search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது.
    • நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது அவசியமானது.

    டெல்லியில் நடைபெற்ற , ஜவுளி ஆலோசனைக் குழுவுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    இந்திய பருத்திக்கு முத்திரை வழங்கப்படுவதற்கான சிறந்த தருணம் இது. இந்திய பருத்தி கஸ்தூரிக்கு முத்திரை மற்றும் சான்றளிக்கும் வகையில் தொழில்துறை முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது அவசியம். கஸ்தூரி பிராண்டட் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈர்ப்பை உருவாக்க வேண்டும். 


    இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது. இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016 இன் கீழ் பருத்தியின் தரத்தை தொழில்நுட்ப அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கஸ்தூரி பருத்தியின் தரம், இருப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஒருங்கிணந்து பணியாற்றும் தொழில்துறை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

    பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவை. போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து சில உறுதியான நடவடிக்கைகள் தேவை. பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க புதுமையான வேளாண் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 20ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை திரைப்பட விழா நடைபெறுகிறது.
    • 3 இந்திய திரைப்படங்கள் உள்பட 15 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன

    கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கான ஆயத்தப் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச திரைப்படங்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்கும், திரைப்படக் கலையின் சிறப்பை முன்வைக்கும் விதமாக கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவதாக கூறினார்.

    இது வெற்றிகரமாகவும் அமைய இந்த நிகழ்வுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா, இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தரும் பங்கேற்பாளர்கள் மற்றும் திரைக்கலை முக்கியஸ்தர்கள் சிறப்பான வரவேற்பு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் குறைவுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த திரைப்பட விழா குறித்த இணையப்பக்கம் மற்றும் கைபேசி செயலி ஆகியவற்றை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் தொடர்புடைய அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். இம்மாதம் 20 முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கான பட்டியலில், குரங்கு பெடல், காஷ்மீர் ஃபைல்ஸ் உள்பட 3 இந்திய திரைப்படங்களும் 12 வெளிநாட்டு திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. 

    • மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை கோரி வெளியுறவு மந்திரிக்கு, முதலமைச்சர் கடிதம்.
    • தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும்,கைது சம்பவங்கள் தொடர்கின்றன.

    தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக ரீதியிலான வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத் துறை மந்திரி உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது தீவிரமான பிரச்சினையாக மாறி உள்ளது.
    • அரசியல் ரீதியாக விவாதிப்பதை விட, தீர்வு காண வேண்டும்.

    பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில்,பயிர் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்றவற்றால் டெல்லியில் காற்று மாசு அளவு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் எனவும் 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு விளையாட்டு உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற வேளாண் ஆராய்ச்சி பயிலங்கில் பங்கேற்று பேசிய மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளதாவது: அரசியல் ரீதியாக இந்த பிரச்சனையை விவாதிப்பதை விட, இதற்கு தீர்வு கண்டு இதிலிருந்து வெளி வருவதற்கான முயற்சிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

    மத்திய அரசும், மாநில அரசுகளும் விவசாயிகளின் நலனை நோக்கமாக கொண்டே செயல்படுகின்றன. பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது தீவிரமான பிரச்சினை. இது சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு முறையாக தீர்வு காண்பதன் மூலம் மண்ணையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

    பயிர்க்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்து சுற்றுச்சூழல் மாசைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. பயிர்க்கழிவு மேலாண்மைக்காக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கி உள்ளது.

    மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் புசா என்ற உயிரி பயிர்க்கழிவு சிதைப்பு திரவம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இயந்திரங்களும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றை திறம்பட பயன்படுத்தி பயிர்க்கழிவுகள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பொய் சொல்லி பொதுமக்களை தவறாக வழி நடத்துகிறது காங்கிரஸ்.
    • இமாச்சலப் பிரதேசத்தில் அனைத்துத் துறை வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்துள்ளது.

    அமிர்பூர்:

    வரும் 12ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையல் அம்மாநிலத்தின் அமிர்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது:

    நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பிய சின்ன, சின்ன கும்பலுடன் ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்துகிறார். அதனால்தான் அவரது பாத யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இமாச்சல பிரதேசத்தில் இரட்டை எஞ்சின் அரசு செயல்படுத்தி உள்ள பல நலத் திட்டங்களால் மீண்டும் இஙகு பாஜக ஆட்சிக்கு வரும்.

    இமாச்சலப் பிரதேசத்தின் நலனுக்காக காங்கிரஸ் ஒருபோதும் உழைக்கவில்லை. இந்த மாநிலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்துள்ளது. பாஜக வளர்ச்சியை நம்புகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் பொய் சொல்லி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. பிரதமர்மோடி தலைமையின் மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து, இரட்டை எஞ்சி அரசை அமைக்க உதவுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜவுளி தொழில்நுட்ப காப்புரிமைகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • நவீன நெசவு இயந்திரங்கள், ஆய்வகங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம்.

    டெல்லியில் நடைபெற்ற ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களின் ஆய்வு கூட்டத்தில் நித்தி ஆயோக் அமைப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் வி கே. சரஸ்வத், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் சிறப்புரையாற்றிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம். உலக தரத்திலான நவீன நெசவு இயந்திரங்கள், நவீன ஆய்வகங்கள் உள்ளிட்டவை குறித்து ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு வழங்கலாம்.

    ஆய்வகங்களை நவீன மயமாக்குவதில் இந்திய தர நிர்ணய அமைப்பு, ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களுக்கு உதவ வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேசிய நலனுக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம்.
    • எல்லா அரசியல்வாதிகளும் இந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.

    கொல்கத்தா:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கொல்கல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த (ஐஐஎம்) மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

    ஜம்மு காஷ்மீருக்கு 370வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, அன்றைய அரசியல் காரணமாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. சிறப்பு அந்தஸ்து என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். ஆனால் இவ்வளவு காலம் அது நீடிக்க என்ன காரணம்? சிறப்பு அந்துஸ்து காரணமாக அங்கே (ஜம்முகாஷ்மீரில்) இவ்வளவு குழப்பமான பிரச்சினை இருந்தது, உலகம் முழுவதும் அதைப் பயன்படுத்தியது.

    இது நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்றைய அரசியல், தேசத்தின் நலனுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. எல்லா அரசியல்வாதிகளும் முதலில் அந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தேசிய நலனுக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம். அரசியல் காரணமாக நமது நாட்டின் எல்லைகள் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டால், மத்திய அரசு பரிசீலிக்கும்.
    • தமிழகத்தில் அரசியலுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்படுகிறது.

    கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 


    நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார். அது இன்றைய தேவையாக உள்ளதாகவும், பட்டம் பெறும் மாணவர்கள் கல்வியறிவு மட்டுமின்றி நமது பாரம்பரியம் கலாச்சாரம் குறித்த அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி சுபாஷ் சர்கார் கூறியுள்ளதாவது:

    தமிழக அரசும், மாநில கல்வி கொள்கையின் மூலம் தேசிய கல்விக் கொள்கையையே பின்பற்றியே வருகிறது. தேசிய கல்விக் கொள்கை ஆவணம் பொது மக்களின் பார்வைக்காக இணையதளத்தில் உள்ளது. 65 பக்கங்கள் கொண்ட அதனை படித்துப் பார்த்தால் தமிழக அரசின் கல்விக் கொள்கையிலும், தேசிய கல்விக் கொள்கையிலும் ஒற்றுமை இருப்பது தெரியவரும்.

    தமிழகத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கல்விக் கொள்கை மேலும் தரமாக இருந்தால் அதன் நல்ல அம்சங்களை தேசிய கல்விக் கொள்கையில் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.

    மத்திய கல்வித்துறை ஏற்கனவே சிறந்த கல்வி முறைகள் குறித்து பரிந்துரைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் சிறந்த கல்வி முறைக்கான பரிந்துரைகளை மத்திய கல்வித்துறை பெற்று வருகிறது.

    நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளின் கல்வி முறையாக மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மத்திய கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டால் கண்டிப்பாக மத்திய அரசு பரிசீலிக்கும். அனைத்து உயர்கல்வியும் தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்.

    அதை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 12 மாநில மொழிகளில் பொறியலுக்கான கேள்வி தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு புத்தகங்கள் அனைத்தும் தமிழ் உட்பட 12 மாநில மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதலமைச்சராக இருந்து, பிரதமராக பதவி ஏற்றது இந்தியாவில் முதல் முறை.
    • உலக அளவில் இத்தகைய சிறப்பு பெறுவது அரிதானது.

    சென்னை நுங்கம்பாக்கம் வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் சிறந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், தமிழை மேலும் பிரபலப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் கடந்த மே மாதம் இங்கு வந்த போது பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். தமிழகம் ஒரு சிறப்பு வாய்ந்த இடம் என்றும், தமிழ் மொழி நிரந்தரமானது, அதன் கலாச்சாரம் உலகளாவியது என்றும் பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்தார்.

    தமிழ் மொழியின் சிறப்பையும், தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிரபலமான கவிதையை மேற்கோள்காட்டி பேசினார். ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரோ ஒருவர் சிறந்து விளங்குகிறார் என்றும் அப்போது பிரதமர் கூறினார்.

    கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரதமர் மோடியின் ஆட்சி முறை, எதிர்காலத்திலும் நிலைத்து, நீடித்து உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தும். கடந்த 20 ஆண்டுகளின் முதலமைச்சராக இருந்து, பின்னர் பிரதமராக மோடி பதவி ஏற்றது இந்தியாவில் முதல் முறை என்றும், உலக அளவில் இத்தகைய சிறப்பு பெறுவது அரிதானது. இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார்.

    • எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
    • அரசின் முயற்சிகள் காரணமாக லடாக்கில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை காண முடிகிறது.

    நாட்டின் எல்லையில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் அமைப்பான பி.ஆர்.ஓ 75 உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது. 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் உள்ளிட்ட 75 திட்டங்கள், அருணாச்சலப்பிரதேசம் உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 


    நிறைவு பெற்ற இந்த திட்டங்களை லடாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்ய எல்லைப்பகுதிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது.

    இந்த புதிய 75 திட்டங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் சுதந்திரத்திற்கு பின்னர் பல ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை. அங்கு பயங்கரவாதம் அதிகரிக்க இதுதான் காரணம். இந்த இடையூறுகள் காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து லடாக் பாதிக்கப்பட்டது.

    இந்த பாதிப்பு நாடு முழுவதும் எதிரொலித்தது. இப்போது அரசின் முயற்சிகள் காரணமாக அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய புதிய உதயத்தை இங்கு காண முடிகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை தொடர்வதே மத்திய அரசின் நோக்கம்.

    நாட்டின் அனைத்து தொலை தூரப்பகுதிகளையும் பிற பகுதிகளுடன் விரைவில் இணைப்பதன் மூலம் நாட்டுக்கு புதிய உச்சத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • சென்னையில் 2 ஆம் கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது.

    சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய வீட்டுவசதி மந்திரி ஹர்தீப் சிங் புரியும் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் கூட்டாக நேற்று திறந்து வைத்தனர். 


    நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த தலைமையகத்தை இருவரும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளதாவது:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது. நாடு முழுவதும் தற்போது 810 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரெயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 


    இதில் சென்னையில் மட்டும் இரண்டாவது கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் நடை பெறுகின்றன. நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமானது.

    மெட்ரோ ரெயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. வெகுவிரைவில், மெட்ரோ ரெயில் பயன்பாட்டில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா நாடுகளை இந்தியா மிஞ்சிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதிய கல்விக் கொள்கை முற்போக்கானது, தொலை நோக்கு பார்வை கொண்டது.
    • மாணவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறைக்கே முன்னுரிமை அளிக்கிறது.

    மொரதாபாத்:

    உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் உள்ள கிருஷ்ண மகா வித்யாலயாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: 


    இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும்.

    புதிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இது மிகப்பெரிய சீர்திருத்தம். இது முற்போக்கானது, தொலைநோக்கு பார்வை கொண்டது. அது மட்டுமின்றி 21ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    கல்வியுடன் பட்டங்களை இணைப்பது நமது கல்வி முறையிலும் சமூகத்திலும் பெரும் சுமையாக உள்ளது. இதனால் படித்து வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காண, மாணவர்கள் பட்டம் பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவதை தவிர்த்து. அவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறை ஆகியவற்றுக்கே தேசிய கல்விக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.

    வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் பலவகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். நடப்பு கால திறன்களுடன் இருப்பவர்கள் உலகில் இன்று வியத்தகு செயல்களை செய்கிறார்கள் என்பதற்கு ஏரளாமான உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    ×