search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்"

    புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி எல்.என்.புரம் பாரதி நகரில் ஒரு சரக்கு வாகனம் வெகுநேரமாக நிற்பதாகவும், அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருப்பதாகவும் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேர் இறங்கி, தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கபிலன்(வயது 32) என்பதும், தப்பி ஓடியவர் மடுகரையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் குமார்(23) என்பதும் தெரியவந்தது.

    பின்னர் அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய 500 மதுபாட்டில்கள் மற்றும் 60 லிட்டர் சாராயம் இருந்தது. இது தொடர்பாக கபிலனிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கபிலனை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள், சாராயம், இவற்றை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய குமாரை போலீசார் தேடி வருகின்றனர். 
    பாகூரில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பாகூரில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுப் பாட்டில்களை கடத்துவதை தடுக்க பாகூர் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அது போல் சோரியாங் குப்பம் பகுதியில் ரோந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் 4 அட்டை பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.

    இதையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அட்டை பெட்டிகளை திறந்து சோதனையிட்டனர். அப்போது 4 அட்டை பெட்டிகளிலும் 242 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் கேப்பர் மலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 42) என்பதும், இவர் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இதுபோல் பாகூர் போலீசார் ஆராய்ச்சிகுப்பம் பகுதியில் ரோந்து சென்ற போது ஒருவர் கையில் கட்டை பையுடன் சென்றார். அவரிடம் இருந்த கட்டை பையை வாங்கி பார்த்தனர். அதில், 52 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழ்பரிக்கல்பட்டை சேர்ந்த உதயகுமார் (வயது 32) என்றும், இவர் அதிக விலைக்கு விற்க மதுபாட்டில்களை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. உதயகுமாரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது பாட்டில் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று மாலையில் தம்புநாயக்கன் வீதியில் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் ஒரு வாலிபர் 2 கட்டை பைகளை கீழே போட்டு விட்டு ஓடினார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைகளை திறந்து பார்த்தபோது அதில் 50 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இன்று காலை பெரியகடை போலீசார் நீடராஜப்பர் வீதி- பாரதி வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து பையை திறந்து பார்த்தனர். அதில், 43 மது பாட்டில்கள் இருந்தன. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திண்டிவனம் அருகே உள்ள ஆலகிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 45) என்றும், இவர் புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் தேவராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    புதுச்சேரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மதுபாட்டில் கடத்தியதாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக ரோந்து செல்லுமாறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபத்திரசாமி, தமிழரசன் மற்றும் போலீசார் மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது தேங்காய்திட்டு பகுதியில் இருந்து 2 பேர் 2 ஸ்கூட்டியில் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்த போது ஸ்கூட்டியில் இருந்த பைநிறைய மதுபாட்டில்கள் இருந்தது.

    மேலும் சீட்டுகளின் உள்பகுதியிலும் மது பாட்டில்கள் மறைத்து வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த தியாகு (வயது 30) டாட்டா ஏசி டிரைவர் என்பதும், மற்றொருவர் பாலு (35) தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

    அவர்கள் இருவரும் புதுவையில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை வாங்கி மரக்காணத்தை அடுத்த கூனிமேடுக்கு கடத்த பாலுவின் வீட்டில் வைத்துள்ளனர்.

    பகல் நேரங்களில் மது கடத்தினால் போலீசாரிடம் மாட்டிவிடுவோமோ? என்று நினைத்து அதிகாலையில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து 800 மதுபாட்டில்களும், அவர்கள் ஓட்டி வந்த 2 ஸ்கூட்டியையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் அவர்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    புதுவைலிங்காரெட்டி பாளையத்தில் காட்டேரிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த ஒரு பையை சோதனையிட்ட போது அதில், 37 லிட்டர் பாக்கெட் சாராயத்தை தமிழக பகுதிக்கு கடத்தி செல்ல இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாராயம் கடத்திய சந்தைக்புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அருண் (23), மூர்த்தி (24) ஆகியோரை கைது செய்தனர்.

    இதேபோல் பாண்கோஸ் பள்ளி அருகே நடத்திய சோதனையிலும் 48 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் அதை கடத்தி வந்தவர் பேராவூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் சுரேசை கைது செய்தனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், மது பாட்டில்களை போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். #tamilnews

    சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், மது மற்றும் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைசாவடி அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி வந்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துபிள்ளை மனைவி ராஜம் (வயது 45), அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சத்யா (31) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், வெளிப்பாளையம், தெற்கு நல்லியான்தோட்டம், செல்லூர், கீழ்வேளூர், மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயிரத்து 925 லிட்டர் சாராயமும், 481 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
    வந்தவாசி டாஸ்மாக் கடையில் விற்பனை அமோகமாக நடைபெற மது பாட்டில்களுக்கு விசே‌ஷ பூஜை செய்து வழிபாடு நடத்தினர். #Tasmac #TasmacShop
    வந்தவாசி:

    வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகே கோட்டை அகழி பகுதியில் நேற்று முன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கு 3 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    புதிதாக திறக்கப்பட்ட இந்த கடைக்கு எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது. வியாபாரமும் அமோகமாக நடைபெற வேண்டும் என்று வேண்டி டாஸ்மாக் கடை ஊழியர்கள் 3 பேரும் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    அவர்கள் படையலில் குவாட்டர் பாட்டில், தேங்காய், கற்பூரம், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து விசே‌ஷ பூஜை செய்து வழிபட்டனர்.

    அப்போது குவாட்டர் பிராந்தி பாட்டிலை சிறிதளவு பூமியில் ஊற்றிவிட்டு கடைக்கு வந்த குடிமகன் ஒருவருக்கு இலவசமாக வழங்கினர்.

    வந்தவாசி நகரில் ஆரணி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அச்சரபாக்கம் சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறந்தபோது, பொதுமக்கள் கடையை திறக்க விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் கடை மூடப்பட்டது.

    மதுக்கடையால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் புதிதாக திறந்த இந்த கடைக்கு எந்தவித பிரச்னையும் வரக்கூடாது. விற்பனை அமோகமாக இருக்க வேண்டும் என்று ஊழியர்கள் மதுபாட்டில்களுக்கு விஷேக பூஜை செய்தனர்.

    டாஸ்மாக் ஊழியர்களின் இந்த செயலை குடிமகன்களும், ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். #Tasmac #TasmacShop

    நாகை அருகே மதுபாட்டில்களை கடத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு பயன்படுத்திய கார் மற்றும் 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுவிற்பனையை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாகை மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திட்டச்சேரி போலீஸ் சரகம் அண்ணா மண்டபம் அருகே தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதில் அருண்மொழித்தேவன் மெயின்ரோட்டை சேர்ந்த காளிமுத்து மகன் வடிவேல் (வயது 35), அவரது மனைவி சித்ரா (34) ஆகியோர் புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய வடிவேல், சித்ரா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார் மற்றும் 576 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கரூர் அருகே காரில் கடத்தப்பட்ட 118 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.
    கரூர்:

    கரூர் காந்திகிராமத்தில் கரூர்- திருச்சி மெயின்ரோட்டில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் இந்துராணி தலைமையிலான போலீசார் கடந்த 17-ந் தேதி மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு காரினை வழிமறித்து போலீசார் சோதனை செய்த போது, அதில் மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தபோது அவர், தாந்தோன்றிமலை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பழனிவேல் என்கிற அசோக்(வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் அவர், கரூரில் பதுக்கி வைத்து விற்பதற்காக புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர். அவரிடமிருந்து கார், 118 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2,880 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டிரைவரை கைது செய்துள்ளனர்.
    சீர்காழி:

    காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், சிவக்குமார், ஸ்டாலின் மற்றும் போலீசார் சீர்காழி அருகே சூரக்காடு முக்கூட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 60 அட்டை பெட்டிகளில் 2,880 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார், கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர், காரைக்கால் மாவட்டம் ராயல்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகன் சந்தோஷ் (வயது 28) என்பதும், காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை சீர்காழி அருகே உள்ள புத்தூருக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சந்தோசை கைது செய்தனர். மேலும் போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    காரைக்காலில் இருந்து வேன்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூரை சேர்ந்த 3 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். #AlcoholSmuggling
    நாகூர்:

    காரைக்காலில் இருந்து வேன்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூரை சேர்ந்த 3 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுரையின்படியும், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு தங்கராசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாஞ்சூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 சுற்றுலா வேன்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் 3 வேன்களிலும் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேன் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் பெரியார் காலனி பிச்சைகனி மகன் சுபேர்சேட் (வயது31), திருப்பூர் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த ஜான் மகன் இமானுவேல் (38), திருப்பூர் கூணம்பாடி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் ஜெயசீலன் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர்கள் சுபேர்சேட், இமானுவேல், ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், 3 வேன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே தொண்டமான்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. திருவெறும்பூர், காட்டூர் பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய விற்பனையாளர்கள் சிலர் இந்த கடைக்கு மாற்றப்பட்டனர். அதன்படி தொண்டமான்பட்டி கடையில் 5 பேர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கடையின் ஷட்டரை பூட்டி விட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை டாஸ்மாக் கடை வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் அதன் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த டாஸ்மாக் கடைக்கு சென்று கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை வரவழைத்து உள்ளே சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட மதுபாட்டில்களில் சிலவற்றை அங்குள்ள வயல்வெளியில் வைத்து குடித்து விட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றிருப்பதும், மீதி பாட்டில்களை தூக்கி சென்றதும் தெரிய வந்தது. சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையில் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில், திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு ஏழுமலை மற்றும் போலீசார் கோட்டக்குப்பம் வாகன சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் மடக்கி சோதனை செய்த னர். அந்த காரில் 19 பெட்டிகளில் மதுபான பாட்டில்கள் மற்றும் 2 பெட்டிகளில் டின் பீர்கள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் காரையும், மதுபாட்டில்கள் மற்றும் டின் பீர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான புதுச்சேரி அரியாங்குப்பம் மேரி தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 35) மற்றும் அவருடன் வந்த சிறுவாடி நகர் தெருவை சேர்ந்த தங்கராசு (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இதில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரமும், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட காரின் மதிப்பு ரூ.10 லட்சமும் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். 
    ×