search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 119759"

    அரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓலையூர் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மகன் அருள் பாண்டியன் (வயது 25). பட்டதாரியான இவர் 2 கால்களும் செயலிழந்தவர்.

    ராமலிங்கம் 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். தந்தை பெயரில் உள்ள வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா, சிட்டா ஆகியவற்றை தனது பெயருக்கு மாற்ற அருள் பாண்டியன் அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் விண்ணப்பித்தார்.

    இந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அருள்பாண்டியனை, வி.ஏ.ஓ. சுமதி சில நாட்கள் அலைக்கழித்து வந்துள்ளார். இது பற்றி கேட்டபோது ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா, சிட்டா மாற்றி தருவேன் என்று கூறியுள்ளார். இதற்கு அருள்பாண்டியன் அவ்வளவு பணம் என்னால் தரமுடியாது என்று கூறிய போது, ரூ.1000 தர வேண்டும் என்று சுமதி கேட்டுள்ளார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அருள் பாண்டியன், இது பற்றி அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சுமதியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அருள் பாண்டியனிடம் ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

    அவர் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சுமதியிடம் பணத்தை கொடுத்தார். அதனை பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமதியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுமதி அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    விருதுநகரில் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #VirudhunagarCollector
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு அதில் உதவி உபகரணங்கள் கோரிய 4 மனுக்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

    பிறதுறை தொடர்புடைய மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.415 மதிப்பிலான ஊன்று கோல்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 240 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 910 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 1 பயனாளிக்கு ரூ.1050 மதிப்பிலான ப்ரெய்லி கைக்கடிகாரம் மற்றும் ரூ.135 மதிப்பிலான கருப்புக்கண்ணாடியையும் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 315 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதய குமார், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், தனித்துணை ஆட்சியர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். #VirudhunagarCollector
    மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 359 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ராமன் வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. முகாமை கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி வைத்து, தொடங்கி வைத்தார். முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகள் 1,065 பேர் தேர்வு செய்யப்பட்டு, 359 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ராமன் வழங்கினார். 32 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது

    அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருவள்ளூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும், வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலெக்டருக்கு அளிக்கப்படும் தன்விருப்ப நிதியினை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் பெறுவதற்காக பயன்படுத்தி வருகிறோம். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலை வாய்ப்பு வழங்கக்கோரி அதிகளவில் மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மென்மேலும் முன்னேறி வெற்றிகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து ‘பைக் டாக்ஸி’ திட்டத்தில் முன்பதிவு செய்து மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்திட ‘மா உலா’ என்ற செல்போன் செயலியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். இத்திட்டம் வேலூர் மாநகரில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதில் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனர் பாஷித், தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ஊட்டியில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஊட்டி ஜெ.எஸ்.எஸ். கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் ரூ.9 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், சக்கர நாற்காலி, தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    கடந்த 1989-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைக்கப்பட்டு, மூன்று அதிகாரிகளை கொண்டு 10 திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 1995-ம் ஆண்டு சமூக நலத்துறையில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிந்து, 1996-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனித்துறையாக இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு அலுவலகம் திறக்கப்பட்டு, அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    2016-ம் ஆண்டு 44 திட்டங்கள் வகுக்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 816 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளதுடன், அவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று வருகின்றனர். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம், குடும்ப நல ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பெட்டிக்கடை வைக்க மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகையை கேட்டு வருகின்றனர்.

    விண்ணப்பித்த அனைவருக்கும் பெட்டிக்கடை வைக்க இடம் ஒதுக்க இயலாததால், மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து பதிவு செய்து தொழில் தொடங்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவிகளை செய்து வருகிறது. கிராமப்பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பதிவு செய்து அரசின் சலுகைகளை பெற கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரவிக்குமார், சமூக நலத் துறை அதிகாரி புஷ்பலதா, கல்லூரி முதல்வர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் தின விழா ஊட்டி காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
    சிவகங்கையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதனை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உடலியக்க குறைபாடு உடையவர்கள், காது கேளாதவர்கள், பார்வையற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகிய பிரிவுகளில் 21 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதன் மூலம் அவர்களின் மனநிலை பக்குவப்படுவதுடன், தேசிய அளவில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு கலந்து கொண்டு வெற்றி பெற, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் உதவியாக இருக்கும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை மறந்து திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.

    தற்போதைய போட்டிகளில் மாவட்டத்தில் 15 சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்று வருவோர், இதர பள்ளிகளில் பயில்பவர்கள், பொதுமக்கள் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகள் என 266 மாற்றுத்திறனாளிகளும், 75 சிறப்பு ஆசிரியப் பணியாளர்களும் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் இது போன்ற போட்டிகளில் அதிக அளவில் கலந்து கொண்டு, தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்பு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏந்தி வந்த ஒலிம்பிக் ஜோதியை கலெக்டர் ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி இறந்தார்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள தெற்கு பால்பண்ணைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மகன் ராஜவேல் (வயது39). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு வேம்பு (30) என்ற மனைவியும், அனுஸ்கா (7) என்ற மகளும் உள்ளனர்.

    ராஜவேல் பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜவேல் கழிவறைக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வேம்பு, கழிவறை அருகே சென்று பார்த்தபோது ராஜவேல், அங்கு உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது தெரியவந்தது. இதனால் பதறி போன வேம்பு மற்றும் உறவினர்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி ராஜவேலை மீட்டனர். அப்போது கிணற்று நீரில் மூழ்கி ராஜவேல் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நாளை தொடங்குகிறது.
    பெரம்பலூர்:

    அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் பெரம்பலூர் ஒன்றியத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் வருகிற 11-ந்தேதி பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்தில் வருகிற 12-ந்தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இந்த மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்களாக எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து தேர்வு செய்ய உள்ளனர்.

    எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஊனம் தெரியும்படியான பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 ஆகியவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவிற்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. #AsianParaGames #ThangvelluMariyappan
    ஜகர்தா:

    மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 193 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், நிர்வாகிகள், மருத்துவர்கள் என்று 112 பேரும் உடன் செல்கிறார்கள்.



    தொடக்க விழாவிற்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த மாரியப்பன் 2016-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று வரலாறு படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, முதற்கட்டமாக ஜகர்தாவுக்கு சென்ற இந்திய குழுவினருக்கு ஆசிய போட்டிக்கான விளையாட்டு கிராமத்தில் நுழைய முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. சில மணி நேர தவிப்புக்கு பிறகே அவர்கள் உள்ளே செல்ல போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி வழங்கினர். விளையாட்டு கிராமத்தில் நமது வீரர், வீராங்கனைகள், நிர்வாகிகள் தங்குவதற்குரிய கட்டணம் மற்றும் போட்டி கட்டணம், பதிவு கட்டணம் என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் ஏறக்குறைய ரூ.1¾ கோடி செலுத்த வேண்டி உள்ளது. அந்த தொகையை செலுத்தாததாலேயே இந்த சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தொகையை இன்றுக்குள் செலுத்தாவிட்டால் மறுபடியும் இது போன்ற சிக்கல் ஏற்படலாம் என்று இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் குர்ஷரன் சிங் தெரிவித்தார்.  #AsianParaGames #ThangvelluMariyappan
    குறைதீர்க்கும் கூட்டத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 386 கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு 3 சக்கர சைக்கிள்களும், 6 பயனாளிகளுக்கு ஓய்வூதியதாரர் உத்தரவு ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    சென்னை ஐகோர்ட்டிற்கு வழக்கு சம்பந்தமாக வந்த மாற்று திறனாளி ஒருவர் கழிவறை பற்றாக்குறையால் பாட்டிலில் சிறுநீர் கழித்தார். #chennaihighcourt
    சென்னை:

    சென்னையை சேர்ந்தவர் விஜயகுமார். மாற்று திறனாளியான இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறார். சக்கர நாற்காலியில் செல்லும் விஜயகுமார் நேற்று வழக்கு சம்பந்தமாக கோர்ட்டிற்கு வந்திருந்தார்.

    முதல் தளத்தில் உள்ள கோர்ட்டில் நடந்த விசாரணையில் அவர் பங்கேற்ற போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டியதிருந்தது. உடனே அவர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். முதல் தளத்தில் கழிவறை இல்லாததால் அவர் பெரும் தவிப்புக்குள்ளானார்.

    இதையடுத்து அவர் முதல் தளத்திலேயே மறைவான இடத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் சிறுநீர் கழித்தார். கீழ் தளத்தில் உள்ள கழிவறைக்கு அவரால் செல்ல முடியாததால் பாட்டிலிலேயே சிறுநீர் கழிக்கும் அவலம் அவருக்கு ஏற்பட்டது.

    இதுகுறித்து விஜயகுமார் கூறும்போது, ஐகோர்ட்டில் உள்ள கழிவறையை மாற்று திறனாளியான என்னால் உபயோகப்படுத்த முடியவில்லை. இதனால் பாட்டிலில் சிறுநீர் கழிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. சக்கர நாற்காலியில் செல்லும் என்னை போன்ற மாற்று திறனாளிகளுக்கு ஐகோர்ட்டில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. கீழ் தளத்தில் தான் உள்ளது.

    இதனால் ஐகோர்ட்டின் மற்ற பகுதிகளிலும் மாற்று திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

    இதுகுறித்து மாற்று திறனாளிகள் உரிமைகள் சங்கத்தை சேர்ந்த சுமிதா சதாசிவம் கூறும்போது, நான் ஐகோர்ட்டில் ஒரு நாள் முழுவதும் இருந்த போது கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டேன். இதனால் வீட்டிற்கு சென்று கழிவறையை பயன்படுத்தி விட்டு மீண்டும் கோர்ட்டுக்கு வந்தேன் என்றார்.

    இதுபற்றி ஐகோர்ட்டு பதிவாளர் தேவநந்தன் கூறும் போது, பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தில் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. ஆனால் கட்டிடத்திற்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறோம். மாற்று திறனாளிகள் எந்த நுழைவு வாயிலிலும் சென்று வர வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் லிப்ட் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது என்றார். #chennaihighcourt
    குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெறத்தேவை இல்லை என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. #TNPSC
    சென்னை:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குரூப்-4 ல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் வருகிற 18-ந்தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த தெரிவுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்யவேண்டும் என குறிப்பிடப்படிருந்தது.

    தற்போது அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளிடம் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இல்லை எனில் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் அப்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழிக் கடிதத்தினையும் எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  #TNPSC
    தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளியின் கடையை உடைத்து மர்மநபர் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி லூசியாநகரில் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் அருகே அதேபகுதியை சேர்ந்த முருகன்(35) என்ற மாற்றுத்திறனாளி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரு கைகளும் கிடையாது.

    இரு கைகளும் இல்லாத நிலையில் முருகன் பெட்டிக்கடை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முருகன் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று காலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே பெட்டியில் கடன் நிலுவை தொகை கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இதுபற்றி சிப்காட் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முருகன் கடையில் பணம் வைத்திருப்பதை அறிந்தே மர்ம நபர் திட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளியின் கடையை உடைத்து மர்மநபர் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ×