search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • கடந்த 8 ஆண்டுகளில் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • பல திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.

    சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 307 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் மரியாதை செய்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பூலித்தேவரை கெளரவிக்கும் விதமாக தபால் தலை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 


    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், 2047- ஆண்டில் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற இலக்கோடு நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றார். அந்த வகையில் தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்த இருப்பதை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளில் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது, அனைவருக்கும் வீடு திட்டம், குழாய் மூலம் குடிநீர் திட்டம் ஆகிய பல திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    • மருந்து உற்பத்தி நிறுவனங்கள் புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • மருந்து நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

    தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வெள்ளிவிழா கொண்டாட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:

    தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஒரு மருந்து கட்டுப்பாட்டாளராக மட்டுமின்றி, மருந்துகள் எளிதில் கிடைக்கும் வகையில் பணியாற்றுவது பாராட்டத்தக்கது.

    வணிக நோக்கத்துக்காக மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், மருந்துகளை தயாரிக்க வேண்டும், புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

    மருந்து உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, ஊக்கத்தொகை திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய மருந்து நிறுவனங்கள் சிறப்பாக பங்காற்றின. மக்களுக்கு தரமான சுகாதார சேவையை அளிப்பதில், தொழில்துறைக்கும், அரசாங்கத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 24 மாநிலங்களைச் சேர்ந்த 52,000க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பு.
    • தூய்மையான கடல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை.

    கடந்த ஜூலை 5ந் தேதி அன்று தொடங்கப்பட்ட 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள் உள்பட வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றுள்ளதாகவும், இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

    கடற்கரை தூய்மை இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த www.swachhsagar.org என்ற இணையதளத்தை நேற்று  தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இயக்கத்தில் புவி அறிவியல் அமைச்சகத்தோடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், ஜல் சக்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், வெளியுறவு, தகவல் ஒலிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் தீவிரமாக பங்கேற்றுள்ளன என்றார்.

    கடற்கரை தூய்மை இயக்கத்தின் கீழ் 20 நாட்களில் கடற்கரைகளிலிருந்து 200 டன் கழிவுகள் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

    அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த இயக்கத்திற்கு முழுமையான ஆதரவு அளிக்க உறுதி தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார். இதுவரை 24 மாநிலங்களைச் சேர்ந்த 52,000க்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

    தூய்மையான கடல், பாதுகாப்பான கடல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த இயக்கம் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான செப்டம்பர் 17 அன்று நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

    • நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 360 லட்சம் டன்னிற்கு அதிகமாக உள்ளது.
    • அடுத்த கட்ட இணை உற்பத்தியில் சர்க்கரை ஆலைகள் கவனம் செலுத்துவது அவசியம்.

    மும்பை:

    மும்பையில் இன்று நடைபெற்ற தேசிய இணை உற்பத்தி விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி பேசியதாவது:

    இந்தாண்டு நமது சர்க்கரைத் தேவை 280 லட்சம் டன் போதும் என்ற நிலையில், 360 லட்சம் டன்னிற்கு அதிகமாக உற்பத்தி உள்ளது. சர்க்கரை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு ஏதுவாக, விவசாயத்தை பயன்படுத்த வேண்டும்

    எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்று எரிபொருள் உற்பத்தி குறித்து, தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்கள் தொகையில் 65% -70% பேர் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், சர்க்கரை ஆலைகளும், விவசாயிகளும் நாட்டின் வளர்ச்சி இயந்திரம். சர்க்கரை மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் விதமாக, அடுத்த கட்ட இணை உற்பத்தியில் கவனம் செலுத்துவது அவசியம்.

    சர்க்கரையை குறைந்த அளவுக்கு உற்பத்தி செய்வதுடன், எத்தனால் உள்ளிட்ட உப பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பங்களை, தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். இது போன்று செய்தால், விவசாயிகள் உணவுப் பொருள் சாகுபடியாளர்களாக மட்டுமின்றி, எரிசக்தி உற்பத்தியாளர்களாகவும் திகழ முடியும்.

    பலவகையான எரிபொருட்களைப் பயன்படுத்தக்கூடிய எஞ்சின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களை இந்த வகை என்ஜின்களை உற்பத்தி செய்து வருகின்றன, பல்வேறு கார் உற்பத்தியாளர்களும், இத்தகைய எஞ்சின்களைக் கொண்ட காரைத் தயாரிப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 75 கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் நடைபெறுகிறது.
    • பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் இது நிறைவடைகிறது.

    புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தைத் தலைமைச் செயலகம் அருகில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், 7500 கிலோ மீட்டர் தூர கடல் பரப்பைக் கொண்ட இந்திய கடலோரத்தை தூய்மையாக வைத்திருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார். வருங்கால சந்ததியினருக்குத் தூய்மையான கடற்கரையை நாம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    விடுதலை அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 75 நாட்கள் கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் உள்ள 75 கடற்கரைகளில் மேற்கொள்ளப்படுவதாகவும், இப்பணிகள் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவடையும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

    புதுச்சேரி பிரோமினேட் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கடலோரப் பகுதி தூய்மை விழிப்புணர்வு ஓட்டத்தைக் கொடியசைத்துத் அவர் தொடங்கி வைத்தார். 


    கடலோரத் தூய்மையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். முன்னதாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள, ஈடன் கடற்கரைக்கு சென்று அங்கு கட்டமைப்பு வசதிகளை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் பார்வையிட்டார்.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி, மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ரிச்சா ஷர்மா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அறிவியல், தொழில்நுட்பம் & சுற்றுச்சூழல் செயலர் ஸ்மிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைய இந்தியா உறுதி பூண்டுள்ளது.
    • தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

    தாஷ்கண்ட்:

    உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில், பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிராக தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைந்து பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    தீவிரவாதிகளின் புகலிடமாக ஆஃப்கன் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ இந்தியா ஆதரவு அளிக்கிறது.பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தேசிய அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அனைத்து வழிகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

    ரஷியா உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா ஆதரவு அளிக்கிறது.அங்கு மனிதநேய உதவி அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ நா பொதுச் செயலாளர், ஐ நா அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக தாஷ்கண்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு  ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார். அவரது எளிமை மற்றும் நேர்மைக்காக, மறைவுக்கு பின்னர் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். 

    • விலங்குகளின் இனப்பெருக்கத்தை அதிகரித்து பராமரிக்க வேண்டியது அவசியம்.
    • இந்திய மக்கள் தொகை அளவுக்கு விலங்குகள், பறவைகள் உள்ளன.

     இஷாக்: 

    உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இஷாக் நகரில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, உலகில் மிகச்சிறந்த நாடாக உருவாக வேண்டும். இதற்கு அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டியது அவசியம்.  


    நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 535.78 மில்லியன் கால்நடைகளும், 851.18 மில்லியன் பறவைகளும் இருக்கின்றன. இந்திய மக்கள் தொகை அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை உள்ளது. கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்ட விவசாயத்துடன் தொடர்புடைய துறைகளில் கவனம் செலுத்தினால்தான், வேளாண்மை துறை வளர்ச்சி அடையும்.

    வேளாண்மையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தத் தொழில்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். விலங்குகளின் இனப்பெருக்கத்தை அதிகரித்து அவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது இப்போதைய தேவை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே ஒரு நாடு சிறந்த நாடாக மாறாது.
    • புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    தேசிய கல்விக் கொள்கை, பொதுமக்களின் ஆசைகளை பிரதிபலிக்கிறது. இதற்கு முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவரை வெற்றிகரமான நிபுணராக மாற்ற வடிவமைக்கப்பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கை ஒரு மாணவனை சிறந்த மனிதனாக மாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.

    ஒரு நாடு ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே சிறந்த நாடாக மாறாது, சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை. தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை வளர்த்து, தங்கள் காலனித்துவ ஆட்சியை நீட்டிக்க முயன்றனர். புதிய கல்விக் கொள்கையில் இந்திய கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களையும் நிச்சயம் இது ஈர்க்கும்.

    கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தோ-ஈரான் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை.
    • சபஹரை பிராந்திய வளர்ச்சி துறைமுகமாக மாற்றுவது குறித்து ஆலோசனை

    ஈரான் நாட்டிற்கு சென்றுள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், தெக்ரானில் ஈரான் துணை அதிபர் முஹமது மொஹ்பரை சந்தித்துப் பேசினார்.

    அப்போது, இந்தியா, ஈரான் இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவுக்கான ஈரான் சிறப்புத் தூதரான ஈரான் துணை அதிபர், இந்தியா, ஈரான் உறவை மேலும் வலுப்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்திய அமைச்சரின் ஈரான் வருகைக்கு பாராட்டு தெரிவித்தார். இது மேலும், சபஹர் துறைமுகத்தின் வணிகம், வளர்ச்சி, ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

    பிராந்திய வளர்ச்சிக்கான துறைமுகமாக சபஹர் துறைமுகத்தை மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், இருநாடுகளும் இணைந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சர்பானந்த சோனோவால் சுட்டிக்காட்டினார். ஈரான் துணை அதிபருடனான சந்திப்பு, வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, ஈரான் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஈரான் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரோஸ்டம் காசெமியுடன், இருதரப்பு சந்திப்பில் சோனாவால் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளுக்கு உதவும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

    • இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது.
    • இந்தியாவுடனான சீனாவின் உறவு கடினமான கட்டத்தில் உள்ளது.

    சாவ் பாலோ:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: 

    இந்தியா – பிரேசில் இடையே சிறந்த நட்புறவு நிலவி வருகிறது. ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு சிறந்த இணைப்புப் பாலமாக திகழும் இந்திய வம்சாவளியினருக்கு நன்றி.

    உறவு ஒரு வழிப்பாதையாக இருக்க முடியாது, அதைத் தக்க வைக்க பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். சீனா அண்டை நாடு, ஒவ்வொருவரும் தங்கள் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறார்கள்.

    இந்தியாவுடனான எல்லை ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் இரு நாடுகளுடனான உறவில் கறை படிந்த நிழல் போல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவும் மற்ற மாநிலங்களை போல் வளர்ச்சி அடையும்.
    • மத்திய அரசு எரிபொருள் விலையை குறைத்தாலும், தெலுங்கானா அரசு வரியை குறைக்கவில்லை.

    தெலுங்கானா மாநிலத்திற்கு நேற்று ஒருநாள் பயணமாக சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முனுகோடே தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அண்மையில் பதவியை ராஜினாமா செய்த முனுகோடே சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால் ரெட்டி, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

    தெலுங்கானா மாநிலத்திற்கு மத்திய அரசு, 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பிறகும், மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிரானது. மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து தெலுங்கானா விவசாயிகளை ஒதுக்கி வைப்பதன் மூலம் டிஆர்எஸ் அரசு பாவம் செய்கிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திருந்தால் வெள்ள பாதிப்பின் போது இழப்பீடு கிடைத்திருக்கும்.

    அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளிடம் இருந்து ஒவ்வொரு நெல்லும் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யும். பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவும் மற்ற மாநிலங்களை போல் வளர்ச்சி அடையும் என உறுதியளிக்கிறேன். மத்திய அரசு இரண்டு முறை எரிபொருள் விலையை குறைத்தாலும், தெலுங்கானா அரசு வாட் வரியை குறைக்கவில்லை.


    இதனால் நாட்டிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகம் உள்ள மாநிலமாக தெலுங்கானா மாறியுள்ளது. இதனால் மாநிலத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. தலித்துகளுக்கு மூன்று ஏக்கர் நிலம், இரண்டு படுக்கையறை வீடுகள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.3,000 நிதியுதவி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தவறி விட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர, மாநிலத்தில் எந்த இளைஞருக்கும் வேலை கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக உஜ்ஜைனி மகாகாளி கோவிலுக்கு சென்று அமித்ஷா வழிபட்டார். பின்னர், ஐதராபாத்தில் அமித்ஷாவை, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசினார்.

    • ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் செலவு, டீசல் வாகனங்களை விட குறைவு.
    • இது இந்திய சரக்கு சேவையில் புரட்சியை ஏற்படுத்தும்.

    முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அறிமுகம் செய்து வைத்தார். மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தியில் இயங்கக் கூடிய வகையில் இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:-

    பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இந்த எரிபொருள், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு, நீர் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக மாறும். நீண்ட தூர வழித்தடங்களில் ஓடும் ஒரு டீசல் பேருந்து பொதுவாக ஆண்டுக்கு 100 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது.

    இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டீசல் பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஆகும் டீசல் செலவுவை விட ஹைட்ரஜன் எரிபொருள் விலை குறைவாக இருக்கும். இது இந்தியாவில் சரக்கு  சேவையில் புரட்சியை ஏற்படுத்தும். இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொழில்நுட்பத் திறன் உலகிலேயே மிகச் சிறந்ததாக திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×