search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள்"

    சேதுபாவாசத்திரம் அருகே சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தி.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற உறவினர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் சங்கர் (வயது 45). தி.மு.க. பிரமுகர். பள்ளத்தூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இவருக்கும், அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மையின் கணவர் அன்பரசு ஆகியோருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக பட்டுக்கோட்டை கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று ஆஜரானார். பின்னர் அங்கு விசாரணை முடிந்ததும் ஆண்டிக்காடு புறப்பட்டார். அவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் சென்ற போது அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம கார் வந்தது. அந்த கார் திடீரென கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நின்றது. இதைத்தொடர்ந்து காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல் கோபால் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சேதுபாவாசத்திரம் போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட கோபால் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கோபால் சங்கரை அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மை கணவர் அன்பரசு ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட உஷாராணி மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலையுண்ட கோபால் சங்கருக்கு ஜான்தேவி (32) என்ற மனைவியும், நிவேதா (8) ஹரிணி (3) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    முன்னாள் தி.மு.க. கவுன் சிலரை சொந்த அக்காள் கணவர் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அறந்தாங்கி அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை உறவினர் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குருந்திரக்கோட்டை  பகுதியை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவருக்கும் ஊட்டியை சேர்ந்த கங்காதரன் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கங்காதரன் இறந்து விட்டார். இதையடுத்து தனது மகளுடன் சொந்த ஊரான குருந்திரக்கோட்டை கிராமத்திற்கு வந்த ஜோதிலட்சுமி அங்கு தனது தந்தையுடன் வசித்து வந்தார். ஜோதிலட்சுமியின் மகள் ராஜேந்திரபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே ஜோதிலட்சுமியின் கணவர் வழி உறவினரான ரமணி என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி காலை தாயிடம் கூறிவிட்டு பள்ளிக்கு சென்ற ஜோதிலட்சுமியின் மகள் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்ததும் எந்தவித தகவலும் இல்லை. பின்னர் பள்ளிக்கு சென்று விசாரித்ததில் அவரது உறவினர் ஒருவர் வந்து அழைத்து சென்றதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து ஜோதிலட்சுமி அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகளை கடத்தியதாக புகார் அளித்தார்.  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் ரமணிக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மகள் முறை கொண்ட அவர் எதற்காக  மாணவியை  கடத்தினார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் மரணம் அடைந்த சிவகிரி கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவி பட்டினத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில், கணேசன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கணேசனை ஜாமீனில் எடுக்க அவருடைய உறவினர்கள் முயற்சி செய்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் சிறையில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைதி சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என்று நெல்லை உதவி கலெக்டர் மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், இறந்த கைதி கணேசனின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் பாளை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து கணேசனின் உறவினர்கள், அவரது உடலை பெற்று சென்றனர். ஆனாலும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தக்கலையில் காதலனுடன் சுற்றி திரிந்த பிளஸ் 1 மாணவியை உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    தக்கலை:

    தக்கலை பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி நேற்று முன்தினம் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் தாயார் தக்கலை போலீஸ் நிலையத்தில் தன் மகள் காணாமல் போய் விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர். 

    இந்தநிலையில் நேற்று அந்த மாணவி, அவரது தாயாருக்கு செல்போனில் பேசினார். அப்போது தனது காதலனுடன் தான் சென்றதாக தெரிவித்தார். தாயார் தொடர்ந்து அவரிடம் கனிவாக பேசியதில் அவர் வீடு திரும்ப சம்மதித்தார். அதன்படி தக்கலை ஆஸ்பத்திரி அருகே வருவதாக மாணவி தெரிவித்தார். 

    உடனே மாணவியின் உறவினர்களும், போலீசாரும் அங்கு காத்திருந்தனர். மாணவி தனது காதலருடன் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார். அவரை உறவினர்களும், போலீசாரும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மாணவியை அழைத்துச் சென்ற வாலிபர் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். 
    அவரும், மாணவியும் மைனர் என்பதால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 
    காதல் திருமணம் செய்து கொண்டு காரில் வரும் போது காரை வழி மறித்து காதலனை தாக்கி காதலியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தெசவிளக்கு பள்ளிக் கொண்டான்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 26). இவர் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி(20). இவர் வனவாசி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரபு வேலை செய்யும் பகுதி வழியாக தினமும் கல்லூரி பேருந்து செல்வது வழக்கம். கலைச்செல்வி கடந்த இரண்டு வருடங்களாக பிரபுவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரபுவின் செல்போன் என்னுக்கு கலைச்செல்வி யார் என கூறாமல் வாட்ஸ் ஆப் மூலம் தனது காதலை வளர்த்து வந்துள்ளார்.

    இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வி தனது காதலை வெளிப்படையாக கூற தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு வருமாறு பிரபுவை அழைத்தார். அவரும் அங்கு சென்று தனது காதலியை முதன் முதலாக பார்த்து, இருவரும் காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். நான் உங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும். நான் அதே பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறினார்.

    இதை தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்தனர். இவர்களின் காதல் கலைச் செல்வியின் வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து கலைச் செல்விக்கு திருமணம் செய்து வைக்க அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இது குறித்து கலைச்செல்வி காதலன் பிரபுவுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபுவிடம் கூறினார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். 

    இதை அறிந்த கலைச்செல்வியின் பெற்றோர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் செய்தனர். போலீசார் பிரபுவின் செல்போன் எண்ணுக்கு அழைத்து காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளனர்.

    இதையடுத்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள் கார் மூலம் தாரமங்கலம் காவல் நிலையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓமலூர் அருகே சிக்கம்பட்டி என்ற இடத்தில் கார் சென்ற போது மற்றொரு காரில் எதிர்திசையில் இருந்து வந்த கலைச்செல்வியின் உறவினர்கள் காரை வழி மறித்து காதலன் பிரபுவை தாக்கி விட்டு, காதலி கலைச்செல்வியை கடத்தி சென்றனர். இதில் காயமடைந்த பிரபு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    காதல் திருமணம் செய்து கொண்டு வரும் போது காரை வழி மறித்து காதலனை தாக்கி காதலியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் அகால மரணம் அடைந்தவரின் பிரேதத்துக்காக கேரளாவில் காத்திருந்த உறவினர்கள் விமானத்தில் வந்து சேர்ந்த வேறொருவரின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். #deadKeralaman #bodyofanotherperson
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிவந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நிதின் ஒத்தயோத் கோட்டரோன்(29) என்பவர் கடந்த 5-ம் தேதி அகால மரணம் அடைந்தார்.

    வளைகுடா நாடுகளின் வழக்கப்படி, பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பதப்படுத்தப்பட்ட நிதின் உடலை விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    நிதினின் உடலை பெற்றுகொள்ள சுமார் ஒருவாரம் காத்திருந்த உறவினர்கள், விமானத்தில் வந்துசேர்ந்த பிரேதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நேற்று நிதின் உடலை கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்றியனுப்பிய அதேவேளையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி கடந்த 7-ம் தேதி அங்கு மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த காமாட்சி கிருஷ்ணன்(39) என்பவரது உடலும் ஏர் எத்திஹாத் விமானம் மூலம் அபுதாபியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால், சென்னை வந்துசேர வேண்டிய கிருஷ்ணனின் பிரேதம் கேரளாவில் நிதினின் பிரேதத்துக்காக காத்திருந்த உறவினர்களுக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது.

    இருவரின் உடல்களையும் பதப்படுத்தும் மையத்தில் இந்த குளறுபடி நடந்திருப்பதாக கருதப்படும் நிலையில், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதாகவும் தேவையான உதவிகளை செய்வதாகவும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த காமாட்சி கிருஷ்ணனின் பிரேதம் தற்போது கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. #deadKeralaman #bodyofanotherperson
    அரியாங்குப்பம் அருகே குடும்ப தகராறில் பெண்ணை தாக்கி பொருட்களை சூறையாடிய கணவர்- உறவினர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே மணவெளி திருமால் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 45). இவரது மனைவி கலைவாணி. (41). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

    ராஜகோபால் ஷெட்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

    அது போல் சம்பவத்தன்று இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜகோபால் தனது உறவினர்களான செல்வி, நந்தினி, பிரியா ஆகியோருடன் சேர்ந்து கலைவாணியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடியதாக தெரிகிறது.

    இதுகுறித்து கலைவாணி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அது போல் ராஜகோபாலும் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் தன்னை கலைவாணி இரும்பு பைப்பாலும், கிரிக்கெட் மட்டையாலும் தாக்கியதாக தெரிவித்தார். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான‌ அந்தோணி செல்வராஜ் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.

    பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களில் சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், மாணவி ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 7 பேரின் உடல்கள் முதலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்நிலையில் அவர்களது உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவும், மற்ற 6 பேரின் உடல்களை மறு உத்தரவை வரும்வரை பிரேத பரிசோதனை செய்யாமல் பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பிரேத பரிசோதனை முடிந்த மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட 7 பேரின் உடல்களையும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் மற்றும் தூத்துக்குடி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

    நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோ எடுக்கப்பட்டது. பின்பு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மணிராஜ், கிளாட்சன், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித்குமார், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அந்த 6 பேரின் உடல்களையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து 6 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் அண்ணாமலை, கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் சங்கர், 2-வது நீதித்துறை நடுவர் தாவூத்தம்மாள், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வினோத் சவுத்ரி தலைமையில், தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து, சோமசுந்தரம், மும்மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்ததும் ஒவ்வொரு உடலாக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணி செல்வராஜ் உடலை தவிர மற்ற 5 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அவரது உறவினர்கள் வெளியூரில் இருந்ததால் அவர்கள் நேற்று வரவில்லை. இன்று (வியாழக்கிழமை) காலை அவர்கள் தூத்துக்குடி வந்த‌னர். இதையடுத்து அவர்களிடம் அந்தோணிசெல்வராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் தூத்துக்குடியில் கடந்த 15 நாட்களாக நிலவிய பதட்டம் தணிந்துள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் போலீஸ் எண்ணிகையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    ×