search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98643"

    • புயல் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 76 விசைப்படகுகள் முழுவதுமாக கடலில் மூழ்கி சேதமடைந்தது.
    • அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.4.67 கோடி நிவாரண நிதியை வழங்கினர்.

    திருவொற்றியூர்:

    மாண்டஸ் புயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 76 விசைப்படகுகள் முழுவதுமாக கடலில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் 136 விசைப்படகுகள் அருகில் இருந்த படகுகளுடன் ஒன்றுடன் ஒன்று மோதியும், கட்டப்பட்டிருந்த வார்ப்பு பகுதி மீது மோதியும் பலத்த சேதம் அடைந்தன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கடலோர கிராமங்களில் மாண்டஸ்புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 124 மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.4.67 கோடி நிவாரண நிதியை வழங்கினர். நிகழ்ச்சியில் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, எம்.எல்.ஏக்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள், சுரேஷ், ஜெபதாஸ் பாண்டியன், நிர்வாகிகள் பாண்டி செல்வம், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விசைப்படகு மீனவர்கள் சங்கம் வலியுறுத்தல்
    • போதிய மின்விளக்கு வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சின்ன முட்டம் விசைப்படகு தொழிலாளர் மற்றும் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டம் தலைவர் ஜான் ஹென்றி தலைமையில் நடந்தது.

    சங்க துணை தலைவர் சகாய ஆன்றனி மில்டன், செயலாளர் பெபிலான், பொருளாளர் ஸ்டார்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி இன்பம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக நுழைவு வாயிலில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கடலுக்குள் விசைப்படகுகள் சென்றுவர தடையாக இருக்கும் பொருளை அங்கு இருந்து அகற்றவேண்டும். சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக பழுதடைந்த நிலையில் கிடக்கும் அரசுக்கு சொந்தமான படகை அகற்ற வேண்டும். சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் அதிகமாக உள்ள தால் வலைகள் பழுது நீக்க ஏதுவாக துறைமுக வளா கத்தில் உள்ள இடத்தினை சமதளப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்ளப் பட்டது.

    சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக வளாகத்தில் போதிய மின்விளக்கு வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் பிற மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதிக்கு வந்து மீன்பிடிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • படகில் டீசல் இன்றி நடுக்கடலில் தத்தளித்தவர்கள் கரை திரும்பினர்.
    • பல்வேறு கோணங்களில் கடலோர காவல் குழும போலீசாரும், மீன்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் வேதையன் (வயது 58) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (65), கொள்ளித்தீவு பகுதியை சேர்ந்த பன்னீர் (57) ஆகிய 3 மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நேற்று காலை கரை திரும்ப வேண்டும். ஆனால், அவர்கள் 3 பேரும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும், ஆறுகாட்டுதுறை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    மீன் பிடிக்க சென்றவர்கள் திசை மாறி சென்றார்களா? அல்லது படகு எஞ்சின் பழுதாகி கடலில் தத்தளித்து கொண்டு உள்ளார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல் குழும போலீசாரும், மீன்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், மாயமான 3 மீனவர்களை தேடி சென்ற சக மீனவர்கள் நடுக்கடலில் படகில் டீசல் இன்றி தத்தளித்து கொண்டிருந்தவர்களை பார்த்தனர். மேலும், அவர்களை தனது படகில் ஏற்றி ஆறுகாட்டுத்துறை கரைக்கு இன்று காலை கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் சென்ற படகும் மீட்கப்பட்டது.

    காணாமல் போன 3 மீனவர்களும் கரைக்கு திரும்பி வந்ததை கண்ட உறவினர்கள் மற்றும் மீனவ கிராமமக்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

    • 13 வகையான மீன்களை மக்கள் அதிகளவில சமைத்து உண்கின்றனர்.
    • பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி இங்கேயே கருவாடாக உலர்த்தப்பட்டு வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இங்கு பல வகையான மீன்கள் பிடிக்கப்பட்டாலும் கெளுத்தி, நெத்திலி, கிழங்கான், பொறுவாய்,குத்து வாய், வாழை, வெள்ளுருட்டான், கவலை, சுறா உள்ளிட்ட 13 வகையான மீன்களை மக்கள் அதிக அளவில சமைத்து உண்கின்றனர்.

    அதேசமயம் இந்த வகை மீன்களை கருவாடாக உண்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வகையான மீன்களை கருவாடாக வாங்கி சமைத்து உண்பதை மக்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர்.

    இதுகுறித்து பழையார் கருவாடு வியாபாரி பொன்னையா கூறுகையில், பழையார் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த பருவ மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும், கடற்கரை பகுதிகளில் போதுமான மீன் வரத்து இல்லாததாலும், கருவாடு தேவைக்கான மீன்வரத்து குறைந்து காணப்படுகிறது.

    தற்போது இங்கு மீன்களை வாங்கி உப்புகள் தெளித்து பதப்படுத்தி கருவாடுகளை காய வைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் பழையாறு கிராமத்தில் உள்ள கருவாடுகளை வாங்கி செல்வது வழக்கம். அதாவது நெத்திலி,பாறை, சுறா, திருக்கை ,காரை ஆகிய மீன்களின் கருவாடுகள் பதப்படுத்தப்பட்டு அவற்றை நன்கு காய வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி இங்கேயே கருவாடாக உலர்த்தப்பட்டு தினந்தோறும் பல்லடம், ஒட்டன்சத்திரம்,திருச்சி, வேலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகிறோம்.

    ஒரு நாளைக்கு இந்த துறைமுகத்தில் இருந்து 2 டன் மற்றும் அதற்கு மேலான கருவாடுகள் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று விற்கப்படுவது வழக்கம்.

    அதன்படி கருவாடுகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கபட்டு வந்த நிலையில் தற்போது மீன் வரத்து குறைவின் காரணமாக கருவாடு உற்பத்தி குறைந்துள்ளது.

    மேலும் பழையார் துறைமுகத்தில் கருவாடு உலர்தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது.
    • படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மீனவர்கள் கைது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன்பிடித்தால் கூட அவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்கின்றனர். இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மரபுவழியாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்கக் கூடாது.

    தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டால் குறைந்தது 20 குடும்பங்கள், அதாவது 100 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்.
    • பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து செல்வதாகவும், அப்போது நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதம் அடைவதாக புகார் எழுந்து வந்தது.

    கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை நாட்டுப் படகு மீது மோதியதில் 2 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்நிலையில் நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களிடையே மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வள்ளியூரில் இன்று பேச்சவார்த்தை நடைபெறுகிறது.

    • 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலைகள் கடல் நீரால் அரிக்கப்பட்டு ஒற்றையடி பாதையாக மாறியுள்ளது.
    • குறிப்பாக இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத சாலையாக இச்சாலை மாறி போய்யுள்ளது.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பல லட்சம் ரூபாய் மதிப்பில் அன்றாடம் வணிகம் நடக்கும் இப்பகுதியில் போதிய அளவு சாலை வசதி இல்லாததால் மீன் கொள்முதலுக்கு வரும் வியாபாரிகள் சாலை பள்ளங்களில் இடறி விழுவதால் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலைகள் கடல் நீரால் அரிக்கப்பட்டு ஒற்றையடி பாதையாக மாறியுள்ளது.

    100 சதவீதம் மீன் பிடி தொழிலை மட்டும் நம்பி இருக்க கூடிய இக்கிராம மக்களுக்கு போர்கால அடிப்படையில் சாலையை புதுப்பித்து தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ஏரிபுறக்கரை கிராம பஞ்சாயத்து தலைவர் சக்தி கூறும்போது, காதிர் முகைதீன் பள்ளி சாலை முதல் கீழத்தோட்டம் வரையிலான 4.5 கிலோ மீட்டர் சாலைக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு விரைவாக சாலை பணிகள் நடக்க உள்ளது.

    மீன்பிடி துறைமுக சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற சாலையாக உள்ளதை கவனத்தில் கொண்டு உரிய துறைக்கு புகாராக அனுப்பி உள்ளோம்.

    அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் மீனவ கிராம மக்களின் அத்தியாவசிய தேவையான இச்சாலையை புதுப்பித்து தர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து மீனவரான சுந்தராஜ் கூறுகையில், மீன்பிடி தொழிலாளர் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்து இருக்ககூடிய சூழலில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத இக்கிராமத்திற்கு மீன் கொள்முதல் செய்ய யாரும் வருவது இல்லை.

    குறிப்பாக இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத சாலையாக இச்சாலை மாறி போயுள்ளதால், பிடிக்கும் மீன்களை குறைந்த விலைக்கே விற்பனை செய்வதாகவும், இதனால் மீன் பிடி தொழில் நலிவடைந்து பிற தொழிலை நாட வேண்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றார்.

    • மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும்.
    • மறு உத்தரவு வரும் வரை கச்சா எண்ணை கொண்டு செல்லும் பணியில் நிர்வாகம் ஈடுபடக்கூடாது.

    நாகபட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது.

    அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்து, கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாகினர்.

    உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் கடந்த 4 நாட்களாக சிபிசிஎல் ஆலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே குழாயின் ஓட்டையை சிபிசிஎல் நிர்வாகம் நேற்று இரவு மீண்டும் சீரமைத்தது.

    இதனிடையே கச்சா எண்ணெய் குழாயை அகற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் 4-வது நாளாக ஈடுபட்டு வரும் நாகூர் பட்டினச்சேரி மீனவர்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று நேரில் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    பின்னர் நிருபர்களிடம் கலெ க்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பைப் லைன் உடை ப்பை சீரமைத்து விட்டதாகவும், மீனவ ர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியதுடன், மாவட்ட நிர்வாகம் சார்பில் மறு உத்தரவு வரும் வரை பைப் லைன்னில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் சிபிசிஎல் நிர்வாகம் ஈடுபட கூடாது என பொது மேலாளரிடம் கூறி இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் கச்சா எண்ணெய் கடலில் கலந்து இருப்பதால், கடல் வாழ் உயிரினங்களின் பாதிப்பு குறித்தும்,கடல் நீர் தன்மை குறித்தும் சென்னையில் இருந்து வரும் தொழில்நுட்ப அதிகாரிகள் அதனை ஆய்வு செய்ய இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

    • தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதற்கு இலங்கையின் வட பகுதி மீனவர்கள் கடும் எதிர்பை தெரிவித்து உள்ளனர்.
    • கடந்த 15 ஆண்டுகளாக இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதியில் நுழைவதை தடுக்கும் எங்கள் போராட்டத்துக்கு இது ஒரு பின்னடைவாக இருக்கும்.

    கொழும்பு:

    இந்தியா- இலங்கை இடையே நீண்ட காலமாக கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவு சம்பந்தமாகவும் பிரசனை இருந்து வருகிறது.

    அவ்வப்போது கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர். படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் வெளியுறவுதுறை மந்திரி அலி சப்ரி பேசும் போது, நீண்ட காலமாக நீடித்து வரும் மீன்பிடி மோதலுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக தங்கள் கடற்பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு லைசென்சு வழங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய வெளியுறவுதுறை மந்திரி ஜெய்சங்கருடன் விவாதிக்கப்பட்டது.

    மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் நாட்டின் கடல் வளம் பற்றியும் நீண்ட கால தீர்வை காண்பது இலங்கையின் முன்னுரிமை ஆகும். இதனால் இந்தியா இந்த உரிம முறையை ஒரு தீர்வாக முன் வைத்து உள்ளது. இது குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். இதன் மூலம் இலங்கை மீனவர்களின் முன்னேற்றத்திற்கு பயன் படுத்தக்கூடிய பணத்தையும் கொண்டு வரும். தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இந்திய படகுகள் எங்கள் கடலுக்கு வருகின்றன. இதனை எங்கள் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதற்கு இலங்கையின் வட பகுதி மீனவர்கள் கடும் எதிர்பை தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மீனவர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான அன்னலிங்கம் அன்னராஜா கூறும் போது, இலங்கையின் வடபகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் மீன் பிடித்து வருகிறோம். ஏற்கனவே இந்த பகுதியில் இந்திய மீன் பிடி படகுகளால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    பெரும் இழப்புகளையும் சந்தித்து வருகிறோம். அரசின் இந்த முடிவால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதியில் நுழைவதை தடுக்கும் எங்கள் போராட்டத்துக்கு இது ஒரு பின்னடைவாக இருக்கும்.

    ஒரு சிலர் இந்த பிரசனையை பயன்படுத்தி இரு நாட்டு மீனவர்களையும் ஒருவருக்கொருவர் எதிராக மாற்ற முயற்சி செய்கின்றனர். இந்த பிரசனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 8அடி நீளம்கொண்ட பாம்பு சிக்கிக்கொண்டு தவித்தது.
    • அரைமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே செம்மங்குடியில் அரவிந்த் என்பவரின் வீட்டு பின்புறம் அமைத்திருந்த வலையில் 8அடி நீளம்கொண்ட மஞ்சள் சாறை பாம்பு சிக்கிக்கொண்டு தவித்தது.இதனால் அப்பகுதிக்கு செல்லவே அப்பகுதியின் அச்சம் அடைந்து புளிச்சகாடு பகுதியை சேர்ந்த பாம்புபிடி வீரர் தினேஷிடம் தகவல் அளித்தனர்.

    அங்கு சென்ற தினேஷ் வலையில் சிக்கியிருந்த 8அடிநீள பாம்பினை அரைமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு லாவகமாக மீட்டு ஆள்நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டு சென்று விட்டார்.இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • மீனவர்கள் 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.
    • நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நம்பியார் நகரை சார்ந்த மீனவர்கள் 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அவர்களின் மீன்கள், வலைகள், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இந்த தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் சின்னத்தம்பி, சந்த்ரு, மாதேஸ், சிவபாலன் ஆகியோர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் சுடப்படுவதும், கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    ஒன்றிய அரசு எப்போதும் போல் அலட்சியமாக நடந்து கொள்கிறது.

    இனியாவது ஒன்றிய அரசு இதில் தலையிட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

    பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் இன்று நடந்தது
    • ஆழ்கடலில் சாளை மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் ஆழ் கடலில் தங்கி மீன்பிடிப்பதற்கும் சாளை மீன் பிடிப்பதற்கும் மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

    இந்த நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி இன்று காலை சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ள கன்னியாகுமரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் விர்ஜின் கிராசிடம் முறையிட்டனர். அதற்கு மீன் வளத்துறை உதவி இயக்குனர் அனுமதி அளிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் கன்னியாகுமரி, சின்ன முட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் 6 விசைப்படகு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் விசைப்படகு மீனவர்கள் சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள கன்னியாகுமரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது. இதையடுத்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்ன பாலா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    ×