search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103382"

    கூடலூரில் சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை மீட்பு குழுவினர் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். #EnvironmentAwareness
    கூடலூர்:

    கூடலூர் பசுமை மீட்பு குழு, கோவை நட்பு குழு ஆகியவை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் கூடலூரில் நடைபெற்றது. மேலும் ஏராளமான மாணவிகளும் ஊர்வலமாக சென்றனர். கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதற்கு பசுமை மீட்பு குழு தலைவர் அன்பரசு தலைமை தாங்கினார். நிர்வாகி சங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னாள் தலைமை ஆசிரியர் சத்தியநேசன், ஆசிரியர் கிருஷ்ணகுமார், சுரேஷ் குமார், சந்திரகுமார், கோவை நட்பு குழு நிர்வாகிகள் கவுதம், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் நான்குமுனை சந்திப்பு, மெயின் ரோடு, பழைய பஸ் நிலையம் வழியாக ஊட்டி ரோட்டில் சென்றது. பின்னர் மேல் கூடலூர் வழியாக தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது.

    ஊர்வலத்தில் பசுமையை காப்போம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து கூடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மூலிகை பண்ணை அமைக்கும் பணியில் பசுமை மீட்பு குழு தொண்டர்கள் ஈடுபட்டனர். அரசு டாக்டர் மயில்சாமி கலந்து கொண்டு மூலிகை நாற்றுக்களை நட்டு தொடங்கி வைத்து பேசினார். மேலும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

    இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்திலும் மூலிகை நாற்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பசுமை மீட்பு மற்றும் கோவை நட்பு குழுவினர், பசுமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    பசுமை மீட்பு குழு தலைவர் அன்பரசு, நிர்வாகி சங்கர் ஆகியோர்் கூறும்போது, இன்றைய காலத்தில் வனம் மற்றும் பசுமை இழந்து வருகிறது. இதனால் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் அழிந்து தண்ணீருக்காக போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. வனத்தில் பசுந்தீவன தட்டுப்பாட்டால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. பசுமையை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக நூலகங்கள், ஆஸ்பத்திரி வளாகங்களில் மூலிகை பண்ணைகள், மரக்கன்றுகள் நட்டு வருகிறோம். கூடலூர் பகுதியில் மாணவர்களை ஒன்றிணைத்து அதிகளவு மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையை காக்க முயற்சி செய்யப்படு கிறது, என்றனர்.  #EnvironmentAwareness
    சூலூர் அரசு பள்ளிக்கு தொடர்ந்து தீ வைக்கப்பட்டு வருவதால் பள்ளிக்கு பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    கோவை:

    கோவையை அடுத்த சூலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பின்புறம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக இந்த பள்ளிக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து புத்தகம், சீருடை, நாற்காலிகள் ஆகியவற்றை நாசம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் இந்த பள்ளியில் ஒரு வகுப்பறையில் வைக்கப்பட்டு இருந்த சீருடைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீவைத்து விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மற்றும் பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுப்பதற்காக நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    கலெக்டர் அலுவலகம் முன்பு நின்றிருந்த அவர்கள் தங்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, சூலூர் அரசு பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளுடன் பொது மக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    பிறகு மனுகுறித்து பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பள்ளியில் கடந்த ஒரு மாதமாக அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் விடுமுறை அன்று இந்த பள்ளியில் உள்ள நாற்காலிகள், மேஜைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் போதிய பாதுகாப்பு இல்லாததால், நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறினோம். இதையடுத்து அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு வந்திருந்த போலீசார், பள்ளிக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம், குழந்தைகளை அனுப்பி வையுங்கள் என்று கூறினார்கள்.

    இதையடுத்து நாங்கள் எங்கள் குழந்தைகளை வழக்கமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள், பள்ளியில் வைத்திருந்த சீருடைகள் மற்றும் இலவச காலணிகளுக்கு தீ வைத்து உள்ளனர். தொடர்ந்து அரசு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டு வருவதால் அங்கு படித்து வரும் எங்கள் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பள்ளியில் குழந்தைகள் இருக்கும்போது, மர்ம ஆசாமிகள் தீ வைத்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது?.

    இந்த பள்ளியில் நன்றாக கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதை பிடிக்காத சிலர்தான் பள்ளிக்கு தொடர்ந்து தீ வைத்து வருகிறார்கள். கும்பகோணத்தில் நடந்த தீ விபத்துபோன்று இங்கு நடப்பதற்கு முன்பு, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கு போதிய பாதுகாப்பு கொடுப்பதுடன், காவலாளியை நியமித்தால்தான் நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    மகாராஷ்ரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #DevendraFadnavis #Maoist
    மும்பை:

    சமீபத்தில் பிரதமர் மோடியை மாவோயிஸ்டுகள் கொலை செய்ய திட்டமிட்டுருப்பதாக வந்த தகவலை அடுத்து, நாடு முழுவதும், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுமார் 40 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது, அவர்கள் மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பழி வாங்கும் விதமாக, மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    2 இ-மெயில்களில் வந்த கொலை மிரட்டலை அடுத்து, முதல்மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இ-மெயிலில், சிலரை கொலை செய்வதன் மூலம் எங்கள் சிந்தனையை அழிக்க முடியாது. கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதற்கு கணக்கு தீர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இரண்டு இ-மெயில்களின் நகலை காவல்துறையிடம் அளித்துள்ளதாகவும், காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். #DevendraFadnavis #Maoist
    மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். #PublicMoney #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் டெல்லியில் நேற்று நடந்த 13 பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த அவரிடம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததால் பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், “மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ள பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. இதை மீண்டும் உறுதிபட கூறுகிறேன். மத்திய அரசு எப்போதும் பொதுத்துறை வங்கிகளுக்கு துணை நிற்கும். பொதுத்துறை வங்கிகளை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.  #PublicMoney #PiyushGoyal #Tamilnews 
    ஒடிசா மாநிலத்தில் இடி, மின்னல் தாக்குவதால் பலர் உயிரிழந்துவரும் நிலையில், மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை விடுக்கும் சென்சாரை நிறுவ அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. #odisha #lightningsensor
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருடத்துக்கு 419 பேர் இடி மின்னல் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய சிறப்பு நிவாரண ஆணையர் சேதி, மின்னல் தாக்கி கடந்த 3 நாட்களில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக மின்னலை முன்கூட்டியே அறியும் சென்சாரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மின்னல் தாக்கத்தை அரை மணி நேரத்துக்கு முன்பாகவே நம்மால் அறிந்துகொள்ள முடியும் என்றும், மின்னல் தாக்குதல் குறித்த தகவலை ஊடகங்கள் வழியே மக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள எச்சரிக்கை விடுக்க முடியும் எனவும் சிறப்பு நிவாரண ஆணையர் சேதி கூறியுள்ளார்.

    மாநிலத்தின் உயரமான பகுதிகளிலும், கட்டிடங்களிலும் இந்த மின்னலை கண்டறியும் சென்சாரை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #odisha #lightningsensor
    குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவின் காலாண்டு கூட்டம் மற்றும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அரசாணை எண்.31-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்தல் மற்றும் இவ்வகை விடுதிகளை உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்தல், விடுதிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய மாவட்டத்திலுள்ள பல்வேறு வகை துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சைல்டு லைன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

    குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் வளர் இளம் பருவத்திலுள்ள மாணவ-மாணவிகள் இடையே தற்கொலை எண்ணத்தை தடுத்து நிறுத்தவும், வட்டார மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கவும், குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை நலக்குழு, சைல்டு லைன் மற்றும் கல்வித்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முதன்மை நீதிபதி (இளைஞர் நீதிக்குழுமம்) அசோக்பிரசாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) பாரதிதாசன், மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுன்னிசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பூங்கொடி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அருள்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக கவர்னர் கிரண்பேடி தனது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். #governorkiranbedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு இன்று 69-வது பிறந்த நாளாகும். இதனையொட்டி ராஜ் நிவாஸ் வளாகத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்று வழிபட்டார்.

    தொடர்ந்து ராஜ்நிவாஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கிரண்பேடி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் பலரும் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தனக்கு வாழ்த்து சொல்ல வந்த சிறுவனை கவர்னர் கிரண்பேடி தனது இருக்கையில் அமர வைத்து உற்சாகப்படுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிறந்த நாள் என்பது நம்மை ஈன்றெடுத்த அன்னையை நினைவு கூரும் தினமாகும். நமக்கு பிறந்த நாள் என்பதை விட அன்னைக்கு மறுபிறவி என்பதே சரி. புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #governorkiranbedi

    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு பலத்த வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
    நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதை போல், எல்லா பிரச்சினைகளுக்கும் இரு பக்கங்கள் உள்ளன.

    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு பலத்த வரவேற்பு இருப்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம் குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் சிலரும், பெற்றோர்களில் ஒரு தரப்பினரும் இந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கள் எதிர்ப்புக்கு அவர்கள் சில நியாயமான காரணங்களை முன்வைக்கிறார்கள்.

    இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பெற்றோர்களில் சிலர், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அந்த துயரத்தில் இருந்து மீண்டு எழுந்து எதிர்கால வாழ்க்கை போராட்டத்தை சமாளிக்கும் வகையில் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்றனர்.

    குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்தால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாள் என்ற அச்சத்தில், குற்றவாளி அந்த சிறுமியை கொன்று விடும் ஆபத்து உள்ளது என்று கருத்தரங்கில் பேசிய ஒரு பெண் தெரிவித்தார்.

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் தந்தை வேதனையுடன் சில கருத்துகளை தெரிவித்தார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் தனது 3½ வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அது குறித்து புகார் கொடுக்க போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது அங்கு போலீசார், தனது மகளிடம் நடந்த சம்பவம் பற்றி துருவித்துருவி கேட்டதும், அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திணறியதும் தனக்கு மிகவும் கசப்பான அனுபவமாக அமைந்ததாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

    இன்னொரு பெண் பேசுகையில், தனது மகளை தனது கணவரே பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கண்ணீர் மல்க கூறினார். என் கணவரை போன்ற குற்றவாளிகளை தூக்கில் போட்டுவிட்டால், அவர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பியவர்கள் ஆகிவிடுவார்கள் என்றும், மேலும் அவர்களுடைய குடும்பமும் வருமானம் இன்றி ஆனாதையாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

    பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் தலைவர் அனுஜா குப்தா பேசுகையில், பாலியல் வன்முறை தொடர்பான 94 சதவீத வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும், எனவே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்ற நிலை வந்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பில் போலீசில் புகார் செய்வது குறைந்துவிடும் என்றும் கூறினார்.
    விசாரணை முடியும் வரை பரத்ராஜாவின் உடலை தற்போதைய நிலையிலேயே பாதுகாப்பாக வைக்க கோர்ட்டு உத்தரவுப்படி பரத்ராஜா உடலை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    நெல்லை:

    தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பரத் என்ற பரத்ராஜா (வயது 34). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 17-ந்தேதி பரத்ராஜா, தனது சகோதரர் திருமணத்துக்காக பரோலில் வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி தூத்துக்குடி கலவரம் தொடர்பாக, வீடு வீடாக சோதனை செய்த போலீசார் பரத்ராஜா வீட்டிலும் சோதனை செய்து அவரை கைது செய்தனர். அப்போது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் வைத்து பரத்ராஜாவை போலீசார் அடித்ததாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து பரத் ராஜாவை தூத்துக்குடி கலவர வழக்கிலும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி பரத்ராஜாவின் பரோல் முடிந்ததால் அவரை மீண்டும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கடந்த 30-ந்தேதி பரத் ராஜா பாளை சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் அவரது உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அங்கு பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவரது உறவினர்கள், பரத்ராஜா போலீசார் தாக்கியதால் பலியாகி விட்டார் என்றும், அதனால் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதுபோல இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அவரது உடலை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். கடந்த 7 நாட்களாக அவரது உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது.

    இந்த நிலையில் அவரது சகோதரர் செல்வசவுந்தர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தனது சகோதரர் பரத்ராஜா மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது உடலில் பலத்த காயங்கள் உள்ளது. எனவே தடய அறிவியல் துறை பேராசிரியர்கள் தலைமையில் மறு பிரேத பரிசோதனை நடத்தி கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதை விசாரித்த நீதிபதிகள், “விசாரணை முடியும் வரை பரத்ராஜாவின் உடலை தற்போதைய நிலையிலேயே பாதுகாப்பாக வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி பரத்ராஜா உடலை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ள குளிர்பதன பெட்டியில் பரத்ராஜாவின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செல்வசவுந்தர் நேற்று தூத்துக்குடியில் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அதில், “தனது சகோதரர் பரத்ராஜா பரோலில் வந்துள்ளார் என்பதையே போலீசார் ஏற்க மறுத்து அவரை கைது செய்து, சரமாரியாக அடித்து உதைத்து, நடக்க முடியாத நிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உத்தரவிட்டும் போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் பாளை சிறையில் அடைத்து விட்டனர். எனவே பரத்ராஜாவின் மரணத்துக்கு தூத்துக்குடி தென்பாகம் போலீசாரும், பாளை சிறை காவலர்களுமே காரணம் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
    திண்டுக்கல் ரெயில் நிலையம் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
    முருகபவனம்:

    திண்டுக்கல் ரெயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த பகுதியில் சேலம் வழியாக சென்னைக்கும், திருச்சி வழியாக சென்னைக்கும் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் செல்லலாம். எனவே தான் சுமார் 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது.

    இந்த வழியாக சுற்றுலா தலம், ஆன்மீக தலத்துக்கும் செல்லலாம் என்பதால் ஏராளமான மக்கள் வருகின்றனர். ஆனால் பயணிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இங்கு இல்லை. ரெயில் நிலைய முகப்பில் சாமியார்கள் போர்வையில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் உலா வருகின்றனர்.

    அதோடு பிக்பாக்கெட் கொள்ளையர்களும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். பயணிகளுக்கு உரிய அத்தியாவசிய எந்த அடிப்படை வசதியும் கிடையாது. மினரல் வாட்டர் என கூறப்படும் எந்திரம் உள்ளது. ஆனால் தண்ணீர் வராது.

    இது போன்ற ஏராளமான குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். பயணிகளுக்கு உரிய வாகன காப்பகம் டெண்டர் விடாமல் முடங்கி கிடக்கிறது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் பல்வேறு சமயங்களில் திருடு போய் விடுகிறது.

    இது தவிர அனுமதியின்றி ஏராளமான வேன் மற்றும் கார்கள் நாள் கணக்கில் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் எச்சில் ஒழுகிக் கொண்டே நாய்கள் சுதந்திரமாக ஓடுகிறது. ஆடு மாடுகளும் ரெயில்வே தண்டவாளங்களை கடக்கின்றன.

    குட்ஷெட் பகுதியில் பல சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் இந்த வி‌ஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.#tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டித்து குமரி மாவட்டத்தில் மேலும் 3 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    பாதுகாப்பு கருதி கிராமப்புறங்களில் இரவில் தங்கும் அனைத்து அரசு பஸ்களையும் டெப்போக்களுக்கு கொண்டு வர நேற்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி அனைத்து பஸ்களும் டெப்போக்களுக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

    இந்தநிலையில் நேற்று இரவு 3 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து பள்ளம் நோக்கிச் சென்ற அரசு பஸ் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் பஸ்சின் மீது கல்வீசி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

    இதேபோல கேசவன் புதூரில் இருந்து நாகர்கோவில் வந்த மற்றொரு அரசு பஸ் வட்டக்கரை பாலம் என்ற இடத்தில் வந்தபோது கல்வீசி தாக்கப்பட்டது. இறச்சக்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் புறப்பட்ட சிறிது தொலைவிலேயே மர்ம நபர்களால் கல்வீசி உடைக்கப்பட்டது.

    ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு கரியமாணிக்கபுரம் பகுதியில் 2 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனையும் சேர்த்து கல்வீசி உடைக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பஸ்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஸ்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதால் குமரி மாவட்டத்தில் இன்று பஸ் போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு பஸ்கள் டெப்போக்களில் இருந்து புறப்பட்டு பஸ்நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு இயக்கப்படும். ஆனால் இன்று காலை 6 மணிக்கு தான் டெப்போக்களில் இருந்து பஸ்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. மேலும் 4,5 பஸ்களாக சேர்த்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.

    நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், கூடங்குளம், உவரி வழியாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று 3-வது நாளாக இயக்கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 டெப்போக்களில் இருந்து 805 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 750 பஸ்கள் இயக்கப்பட்டன.

    குமரி மாவட்டத்துக்கு வரும் கேரள அரசு பஸ்கள் இன்று எல்லையில் உள்ள களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. தமிழக பஸ்கள் வழக்கம்போல் திருவனந்தபுரத்துக்கு சென்று வந்தன.
    சென்னிமலையில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மணி (வயது 24). இவர் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

    மணியின் குடும்பத்தினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கரூர் அருகே பெரியாயிபாளையம் பகுதியில் வசித்து வந்தனர். அப்போது இவர்கள் குடியிருந்த வீடு அருகில் ஆனந்த் என்பவரின் குடும்பமும் வசித்து வந்தது.

    ஆனந்தின் மகள் சவீதா (19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மணியின் குடும்பம் கரூரில் இருந்தபோது மணிக்கும் சவீதாவுக்கும் காதல் ஏற்பட்டது.

    தற்போது மணியின் குடும்பம் சென்னிமலை பகுதிக்கு குடி வந்த பிறகும் மணிக்கும் சவீதாவுக்கும் காதல் நீடித்தது. இவர்களது காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனவே மணியும், சவீதாவும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் சென்னிமலை மலை அடி வாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

    சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருவரின் பெற்றோர்களையும் வர வழைத்து சமாதானம் செய்து காதல் ஜோடியை மணியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    ×