search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம்.
    • வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழர் தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.

    தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • ஜல்லிக்கட்டு தீர்ப்பை வரவேற்று கொண்டாடுவோம் என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி துணைத் தலைவர் கூறினார்.
    • தீர்ப்பை வரவேற்று கொண்டாடுவோம்.

    மதுரை

    தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந் தனர்.

    இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு எந்த வித தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி துணைத்தலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் கூறியதாவது:-

    பீட்டா போன்ற சில அமைப்புகள் தமிழர்களின் உணர்வுக்கு எதிராக தமிழரின் கலாசாரத்திற்கு எதிராக, நமது ஜல்லிக்கட்டு போட்டியை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வந்தன.

    இருந்தபோதிலும் தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து தமிழர்களின் கலாசாரத்தை பேணி காக்கின்ற வகையில் செயல்பட்டதின் காரணமாக வும், தமிழக அரசு சட்ட சபையில் ஜல்லிக்கட்டு க்கான தனி தீர்மானத்தைக் கொண்டு வந்து தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதாலும் தற்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருக்கின்ற தீர்ப்பு பீட்டா அமைப்பு களுக்கு கொடுக்கின்ற பதிலடியாக இருக்கும். எனவே இந்த தீர்ப்பை வரவேற்று உலகம் முழு வதும் இருக்கின்ற தமிழர்கள் கொண்டாடு வோம். இவ்வாறு அவர் கூறினார்

    • ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
    • ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 2312 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரத்து 923 மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த பிரச்சினைகள் வந்த போது அதற்கு தீர்வு கண்டவர் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி.

    இந்த வெற்றி தமிழர்களின் உணர்வுக்கும், பண்பாட்டு கலாச்சாரத்திற்கும் கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஸ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், சேர்மன் வீரராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    • 2014-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் கடந்து வந்த பாதை:-

    * 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    * 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜல்லிக்கட்டு நடத்த வரைமுறைகளை நிர்ணயிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் பல்வேறு நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    * 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேனகா காந்தி தொடர்ந்த வழக்கில், ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    * 2009-ம் ஆண்டில் அப்போதைய தமிழக அரசு அளித்த உறுதி மொழி மற்றும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒழுங்கு முறை சட்டத்தை ஏற்று, ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக அனுமதி வழங்கியது.

    * 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கூடுதல் நிபந்தனைகள் மற்றும் புதிய வரைமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    * 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விலங்குகளை மையமாக வைத்து நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    * 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வித்தை காட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை மாடும் சேர்க்கப்பட்டது. இது ஜல்லிக்கட்டுக்கான நேரடி தடையாக இல்லாத போதும், மறைமுக தடையாக அமைந்தது.

    * 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

    * 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. அதே மாதம் 2013-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    * 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை எனவும், போட்டிகளை அந்த அந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    * 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கக் கோரி விலங்குகள் நலவாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    * 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    * 2014-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    * 2015-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த தீர்ப்பை திரும்பப் பெறக் கோரிய தமிழக அரசின் மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    * 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபை ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அரசாணைக்கு பதிலாக மசோதாவை நிறைவேற்றியது. "விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் 2017" குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதில், "விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

    இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் காம்பாஷன் அன்லிமிடெட் பிளஸ் ஆக்ஷன் ஆகியவை மனு தாக்கல் செய்தது.

    * 2018-ம் ஆண்டில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஆர்.எப் நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2017 ஐ எதிர்த்த வழக்குகளை 5 பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கூறியது.

    * 2023 மே 18: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை இல்லை.

    • உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போட்டிகள் நடத்தப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
    • சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தபிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    அத்துடன் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. கர்நாடகாவில் நடத்தப்படும் கம்பாலா, மகாராஷ்டிராவில் நடத்தப்படும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவற்றுக்கு எதிரான மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த தீர்ப்பையடுத்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு அரசு சிறந்த வழக்கறிஞர்களை வைத்து சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க முடியாது என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
    • விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என பீட்டா தரப்பு வாதிட்டது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.

    விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற தீர்ப்பு தவறானது என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என பீட்டா தரப்பு வாதிட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது.

    இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

    ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மனிதர்களுக்கு சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை என நீதிபதி ஜோசப் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போட்டிகளை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தபிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    • கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது.
    • தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி :

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர சில மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.

    இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது.

    இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.

    • ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார்.
    • பீரோ, சைக்கிள், குக்கர், மின்விசிறி, நாற்காலிகள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி சங்கரன்பாறையில் உள்ள முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, தவசிமடை ,கொசவபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 காளைகள் போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்டன.

    அதனை கால்நடை மருத்துவக் குழுவினர் காளைகளை மருத்துவ பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் அரசு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 150 மாடுபிடி வீரர்கள் 5 சுற்றுகளாக களமிறங்கினர்.

    இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு திண்டுக்கல் ஆர். டி. ஓ.பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் ஊர்கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    அதில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, திமிறிய தோள்களை கொண்ட காளையர்கள் அடக்கினர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க மல்லுக்கட்டினர். அவர்களிடமிருந்து சில காளைகள் பிடிபடாமல் ஓடியது. ஒரு சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் நின்று எகிறியது. பார்வையாளர்கள் கோஷமிட்டு மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார். ஜல்லிக்கட்டு போட்டியில் 10பேர் காயமடைந்துள்ளனர்.

    அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார். பீரோ, சைக்கிள், குக்கர், மின்விசிறி, நாற்காலிகள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி ஆகியோர் மேற்பார்வையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த வருடம் நடைபெறும் கடைசி ஜல்லிக்கட்டு இது என்பதால் ஏராளமான ஜல்லிக்கட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • மாடுபிடி வீரர்கள் 100 பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.
    • ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாபட்டியில் காளியம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி, அங்குள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதனை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன்பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, கோபால்பட்டி, கொசவபட்டி தவசிமடை நத்தமாடிப்பட்டி, சொரிப்பாறைப்பட்டி, அலங்காநல்லூர் பாலமேடு ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 300 காளைகள் ஜல்லிக்கட்டில் களம் இறங்கின. மாடுபிடி வீரர்கள் 100 பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. துள்ளிக்குதித்த காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். வீரர்களிடம் சிக்காமல் சில காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. பல காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு மடக்கி பிடித்து அடக்கினர்.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், நாற்காலி, சைக்கிள், பீரோ, எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங் கள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியை திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங் களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார், நத்தம் தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யாபட்டி கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • பொதுமக்கள் நாளை கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே ஆக வேண்டும் என கூறினர்.
    • சாலை மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும். அதன்படி நாளை (12-ந்தேதி) ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன. வாடிவாசல் அமைத்தல், பார்வையாளர்களுக்கான கேலரி உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்.டி.ஓ பார்வையிட இன்று வருகை தந்தார்.

    அப்போது வாடிவாசல் பகுதி ஈரமாக இருப்பதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளது எனக்கூறி அடுத்தவாரம் நடத்திக்கொள்ளலாம் எனக்கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் எதற்காக அனுமதி தர மறுக்கிறீர்கள் என கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியல் செய்தனர்.

    இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாசில்தார் சுகந்தி மற்றும் நத்தம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் நாளை கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே ஆக வேண்டும் என கூறினர். இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
    • காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. சிவகங்கை , திருப்பத்தூர், பொன்னமராவதி, கீழச்சிவல்பட்டி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 208 காளைகளும், 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

    போட்டியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். இந்த போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    இதில் காளைகள் வீரர்களை தூக்கி வீசியது. காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை 24 அரை கிராமமக்கள் செய்திருந்தனர். கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • இலுப்பூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக இந்த போட்டியினை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர். சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த போட்டியில் 850 காளைகளும், 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு கொண்டுள்ளனர்.திருச்சி, மதுரை, அரியலுர், தேனி, பெரம்பலூர், மணப்பாறை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 850 காளைகள் கலந்து பங்கேற்றுள்ளது. காளைகளுக்கும், காளையர்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் சார்பில் அண்டா, சைக்கிள், தங்க நாணயம், உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.அது மட்டுமல்லாமல் விழா குழு சார்பில் கட்டில், பேன், ஹாட்பாக்ஸ் , டைனிங் டேபிள், கிப்ட் பேக் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து பார்த்து ரசித்தனர்.

    ×