங்கச்சி மடம் ராஜா நகரில் புதிதாக கட்டப்பட்ட ராஜ பெரிய கருப்பசாமி மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பூ, பழம், மாலை, இனிப்பு குத்து விளக்கு உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நெற்றியில் விபூதி இட்டு தீபாராதனை எடுத்துக் கொண்டனர்.

    கோவிலுக்கு வந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களை அன்புடன் வரவேற்ற இந்துக்கள் அவர்கள் கொடுத்த சீர்வரிசைகளை பெற்று கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.

    தங்கச்சிமடத்தில் மும்ம தத்தினர் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெற்ற கோவில் கும்பாபிஷேக விழா அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமார கோவில் திருப்பணி முடிந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி யாகம், கோ பூஜை, லஷ்மி ஹோமம், நவகரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, பிரம்மசுத்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்ட்டது. பின்னர் கைலாய இசை வாசிக்கப்பட்டு கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பி சாமியை வணங்கினர். கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் எழுந்தருளி உள்ளார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    சென்னை:

    வடசபரி என்று அழைக்கப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (ஆர்.ஏ.புரம்) 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் சாமி எழுந்தருளி உள்ளார். இறைவனின் உத்தரவுப்படி புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், நவக்கிரகங்கள், ஆஞ்சநேயருக்கும் புதுபொலிவுடன் கோபுரங்கள் கட்டி பஞ்ச வர்ணங்கள் பூசப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த 24-ந்தேதி விநாயகர் பூஜை, முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 25-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாக பூஜை, 26-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7.15 மணி அளவில் 6-ம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.

    தொடர்ந்து 10.45 மணிக்கு சபரிமலையில் இருந்து வந்திருந்த மோகன் தந்திரி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ கே.பிச்சை குருக்கள் தலைமையில் கோபுர கலசத்துக்கும், அதை தொடர்ந்து மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

     இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு வெள்ளி ரதத்தில் ஐயப்ப சாமி எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

    விழா நாட்களில் வேதபாராயணம், தேவார இன்னிசையும், கலைநிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சாமி கோவில் அறக்கட்டளை அறங்காவலரும், கும்பாபிஷேக திருப்பணிக்குழு தலைவருமான ஏ.சி.முத்தையா மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

    • காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.
    • 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக இது உள்ளது. இங்கு மூலவர் 8 திருக்க ரங்களை உடை யவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கு உரிய தலமாகவும் விளங்குகிறது.

     இந்த கோவிலில் கும்பாஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்வசர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, உத்திரமேரூர் எம்எல்ஏ.சுந்தர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணி குழு செயலாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது.

    பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    ×