search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 127535"

    • வருகிற 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    வேதாரண்யம்:

    உலக சுற்றுச்சூழல் தினம் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வருகிறது.

    இதனை யொட்டி நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அறிவுரையின்படி, முதற்கட்டமாக கோடியக்காட்டில் புயல் பாதுகாப்பு கட்டிட வளாகப்பகுதியில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமையில், கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் சுபா, வனவர்கள் சதீஷ்குமார், ராமதாஸ் மற்றும் வனத்துறை பணியாளர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

    தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் கூறுகையில்:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி விழிப்புணர்வு முகாமும், 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமும், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி கடற்கரை தூய்மை படுத்தும் பணியும், நிறைவாக 5-ந் தேதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill
    சென்னை:

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணெய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



    தடை செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அரசு கூறியிருந்தது.

    இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இதேபோல் பிளாஸ்டிக் தடையை மீறும் மளிகை கடைகள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill

    பரமத்தி வேலூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் நகர வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். பரமத்தி வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பரமத்தியில் உள்ள மாவட்ட உரிமையில் நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி மற்றும் பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி ஹசின்பானு ஆகியோர் கலந்துகொண்டு பேசியதாவது:- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள், கால்நடைகள், வனவிலங்குகள் என அனைத்து தரப்பும் பாதிப்புக்குள்ளாகிறது. அனைவருக்கும் சுற்றுசூழலை பாதுகாக்கும் கடமை உள்ளது. பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கிடைப்பதால் கண்ட இடங்களில் வீசுகின்றனர். அதனை கால்நடைகள் சாப்பிட்டவுடன் பிளாஸ்டிக் பொருட்கள் மூச்சுக்குழாயில் அடைத்து மூச்சுவிட முடியாமல் இறக்கின்றன. எனவே பிற்கால தலைமுறைகளுக்காக பிளாஸ்டிக்கை ஒழிக்க வர்த்தகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார், பரமத்தி அரசு வக்கீல் கேசவன், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், படைவீடு செயல் அலுவலர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் வக்கீல்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பாண்டமங்கலம் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதியுமான ஹசின்பானு, வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் பரமத்தி மற்றும் கபிலர்மலை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியன், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் கீதா நன்றி கூறினார்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த ஊராட்சி அமைப்புகளில் ஒப்படைக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பஸ் நிலையத்தில் கலெக்டர் வினய் அதிரடி சோதனை நடத்தினார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மற்றும் உற்பத்தி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து மக்காத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து அரசு உத்தர விட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்து சில மாதங்களுக்கு முன்பிருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சில கடை உரிமையாளர்கள் தாங்களாகவே பிளாஸ்டிக் பொருட்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாவட்டம் முழுவதும் இதன்மூலம் 100 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை கலெக்டர் வினய் பஸ் நிலையம், பூமார்க்கெட், பிரபல ஜவுளிகடைகளில் அதிரடி சோதனை நடத்தினார். பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றுப்பொருட்கள் பயன் படுத்த அறிவுறுத்தினார்.

    மேலும் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவுப்பு பலகை வைக்கவும் உத்தரவிட்டார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழை இலை விலை திடீரென விலை உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் கடைக்காரர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இலைகளில் கழிக்கப்படும் பகுதி கூட தற்போது ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சிறிது காலத்தில் இது பழக்க மாகிவிடும். மேலும் பொது மக்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் ஆய்வுக்கு சென்ற அதிகாரியுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனை வாங்குவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வருகின்றனர்.

    இவர்களுக்கு பூக்கள் பிளாஸ்டிக் பைகளிலேயே வழங்கப்பட்டு வந்தது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் இன்று அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர்.

    பிளாஸ்டிக் பைகளில் பூக்களை வாங்கிச்சென்ற வியாபாரிகளிடம் அதனை பறிமுதல் செய்தனர். இதனால் ஆவேசமடைந்த வியாபாரிகள் எங்கு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறதோ அங்கு பறிமுதல் செய்யாமல் எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பூமார்க்கெட்டில் இருந்த பல கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர். இதனால் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன்று ஒருநாள் அவகாசம் கொடுப்பதாகவும், நாளைமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுவத்துவது தெரியவந்தால் அதனை பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

    இந்த சம்பவத்தனால் பூ மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காலை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். #plasticmaterials #Koyambedumarket

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட் மானேஜிங் கமிட்டி முதன்மை நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    காய்கறி, பழம், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப் மற்றும் பொருட்கள் விற்பனைக்கு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அனைத்து கடைகளிலும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றனர். சுமார் ஒரு டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த அதிரடி சோதனையால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. #plasticmaterials #Koyambedumarket

    அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்யக்கூடாது என்று உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் கரூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்குமார், பொருளாளர் மோர்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பேசுகையில், தமிழக அரசு 2019 புத்தாண்டு முதல் 14 வகையான பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது. மேலும் அதனை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை வரவேற்கிறோம்.

    இருப்பினும் இந்த தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் 14 வகையான தடை செய்யப்பட்ட பொருட்களில் பிளாஸ்டிக் கப் குறித்த அறிவிப்பு இல்லை. ஆனால் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அனைத்து வகையான பிளாஸ்டிக்கையும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்கிறார்கள். இதனை செய்யக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் 14 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பெருமளவில் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது வங்கிக்கடனை முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

    தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

    தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. #PlasticBan
    சென்னை:

    தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் தடையை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரரத்னு, சந்தோஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



    பிளாஸ்டிக் டீ கப்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று கூட்டத்தில் திட்டவட்டமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. #PlasticBan
    பிளாஸ்டிக் பொருளுக்கு பதிலாக பயன்படுத்த 12 வகை மாற்று பொருட்களை கடைகளில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. #PlasticBan
    சென்னை:

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிகம் முழுவதும் நாளை (1-ந்தேதி) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    1-ந்தேதிக்கு பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்க சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறை அலுவலர், போலீஸ் அதிகாரிகள் இடம் பெறுகிறார்கள்.

    ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    பிளாஸ்டிக் சீட், உணவு இருந்தும் மேஜையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் தெர்மகோல் பிளேட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய், பிளாஸ்டிக் கேரி பைகள், பிளாஸ்டிக் ஜாடிகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பாலி புரொப்லின் பைகள், பிளாஸ்டிக் டீ கப், தெர்மகோல் கப், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவை தடை செய்யப்பட உள்ளன.

    அதற்கு பதிலாக பயன்படுத்த 12 வகை மாற்று பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. வாழை இலை, பனை பொருட்கள், கண்ணாடி டம்ளர்கள், பீங்கான் குவளைகள், மூங்கில் பொருட்கள், காகித பை, காகித குழல், துணி - சணல் பைகள், அலுமினிய பொருட்கள், மண்பாண்ட வகைகள், தாமரை இலை, உலோக டம்ளர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதை கடைகளில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தென்மண்டல பிளாஸ்டிக் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர ரத்னு கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்கை ஒழிக்க 6 மாத காலம் அவகாசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம். அதன் பிறகே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையை அமல்படுத்த உள்ளோம். இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தினோம். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் கால அவகாசம் கொடுக்கவில்லை.

    அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் முன்னுதாரணமாக இருந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தினார்கள்.

    தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பெரிய நகரங்கள், டவுன் பஞ்சாயத்துகள், மாவட்டங்களில் மக்கள் வந்து செல்லும் இடங்களான பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர்கள் மூலமும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

    மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய விரும்புபவர்களுக்கும், விற்பனை செய்ய விரும்புபவர்களுக்கும், இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்.

    தமிழகத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி வந்தால் சோதனைசாவடியில் நிறுத்தி பறிமுதல் செய்ய மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, பயன்படுத்தினாலோ கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக டாஸ்மாக் பார்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #Plasticban #Tasmacshop
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே ‘பார்’கள் இயங்கி வருகின்றன. அரசு அனுமதி பெற்ற பார்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத பார்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

    இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால், இனி இதை விற்பனை செய்ய முடியாது. கண்ணாடி டம்ளர், சில்வர் டம்ளர், தண்ணீர் பாட்டில்களைத் தான் பயன்படுத்த முடியும். இதனால், பார் உரிமையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில், சமீபத்தில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து எடுத்துக்கூறப்பட்டது. அப்போது, பார் உரிமையாளர்கள் தங்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் விற்பனையின் மூலமே ஓரளவு பணம் கிடைக்கும். அதை நிறுத்தினால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார்களில் நாளை (செவ்வாய்கிழமை) முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட இருக்கிறது.



    இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, “டாஸ்மாக் பார்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் மூலம் வாடிக்கையாளருக்கு தண்ணீர் பாட்டில், மது அருந்த கண்ணாடி டம்ளர் வழங்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். அடுத்த மாதம் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்பட இருக்கிறது. எங்களிடம் இருந்து அரசு வசூலிக்கும் பார் உரிமைத்தொகையை குறைக்க வேண்டும். பெட்டிக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள் பார்கள் போல் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  #Plasticban #Tasmacshop

    வேலூரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்த்து அதற்கான மாற்றுப் பொருள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் வேலூரில் இன்று நடந்தது. கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

    இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மனிதனின் வாழ்க்கையில் ஒன்றினைந்து விட்டது. இதற்கான காரணம் பெரும்பாலும் பொருட்களை கட்டுவதற்கு துணிகளை காட்டிலும் பேப்பரை காட்டிலும் பிளாஸ்டிக் வைத்து கட்டுவதற்கு மிகவும் எளிமையாகவும், சுலபமாகவும் உள்ளது.

    மிக முக்கியமாக சரக்கு போக்குவரத்திலும், துணிக்கடைகள், நொறுக்கு தீனிகள் போன்ற எல்லா கடைகளிலும் பொருட்களை கட்டுவதற்கு பிளாஸ்டிக், தெர்மாகோல் ஆகியவற்றின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதால் அதனுடைய தாக்கம் பூமியின் சூழ்நிலையை கெடுக்கிறது என்று அமெரிக்கா 1960-ம் ஆண்டு கண்டறிந்தது.

    மேலும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் கடலில் தான் கலக்கிறது என்பதையும் கண்டறிந்தன. மற்றொரு ஆச்சரியமான தகவல் என்ன வென்றால் 2002-ம் ஆண்டு பங்களாதேஷ் என்ற சிறிய நாடு தான் முதன் முதலில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது.

    இதற்கான காரணம் பங்களாதேஷ் நாட்டில் புயல் மற்றும் மழை வெள்ள காலத்தில் தண்ணீர் அடைப்பு ஏற்பட்டு வெளியேறாமல் தங்கிவிட்டதை ஆராய்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் தான் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகள் மற்றும் இந்தியா பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்து வருகிறது.

    தமிழகத்தில் கிராமங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பை உள்ளது. இதனை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வேலூரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் சுற்றுசூழல் பொறியாளர் ராஜகோபால், மாவட்ட பொறியாளர் ரதி, பன்னீர் செல்வம், நகராட்சிகளின் மண்டல கமி‌ஷனர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×