search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102485"

    ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SterliteProtest #NGT


    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன. அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை.

    மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. உடனடியாக மின்இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்று தான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதிகாக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். #SterliteProtest #NGT

    பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாமில் பயனாளிகளுக்கு கலெக்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    வரதராஜன்பேட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி முன்னிலை வகித்தார். ஆலத்தூர் வட்டாட்சியர் ஷாஜகான் வரவேற்றார். முகாமில் மாவட்ட கலெக்டர் சாந்தா, அல்லிநகரம் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து விபரங்களை கேட் டறிந்து பொது மக்களிடம் எடுத்துக்கூறினார். தொடர்ந்து இம்முகாமில் 286 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரத்து 995 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

    இந்த முகாமில் கோட்டாட்சியர் விஷ்வநாதன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி செல்வன், வருவாய் ஆய்வாளர் பெரியண்ணன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் கிருஷ்ணராஜ், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, தாட்கோ உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனித்துணை கலெக்டர் மனோகரன் நன்றி கூறினார். 
    விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumarasamy
    முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர்களுக்கு குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகள் குறித்த விவரம் வருமாறு:-

    விவசாய கடன் தள்ளுபடி குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அதனால் விவசாயிகள் இடையே எழுந்துள்ள சந்தேகங்களை போக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும்.

    33 வங்கிகளிடம் இருந்து சுமார் 20 லட்சம் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடிக்கு என்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் பணியை சேடம் மற்றும் தொட்டபள்ளாபுரா ஆகிய தாலுகாக்களில் சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறோம். இதுவரை 4,000 விவசாயிகள் தாமாக முன்வந்து தங்களின் விவசாய கடன் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளனர்.

    தெருவோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க தாலுகாக்களுக்கு தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோசாலை திறக்க வேண்டிய அவசியம் எழுந்தால், அதற்கு சரியான இடத்தை மாவட்ட கலெக்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். பசுமை தீவனத்தை வளர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு அதற்கான விதைகளை வழங்க கால்நடைத்துறைக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வறட்சி பாதித்த பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோக பணிகளுக்கு 30 மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை குறைந்துவிட்டது. இதனால் வெங்காயத்திற்கு ஆதரவு விலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஆவதாக புகார்கள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டத்தின் மூலம் கூடுதலாக ரூ.450 கோடி ஒதுக்கி இருக்கறோம். இதை பயன்படுத்தி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 மாவட்டங்களில் ெதாழிற்பேட்டைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #kumarasamy
    சொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை மகன்கள் தவிக்கவிட்டனர். இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்து கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்தார்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75), விவசாயி. இவரது மனைவி பூங்காவனம் (63). இவர்களது மகன்கள் பழனி (40), செல்வம் (37). பழனி அரசு பஸ் கண்டக்டராகவும், செல்வம் கட்டிட தொழிலாளியாகவும் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்து வழங்கி ‘செட்டில்மென்ட்’ பத்திரப்பதிவு மூலம் எழுதி வைத்தார்.

    அதன்பிறகு மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சாப்பாடு போடாமல் தவிக்கவிட்டு உள்ளனர். இளைய மகன் செல்வம் அவரது தந்தையை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த கண்ணனும், அவரது மனைவி பூங்காவனமும் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனு குறித்து விசாரிக்க உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரியிடம் கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் கண்ணனின் 2 மகன்களையும் அழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாக தெரிவித்து உள்ளார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம் உதவி கலெக்டர் ஒப்படைத்தார்.

    இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் கண்ணன் அவரது மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்திடம் நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் வழங்கினார். கண்ணீர்விட்டு அழுத இருவரும், கலெக்டரிடம் நன்றி தெரிவித்தனர். அப்போது உங்கள் மகன்களால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு ஆறுதல் கூறினார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோரை பாதுகாப்பது மகன்களின் கடமை. பெற்றோரை தவிக்கவிடும் மகன்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். நிலம் கிடைத்தால் உழைத்து வாழ்வோம் என்ற முதியவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. சட்டப்படி சொத்துக்களை மீட்டு ஒப்படைத்திருக்கிறோம். உரிய பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.

    இதன்பிறகு தாங்கள் விரும்பும் நபர்களுக்கு இந்த சொத்துக்களை வழங்கும் உரிமை பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது.

    முதிர்வயதில் இதுபோன்ற துயரத்தில் தவிப்போர் புகார் அளித்தால் உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார். 
    செய்யாறு அருகே உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க கலெக்டர் உத்திரவிட்டார். #GajaCyclone #Gajastorm
    திருவண்ணாமலை:

    வெம்பாக்கம் தாலுகாவில் குடிசை வீட்டின் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் அரசு திட்டங்களின் செயலாக்கம் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளருமான தீரஜ்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி கூறுகையில்:-

    ‘‘செய்யாறு கோட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் சுவர் இடிந்து குடிசை வீட்டில் வசித்து வந்த 7 வயது சிறுமி உயரிழந்துள்ளார். மேலும் அதே குடும்பத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது’’ என்றார். #GajaCyclone #Gajastorm
    தீபத் திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். #Thiruvannamalaitemple

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா அன்று பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 தற்காலிக பஸ் நிலையங்களில் 2,420 பஸ்கள் நிற்க வைக்கலாம். 2,650 சிறப்பு பஸ்கள், 6,600 நடைகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல 59 தொடர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தென்னக ரெயில்வே மூலம் 14 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசல் தவிர்க்க விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், உள்ளே 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    அன்னதானம் 7 இடங்களில் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 8 குழுக்களாக உணவு தரம் குறித்து சோதனை மேற்கொள்வார்கள். ஆவின் பாலகம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது 3 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதன்படி, 72 வெள்ளி நாணயங்களும், 2 கிராம் எடையுள்ள 6 தங்க நாணயங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thiruvannamalaitemple

    காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் 6 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் குறித்து எவ்வித பீதி அடைய வேண்டாம் எனவும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உடன் சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்கள் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம்களை வட்டார அளவில் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் 24/ 7 என்ற சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதார நடமாடும் மருத்துவக்  குழுவினர் அனைத்து பள்ளிகளிலும் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர் அனைத்து கிராமங்களிலும் மற்றும் காய்ச்சல் கண்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

    அனைத்து பகுதிகளில் பொது சுகாதாரதுறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை மூலமாக தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட தற்காலிக மஸ்தூர்களை கொண்டு வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றும் நீர் தேங்க கூடிய தேவையற்ற பொருட்களினை அழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், கொசு ஒழிப்பு புகை மருந்து அனைத்து பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உப்பு கரைசல். நில வேம்பு கசாயம் மற்றும் சோற்றுக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளில் உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீரில் குளோரினேசன் உள்ளதை உறுதி செய்த பின் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மூலமாக அனைத்து அங்கன்வாடிகளில் வரும் குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் நிலவேம்பு கசாயம், உப்பு கரைசல் வழங்க அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். #tamilnews
    டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்காத வாகனம் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். #DenguFever
    விழுப்புரம்:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கலெக்டர் சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக, இன்று காலை விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டி, கவுதம் நகர் ஆகிய பகுதிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் சென்றார். அங்கு வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா என அவர் ஆய்வு செய்தார்.

    மேலும், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாங்கள் வசிக்கும் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களை அவர் எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து வழுதரெட்டி கவுதம் நகரில் இருந்த ஒரு தனியார் வாகனம் பழுதுபார்க்கும் கடைக்கு சென்று சோதனை செய்தார். அதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயர்களில் சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்காத அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து கலெக்டர் சுப்பிரமணியன் புறப்பட்டு சென்றார். #DenguFever
    வீசாணம் ஊராட்சியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட கடகால்புதூர், ஒட்டக்குளம்புதூர், வீசாணம், மேற்கு தோட்டம், அருந்ததியர் தெரு, பால கருப்பணார் தெரு, வீனஸ்காலனி, சிவாஜி நகர், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் காலனி பகுதியில் சுமார் 3,500 பேர் வசித்து வருகிறோம்.

    எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு 10 குடம் குடிநீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் ஆகியும் குடிநீர் வரவில்லை. எனவே ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    குறிப்பாக மேற்கு தோட்டம், ஜே.ஜே.நகர், சிவாஜி நகர், வீனஸ் காலனி, பாலகருப்பணார் தெரு, திருவள்ளுவர் காலனி பகுதிகளுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் வருவது இல்லை. எனவே வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். 
    உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பதை தடுக்கவும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி நடக்கிறது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க பட்டாசு விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டது.

    மேலும் பட்டாசுக்கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்க ஒத்திகையை பட்டாசுக்கடை உரிமையாளர்களுக்குச் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பதை தடுக்கவும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர்கள் உள்பட பல்வேறு அதிகாரிகள் பட்டாசுக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்பவர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த பட்டாசுக்கடைகளில் விவரங்கள் பெறப்பட்டு, அவை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி அந்தந்தப்பகுதிக்கு உட்பட்ட அனைத்துப்பட்டாசுக்கடைகளிலும் போலீசார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது பட்டாசு விற்பனையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட உரிமத்தை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும். அல்லது உரிமம் தெரியும்படி கடையின் முன்பாக தொங்க விட வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்தால் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு போலீசார் கூறினர். #tamilnews
    டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்த போது நாயை அவிழ்த்துவிட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் மற்றும் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்தனர்.

    அப்போது மணவாளநகர், காந்தி தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டை ஆய்வு செய்ய உள்ளே நுழைந்தனர்.

    உடனே பாலகிருஷ்ணன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென வீட்டில் இருந்த நாய்களை அவிழ்த்து விட்டார்.

    இதனை கண்டு ஆய்வுக்கு வந்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாதுகாப்புக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பாலகிருஷ்ணனை எச்சரித்து நாய்களை வெளியே விரட்டி விட்டனர்.

    பின்னர் அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் அந்த வீட்டில் டெங்கு கொசு உருவாகும் வகையில் சுகாதாரம் இல்லாமல் இருந்தது.

    இதையடுத்து பாலகிருஷ்ணனுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

    இதற்கிடையே அதிகாரிகளை பணி செய்யவிடாமல், அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக பாலகிருஷ்ணன் மீது மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மணவாளநகர் காந்தி தெருவில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற போது பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கான அனைத்து ஆதாரங்களுடன் மிகவும் சுகாதாரமின்றி சீர்கேட்டுடன் இருந்தது. வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது நான்கு பெரிய நாய்களை கொண்டு வீட்டின் உள்ளே வரவிடாமல் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டார்.

    ஏற்கனவே இதே போன்று துப்புரவு பணியாளர் மற்றும் டிபிசி பணியாளர்கள் பலமுறை இந்த வீட்டிற்கு சென்றபோது வீட்டிற்கு உள்ளே வரவிடாமல் நான்கு பெரிய நாய்களை கொண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் பணி செய்ய விடாமல் நடந்து கொண்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் என்பவரின் பயன்படுத்த படாமல் இருந்த மற்றொரு ஒடு; போட்ட வீடு முழுவதும் டெங்கு கொசு ஆதாரம் உள்ளது கண்டறியப்பட்டது. எனவே பொது சுகாதாரம் விதி 1939ன்படி ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வீடு வருவாய்த்துறை மூலம் ‘சீல்’ வைக்கப்பட்டது.

    மணவாளர் நகர் காவல் நிலையத்தில் சுகாதாரதுறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

    எனவே அரசுத்துறை அலுவலர்கள், அரசு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பொது சுகாதாரம் சட்டம் 1939 ன்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
    பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததாலும் முறையான அனுமதி இல்லாமல் மதுபான பார் செயல்பட்டதாலும் அந்த பாருக்கு சீல் வைக்க காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். #DenguFever
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகின்றன.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பொன்னையா இன்று அதிகாலை காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழிவு நீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார்.

    பின்னர் ரெட்டிப்பேட்டை பகுதியில் உள்ள கோழிக்கறி கடை மற்றும் ஐஸ் பேக்டரிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.

    இந்தபகுதியில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததாலும் முறையான அனுமதி இல்லாமல் மதுபான பார் செயல்பட்டதாலும் உடனடியாக அந்த பாருக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் அனுமதி இல்லாமல் பார் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் சுகாதாரத்தை உறுதி செய்ய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமான இடங்களை சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்து வருகின்றன. #DenguFever
    ×