search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதானி குழுமம்"

    • அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8.22 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது.
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.

    புதுடெல்லி :

    அதானியின் நிறுவனங்கள் பங்குகள் விவகாரத்தில் பெரும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, தொடர்ந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8.22 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது.

    பொதுமக்களின் முதலீடுகள் பெருமளவில் உள்ள எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானியின் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதால், இது மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உடனே விவாதிக்க வேண்டும், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் கோரின. அரசு ஏற்காத நிலையில், இரு அவைகளும் முடங்கின.

    இந்த நிலையில், டெல்லியில் பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் அறையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ஆம்ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி, சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோஸ் மணி), கேரள காங்கிரஸ் (தாமஸ்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி என 16 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதானி நிறுவன விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது பற்றி விவாதித்தனர்.

    முடிவில் இந்த கூட்டத்தில் அதானி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் இரு அவைகளுக்குள்ளும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "பிரதமர் வற்புறுத்தலின் பேரில் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதால், சுதந்திரமான விசாரணைதான் எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பிற நிறுவனங்களைக் காப்பாற்றும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை" என தெரிவித்தார்.

    • அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது
    • எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும்.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் வெளியிட்ட அறிக்கை, நாட்டையே அதிர்வில் ஆழ்த்தி உள்ளது.

    இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசு தரப்பில் ஏற்காத நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அலுவல் எதையும் நடத்த முடியாமல் முடங்கிப்போயின.

    இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாடு சந்தித்து வருகிற பிரச்சினைகளை விவாதிப்பதற்கான இடம்தான் பாராளுமன்றம். இதன் மூலம், எம்.பி.க்களின் அக்கறைகளைப் பற்றியும், எம்.பி.க்கள் எவற்றில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் குறித்தும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

    ஆனால் துரதிரஷ்டவசமாக மத்திய அரசு இதன் நன்மையை கண்டு கொள்ள வில்லை. எனவேதான் அவர்கள் (அரசில் அங்கம் வகிக்கிறவர்கள்) விவாதங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதன் விளைவுதான், நாம் பாராளுமன்றத்தின் 2 நாட்களை இழந்து இருக்கிறோம்.

    அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது, நாட்டின் மக்களைப் பாதிக்கிறது என்பதால்தான் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு விரும்புகின்றன. இது போதுமான முக்கியத்துவம் வாய்ந்த விஷயம், அரசு விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. ஆனால் தனக்கு தர்ம சங்கடமாக அமைகிற எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க அரசு விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையொட்டி சசி தரூருக்கு பதில் அளிப்பதுபோல பா.ஜ.க. எம்.பி. மகேஷ் ஜேத்மலானி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தூண்டுதலால்தான் அதானியின் நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலீடு செய்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

    இதில் மத்திய அரசு செய்வதற்கு என்ன இருக்கிறது? இதில் மத்திய அரசின் பங்களிப்பு என்ன என்பதை யாரும் கூறவில்லை. எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். அவர்கள் சில முதலீடுகளைச் செய்வது என்று தீர்மானித்து செயல்பட்டிருக்கிறார்கள்.

    இந்த முதலீடுகளில் தவறுகள் நேர்ந்திருந்தால் இது பற்றி இந்திய பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி) மற்றும் பாரத ரிசர்வ் வங்கிதான் விசாரிக்கும். அவர்கள் விசாரித்து அதன் அறிக்கை வரட்டும். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 6 நாட்களில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 26.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது.
    • இந்திய வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளே அதானி குழுமத்திற்கு 90 சதவீதத்திற்கு அதிகமான கடன்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை கூறியது.

    இதைத்தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பும், கடும் சரிவை சந்தித்தது.

    கடந்த 24-ந் தேதி வரை உலக பணக்கார பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி தற்போது முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல் முகேஷ்அம்பானிக்கு பின் சென்று விட்டார். இதன் மூலம் கவுதம்அதானி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலையையும் இழந்துள்ளார்.

    இந்நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், எப்.பி.ஓ. பங்குகள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி திரட்டும் திட்டத்தையும் நேற்று ரத்து செய்தது.

    இதுஒரு புறம் இருக்க, பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் 6 நாட்களில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி (100 பில்லியன் டாலர்) அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.

    அதாவது கடந்த 6 நாட்களில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 26.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளது. அதானி டோடல் கேஸ் நிறுவனம் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 10 சதவீதம், அதானி துறைமுகங்கள் 6.1 சதவீதம், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் 10 சதவீதம், என்.டி.டி.வி. பங்குகள் 5 சதவீதம், அதானி பவர் 5 சதவீதம், அதானி வில்மர் 22.4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. ஏ.சி.சி. லிமிடெட் 0.1 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 5.3 சதவீதமும் உயர்ந்துள்ளது.

    இதன் மூலம் அதானி குழுமத்தில் 10 நிறுவனங்கள், 8 நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு வங்கிகளிடம் பாரத ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. வங்கிகளிடம் இருந்து அதானி குழும நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.2.1 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன. இவற்றின் இந்திய வங்கிகள் வழங்கிய கடன் மட்டும் சுமார் 40 சதவீதம் என கூறப்படுகிறது.

    இந்திய வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளே அதானி குழுமத்திற்கு 90 சதவீதத்திற்கு அதிகமான கடன்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.22 ஆயிரம் கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7 ஆயிரம் கோடியையும், பரோடா வங்கி ரூ.7 ஆயிரம் கோடியையும் அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்ற வங்கிகள் கடன் விபரங்களை வெளியிடவில்லை.

    இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிகள் அதானி குழுமங்களுக்கு வழங்கிய கடன் விபரங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    • மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார்.
    • பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி

    பாராளுமன்றத்தில் நேற்று அதானி குழும விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. எம்.பி.க்களின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச்சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அது வருமாறு:-

    கனிமொழி (தி.மு.க. எம்.பி.):- அதானி குழுமத்தின் நிலையால் பொதுத்துறைகளில் சாமானிய மக்கள் முதலீடு செய்த பணம் என்ன ஆனது என நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் பா.ஜனதா இதை காதில் வாங்கவில்லை. அவையை ஒத்தி வைத்துவிட்டனர். நாங்கள் கூட்டுக்குழு விசாரணை கேட்டு இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும் இதை வலியுறுத்துகிறார். நிச்சயம் நாங்கள் இதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    கார்த்தி ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.):- வெளிப்படையான, தரமான சந்தை பரிமாற்றம் உள்ள ஒரு நாட்டில் வெளிநாட்டு அமைப்பு சில கருத்துகளை சொன்னால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கவனிக்கும் மந்திரியோ, அதிகாரியோ மக்களை சந்தித்து நாட்டின் நிலை என்ன? என்று வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும். சாதாரண மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பொதுத்துறைகளை நிர்வகிக்கும் செபி, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளன. இதையெல்லாம் பற்றி அரசு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவையை ஒத்திவைத்து விட்டனர். இதுபற்றி முதலில் அரசு பதில் அளிக்கட்டும். அது திருப்தியா? இல்லையா? என்பதை பார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்.

    வெளிநாட்டு அமைப்பு சொல்வதாலேயே அது உண்மை என ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?. இதில் பொதுமக்களின் பணமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அது பத்திரமாக இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும்.

    ஜோதிமணி (காங்கிரஸ் எம்.பி.):- அதானி குழுமம் வீழ்ச்சியால் அதில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.யில் ஒரே நாளில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடி நாசமாகியுள்ளது. மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை இந்த பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கடந்த 8 ஆண்டுகளாக இது அதானி அரசு என்று சொல்வது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகள் 819 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74 ஆயிரம் கோடி பங்குகளை எல்ஐசி வைத்து உள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம், பங்குச்சந்தையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்தி வருகிறது.

    அந்த நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், "அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. 'அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த மூன்று ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.

    இந்தக் காலக்கட்டத்தில் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகள் 819 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. இதற்காக தாராள வரிச்சலுகை உள்ள மொரீசியஸ், ஐக்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற நாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி உள்ளது. இவற்றை அதானி குழுமத்தில் உயர் பதவிகளில் உள்ள அதானியின் உறவினர்கள் நிர்வகித்து வருகின்றனர். மொரீசியசில் மட்டுமே 38 போலி நிறுவனங்களை அதானி குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

    மேலும், அதானி குழுமம் வரம்புக்கு மீறி கடன் பெற்றுள்ளது. இதனால் நிலையற்ற தன்மையில் அதானி குழும நிறுவனங்கள் உள்ளன" என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கருப்புப் பண ஒழிப்பு பற்றி பேசும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் இந்த சட்ட விரோதச் செயல்களைப் பார்த்து கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறதா? இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி விசாரிக்குமா?

    அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74 ஆயிரம் கோடி பங்குகளை எல்ஐசி வைத்து உள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது. எனவே, அதானி குழுமம் முறைகேடு செய்து தனது பங்கு மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தி, அவற்றை அடமானமாக வைத்து, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றதா? என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும். இது உண்மையாக இருந்தால் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    எனவே, பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பங்கேற்றனர்.
    • ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் ஒரு மகத்தான மைல்கல் என்று பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார்.

    ஹைஃபா:

    இஸ்ரேலிய முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி உள்ளது. டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உள்பட இஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான அதானி நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைஃபா நகரத்தை வளர்ச்சி அடைய செய்ய உள்ளதாக அதானி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

    ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அதானி, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார். துறைமுகத்தில் ரியல் எஸ்டேட்டை உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.

    அதானி குழுமத்துடனான ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கல் என்று பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை கணிசமாக மேம்படுத்தும் என்றும் கூறினார்.

    ஹைஃபா துறைமுகமானது சரக்கு கப்பல்களை கையாளும் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். சுற்றுலா பயணக் கப்பல்களை அனுப்புவதில் மிகப்பெரிய துறைமுகமாக விளங்குகிறது.

    அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க், அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டது. இந்த விவாகரம் உலகளவில் விவாதிக்கப்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்த, அதானி குழும பங்குகள் சரியத் தொடங்கின. இந்த சரிவுக்கு மத்தியில் அதானி குழுமம் புதிய துறைமுகத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன.
    • எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

    மும்பை :

    இந்தியாவின் 'நம்பர் 1' கோடீஸ்வரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.

    அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது. அந்நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் மீது தெரிவிக்கப்படும் முறைகேடுகளை மறுத்துள்ள அதானி குழுமம், இது இந்தியாவுக்கு எதிரான சதி என்று கூறியுள்ளது.

    அதேவேளையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளதால், அவற்றுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குரல் எழுந்துள்ளது.

    இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவனம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. சார்பில் ரூ.36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று ரூ.35 ஆயிரத்து 917 கோடியே 31 லட்சமாக இருந்தது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த வாங்கு மதிப்பு ரூ.30 ஆயிரத்து 127 கோடியாகவும், கடந்த 27-ந்தேதி நிலவரப்படி அதன் சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரத்து 142 கோடியாகவும் உள்ளது. அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு, எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு' என்று தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை எல்.ஐ.சி. தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

    • நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

    கொல்கத்தா :

    அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் மோசடி செய்ததாகவும், கணக்கில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

    இந்தநிலையில், இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும். அதில், சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.

    அந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். விசாரணை முடிவடையும்வரை, அன்றாட அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அனைத்து குற்றச்சாட்டுகளும் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் குழுமப் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது.
    • இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 7-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 7-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதானி குழுமப் பங்குகள் 2-வது நாளாக வெள்ளிக்கிழமை காலை கடும் சரிவுடன் வர்த்தகமானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, எல்.ஐ.சி. மற்றும் எஸ்பிஐ, அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கி 78 ஆயிரம் கோடிகளை இழந்த பின்பும் மத்திய நிதிமந்திரியும், விசாரணை அமைப்புகளும் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தி உள்ளது. இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் 4.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி. பங்குகள் ரூ.22,442 கோடியை இழந்துள்ளன. எல்ஐசி பொதுப் பணம். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின், அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசி முதலீட்டின் மதிப்பு ரூ.77,000 கோடியிலிருந்து ரூ.53,000 கோடியாகக் குறைந்துள்ளது - ரூ.23,500 கோடி இழப்பு. இருந்தபோதும் அதானி குழுமத்தில் எல்ஐசி இன்னும் ரூ.300 கோடி முதலீடு செய்வது ஏன்?

    எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்? இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் மத்திய நிதிமந்திரி ஆகியோர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். பிரதமர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும். நிதிமந்திரி விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்துக்கு கவுதம் அதானி சரிவு.
    • அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை.

    மும்பை:

    பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியதன் எதிரொலியாக, அந்தக் குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தன. மேலும், வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கியிருந்த முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதனை குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினர். இதன் காரணமாக, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டே நாட்களில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சிடைந்தது.

    இதன் மூலம், கவுதம் அதானியின் சொத்து மதிப்பிலும் ரூ.4.17 லட்சம் கோடி குறைந்ததால், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த அவர். தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னதாக, அந்த ஆய்வறிக்கை குறித்து அதானி குழுமத்தின் சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் எச்சரித்திருந்தது.

    இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், தங்களது அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை. 2 ஆண்டு கால தீவிர ஆய்வுக்குப் பிறகே அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது அதனை சட்டரீதியில் எதிர்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம் என்று சவால்விட்டது.

    தற்போது நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். பங்குச் சந்தையின் இரண்டே வர்த்தக நாள்களில் அதானி குழுமம் ரூ.4.17 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது தொழில்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    • சீரமைப்பு திட்டப்பணி அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
    • தாராவி சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

    மும்பை :

    ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மும்பை தாராவி விளங்குகிறது. தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குடிசைப்பகுதியில் உள்ள வீடுகள் புறாக்கூண்டுகளை போல சிறிது சிறிதாக இருக்கும். குடிசை வீடுகள் என்றாலும் மாடிகள் இருக்கும். ஒரு வீட்டில் பல அறைகளை உருவாக்கி மக்கள் வசித்து வருகின்றனர்.

    மும்பைக்கு பிழைப்பு தேடி வருபவர்களுக்கு தாராவி தான் சொர்க்கப்பூமி என்று சொல்லலாம்.

    இந்தநிலையில் அடுக்குமாடிகளை உருவாக்கும் தாராவி சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. கடந்த பா.ஜனதா ஆட்சியில் தாராவி சீரமைப்பு திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் துபாய் நிறுவனத்துக்கு வழங்கிய சீரமைப்பு திட்டப்பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தாராவி சீரமைப்பு திட்டப்பணிகள் முடங்கியது.

    பின்னர் ஆட்சிக்கு வந்த உத்தவ் தாக்கரே அரசு, தாராவி சீரமைப்பு திட்டத்துக்காக ரெயில்வே நிர்வாகம் நிலத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டியது. கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. அடுத்த சில நாட்களில் தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு ரெயில்வே நிலத்தை ஒப்படைத்தது.

    இந்தநிலையில் ரூ.20 ஆயிரம் கோடியில் தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் ஒருபகுதியாக சீரமைப்பு திட்டத்திற்கான டெண்டர் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதில் ரூ.5 ஆயிரத்து 69 கோடிக்கு அதானி குழுமம் டெண்டரை எடுத்துள்ளது. இதன் மூலம் தாராவி சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தாராவி அடுக்குமாடிகளாக எழப்போகிறது.

    இருப்பினும் சீரமைப்பு திட்டத்துக்கு தாராவி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இங்குள்ள ஏராளமான சிறுதொழில்கள் அழிய வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது ஒரு வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் கூட வசிப்பதால், அவர்கள் அனைவருக்கும் சீரமைப்பு திட்டத்தில் வீடு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை வசிப்பவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்காவிட்டால் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் நிலைமை ஏற்படும் என்று மக்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

    மேலும் தாராவி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடம் என்பதால், இது சர்வதேச அடையாளத்தை இழக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • வருகிற ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளது.
    • இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.

    5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியது.


    வருகிற ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.

    அந்த வகையில் இந்த ஏலத்தில் பங்கேற்க ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ள நிலையில், தற்போது அதானி குழுமமும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்மூலம் 5ஜி அலைக்கற்றையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    ×