search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97380"

    மதுரை சித்திரை தேரோட்டத்தின்போது தேர்தலை நடத்தினால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #Vaiko #ParliamentElection
    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் கூட்டணி கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். பாராளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் தமிழகத்தில் நடத்த வேண்டிய கடமை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

    வழக்குகள் நிலுவையில் இருக்கிறபோது இடைத்தேர்தல்கள் நடந்த முன்னுதாரணம் இருக்கும்போது தமிழகத்தில் 3 சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தலை நடத்துவதை தள்ளிப்போடுவது சரியல்ல.

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். பல லட்சம் பேர் பங்கேற்கிற சித்திரைத் திருவிழாவின்போது மதுரை பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதனால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என நான் கருதுகிறேன்.

    18-ந் தேதி தேர்தலை நடத்தாமல் வேறு தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.



    அகில இந்திய அளவில் பி.ஜே.பி. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பொள்ளாச்சி சம்பவம் குலை நடுங்க வைக்கிறது. அந்தக் குற்றத்தை செய்த கயவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் கூண்டில் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இந்தக் கயவர்கள் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்களைக் காப்பாற்ற யார் முனைந்து இருந்தாலும், அவர்களும் கண்டறியப்பட்டு, அவர்களும் சட்டத்தின் பிடியில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

    எடியூரப்பா பாராளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகள் கர்நாடகாவில் வெற்றி பெற்றாலே, சட்டசபையையே மாற்றி அமைப்போம் என்பது போன்ற தவறான கருத்துக்களை அவ்வப்போது பேசி வருகிறார்.

    அது மட்டுமா? சரிந்து கொண்டு இருந்த பி.ஜே.பி.யின் செல்வாக்கு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வானுயர உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அதனை வைத்து வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்று சொன்ன கருத்தும் அவர் கருத்தா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தைப் பிரதிபலிக்கிறாரா? என்று தெரியவில்லை. ராணுவ வீரர்கள் அனைவரும் 120 கோடி இந்தியர்களுக்கும் சொந்தக்காரர்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Vaiko #ParliamentElection



    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கலாம் என்று தெரிகிறது. #LSPolls #DMK #MKStalin #congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்-10, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, இந்திய கம்யூனிஸ்டு-2, விடுதலை சிறுத்தைகள்-2, ம.தி.மு.க.-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-1, இந்திய ஜனநாயக கட்சி-1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களை வரவழைத்து பேசிய பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகவில்லை.

    இது தொடர்பாக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அன்று காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான மூவர் குழுவினர் பேச்சு நடத்தினர். அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் சுமார் 15 தொகுதிகளின் பட்டியலை அளித்தனர்.

    பின்னர் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தலைமையிலான குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. அதன் பிறகு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க. போட்டியிடும் இடங்கள் முடிவானது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை, கோவை, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு நாகை, தென்காசி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம், ம.தி.மு.க.வுக்கு ஈரோடு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், ஆரணி, திருச்சி, திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.



    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. ஆலோசனை கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் எப்படி தேர்தல் பணியாற்றுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆலோசனை கூட்டம் முடிந்ததும் இன்று மாலை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கலாம் என்று தெரிகிறது. #LSPolls #DMK #MKStalin #congress
    ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி எது என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முறையாக அறிவிப்பார் என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #mkstalin #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளை பட்டியலிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை அறிவாலயத்துக்கு சென்று துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசினார்.

    அப்போது ம.தி.மு.க. வுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எது என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட வைகோ அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த வைகோ, ‘‘ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி எது என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்’’ என்றார்.

    ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கூட்டணியில் 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அறிவாலயத்துக்கு இன்று வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் தங்களுக்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்டார்.

    இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில் கூட்டணி கட்சிகளிடம் கலந்து பேசி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி எது என்பதை மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றார். #vaiko #mkstalin #parliamentelection

    வைகோ இருந்த கூட்டணி இதுவரையிலும் வெற்றி பெற்றது கிடையாது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #Vaiko
    தென்திருப்பேரை:

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    பாரத பிரதமர் மோடி தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் நலனுக்காகவே 24 மணி நேரமும் கடந்த 5 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். பாரதியஜனதா அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு  தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்கி வருகிறது. வரிசையில் நிற்கவேண்டாம். இடைத்தரகர்கள் கிடையாது. நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லஞ்சம், ஊழல். ஆனால் மோடி ஆட்சியில் ஒரு ஊழல் கூற முடியுமா?

     தமிழ்மொழி ஏன் வழக்காடு மன்றத்தில் இல்லை என ஸ்டாலின் கேட்கிறார். 5 முறை தமிழகத்தை ஆண்ட நீங்கள் ஏன் வளர்க்கவில்லை. கனிமொழியை தானே வளர்த்தீர்கள்.



    மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் அரசியலே பிடிபடவில்லை. இது வரையிலும் வைகோ இருந்த கூட்டணி வெற்றி பெற்றது கிடையாது. எனவேதான் ம.தி.மு.க.வை தி.மு.க. கூட்டணியில் இருந்து விரட்டி விடுவதற்காக, அந்த கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டது.

    ஆனாலும் அந்த ஒரு தொகுதியையும் பெற்றுக்கொண்டு விட்டு, தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு ம.தி.மு.க. தயாராகி விட்டது. தி.மு.க.வினர் பகுத்தறிவாளிகள் என்று கூறிக்கொண்டு, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஆனால் நாம் ஆன்மிகவாதிகள் என்று கூறிக்கொண்டு தலைநிமிர்ந்து கோவிலுக்கு சென்று வருகிறோம்.

    தென் திருப்பேரை கரிசல் மண் அல்ல. காவி மண். நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #Tamilisaisoundararajan #Vaiko
    புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமான படையின் பதிலடியால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது என்று வைகோ கவலை தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #Surgicalstrike2 #PulwamaAttack
    திருச்சி:

    திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆவார். உணர்ச்சிகளை தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது. இந்த சம்பவங்களால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்.

    அதே நேரத்தில் பாசிச மனப்பான்மை உடையவர்கள் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த செயலுக்கும் துணிவார்கள். பாசிச கொள்கை அடிப்படையில் தான் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நாடு கலாசாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாசிச மனப்பான்மையுடன் செயல்படுகிறார். இதனால் விபரீத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

    மாயமான சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் நாளை நடைபெறும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும். அவரை யாராவது சிறைப்பிடித்தால் உடனே விடுவிக்க வேண்டும். காவல் துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறிய நிலையில் அவர் மாயமாகி இருப்பதால் காவல் துறையினர் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தான் பொறுப்பு.



    பிரதமர் நரேந்திர மோடி 1-ந்தேதி கன்னியாகுமரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வருகை தந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க நரேந்திர மோடி வரவில்லை. முல்லை பெரியாறு, மேகதாது அணைக்கு அனுமதி அளித்துள்ளார். தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அவர் மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதால்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதே?

    ப : அது குறித்த முழு தகவல் எனக்கு தெரியவில்லை. தகவல் தெரிந்த பிறகுதான் அது பற்றி கருத்து கூற முடியும். இருப்பினும் எந்த நிலையிலும் யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது. இதனால் இரு தரப்புக்கும் பெரும் சேதம் ஏற்படும்.

    கே: தி.மு.க-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி என்று தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளாரே?

    ப : அரசியல் தலைவர்கள் சொல்லும் கருத்துக்கள்தான் பதில் கருத்துகளாக கூறப்படுகிறது.

    கே: தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குவீர்கள்?

    ப: நான் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டேன்.

    கே: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகி விட்டதா?

    ப: பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #MDMK #Vaiko #Surgicalstrike2 #PulwamaAttack
    தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் கொடுத்தது தங்கள் கட்சிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார் #ADMK #RajendraBalaji #DMDK
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இன்று நம்மிடம் இல்லாத நிலையில் கட்சியையும், ஆட்சியையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பாக வழி நடத்தி செல்கின்றனர்.

    ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை வாங்கி கொடுத்து முன்வாசல் வழியாக வைகோவை அழைத்து சென்ற கட்சி அ.தி.மு.க.தான். பம்பரம், மாம்பழம், தமிழ்நாட்டில் தாமரையை மலர செய்தது எல்லாமே புரட்சித் தலைவியால்தான் நடந்தது.



    தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் கொடுத்தது எங்கள் கட்சிதான். தே.மு.தி.க.விடம் கூட்டணி பேச்சுவார்த்தை மரியாதை நிமித்தமாகதான் நடைபெற்று வருகின்றது. அ.தி.மு.க.காரன் எதையும் கண்டு பயப்பட மாட்டான்.

    எதிரில் மதம் கொண்ட யானை வந்தால் கூட சிங்கம் போல் நின்று வென்று காட்டக்கூடிய திறமை அ.தி.மு.க.காரனிடம் உண்டு. எங்களிடம் எந்த கட்சியின் நாடகமும் செல்லு படியாகாது.

    46 வயது இளைஞன்தான் அ.தி.மு.க. ஆனால் டி.டி.வி.க்கு ஒரு வயது, தே.மு.தி.க.விற்கு 10 வயது, ம.தி.மு.க.விற்கு 14 வயது. இவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் ஓட்டே கிடையாது. எங்கள் கட்சியை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. அ.தி.மு.க. பலமான கட்சி.

    தி.மு.க.வினர்களை கொள்ளைகாரர்கள் என்று விமர்சனம் செய்த விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்ததில் உள்நோக்கம் உள்ளது. அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி மாபெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. தலைமையில் மாபெரும் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்த களிலும் மாபெரும் வெற்றி பெறும். எங்களிடம் இரட்டை இலை சின்னம் உள்ளது. இரட்டை இலை சின்னம் இருக்கும்வரை அ.தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #RajendraBalaji #DMDK
    7 பேர் விடுதலைக்காக நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் அதில் பங்கு கொள்ள மாட்டோம் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    நக்கீரன் கோபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை சந்திப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்றார்.

    அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் துணை கமி‌ஷனர் அலுவலகம் முன்பு வைகோ தர்ணா போராட்டம் செய்தார்.

    போலீசார் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 190, 290, 353 ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை எழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அதில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அப்போது போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், எனவே வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து வைகோ கோர்ட்டில் ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று எழும்பூர் கோர்ட்டில் வைகோ இன்று ஆஜர் ஆனார்.

    அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பிறகு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலைக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. வழக்கு விசாரணைக்காகவும் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

    இதன் தொடர்ச்சியாக 3 பேரின் தூக்கு தண்டனை ரத்தானது. எந்தெந்த வழிகளில் எல்லாம் 7 பேருக்காக நான் போராடினேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இப்போது தமிழ் ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியும் தமிழக கவர்னர் காலதாமதம் செய்து கொண்டே இருக்கிறார்.

    இதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசே காரணம். தமிழக அரசும் அதற்கு துணை போகிறது.

    தற்போது நடைபெற உள்ள மனிதசங்கிலி போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் அதில் பங்கு கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    7 பேர் விடுதலைக்காக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வைகோ ஆதரவு தெரிவிக்க மறுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சென்னை எழும்புரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உயர்நிலைக் கூட்டம் நடந்தது. இதில் வைகோ பங்கேற்றார்.

    கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. #MDMK #Vaiko

    திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துள்ளதால் இன்னும் 1 வாரத்தில் தொகுதி எண்ணிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #dmk #parliamentelection #mkstalin

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகிறது. இரு கட்சிகளுமே கூட்ணி பேச்சு வார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

    இதில் ஒவ்வொரு கட்சியும் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் வழங்கி உள்ளது.

    கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு வராத அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்ற விபரத்தை தெரிவித்து விட்டதாகவும், அதை இப்போது வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

    எனவே இன்னும் 1 வாரத்தில் ஒவ்வொரு கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #dmk #parliamentelection #mkstalin

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
    அரியலூர்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும். வேரோடு அழிக்கப்படவேண்டும். சிவச்சந்திரன் தனது மகனை ஐ.பி.எஸ். ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மகனை இழந்த சிவச்சந்திரனின் பெற்றோர் இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறிய போதும் நாட்டுக்காக செல்கிறேன் என கூறியுள்ளார்.

    எனவே சிவச்சந்திரனின் மனைவி காந்திமதிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்ல அரசு வேலையை வழங்க வேண்டும். மேலும் சிவச்சந்திரனுக்கு சிலை அமைத்து நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வைகோ மலரஞ்சலி செலுத்தினார். இதேபோல் திரைப்பட நடிகர் தாமுவும் சிவச்சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
    பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவதன் மூலம் வைகோ தனது மரியாதையை இழந்து வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். #BJP #VanathiSrinivasan #Vaiko
    ஈரோடு:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோடு அடுத்த சித்தோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    ஈரோடு மாவட்டம் சித்தோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலிக்கு நாளை காலை 10 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா வர உள்ளார். அங்கு நெசவாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அதைத் தொடர்ந்து 12 மணி அளவில் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற பூத் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    கடந்த 10-ந்தேதி திருப்பூரில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதில் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். இதனால் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதையடுத்து தற்போது அமித்ஷா ஈரோடுக்கு வர உள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்ற பரபரப்பான சூழ்நிலையில் அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


    பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது வைகோ கருப்புக்கொடி காட்டுவதன் மூலமாக அவர் சிறிது சிறிதாக தனது மரியாதையை இழந்து வருகிறார். வைகோ எம்பியாக இருந்த காலத்தில் இருந்தே எந்த ஒரு நல்லதும் செய்யவில்லை. அதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டுகிறார்.

    பெரும் தலைவராக இருந்த வைகோ தற்போது சின்ன சின்ன குழுக்களின் தலைவராக இருப்பது வேதனை அளிக்கிறது. இதே வைகோதான் 5 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று ஆதரவளித்தார்.

    இலங்கை பிரச்சனை இருக்கட்டும் மீனவர் பிரச்சனையையும் பிரதமர் மோடி தீர்த்து வைத்துள்ளார். அதனால் வேறு வழியில்லாமல் வைகோ கருப்பு கொடி காட்டி வருகிறார்.

    கஜா புயலின்போது மத்திய அரசு உதவிக்கு வரவில்லை என்பது தவறான செய்தி. புயல் பாதித்த சமயத்தில் மத்திய அமைச்சர் அங்கு 48 மணி நேரம் முகாமிட்டு தங்கியிருந்து தேவையான உதவிகள் செய்து வந்தார்.

    மேலும் ராணுவ மந்திரி அங்கு சென்று அனைத்து உதவியும் செய்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தனது முதற்கட்ட நிவாரண நிதியை வழங்கியுள்ளது.

    தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக பலமான வெற்றிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்.

    இவர் அவர் கூறினார். #BJP #VanathiSrinivasan #Vaiko
    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலை செய்யாதிங்க என்று மத்திய, மாநில அரசுகளை வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். #MDMK #Vaiko
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்தாயிபாளையத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் ஆயிரத்து 500 கிலோ வாட் மின்சாரத்தை கடலுக்கு அடியிலும் பூமிக்கு அடியிலும் கொண்டுசெல்ல அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ஆனால் தமிழகத்தில் மட்டும் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து இருந்தனர்.

    ஆனால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்மின் கோபுரத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை மிரட்டுவது கைது செய்வது போன்ற செயல்கள் கண்டனத்துக்குரியது. முதலமைச்சரும் இந்தப் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

    விளைநிலங்கள் வழியாக உயரமான கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

    விவசாய நிலத்தில் மின் கோபுரங்கள் அமைந்தால் அந்த நிலத்தின் மதிப்பு குறைந்து நிலத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலை செய்யாதிங்க. அந்த போக்கை மத்திய மாநில அரசு கைவிட வேண்டும்.

    இவர் அவர் கூறினார். #MDMK #Vaiko
    திருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழா மேடையில் காந்தியின் உருவபொம்மை அவமதிக்கப்பட்டது குறித்து பேசிய வைகோ கண்ணீர் விட்டு கதறி அழுதார். #Vaiko
    திருச்சி:

    திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை தமிழாய்வுத்துறையும் இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து இஸ்லாமும் தமிழும் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், மகாத்மா காந்தி தேசத்திற்கும், இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கும் ஆற்றியவை குறித்து பேசினார். மேலும் அவர் பேசும் போது, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், இந்து அமைப்பு தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை சுட்டு கொண்டாடியது தனது மனதை மிகவும் உருக்கியது என்று, பேசி கொண்டிருக்கும் போது, திடீரென அவர் கண்கள் கலங்கி கதறி அழுதார். காந்தியின் உருவத்தை சித்தரித்த விதம் குறித்தும் கண் கலங்கியபடி கூறினார்.

    மேலும் நான் ஓர் போராளி என்றும், எனக்கு தோல்வியே கிடையாது என்றார்‌. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக, நாட்டில் மதச்சார்பின்மையை நிலை நாட்டுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறேன். மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது என்றார். #Vaiko
    ×