என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96042"
கோவை:
கோவை போத்தனூர் அருகே உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மகன் ஜான் பிரிட்டோ (வயது 28). பெயிண்டர். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
நேற்று இரவு ஜான் பிரிட்டோ தனது நண்பரான பிரவீன் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அங்கு இருந்த போத்தனூரை சேர்ந்த காட்வின்ராஜ், மில்டன், குட்டி ஆகியோருக்கும், ஜான் பிரிட்டோவுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். ஜான் பிரிட்டோ தாக்கியதில் காட்வின்ராஜூக்கு வயிறு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அங்கு இருந்தவர்கள் 2 கும்பலையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஜான் பிரிட்டோவை அவரது நண்பர் பிரவீன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த காட்வின்ராஜ், மில்டன், குட்டி ஆகியோர் இவர்களது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து விரட்டி வந்தனர். ஜான் பிரிட்டோ மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல முயன்ற போது விரட்டி வந்த கும்பல் அவரை வயிறு மற்றும் மார்பில் கத்தியால் குத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இதில் நிலைகுலைந்த ஜான் பிரிட்டோ ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது வீட்டில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜான் பிரிட்டோவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜான்பிரிட்டோவை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய காட்வின்ராஜ், மில்டன், குட்டி ஆகியோரை தேடி வந்தனர்
இந்தநிலையில் ஜான் பிரிட்டோ தாக்கியதில் படுகாயம் அடைந்த காட்வின் ராஜ் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது.மேலும் தலைமறைவாக உள்ள மில்டன், குட்டி ஆகியோரை போத்தனூர் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற் சாலையில் பீகார் மாநிலம் சிக்கந்தரா மண்டலத்தைச் சேர்ந்த சச்சின்குமார் (வயது 22). தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார்.
அவரது வீட்டின் அருகே ஒடிசாவைச் சேர்ந்த அஜய் உள்பட சில தொழிலாளர்களும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜய்யின் செல்போன் திருட்டு போனதாக தெரிகிறது. அதனை பக்கத்து வீட்டில் தங்கி இருந்த வடமாநில வாலிபர் ராஜேஷ் திருடியதாக அஜய் தகராறில் ஈடுபட்டார்.
இதனை அறிந்து சச்சின்குமார் அங்கு வந்தார். அவர் ராஜேசுக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சச்சின் குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சச்சின்குமார் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜய், அவரது நண்பர்கள் அர்ஜுன், ரமித்குமார் உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள பிச்சாண்டவர் கோவிலை சேர்ந்தவர் அப்துல்லா (வயது35). ஆட்டோ டிரைவராக இருந்தார். நேற்று திருவானைக்காவலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அப்துல்லா சவாரி ஏற்றிச்சென்றார்.
அப்போது திருவானைக்காவல் டிரங்ரோட்டில் மண்டபத்தின் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சவாரிக்கு வந்த ஒரு பெண் 30 பொட்டலம் பிரியாணி வாங்க டோக்கன் வாங்கியுள்ளார். ஆனால் மண்டபத்திற்கு சென்று பார்த்துபோது 28 பொட்டலங்களே இருந்துள்ளது. இதனால் மீண்டும் பிரியாணி கடைக்கு சென்று அந்த பெண் பிரியாணி கடை மேனேஜரிடம் கேட்டுள்ளார்.
அப்போது கடையில் இருந்தவர்களுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே வெளியில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் அப்துல்லா அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதை கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்பேத்கார் நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடைக்காரர்களுக்கு ஆதரவாக பேசி அப்துல்லாவிடம் தகராறு செய்துள்ளார்.
பிரியாணி பிரச்சினை பெரிதாவதை பார்த்த அந்த பெண் அங்கிருந்து பயந்து கொண்டு சென்றுவிட்டார். இதற்கிடையே நாகராஜூம், அப்துல்லாவும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனது நண்பர்கள் தயாளன் என்ற ஸ்ரீராம், முன்னா,கோகுல்நாத் என்ற பாரதி ஆகியோரை அழைத்து வந்த நாகராஜ் அப்துல்லாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இதில் அப்துல்லா மயங்கி விழுந்தார். உடனே 4 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர். அடிபட்டு கிடந்த அப்துல்லாவை அவரது நண்பர் முஸ்தபா அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது முதலில் கீழே விழுந்ததால் காயம்பட்டதாக டாக்டரிடம் கூறும்படி முஸ்தபாவிடம் அப்துல்லா கூறியுள்ளார். இதனால் டாக்டர்கள் உரிய சிகிச்சையை உடனே அளிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
ஆனால் 4 பேரும் நெஞ்சில் மிதித்ததால் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அப்துல்லா பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரியாணி கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை பார்த்தபோது அதில் நாகராஜூம் அவரது நண்பர்களும் அப்துல்லாவை அடித்து உதைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்படி நாகராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது நண்பர்களான தயாளன், முன்னா, பாரதி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
பிரியாணி பிரச்சினையில் தலையிட்டு கடைசியில் அப்பாவி ஆட்டோ டிரைவர் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. கொலை செய்யப்பட்ட அப்துல்லாவிற்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது45). துப்புரவு தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது உறவினருடன் நாகல்நகர் பகுதிக்கு வந்தார். பின்பு அவர் தனியாக வீட்டுக்கு திரும்பினார். நாகல்நகர் அரண்மனைக்குளம் அருகே சென்றபோது ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 2 பேர் திடீரென ஆறுமுகத்தை கத்தியால் குத்தினர்.
இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
ஆறுமுகம் கொலைக்கு காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மது குடிக்கும் தகராறில் நண்பர்களே ஆறுமுகத்தை கொலை செய்தது தெரிய வந்தது. ஆறுமுகத்தின் நண்பர்கள் காளிதாஸ், மாரியப்பன். இவர்களும் ஆறுமுகத்துடன் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மதுக்கடை பார்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் 3 பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று இது போல் பிளாஸ்டிக் கழிவுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து மது குடித்தனர். அப்போது காளிதாஸ் ஆறுமுகத்திடம் ரூ.20 பணம் கேட்டார். அதற்கு ஆறுமுகம் மறுத்தாராம். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் மதுக்கடை பாரில் வைத்து கைகலப்பில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். எனினும் காளிதாசுக்கு ஆத்திரம் தீரவில்லை.
இந்நிலையில் பாரை விட்டு வெளியே வந்ததும் ஆறுமுகம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது காளிதாசும் மாரியப்பனும் வந்து ஆறுமுகத்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து காளிதாஸ், மாரியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ரூ.20 பணம் கேட்டதற்கு ஆறுமுகம் தர மறுத்து தங்களை தாக்கியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாலதி. இருவரும் சென்னை கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை பணிகள் செய்து வந்தனர்.
அப்போது அப்பகுதி ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவருடன் மாலதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதை அறிந்த நாகராஜ் கடந்த 1-ந் தேதி தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து கள் விருந்து எனக்கூறி ஜெகனை மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்த வழக்கில் மாமல்லபுரம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். ஆந்திராவுக்கு தப்பி ஓடிய நாகராஜை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்க்ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் டிராண்ட் (வயது 47). இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் (41). 2010-ம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.
அவரது உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த கொலை வழக்கு லண்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது. உடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். இது மிகவும் கொடூரமானது. அவருக்கு குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
திருப்பூர் சரங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சரசு (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரசு மகனை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சிவக்குமார் தனது தாய் ரத்தினம்மாளுடன் வசித்து வந்தார்.
ரத்தினம்மாள் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். முதல்மாடியில் வசித்து வருகிறார். தனியே வசிக்கும் மகனுக்காக வாடகை வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி தந்தார். அதில் அவர் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்த ரத்தினம்மாள் நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் சிவக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் நவீன்குமார், திருப்பூர் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சிவக்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலையாளி அல்ல என்பதை போலீசார் அறிந்து அவரை விடுவித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணையை வேறு கோணத்தில் அணுகினர். கொலையான சிவக்குமாரின் நீண்ட நாள் நண்பர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, நேற்று காலை புதுக்காடு என்ற பகுதிக்கு நான் மது குடிக்க சென்றேன். அப்போது கொலையான சிவக்குமாரின் தப்பி ரமேஷ் மதுக்குடிக்க வந்தார். காலையில் அவர் மதுக்குடிக்க மாட்டார். ஏன் காலையிலேயே மதுக்குடிக்க வந்தாய்? என்று கேட்டபோது ரமேஷ் என்னிடம் எனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியாக உள்ளதால் மது குடிக்க வந்தேன் என்று கூறினார். நீண்ட நாள் நண்பர் என்பதால் நான் ஓடி வந்து வீட்டில் பார்த்தபோது சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது என்று போலீசில் தகவல் கூறினார்.
இதனையடுத்து போலீசார் கொலையான சிவக்குமாரின் தம்பி ரமேசை பிடித்து விசாரணை நடத்தினர். ரமேஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணையில் சிவக்குமாரை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக்கொண்டார்.
போலீசில் அவர் கொடுத்து வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தோம். மாடியில் நாங்கள் குடியிருந்து வருகிறோம். குடிப்பழக்கத்தால் மனைவி, மகனை பிரிந்த அண்ணன் வசிக்க 3 வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் அண்ணன் தினமும் குடித்து விட்டு வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்தார். கொலையான முதல்நாள் இரவும் தகராறு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அண்ணன் வீட்டில் இருந்தார். தகராறு செய்ததை தட்டிக்கேட்க சென்றேன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் என்னை குத்த கத்தியை எடுத்து வந்தார். சுதாரித்துக்கொண்ட நான் கத்தியை அவரிடம் இருந்து பறித்து அவரை 10 முறை சரமாரியாக குத்தினேன். அப்போது அக்கம் பக்கத்தினர் வேலைக்கு சென்றிருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.
கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் அண்ணன் இறந்து விட்டார். அவர் இறந்த பின்னர் கதவை லேசாக சாத்திவிட்டு நான் வீட்டுக்கு சென்று விட்டேன். கொலையில் இருந்து தப்பிக்க விடிய விடிய திட்டமிட்டேன்.
விடிந்ததும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற அம்மா ரத்தினம்மாள் ஊர் திரும்பி விட்டதாகவும், தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு போனில் கூறினார். இதனையடுத்து நான் மோட்டார் சைக்கிளில் தாயை அழைத்துக்கொண்டு வீட்டில் இறங்கி விட்டு விட்டு புதுக்காடு மதுக்கடைக்கு சென்றேன். அங்கு நான் பதட்டமாக இருப்பதை பார்த்த அண்ணனின் நண்பர் விசாரித்தார். அப்போது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினேன். அண்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து தாய் கதறியதையடுத்து சம்பவம் வெளியே தெரிந்தது.
உடனே வீட்டுக்கு சென்று நான் போலீசில் புகார் செய்தேன். போலீசார் வாடகைக்கு குடியிருந்த வாலிபரை விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் நான் தப்பித்து விட்டேன் என்று நம்பினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து போலீசார் ரமேசை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையான சில மணி நேரங்களிலேயே கொலையாளியை கண்டுபிடித்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள முறுக்கோடை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பெருமாயி. இவர்களுக்கு பட்டுராஜன் (வயது26), சவுந்தர்ராஜன் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆக வில்லை.
பட்டுராஜன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தனது வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் தனது சேர வேண்டிய சொத்தை பிரித்து எழுதி தரும்படி தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று மாலை வழக்கம் போல் போதையில் வந்த பட்டுராஜன் சொத்து கேட்டு தனது தாயிடம் தகராறு செய்தார். சொத்தை எழுதி தராவிட்டால் தாய் மற்றும் தம்பியை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என மிரட்டினார்.
பின்னர் வீட்டு திண்ணையில் தூங்கி விட்டார். அதன் பின் வீட்டுக்கு வந்த சவுந்தர்ராஜனிடம் தாய் நடந்த விபரங்களை கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவர் தூங்கிக் கொண்டு இருந்த தனது அண்ணன் பட்டு ராஜன் தலையில் கல்லைப் போட்டார். பலத்த காயங்களுடன் அவரை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.
பெரம்பூர்:
சென்னை வியாசர்பாடி காந்தி நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. குடுகுடும்ப்பைகாரர். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் வெங்கடேசன். ஆட்டோ டிரைவர்.
குப்புசாமிக்கும், வெங்கடேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது குப்புசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்து வெங்கடேசனை குத்த முயன்றார். வெங்கடேசன் அவரிடம் இருந்து கத்தியை பறித்து குப்புசாமியை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த குடுகுடுப்பைக்காரர் குப்புசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அது, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 2 மாநிலங்களில் முதல்-மந்திரி பதவி வகித்த ஒரே தலைவர் என்ற பெருமைக்குரிய என்.டி. திவாரியின் மகன், 40 வயதான ரோகித் சேகரின் படுகொலைதான். படு சுறுசுறுப்பு டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீஸ். இந்த படுகொலையை அரங்கேற்றியவர், சாட்சாத் ரோகித் சேகரின் மனைவி அபூர்வா என்பதை மின்னல் வேகத்தில் கண்டு பிடித்து இருக்கிறது.
அதிலும் குறிப்பிடத்தகுந்த அம்சம், ரோகித் சேகர் கழுத்து நெரிக்கப்பட்டும், மூச்சு திணறடிக்கப்பட்டும்தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்த அதே நாளில், போலீசின் கழுகுப்பார்வை அபூர்வாவின் மீதுதான் விழுந்தது. ஆனாலும் இந்த கொலையை அபூர்வா எதற்காக செய்தார் என்பது மட்டும்தான் புரியாத புதிராக அவர்களுக்கு அமைந்தது. விடவில்லை. துப்பு துலக்கி விட்டார்கள்.
அபூர்வா, எப்படி திருமதி ரோகித் சேகர் ஆனார் என்பதே ஒரு சுவாரசியமான கதைதான். என்.டி.திவாரி, உஜ்வாலா என்ற பெண்ணுடன் வைத்திருந்த சட்டப்பூர்வமற்ற உறவால் வந்து பிறந்தவர்தான் இந்த ரோகித். ஆனால் அவரை தனது மகன் என அவர் ஏற்கவில்லை. ரோகித் விடாமல் 6 ஆண்டு காலம் சட்ட போராட்டம் நடத்தினார். என்.டி.திவாரியின் கழுத்தைப் பிடித்தது கோர்ட்டு, மரபணு பரிசோதனைக்கு அவர் சம்மதித்தே தீர வேண்டும் என்ற நிலை வந்தபோதுதான் மனிதர் இறங்கி வந்தார். ‘‘நீ என் மகன்தான் ரோகித்’’ என்று ஒப்புக்கொண்டார். அப்படி தனது தந்தை யார் என்று வெளியுலகுக்கு நிரூபித்துக் காட்டிய மகனுக்கு திருமணம் முடித்து வைக்க ஆசைப்பட்டார், அம்மா உஜ்வாலா.
இப்போதுதான் ஆன்லைன் இருக்கிறதே, தேடிப்பார்ப்போம் என ரோகித் களம் புகுந்தார். திருமண இணையதளம் ஒன்றில் அபூர்வாவை அவர் கண்டுபிடித்தார். அபூர்வாவின் அழகில் ‘கிளீன்போல்டு’ ஆனார். அவர் சட்டம் படித்த வக்கீல் என்பது கூடுதல் பிளஸ். அம்மா உஜ்வாலாவிடம், ‘‘அம்மா.. இதோ உங்கள் வருங்கால மருமகள்’’ என அபூர்வாவின் சுய விவர குறிப்புகள், புகைப்படத்தை நீட்டினார். அதைத் தொடர்ந்து அபூர்வாவை நேரில் சந்திக்க முடிவு செய்தார்.
ஒரு மழை நாளில் இருவரும் உத்தரபிரதேச மாநிலம், லக்னோ நகரில் சந்தித்தனர். இருவரும் மனதளவில் ஒரே அலை வரிசையில் இருப்பதாக உணர்ந்தனர். முதல் நாளிலே நெருக்கம் உண்டானது. இருவரும் ஒன்றாகவே வாழத்தொடங்கினர். நவீன உலகம் அல்லவா? திருமணம் முடிக்காமலேயே ஓராண்டு காலம் இணைந்து வாழ்ந்தனர்.
ஒரு வழியாக கடந்த ஆண்டு மே மாதம் 12-ந் தேதி டெல்லி நட்சத்திர ஓட்டலில் சம்பிரதாயப்படி திருமணம் செய்து கொண்டனர். டெல்லி அரசியல்வாதிகள் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை அத்தனை பேரும் ஆஜராகி, ரோகித்-அபூர்வா ஜோடி மீது வாழ்த்துக்களை மழையாய் பொழிந்தனர். மகனின் திருமண விழா காட்சிகள், தாய் உஜ்வாலாவுக்கு கண் கொள்ளாக்காட்சிகள் ஆயின.
அதைத் தொடர்ந்து டெல்லியில் உயர் வர்க்கத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்கிற டிபன்ஸ் காலனியில் அமைந்துள்ள ரோகித் சேகரின் வீட்டுக்கு விளக்கேற்ற போனார் அபூர்வா. யார் தான் எதிர்பார்ப்பார்கள், இப்படி ஒரு அழகான, அம்சமான, உயர் வர்க்கத்து ஜோடியின் சந்தோஷம் நீடிக்காது என்று. ரோகித்துக்கும், அபூர்வாவுக்கும் தேனிலவே குருஷேத்திரக்களமாக மாறிப்போனது.
வேறொன்றும் இல்லை. ரோகித்துக்கு உறவிலும் ஒரு காதலி உண்டு என்று அபூர்வாவுக்கு தெரிய வந்தது. அதுமட்டுமல்ல, அந்தப் பெண்ணைத் தேடி அவளது வீட்டுக்கு ரோகித் அடிக்கடி செல்வார் என்பது வரை ‘ஏ டூ இசட்’ அத்தனை விவரமும் தெரிய வர கொதித்துப்போனார் அபூர்வா. அதைத் தொடர்ந்து ரோகித்துக்கும், அபூர்வாவுக்கும் இடையே ஊடல்கள் ஒரு தொடர்கதையானது. கூடல் இல்லாமல் போனது.
நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று அபூர்வா கேட்டது தொடங்கி என்ன கேட்டாலும், ரோகித் கண்டுகொள்ளவில்லை. இதனால் நித்தமும் சண்டைதான். ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்து விடலாம் என்றே இருவரும் முடிவுக்கு வந்தனர். வரும் ஜூன் மாதத்தில் இதை செய்து விடலாம் என எண்ணி இருக்கிறார்கள். இதற்கிடையே இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை ஏற்பட, அபூர்வா கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு போய் விட்டார். மார்ச் 3 முதல் மார்ச் 29 வரை தாய் வீட்டு வாசம். மார்ச் 30-ந் தேதி சமரசத்துக்கு பின்னர் அபூர்வா, புகுந்த வீட்டுக்கு போனார்.
வந்தது பாராளுமன்ற தேர்தல். 11-ந் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவில் ஓட்டுப்பதிவு செய்வதற்காக ரோகித், தாய் உஜ்வாலாவுடன் உத்தரகாண்ட் சென்றார். அவர்களுடன் சென்றார், ரோகித்தின் காதலி. கணவனுடன் காதலி செல்வது அபூர்வாவுக்கு தெரியாது. அபூர்வா டெல்லியில் இருந்து விட்டார். இந்த நிலையில் சாதாரண முறையில் உத்தரகாண்ட் சென்ற கணவன் ரோகித்தை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் அழைத்தார் அபூர்வா. அந்த நேரம் பார்த்து ரோகித்தும், காதலியும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்திக்கொண்டிருக்க, அந்த போதையிலேயே, அழைப்பது யார் என்று தெரியாமல் செல்போனில் அபூர்வாவிடம் பேசினார். ரோகித்துடன், காதலி இருப்பதை அபூர்வா பார்க்க ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் உறைந்து போனார்.
4 நாட்களுக்கு பின்னர் 15-ந் தேதி ரோகித் டெல்லி திரும்பினார். இரவு நேரத்தில் அவரது டிபன்ஸ் காலனி வீட்டில் ரோகித்தின் அண்ணன் சித்தார்த், வேலைக்காரர்கள் மார்த்தா, கொலு, டிரைவர் அகிலேஷ் இருந்திருக்கிறார்கள். இரவு 10 மணி... திலக் நகரில் உள்ள அரசு வீட்டில் இருந்த உஜ்வாலா, இரவு சாப்பாட்டுக்காக டிபன்ஸ் காலனி வீட்டுக்கு வந்தார். ரோகித் எங்கே என அவர் கேட்க, அவர் படுக்கை அறையில் தூங்கி விட்டார் என மருமகளிடம் இருந்து பதில் வந்தது. ஆனால் ஓரிரு நிமிடங்களில் அங்கே ரோகித் வந்தார். அம்மாவுடன் இரவு உணவு சாப்பிட்டார். அதன்பின்னர் ரோகித், தாயை காரில் திலக்லேன் வீட்டில் அழைத்து சென்று விட்டு வந்தார்.
அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு உஜ்வாலா, டிபன்ஸ் காலனி வீட்டுக்கு வந்தார். ரோகித் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார், எழவில்லை என்று அபூர்வா, மாமியாரிடம் சொன்னார். அதையடுத்து ரோகித் டிரைவர் அகிலேஷ்ஷிடம் காரை எடுக்க சொல்லி, சாக்கெட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு ஓட்டுமாறு கூறினார். அங்கு அவர் ஒரு டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெற சென்றார். அங்கு சென்ற அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு மருமகள் அபூர்வாவிடம் இருந்து செல்போன் அழைப்பு. அதில் காத்திருந்தது வெடிகுண்டு. ஆமாம். ரோகித் உடல்நிலை திடீரென கவலைக்கிடமாக இருக்கிறது என்று சொன்னார் அபூர்வா. உடனே அங்கிருந்து ஆம்புலன்சில் உஜ்வாலா மகனை அழைத்துவர டிபன்ஸ் காலனி வீட்டுக்கு விரைந்தார்.
அங்கே அவர் கண்ட காட்சி. மருமகள் அபூர்வா, அசைவற்ற நிலையில் இருந்த ரோகித்தை காரில் திணித்துக் கொண்டிருப்பதை கண்டார். உடனே ரோகித்தை அவர் ஆம்புலன்சில் ஏற்ற வைத்து, மேக்ஸ் மருத்துவமனைக்கு திரும்பினார். அங்கே ரோகித்தை பரிசோதித்த டாக்டர்கள் சொன்னார்கள். ‘‘ரோகித் ஏற்கனவே இறந்து விட்டார்’’ என்று. அவர் மாரடைப்பில் இறந்து விட்டதாக சொல்லப்பட்டது. இது குடும்பத்துக்கு பேரதிர்ச்சியைத் தந்தது.
பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ரோகித் மரணம் இயற்கையாக நிகழவில்லை, கழுத்து நெரிக்கப்பட்டும், மூச்சு திணறடிக்கப்பட்டும் அவர் இறந்திருக்கிறார், அதற்கான அறிகுறிகள் இருக்கின்றன என்று பிரேத பரிசோதனை அறிக்கை செய்தி சொன்னது. டெல்லி போலீஸ் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தது. டிபன்ஸ் காலனி வீட்டுக்கு விரைந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தடயங்களை சேகரித்தது. விசாரணை நடத்தியது. அபூர்வா, வீட்டு வேலைக்காரர்கள் என அத்தனைபேரையும் விசாரணைக்கு அழைத்தது.
விசாரணையில், ரோகித் இறப்பதற்கு முன்னால் அவருக்கும், அபூர்வாவுக்கும் இடையே சண்டை நடந்தது தெரிய வந்தது. இந்த சண்டை, உஜ்வாலா டிபன்ஸ் காலனி வீட்டுக்கு வந்து ரோகித்துடன் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு சென்றதில் இருந்து வந்ததின் நீட்சி. சண்டைக்கு பின்னர் ரோகித் மது அருந்தி உள்ளார். ஆனால் இந்த சண்டையை அபூர்வா, போலீசிடம் மறைத்து விட்டார். ரோகித் அவரது அறையில் இருந்தார், நான் பேசவே இல்லை என்று சொல்லி விட்டார். இது போலீசுக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து அபூர்வாவிடம் நகம், தலை முடிகளை போலீசார் சேகரித்து, மரபணு பரிசோதனைக்கு அனுப்பினர். அதை ரோகித் உடலில் இருந்த நகக்குறி, முடிகளுடன் ஒப்பிட்டு தடய அறிவியல் வல்லுனர்கள் சோதித்தபோது, எல்லாமே ‘மேட்ச்’ ஆனது. ரோகித்தை கொலை செய்தது மனைவி அபூர்வா என்பது உறுதியானது. பொறியில் சிக்கிய எலி ஆனார் அபூர்வா.
ஒரு வழியாய் கடைசியில் நடந்தது என்ன என்பதை அபூர்வா ஒப்புக்கொண்டார். ‘‘ரோகித் குடித்து விட்டு மதுபோதையில் என்னை அடித்தார். நான் அவரை தள்ளினேன். கழுத்தை நெரித்தேன். அவர் உயிர் பிரிந்து விட்டது’’ என்றார் கண்ணீர் வழிய. இப்போது டெல்லி சிறையில் அபூர்வா. கணவர் ரோகித்தை கொன்ற அவர், சாமானிய பெண் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு வக்கீல். அப்படி வக்கீலாக இருந்து கொண்டே, இப்படி செய்தால் சட்டம் நம்மை சும்மா விட்டு விடுமா என அவர் நினைக்காமல் போனதுதான் விசித்திரம். குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருக்கிறார் அபூர்வா. #RohitShekharTiwari #ApoorvaTiwari
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை பாபு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார். இவருக்கு பெருமாயி, மாதம்மாள் என்ற 2 மனைவிகள் உள்ளனர். மாதம்மாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெருமாயிக்கு குழந்தைகள் இல்லை.
ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அவர் ஏதாவது பாட்டு பாடிக் கொண்டே இருப்பார். வழக்கம்போல நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து பாட்டுப் பாடி கொண்டிருந்தார்.
ஆறுமுகம் பாட்டு பாடியது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் முரளிக்கு (வயது 29)எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் முரளி ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று எனது மனைவியை பார்த்து தான் நீ பாட்டு பாடுகிறாய் என்று கூறினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த முரளி, அவரது தம்பி சரவணன், தாய் மாதம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது ஆறுமுகத்தின் மனைவி மற்றும் மகன்கள் தகராறை விலக்கிவிட்டு விட்டு தூங்க சென்றனர். காலையில் ஆறுமுகத்தை மனைவி எழுப்பிய போது அவர் இறந்து கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரை தாக்கிய முரளி உள்பட 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் முரளி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை:
மேற்கு வங்காள மாநிலம் பீர்பாரா பகுதியை சேர்ந்தவர் சூரன் மார்க்ஸ் (23). கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தங்கி அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊராக மேற்கு வங்காளத்திற்கு சென்ற சூரன் மார்க்ஸ் கடந்த 19-ந் தேதி அங்கிருந்து எர்ணாகுளம் புறப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இன்று காலை எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள மரத்தில் பெல்டால் தூக்கில் தொங்கிய நிலையில் சூரன் மார்க்ஸ் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கே.ஜி. சாவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பிணமாக கிடந்த சூரன் மார்க்ஸ் உடலை சோதனை செய்த போது அவரது தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்தது. அவரது கழுத்து பெல்டால் இறுக்கப்பட்டு இருந்தது. அவரை யாரோ கொலை செய்து பிணத்தை பெல்டால் கட்டி மரத்தில் தொங்க விட்டு சென்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்