search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.கே. ஜெயக்குமார் எம். பி., துரை.சந்திரசேகர் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாக வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் உள்பட காங்கிரசார் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    பூந்தமல்லி:

    ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஏப்.15-ம் தேதி ஆவடியில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

    இது குறித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் டி.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மீது மத்திய பா. ஜனதா அரசு பொய் வழக்கு போட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வருகிற நாளை (15-ந்தேதி ) மாநில தலைமையின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆவடி ரெயில் நிலையத்தில் எனது தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.கே. ஜெயக்குமார் எம். பி., துரை.சந்திரசேகர் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஊர்வலமாக வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் உள்பட காங்கிரசார் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பாராளுமன்றத்தில் பல்வேறு மோசடிகள் குறித்து விசாரணை கமிஷன்
    • ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பை ரத்து செய்யும் வரை போராட்டம்

    நாகர்கோவில் :

    குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்த்தாண்டத்தில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட் டத்திற்கு குழித்துறை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்டத் தலைவர் டாக்டர்.பினுலால்சிங் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்றத்தில் பல்வேறு மோசடிகள் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என 16 - நாட்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினோம்.ஆனால் மோடி அரசுக்கு பயம் ஏற்பட்டுள்ளதால், விவாதத்திற்கே வரவில்லை, கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. இந்தியா ஜனநாயக நாடு என நாம் கூறிக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால் இங்கு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக போராட்டம் நடத்த வேண்டும். ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்த வேண்டும்.2024 -ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தியை கொண்டு வர பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ் மற்றும் வட்டார தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு தலைவர்கள் உள்பட பலர் கொண்டனர்.

    • எதிர்க்கட்சியினர் மீதுதான் 95 சதவீத வழக்குகள் போடப்பட்டுள்ளன.
    • வெறுப்புணர்வு, வன்முறை பெருகி வருவதை பிரதமர் கண்டு கொள்வதில்லை.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கடந்த மாதங்களில் பிரதமர் மோடியும், அவரது அரசும் இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களை (பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை) முறையாக அகற்றி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

    சமீபத்திய பாராளுமன்ற நிகழ்வுகளை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த அமர்வில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், சமூக பிரிவினைகள் போன்றவற்றை எழுப்பவிடாமல் எதிர்க்கட்சிகளை தடுக்கவும், பட்ஜெட் மற்றும் அதானி விவகாரத்தையும், பிற முக்கிய பிரச்சினைகளையும் விவாதிக்கவும் விடாமல், மத்திய அரசு மேற்கொண்ட உத்திகளே பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததைப் பார்த்தோம்.

    எதிர்க்கட்சிகளின் உறுதியான நிலைப்பாட்டினால், நரேந்திர மோடி அரசு இதுவரை இல்லாத வகையில், அவைக்குறிப்பில் இருந்து பேச்சுகளை நீக்கியது, விவாதங்களைத் தடுத்தது, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கியது, இறுதியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவியை மின்னல் வேகத்தில் பறித்தது. இவற்றின் விளைவாக ரூ.45 லட்சம் கோடி அளவிலான மக்கள் பணத்துடனான மத்திய பட்ஜெட்டை விவாதமே இன்றி நிறைவேற்றினர்.

    சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஆகியவற்றை நரேந்திர மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் மீதுதான் 95 சதவீத வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் வழக்குகளுக்கு ஆளாகிறவர்கள், பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் அந்த வழக்குகள் அதிசயமாக காணாமல் போகின்றன.

    நீதித்துறையை பலவீனப்படுத்த முறையாக முயற்சிகள் செய்வது முக்கிய கட்டத்துக்கு வந்துள்ளது. முன்னாள் நீதிபதிகளை தேசவிரோதிகள் என்று சட்ட மந்திரி சொல்கிறார். அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியது வரும் என்று மிரட்டுகிறார்.

    வாய்களை வலுக்கட்டாயமாக அடைப்பதால் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாது. கோடானு கோடி மக்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய சட்டப்படியான கேள்விகளுக்குக்கூட பிரதமர் பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறார். நிதி மந்திரி தனது பட்ஜெட் பேச்சில் வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, பணவீக்கம் குறித்தோ குறிப்பிடவில்லை. அவரது மவுனம், கோடானு கோடி மக்கள் தங்கள் அன்றாட அத்தியாவசியப்பொருட்களான பால், காய்கறிகள், முட்டை, சமையல் கியாஸ், சமையல் எண்ணெய் போன்றவற்றை வாங்க முடியாமல் அல்லாடி வருவதற்கு உதவாது.

    2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்ட பிரதமர், வசதியாக மவுனமாகி விட்டார். வெறுப்புணர்வு, வன்முறை பெருகி வருவதை பிரதமர் கண்டு கொள்வதில்லை.

    சீனாவுடனான எல்லைப்பிரச்சினை தொடர்கிறது. ஆனால் சீனாவின் ஊடுருவலை பிரதமர் மறுக்கிறார். இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க விடாமல் அரசு தடுக்கிறது. பிரதமரின் தீவிர முயற்சிகளுக்கு அப்பாலும், இந்திய மக்கள் அமைதியாகிவிட மாட்டார்கள். அவர்கள் வாயை அடைத்து விட முடியாது, அடுத்த சில மாதங்கள் நமது ஜனநாயகத்துக்கு கடுமையான சோதனையான காலம் ஆகும்.

    காங்கிரஸ் கட்சி மக்களிடம் நேரடியாக செல்வதற்கான முயற்சிகளை எடுக்கும். அரசியல் சாசனத்தையும், அதன் லட்சியங்களையும் பாதுகாப்பதற்கு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் செய்தது போல ஒருமித்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கரம் கோர்க்கும்.

    எங்களுடைய போராட்டம், நாட்டு மக்களின் குரலைப் பாதுகாப்பதற்கானது. எதிர்க்கட்சியாக தனது கடமையை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. அதை நிறைவேற்றுவதற்காக ஒருமித்த எண்ணம் கொண்ட எல்லா கட்சிகளுடன் இணைந்து பாடுபடத் தயார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எதிர் தரப்பில் இருந்த காங்கிரசார் வருங்கால பிரதம மந்திரி ராகுல் காந்தி என கோஷம் எழுப்பினர்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    நெல்லை:

    நாகர்கோவிலில் கடந்த 3-ந் தேதி பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட சென்ற காங்கிரசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நெல்லை மாவட்ட முன்னாள் பா.ஜனதா தலைவர் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து பாளை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

    இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை பாளை ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர்களை வரவேற்க குமரி, நெல்லை மாவட்ட பா.ஜ.கவினர் மற்றும் காங்கிரசார் மத்திய சிறைச்சாலை முன் குவிந்தனர்.

    முதலில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர்களை சால்வை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது எதிர் தரப்பில் இருந்த காங்கிரசார் வருங்கால பிரதம மந்திரி ராகுல் காந்தி என கோஷம் எழுப்பினர். பா.ஜ.க.வினரும், காங்கிரசாரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் தலைமையில் போலீசார் இரு கட்சி நிர்வாகிகளையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து 2 கட்சி தொண்டர்களும் கலைந்து சென்றனர்.

    • இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பினரும் காயமடைந்தனர்.
    • மோதல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 22 பேர் மீதும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ் உட்பட 31 மீதும் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஆரல்வாய்மொழி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செட்டிகுளம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

    அப்போது பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடியை கண்டித்து கோஷங் களை எழுப்பி னார்கள். இதனால் பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 22 பேர் மீதும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ் உட்பட 31 மீதும் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜன் மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ், ஜோஸ்லின் ஜெலின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை விசாரித்த கோர்ட் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. 6 பேரும் தினமும் காலை, மாலை கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து இன்று காலை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன், ஜோஸ்லின் ஜெலின் ஆகிய6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.விடுவிக்கப்பட்ட நிர்வாகிகள் பாளையங்கோட்டையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தனர். இைதயடுத்து ஆரல்வாய்மொழியில் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராஜா, இன்ஸ்பெக்டர்கள் ராமர், கோபி அகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது போலீசார் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா நிர்வாகிகளின் வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட கார்களில் வந்திருந்தனர். 5 கார்களை மட்டுமே அனுமதிப்போம் என்று போலீசார் தெரிவித்தனர். மற்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். முதலில் 5 கார்கள் சென்ற பிறகு மற்ற கார்களை போலீசார் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பிரச்சினைகள் எதுவும் நடை பெறாமல் இருக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • வயநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • டெல்லியை விட்டு வெளியே வந்து பிரியங்கா பேசுவது இதுவே முதல் முறை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கின் முடிவை பொறுத்துதான் ராகுல்காந்தி தேர்தலை சந்திக்க முடியுமா? முடியாதா? என்பது தெரியவரும்.

    வழக்கில் கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல் தேர்தலை சந்திக்க கட்சியையும் தயார்படுத்த வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக பிரியங்காவையும் முன்னிலை படுத்த வேண்டும் என்று பலரும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    பிரியங்காவும் முழு நேர அரசியலுக்கு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. டெல்லியில் நடந்த போராட்டங்களில் அவரும் பங்கேற்று ஆவேசமாக பேசினார்.

    ராகுல்காந்தி வயநாடு எம்.பி.யாக பதவி வகித்தவர். பதவி பறிக்கப்பட்ட பிறகு தொகுதியில் மக்களை சந்திக்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டது.

    அதன்படி வயநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுபற்றி கேரள மாநில பொறுப்பாளரும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன் கூறியதாவது:-

    ராகுல்காந்திக்கு ஆதரவாகவும், மோடியை கண்டித்தும் கேரளா முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தீப்பந்தங்கள் ஏந்தி எழுச்சியுடன் போராடி வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆர்.எஸ்.பி.ஜே.டி. (எஸ்) உள்ளிட்ட 7 கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் கலந்து கொள்ள விமானத்தில் கோழிக்கோடு வரும் ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாடு வருகிறார். அவருடன் பிரியங்காவும் கலந்து கொள்கிறார்.

    டெல்லியை விட்டு வெளியே வந்து பிரியங்கா பேசுவது இதுவே முதல் முறை. இது பிரியங்காவையும் தேசிய அரசியலில் முன்னிலை படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் கே.சுதாகரன், கே.சு.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பி.விஸ்வநாதன் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

    • ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும் என ஆசாத் பேச்சு
    • குலாம் நபி ஆசாத்தின் விமர்சனம் துரோகத்தின் வெளிப்பாடாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம்

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம்நபி ஆசாத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியும் அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர் என்றும், இதை தன்னால் ஆதாரபூர்வமாக சொல்ல முடியும் என்றும் கூறினார்.

    ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும். வெளிநாட்டுக்கு போய் அவர் யாரை சந்திக்கிறார் என்று என்னால் ஆதாரத்துடன் தகவல் தர முடியும் என்றும் குலாம் நபி ஆசாத் பேசியிருந்தார்.

    அவரது பேச்சு காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகள் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத்தின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பலர், குலாம் நபி ஆசாத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். நேரு-காந்தி குடும்பத்தால் அவர் அனுபவித்த சுமார் 40 ஆண்டு கால பதவிகள் குறித்தும் குலாம் நபி ஆசாத் பேசியிருக்க வேண்டும் என கூறி உள்ளனர். குலாம் நபி ஆசாத்தின் விமர்சனம் துரோகத்தின் வெளிப்பாடாக உள்ளது என்றும், அவர் நேரு-காந்தி குடும்பத்திற்கு நன்றியில்லாதவராக மாறிவிட்டார் என்றும் கூறி உள்ளனர்.

    • பிரதமர் மோடி இன்று புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார்.
    • வருகிற 16ம் தேதி அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்த கோலாரில் நீதிகேட்டு 'மகாத்மா காந்தியின் வாய்மையே வெல்லும்' என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த கர்நாடக காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. மேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ராகுல் காந்தியின் முதல்கூட்டமாகவும் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக அந்த பொதுக்கூட்டம் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து 6ம் தேதிக்கும், பின்னர் 9ம் தேதிக்கும், தொடர்ந்து 10ம் தேதிக்கும் மாற்றப்பட்டு இருந்தது. ஆனால் 9ம் தேதி (இன்று) பிரதமர் மோடி புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார்.

    இதனால் இன்று கோலாரில் நடக்க இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் தேதி 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது வருகிற 16ம் தேதி அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • வாய்மொழி அவதூறு குற்றச்சாட்டிற்காக ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது அதிகார துஷ்ப்ரயோகத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு.
    • குஜராத்தில் வழக்கு தொடுத்தவரே அதற்கு தடை வாங்கிய நிலையில் திட்டமிட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதாக சாடினார்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணை தலைவர் சதா சிவலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

    அதானி ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பாராளுமன்றத்தில் பேச கூடாது என்பதாலேயே ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். தடை கோரப்பட்ட வழக்கை தூசி தட்டி ஒரே மாதத்தில் தண்டனை விதித்து அடுத்த நாளே தகுதி நீக்கம் செய்துள்ளதாக சாடினார். ராகுல்காந்தி வழக்கில் நீதிபதியை மாற்றி தீர்ப்பு பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ராகுல்காந்தியை அரசியலில் இருந்து ஒழித்து விடலாம் என்பது ஏளனத்திற்குரியது என்றார். ராகுல் காந்தியின் நடை பயணத்தால் ஏற்பட்ட எழுச்சியை கண்டு பாஜக அஞ்சி நடுங்குவதாகவும், அதனொரு பகுதியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

    வாய்மொழி அவதூறு குற்றச்சாட்டிற்காக ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது அதிகார துஷ்ப்ரயோகத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு எனவும் சாடினார். குஜராத்தில் வழக்கு தொடுத்தவரே அதற்கு தடை வாங்கிய நிலையில் திட்டமிட்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதாக சாடினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கார்த்திகேயன், யுகேந்தர், சந்திரசேகர், கோவர்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கூட்டு சாலையில் இந்திய தேசிய காங்கிரஸ், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ், சோழவரம் வடக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு புனைந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் மத்திய மோடி அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்தும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாநில விவசாய பிரிவு செயலாளர் வி.தாயளன் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மாவட்ட துணை தலைவர்கள் கோபி கிருஷ்ணன், கே.எம்.சந்திரசேகர், வட்டார தலைவர்கள் சீமாவரம் கோவிந்தராஜ், சிறுவாபுரி உமாபதி, நகர தலைவர்கள் ஆரணி சுகுமார், பொன்னேரி கார்த்திகேயன், மகிளா காங்கிரஸ் தொகுதி தலைவர் எழிலரசி மற்றும் ஹேமலதா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வினோத், கண்ணைய்யா, ரமேஷ், ரோஸ், மணி, வசந்த், பிரபு உள்ளிட்டோர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

    • தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை உருவாக்கி இருக்கிறது. கடந்த 2 பொதுத் தேர்தல் களில் பா.ஜனதாவிடம் படு தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    கடந்த 2 தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான தோல்வி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலகி நிற்கும் நிலையில், கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே காங்கிரசுக்கு தலைமை பொறுப்பேற்று அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டினால் மட்டுமே பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்ற நிர்ப்பந்தமான நிலையில் காங்கிரஸ் கட்சி சிக்கியுள்ளது. கார்கே பொறுப்பேற்றதும், இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை.

    இதனால் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்று திரளுமா? என்பதில் கேள்வி குறி எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தியிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக 19 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற வளாகத்திலும் போராட்டங்கள் நடத்தின.

    ராகுல் பதவி பறிப்பு விவகாரத்தில் கைகோர்த்த எதிர்க்கட்சிகளை அப்படியே பாராளுமன்றத் தேர்தல் வரை ஒருங்கிணைத்து கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் 2 தினங்களுக்கு முன்பு தொடங்கின.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசத் தொடங்கி உள்ளார். குறிப்பாக மாநிலங்களில் பலத்த செல்வாக்குடன் இருக்கும் கட்சிகளுடன் கார்கே பேசி இப்போதே ஒரு முடிவுக்கு வர திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் இந்த வார தொடக்கத்தில் இருந்து பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார்.

    தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கார்கே விவாதித்ததாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தெலுங்கானா கட்சிகளை எப்படி பேசி சமாளிப்பது என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் காங்கிரசுக்கு மிக முக்கிய பலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வார் என்று கருதப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசிய பிறகு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். விரைவில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய கூட்டம் நடத்த கார்கே ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    • ராகுல் காந்தியின் பதவி பறிப்பிற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 15-ந்தேதி 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
    • குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் இரணியில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகத்தின் குரல் வளையத்தை அறுக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதற்கு பழிவாங்க வேண்டும் என்று ராகுல் காந்தி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்பட்டுள்ளது. மத்தியில் உள்ளவர்கள் அடக்குமுறை அரசியல் நடத்தி வருகிறார்கள். ராகுல் காந்தியின் பதவி பறிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பிரதமர் மோடி தன்னுடைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அறவழியில் நாங்கள் போராடி வருகிறோம். உயிர் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்தி ஜெயிலுக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம்.

    ராகுல் காந்தியின் பதவி பறிப்பிற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 15-ந்தேதி 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது. குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் இரணியில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும்.

    நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறை ரெயில் நிலையத்திலும் போராட்டம் நடத்தப்படுகிறது.

    காங்கிரஸ் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செட்டிகுளம் நோக்கி ஊர்வலமாக சென்றபோது பா.ஜனதா அலுவலகத்திற்கு முன்பு வைத்து தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்திற்குரியதாகும். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் கே.டி.உதயம், நவீன் குமார், பினுலால் சிங், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏற்றி வந்தனர்.
    • பா.ஜ.க. அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநில நிர்வாகிகள் பேசினார்கள்.

    சென்னை:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவதால் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்தார்.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் இந்த எதிர்ப்பு போராட்டத்தை இன்று நடத்த திட்டமிட்டனர். இதற்கிடையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நேற்று இரவே காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் போலீசாரிடம் போராட்டத்தில் பங்கேற்க மட்டும் அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி சென்னையில் உள்ள 6 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் வீட்டுக்காவலில் இருந்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கருப்பு கொடி போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதமர் மோடி பிற்பகல் 2.40 மணிக்கு வருவதால் போராட்டத்தை மதியம் 1 மணிக்கு நடத்த காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். பகல் 12 மணிக்கு மேல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவராக போராட்ட களத்திற்கு வரத் தொடங்கினார்கள். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருப்பு சட்டை அணிந்து வந்தார். அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லப பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, அசன் ஆருண், துரை சந்திரசேகர், கே.வி.தங்கபாலு, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, சிரஞ்சீவி, ரஞ்சித் குமார், விஜயசேகர், ரவிராஜ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜ் ராஜசேகரன், முத்தழகன், டெல்லி பாபு, ரஞ்சன் குமார், அடையார் துரை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.

    இதற்காக அங்கு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏற்றி வந்தனர். பா.ஜ.க. அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநில நிர்வாகிகள் பேசினார்கள். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    முதலில் கே.எஸ்.அழகிரி மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். தொண்டர்கள் அவற்றை பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

    கருப்பு கொடி போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டு இருந்தது. மேடையை சுற்றி இரும்பு தடுப்புவேலி அமைத்து அதற்குள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். போராட்ட களத்தில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியே செல்லாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பஸ்சும், வேன்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்ரியன், து.வெ.வேணு கோபால் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ×