என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லஞ்சம்"
- லால்குடி தாலுகா அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.
- கைதான துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி:
லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் மோகன். கடந்த 2002-ம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள் புரத்தில் உள்ள 94 செண்டு நிலத்தை கிரயம் பெற்றுள்ளார்.
மோகன் தனது தந்தையின் பெயரில் வாங்கி இருந்த நிலத்திற்கு உண்டான பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு மோகன் கடந்த மார்ச் 5 தேதி லால்குடி உதவி கலெக்டருக்கு விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து லால்குடி துணை தாசில்தாருக்கு அனுப்பி உள்ளார். இதனிடையே தான் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் தனது வேலை முடியாத காரணத்தால் மோகன் லால்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த துணை தாசில்தார் ரவிக்குமாரை சந்தித்தார்.
அப்போது தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு துணை தாசில்தார் ரவிக்குமார் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் உங்களது மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதாக சொல்லியுள்ளார். பின்னர் பேரம் பேசி இறுதியாக.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மோகனின் மனுவை பரிந்துரை செய்ய முடியும் என ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார். தாலுகா அலுவலகத்தில், மோகனிடமிருந்து 20 ஆயிரம் லஞ்சம் பணத்தை ரவிக்குமார் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையின் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் ரவிக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.
இதன் காரணமாக லால்குடி தாலுகா அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது. கைதான துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
- இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சயனைடு கலந்த மதுபானம் குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த சம்பவம் குறித்து
தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்த கருணாகரன் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் கருணாகரன் விசாரணை நடத்தினார்.
அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் தற்போது கிழக்கு போலீஸ் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டராக மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா கூடுதலாக கவனித்து வருகிறார்.
கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கருணாகரன் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை
- தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி, அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது பழுதடைந்து உள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து பழு தடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரியிடம் தெரிவித்தனர்.
ஆனால் டிரான்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரி ஒருவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ரூ.14 ஆயிரத்தை சில்லரை காசுகளாக சேகரித்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஒத்தவாடை தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் சில்லரை காசுகளுடன் மற்றொரு தட்டில் பூ, பழம் உள்ளிட்ட தாம்பூலத்துடன் மேளதாளத்துடன் வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மின்வாரிய அலுவலகத்தின் நுழைவு வாயில் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மேஜை என இரண்டு இடங்களில் கொண்டு வந்த சில்லரை காசு மற்றும் தாம்பூலத்தட்டை வைத்தனர். இதனை பார்த்து அலுவலகத்தில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க வினர் டிரான்ஸ்பர் மாற்ற முதல் தவணையாக ரூ.14 ஆயிரம் கொடுத்து உள்ளோம், இனியாவது வந்து டிரான்ஸ்பார்மரை மாற்றுங்கள் எனக்கூறி விட்டு அங்கிருந்த மேஜையில் சில்லரை காசை வைத்து சென்றுவிட்டனர். இதனால் அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் விழித்தனர்.
பழுதடைந்த டிரான்ஸ்பர்மரை மாற்ற அதிகாரிகள் லஞ்சம் கேட்டனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிவில் சப்ளை கார்ப்பரேசனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு சுப்பிரமணி இறந்து விட்டார். இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி சிவில் கார்ப்பரேசனில் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தார். அவர்கள் வாரிசு சான்றிதழ் கேட்டனர்.
இதையடுத்து ராஜேஸ்வரி கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் ஈரோடு கிழக்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய மனோகரன் என்பவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவர் ரூ.1000 லஞ்சமாக கேட்டார்.
இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஸ்வரி இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை ராஜேஸ்வரியிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் லஞ்ச பணத்தை வருவாய் ஆய்வாளர் மனோகரனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மனோகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
இதுதொடர்பான வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் மனோகரனுக்கு லஞ்சம் கேட்டதற்கு 1 ஆண்டும், லஞ்சம் வாங்கியதற்கு 2 ஆண்டும் என மொத்தம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து மனோகரன் அபராதத்தை செலுத்தினார். மேலும் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதித்ததால் அவர் ஜாமீனில் சென்றார்.
3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற வருவாய் ஆய்வாளர் மனோகரன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். எனவே இந்த தீர்ப்பு குறித்து நீலகிரி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் மனோகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டபட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால் சான்று வழங்காமல் அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர், விவசாயிகளை அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மேலும் ஒரு அடங்கல் சான்று வழங்க விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக ரூ.100 வசூலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் விவசாயி ஒருவர் பயிர் காப்பீடு அடங்கல் சான்று பெறுவதற்கு சென்றதும் அதற்கு வி.ஏ.ஓ. ரூ.100 லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.
மேலும் அந்த வீடியோவில் ரூ.100 லஞ்சம் வாங்குவதை கிராம நிர்வாக அலுவலர் ஒப்புக்கொள்ளும் காட்சியும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே வி.ஏ.ஓ. மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூவிழிராஜா. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் எலச்சிபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் (வயது 48) மனு கொடுத்தார். ஒரு மாத காலமாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் பரமேஸ்வரன் காலம் தாழ்த்தி வந்தார்.
இதுகுறித்து சூவிழிராஜா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் கேட்டார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்க முடியும் என்று கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சூவிழிராஜாவிடம் வழங்கினர். அவர் போலீசார் கூறியப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் ரூ.5 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் வழங்கினார். அதனை அவர் பெற்றுக் கொண்டார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிகிச்சை அளிக்க லஞ்சம் பெறுகின்றனர் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசின்தாஜ் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனாலும் அங்கு பணிபுரியும் நர்சு ஒருவர் இதற்காக 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த லஞ்ச பணத்தை உதவியாளர் ஒருவர் பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து நோயாளியின் உறவினர் வாணியம்பாடி மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
ஏழ்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறோம். இங்கும் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்கின்றனர். பணம் வாங்கியவர் மீது புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என புகார் தாரர்கள் வேதனையுடன் கூறினர்.
இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்தவர், ரவிசந்திரன். இவர் ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விட்டதில், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவன அதிபரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டார். ஆனால் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல், சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். அவரை கையும், களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதன் அடிப்படையில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அந்த நிறுவனத்தின் அதிபர், நேற்று ரவிசந்திரனிடம் வழங்கினார். அப்போது அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாய்ந்து சென்று ரவிசந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். மேலும், சென்னை மற்றும் டெல்லியில் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்