என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரோன்"
- யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகிறது.
- யானை ஊருக்குள் வராதவாறு, ஊரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி:
கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள பந்தலூா் இரும்புப்பாலம் மற்றும் இன்கோ நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடந்த சில நாட்களாக கட்டக்கொம்பன் என்ற யானை நடமாட்டம் இருந்து வருகிறது.
ஊருக்குள் புகுந்து வரும் யானையானது, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதோடு, விவசாயப் பயிா்களையும் சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டினாலும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகிறது. எனவே இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமிலிருந்து வசீம், விஜய், பொம்மன், சீனிவாஸ் ஆகிய 4 கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டன.
கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கட்டக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
யானை ஊருக்குள் வராதவாறு, ஊரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கட்டக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் டிரோனும் பயன்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று வனத்துறையினர் டிரோன் பறக்க விட்டு அதன் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கினர்.
டிரோன் மூலம் யானை வருகிறதா என்பதை கண்டறிந்து, அதனை ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானை எங்கு இருக்கிறது என்பதை அறிந்ததும் வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
- மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு வளையப்பட்டி சாலை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்ட விரோதமாக மணல் விற்பனை மேற்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி 2 கார்களில் வந்த அமலாக்கத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மணல் சேமிப்பு கிடங்கில் சோதனை நடத்தினர்.
ஆற்றில் இருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. எவ்வளவு மணல் விற்கப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
35 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் மணல் சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றில் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
மேலும் போலி ரசீது, போலி க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி மணல் விற்பனை செய்துள்ளதை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மணல் வழங்கப்பட்ட விபரம், ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வரப்பட்டது, தற்போது சேமிப்பு கிடங்கில் இருப்பு விபரம், எந்தெந்த வாகனங்களுக்கு மணல் விற்பனைக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை செய்தனர்.
அதேபோல் அரசு நிர்ணயித்த 3 யூனிட் மணலுக்கு 7,950 ரூபாய் தொகையை விட கூடுதலாக 6,500 ரூபாய் எவ்வளவு பேரிடம் வாங்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள என்.புதூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை ஏலம் எடுத்த நபர்கள் எவ்வளவு மணல் அள்ளிச் சென்றுள்ளனர் என்பது குறித்து நேற்று காலை முதல் மதியம் வரை அமலாக்கத்துறையினர் ஆய்வு நடத்தி குழிகளை அளந்து பார்த்து மதிப்பிட்டனர்.
தொடர்ந்து மாலை 4 மணியளவில் 7 கார்களில் வந்த அமலாக்கத்துறையினர் 9 பேர், 2 குழுக்களாக பிரிந்து நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய பகுதிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களுடன் கோரக்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட அளவீட்டாளர்கள், திருச்சி பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சங்கீதா ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது ஆற்றுக்குள் இறங்கி அரசு அனுமதித்த அளவை விட முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? மணல் அள்ளிய குழிகளின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை சுமார் 2 மணி நேரம் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை டிஜிட்டல் முறையில் கணக்கீடு செய்து அதனை குறித்துக் கொண்டனர். பின்னர் 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த சோதனையின் போது 20 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவாரியை சுற்றி துப்பாக்கியுடன் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.
கடந்த முறை அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தியதை தொடர்ந்து மணல் குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சின்னமனூரில் முதன்முறையாக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
- ஒரு ஏக்கருக்கு 10 நிமிடத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.550 என்பது அனைத்து விவசாயிகளாலும் சாத்தியப்படாது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்ன மனூர், மார்க்கைய ன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சின்ன மனூரில் முதன்முறையாக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து விவசாயி தங்கவேலு தெரிவிக்கை யில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடை பெற்றது. சின்னமனூர் வட்டாரத்தில் முதன்முறை யாக இந்த பணியை நான் மேற்கொண்டுள்ளேன். இதற்கு ரூ.550 கட்டணமாக வாங்கப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு 10 நிமிடத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.550 என்பது அனைத்து விவசாயிகளாலும் சாத்திய ப்படாது. இருந்தபோதும் பணி குறைகிறது என்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை மற்ற விவசாயிகள் பயன்படுத்து வார்களா என்பது விரைவில் தெரியும் என்றார்.
- மாநகராட்சி பகுதியில் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களும் கண்காணிக்கப்பட உள்ளன.
- கட்டிடங்களின் உயரத்தை அளவீடு செய்யும் வகையிலும் டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை மாநகராட்சி பகுதிகளில் வரைபட அனுமதியை மீறி கட்டப்பட் டுள்ள கட்டிடங்களை டிரோன் காமிராக்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என முதல்கட்டமாக கிராஸ்கட் சாலை பகுதியில், தனியார் அமைப்பின் பங்களிப்புடன் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அதில், பல கட்டிடங்கள் விதிகளை மீறி கூடுதல் அளவுகளுடன் கட்டியதும், சில கட்டிடங்கள் வீடு கட்டுவதற்கான உரிமம் பெற்றுக் கொண்டு வணிக ரீதியாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கட்டிட உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டிடத்துக்கு உரிய வரி பெறப்பட்டு,அதன் பிறகு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநகராட்சி பகுதியில் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களும் கண்காணிக்கப்பட உள்ளன. குறிப்பாக உயரமான கட்டிடங்கள் அனுமதி பெற்ற அளவுகளில் கட்டப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறியவும் கட்டிடங்களின் உயரத்தை அளவீடு செய்யும் வகையிலும் டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த டிரோன் மூலம் கட்டிடங்களின் அளவு, வரை படம் உள்ளிட்டவற்றை கண்காணித்து குறிப்பிட்ட அளவுக்கு கூடுதலாக கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால், அவற்றை எளிதில் கண்டறிய முடியும்.அனுமதி பெற்ற அளவுக்கு மேல் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதற்கு உண்டான வரிவிதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- புலி நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
- கூண்டு அமைத்தும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவட்டார்:
பேச்சிப்பாறை, சிற்றாறு சிலோன் காலனியில் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டு இருந்த ஆடுகளை புலி கடித்துக் குதறியது. அடுத்தடுத்து ஆடு, மாடுகளை கடித்துக் கொன்றதால் அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் அச்சம் அடைந்தனர்.
புலியை பிடிக்க 2 கூண்டுகள் அமைக்கப்பட்டது. மேலும் எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும், வனத்துறையினரும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை. இதையடுத்து தேடுதல் வேட்டை கைவிடப்பட்டது.
எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் வேட்டையை கைவிட்டனர். இந்த நிலையில் பத்துகாணி ஒரு நூறாம்வயல் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை புலி கடித்து குதறியது. இது குறித்து குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வன அதிகாரி இளையராஜா தலைமையில் வனக்குழுவினர் பத்துகாணி பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆடுகளை இழந்த பழங்குடியினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த 16 நாட்களாக புலி தொந்தரவு இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புலியை பிடிக்க முதுமலை காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற பழங்குடியினரும், எலைட் படையினரும், டாக்டர் குழுவினரும் மீண்டும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட வன அதிகாரிகளும் இவர்களுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் புலியை தேடும் பணியில் இறங்கி உள்ளார்கள். ஏற்கனவே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2 கூண்டுகள் அமைக்கப்பட்ட நிலையில் பத்துகாணி பகுதியில் மேலும் 3 கூண்டுகளை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக நெல்லை மற்றும் களக்காட்டில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பத்துகாணி பகுதியில் கூண்டுகள் அமைக்கடுகிறது.
மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் தேடுதல் வேட்டையை கைவிட்டு இருந்தோம்.
இந்த நிலையில் பத்துகாணி பகுதியில் ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தற்போது தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளோம். கூண்டு அமைத்தும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. விரைவில் புலி பிடிபடும் என்றார்.
- உணவு வினியோகம் செய்வதற்காக ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் சுயமாக ஒரு டிரோனை உருவாக்கி அசத்தி உள்ளார்.
- வீடியோ 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
சமீபகாலமாக ஆன்லைன் மூலம் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். ஆனால் உணவு வினியோகம் செய்வதற்காக ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் சுயமாக ஒரு டிரோனை உருவாக்கி அசத்தி உள்ளார்.
சோஹன்ராய் என்ற அந்த ஊழியர் நீண்ட தூரம் பயணித்து உணவு வினியோகம் செய்ய வேண்டி இருந்ததால் அடிக்கடி போக்குவரத்தில் சிக்கி கொண்டதோடு, களைத்தும் போனார். இதனால் விரைவாக உணவு வினியோகம் செய்வதற்காக திட்டமிட்ட அவர் 'டிரோன்' உருவாக்கி உணவு வினியோகத்திற்கு பயன்படுத்த சோதனைகளை மேற்கொண்ட காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார்.
- மெரினா கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை டிரோன் மூலம் வழங்கி உதவ முடியும்.
சென்னை:
சென்னை போலீசில் புதிதாக டிரோன் சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் இதற்காக தனி பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின் பேரில் இந்த டிரோன் பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தொழில், சட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படும் 9 டிரோன்கள் இந்த பிரிவில் பயன்படுத்தப்பட உள்ளன. 3 விதமான பயன்பாட்டில் இவை இருக்கும்.
மெரினா கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை டிரோன் மூலம் வழங்கி உதவ முடியும். அவசர காலத்தில் குற்றவாளிகளை பிடிப்பதற்கும், தொலை தூரங்களில் உள்ள இடங்களுக்கு சென்று பயன்படும் வகையிலும் டிரோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் உள்ள பட்டதாரிகள் என்ஜினீயர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்த பிரிவில் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த டிரோன் பிரிவு போலீசுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.
நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்ட டிரோன் பிரிவு தொடக்க விழாவில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா, லோகநாதன், இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி, துணை கமிஷனர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
- பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் பெயரின் நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளது.
இந்த கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. ஒரு முழு நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
விழாவையொட்டி அன்று காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் பங்கேற்று கவிதை வாசிக்கின்றனர்.
அதன் பிறகு, மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. பட்டிமன்றத்திற்கு சாலமன் பாப்பையா நடுவராக இருந்து நடத்துகிறார். இதில் பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முகவடிவேல், கவிதாஜவகர், ராஜா ஆகியோரும் எழுத்தே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகின்றனர்.
பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு மாலதி லக்ஷ்மன் குழுவினரின் பாட்டரங்கம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கலைஞர் கோட்ட திறப்பு விழா நடைபெற உள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் வரவேற்புரை ஆற்றுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர்கள் உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முத்துவேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குகிறார். நாளை 19-ந்தேதி காலை கலைஞர் கோட்ட திறப்பு விழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிடுகிறார்.
மீண்டும் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி திறப்பு விழா நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து அன்று இரவு மன்னை விரைவு ரெயில் மூலம் சென்னை திரும்புகிறார். இதேபோல் இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் 20-ந்தேதி விமானம் மூலம் திருச்சி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகை தர உள்ளனர்.
ஹெலிகாப்டர் இறங்கி ஏறுவதற்கு வசதியாக திருவாரூர் வா.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹெலிபேட் அமைக் கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகை தரும் பீகார் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அங்கிருந்து கார் மூலம் காட்டூர் சென்று கலைஞர் கோட்ட திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
அன்று மாலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து பீகார் செல்கின்றனர். கலைஞர் கோட்டை திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டி.ஐ.ஜி ஜெயச்சந்திரன், திருவாரூர் எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இறுதியில் தயாளு அம்மாள் அறக்கட்டளை அறங்காவலர் சம்பத்குமார் நன்றி கூறுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அவர் பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
- மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
- பிரதிநிதிகள், பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.
ஜி-20 மாநாட்டை தொடர்ந்து சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இதனால், ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.
மேலும், பிரதிநிதிகள் வருகை, தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
- நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து நவீன டிரோன்களை (ஆளில்லா விமானம்) வாங்குவது தொடர்பாக இந்தியா இன்று முடிவு செய்ய உள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று முடிவு செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சக கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்பாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகின.
அமெரிக்க வெளியுறவுத் துறை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியாவிடம் கேட்டு கொண்டன. இதையடுத்து அமெரிக்க நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிரோன்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஏவுகனைகளை ஏந்தி சென்று இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து டிரோன்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. அந்த டிரோன்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிக்க கடற்படைக்கு உதவுகின்றன.
- சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது
- கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.
அமிர்தசரஸ்:
இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் டிரோன்கள் அத்துமீறி நுழைந்து வருகிறது. கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் டிரோன் பஞ்சாப் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அமிர்தசரசில் உள்ள பைனி ராஜ்புட்னா என்ற கிராமத்தில் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது.
இதை பார்த்த அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,
- மீனவர்கள் வலையில் சிக்கிய டிரோனை மீட்டு காசி மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- மீனவர்கள் வலையில் டிரோன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:
திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்தவர் அன்பு. மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 மீனவர்களுடன் பைபர் படகு மூலம் திருவொற்றியூர் கடல் பகுதியில் வலை வீசி நண்டு பிடித்தார். அப்போது அவர்களது வலையில் டிரோன் ஒன்று சிக்கியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் வலையில் சிக்கிய டிரோனை மீட்டு காசி மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் டிரோனை சோதனை செய்த போது, அது 2 அடி நீளம், 1 அடி உயரமாக இருந்தது. 6 இறக்கைகளும் காணப்பட்டன. மேலும் அதில் சாகர் பாதுகாப்பு தொழில்நுட்பம் என்று எழுதப்பட்டிருந்தது. இது கடலோர காவல் படைக்கு இன்னும் சொந்தமானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த டிரோன் குறித்து போலீசார் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த டிரோனை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிக்கு பறக்க விட்டபோது தொழில் நுட்ப கோளாறால் கடலில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர்கள் வலையில் டிரோன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்