search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • பாரத கலாச்சாரத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும் என சத்குரு வாழ்த்து தெரிவித்தார்.

    கோவை:

    பாரத கலாச்சாரத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    கலாச்சார ரீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமாகவும், வனவாசம் முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள் தீபங்களுடன் வரவேற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில், இந்நாள் அறியாமையை வீழ்த்தி தெளிவு என்னும் வெற்றியைப் பெறும் சாத்தியத்தைக் குறிக்கும் நாளாகும்.

    தீபம் என்றால் வெளிச்சம். பொதுவாக வெளிச்சம் தெளிவோடும், இருள் அறியாமையோடும் ஒப்பிடப்படுகிறது. இருள் என்பது வெளியில் இருந்தாலும், நமக்குள் இருந்தாலும் நம் கண் முன் இருப்பதே நமக்கு புரியாது. தீபாவளி என்பது வெறும் வீட்டில் விளக்கேற்றும் தினம் கிடையாது. நமக்குள்ளும் விளக்கு ஏற்ற வேண்டும்.

    வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறது. மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எண்ணெய் விளக்கு என்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. அப்போது சூரியன் மறைந்த பிறகு விளக்கின் தேவை அத்தியாவசியமானதாக இருந்தது. அதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டுமென்றால், தீபாவளி நாளன்று மின் விளக்குகளுக்கு பதிலாக எண்ணெய் விளக்குகளை வீட்டில் ஏற்றுங்கள். அப்படி செய்தால், அதன் தாக்கத்தையும் ஆனந்தத்தையும் நீங்கள் உணருவீர்கள். அது வீட்டின் சூழ்நிலையையே மாற்றிவிடும். பூஜை அறையில் தினமும் எண்ணெய் விளக்குகளை ஏற்றினால், உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

    வெளியில் மட்டுமின்றி, உங்களுக்குள்ளும் வெளிச்சம் வரவேண்டும். உங்களுக்குள் தெளிவை ஏற்படுத்த ஈஷாவின் மூலம் பல யோக கருவிகளை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அறியாமை என்னும் இருளை நீக்குவதற்கு அதனுடன் நீங்கள் போராடக் கூடாது. இருள் நிறைந்த ஒரு இடத்தில் ஒரு ஒளி விளக்கை ஏற்றினால், இருள் காணாமல் போய்விடும். அதேபோல், தெளிவு பிறந்தால் அறியாமை இல்லாமல் போய்விடும். இந்த தீபாவளி திருநாள் உங்கள் வாழ்வில் ஒரு மகத்தான நாளாக இருக்க வேண்டும் என்னுடைய ஆசை, என்னுடைய அருள் என தெரிவித்துள்ளார்.

    • நட்பையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தீப ஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும்.
    • தீபாவளி பண்டிகையானது உள்ளங்களை உறவு கொள்ளும் வகையில் எல்லா நாடும் எங்கள் நாடு, எல்லா மக்களும் எங்கள் சொந்தம் என்று மனங்களை பகிர்ந்துகொள்ளும் அன்பு திருவிழாவாக விளங்குகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுன் என்னும் அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாக மக்களால் கருதப்படுகிறது.

    மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:-

    இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும். இந்நன்னாளில் தனிமனிதனின் வாழ்வில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    தீபாவளித் திருநாள் ஒளி காட்டும் வகையில் அமைந்து, இந்திய மக்கள் அனைவருடைய வாழ்விலும் ஏற்றம் உண்டாக வேண்டும். நாட்டில் அதர்மம் அழிந்து, தர்மம் நிலைக்க இந்த தீபாவளித் திருநாள் பாதை அமைத்துக் கொடுக்கட்டும். ஆனந்தமும் அமைதியும் பெருக இந்த தீபாவளிக் கொண்டாட்டம் அடித்தளமாக அமைய வேண்டும்.

    வி.கே.சசிகலா:-

    இந்த தீப திருநாளில், அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் துன்பம் விலகி, இன்ப ஒளி வீசட்டும். வாழ்வில் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    நட்பையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தீப ஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்.

    அனைத்து தரப்பு மக்களாலும் ஒளித் திருநாளாய் நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளையொட்டி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அறியாமை, வறுமை, தீமை மற்றும் வன்முறை இருள் அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வாழ்த்துகிறேன்.

    சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் தீபாவளியில் தீப ஒளி ஏற்றுவதால் புதுப்பொலிவுடன், நல்வாழ்க்கை வாழ இறைவன் துணை நிற்க வேண்டி அனைவருக்கும் தீபாவளி பண்டிகை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மீக குரு பங்காரு அடிகளார்:-

    தீபாவளி என்பது உற்சாகமான பண்டிகை. தான் மட்டும் கொண்டாடினால் போதாது. நல்ல உள்ளம் கொண்டு இருப்பவன் இல்லாதவனுக்கும், உற்றார், உறவினருக்கும், பொதுமக்களுக்கும் கொடுத்து நீ பெரியவன் நான் பெரியவன் என்று வித்தியாசம் பாராமல் சகோதரத்துவத்துடன் கொண்டாடும்போது சந்தோசம் ஏற்படுகிறது. அங்கு தர்மம் நடக்கிறது. ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற பிராணிகளுக்கும் உணவு வழங்கி அவற்றையும் சந்தோசப்படுத்திக் கொண்டாட வேண்டும்.

    சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:-

    உறவுகளோடும், நட்புகளோடும் தீபாவளித் திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம். இந்த மகிழ்ச்சி, மனிதநேயம் காப்பதாகவும், நமக்குள்ளே பிரிவினைகளும், பேதங்களுமற்ற சமத்துவ சமுதாயம் மலரச் செய்வதாகவும் அமையட்டும் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்.ஆர்.தனபாலன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன்:-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அரசு குறிப்பிட்ட நேரங்களில் பட்டாசுகளை வெடித்து புகை மாசு படாமல் பாதுகாத்து, ஒருவருக்கொருவர் அன்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டு அமைதியாகவும், ஒற்றுமையாகவும், பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி மகிழ்ந்திட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    அறியாமை எனும் இருளை அகறி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச்செய்யட்டும். இந்த தீபாவளி, நம் அனைவரின் வாழ்வில் அமைதியையும், ஒற்றுமையையும், வளமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம்:-

    தீபாவளி பண்டிகையானது உள்ளங்களை உறவு கொள்ளும் வகையில் எல்லா நாடும் எங்கள் நாடு, எல்லா மக்களும் எங்கள் சொந்தம் என்று மனங்களை பகிர்ந்துகொள்ளும் அன்பு திருவிழாவாக விளங்குகிறது. இந்த இன்ப திருநாளில் எல்லோருடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் தீபங்கள் ஒளி வீசட்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் கோல்டன் அபு பக்கர், கோகுல மக்கள் எம்.வி.சேகர் ஆகியோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • கடந்த ஆண்டு அதிகமான தீவிபத்து ஏற்பட்ட இடங்கள், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு ஜீப் வடிவிலான அதி விரைவு வாகனம் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்போது பட்டாசுகளை கவனமாக வெடிக்கும்படி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இருப்பினும் எதிர்பாராத வகையில் தீ விபத்துகள் நேர்ந்தால் உடனடியாக தீயை அணைக்கவும், மீட்கவும் தீயணைப்புதுறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் நகர்ப்புறங்களில் 10 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் 20 நிமிடங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் செல்லும்படி தயார்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையில் 49 தீயணைப்பு நிலையங்களுடன் கூடுதலாக 26 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    கடந்த ஆண்டு அதிகமான தீவிபத்து ஏற்பட்ட இடங்கள், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீயணைப்பு வாகனத்துக்கும் 15 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயாராக இருப்பார்கள்.

    தண்ணீர் தேவைக்காக மெட்ரோ வாட்டர் நிலையங்களில் 50 லாரிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். சென்னையில் 1000 தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்கள். கூடுதலாக 200 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.

    இந்த ஆண்டு ஜீப் வடிவிலான அதி விரைவு வாகனம் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வாகனத்தில் டேங்கரில் ரசாயன கலவையுடன் கூடிய தண்ணீர் 500 லிட்டர் இருக்கும். வாகனத்தில் உள்ள தண்ணீரை உமிழும் மோட்டார், தண்ணீரை மழைத்தூறல் போல பீய்ச்சி அடிக்கும்.

    இதனால் தீயின் பரவலை வேகமாக கட்டுப்படுத்தி, விரைந்து அணைக்க முடியும், என தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறினர். மேலும் தண்ணீரோடு கலக்கப்பட்டிருக்கும் ரசாயனம், தீயை வேகமாக அணைக்கும் தன்மை கொண்டது. இதனால் தீயை குறைந்தளவு தண்ணீரால் அணைத்து விட முடியும் எனவும் அவர்கள் கூறினர்.

    குறுகியப் பகுதிகளில் ஏற்படும் தீயையும், சிறிய நடுத்தர விபத்துக்களில் ஏற்படும் தீயையும் அணைக்கும் வகையில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இதேபோல் தீக்காயங்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிகளில் தீக்காய வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    • ஊத்துக்கோட்டை நகரம் தமிழகம், ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது.
    • இரு மாநிலங்களிலும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    ஊத்துக்கோட்டை நகரம் தமிழகம், ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது. இரு மாநிலங்களிலும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் ஊத்துக்கோட்டைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதனால் எப்போதும் நகரம் பரபரப்பாக காணப்படும்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தற்போது கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி அறிவுறுத்தலின்படி ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே 4 சாலைகள் சந்திப்பில் போலீசார் உயர்கோபுரம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளிலும் தீபாவளி கூட்டம் அலைமோதியது.
    • சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடு பிடித்து காணப்பட்டது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடியதை போன்று இந்த வாரமும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகளை உற்சாகத்தோடு வாங்கி சென்றனர்.

    இன்று தீபாவளிக்கு முந்தைய கடைசி நாள் என்பதால் தி.நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் காலையிலேயே சென்று தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கியதை காண முடிந்தது. இதனால் கடை வீதிகளில் கூட்டம் களைகட்டி காணப்பட்டன.

    நேரம் செல்ல செல்ல... இந்த கூட்டம் அதிகமானது. பிற்பகலில் கடைவீதிகள் அனைத்திலும் திருவிழா கூட்டம்போல காணப்பட்டது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.நகர் ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் அதிகளவில் காணப்பட்டனர். அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள், சுவீட் ஸ்டால்கள், பட்டாசு கடைகள் ஆகியவற்றிலும் மக்கள் திரண்டு இனிப்பு வகைகளையும், பட்டாசுகளையும், புத்தாடைகளையும் வாங்கி மகிழ்ந்தனர். பாண்டிபஜார் பகுதியில் உள்ள சாலையோர கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த கடைகளில் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அதிகமாக காணப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கினர்.

    புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளிலும் தீபாவளி கூட்டம் அலைமோதியது. அங்குள்ள டாணா தெருவில் பூக்களின் விற்பனையும் அதிகரித்திருந்தது.

    சாலையோர கடைகளில் பூ, பழங்கள் மற்றும் தோரணங்களையும் மக்கள் வாங்கினார்கள். பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய வணிக பகுதிகளிலும் மக்கள் திரண்டு தேவையான தீபாவளி பொருட்களை வாங்கி குவித்தனர்.

    சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை சூடு பிடித்து காணப்பட்டது. அங்கு மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து மக்கள் விதவிதமான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    சென்னை மாநகர் முழுவதும் ஏராளமான பட்டாசு கடைகள் அணிவகுத்து உள்ளன. இந்த கடைகளில் பட்டாசுகளுடன் சிறுவர்கள் பயன்படுத்தும் 'பொட்டு வெடி' துப்பாக்கி விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இந்த ஆண்டு புதிது புதிதாக பட்டாசுகள், விற்பனைக்கு வந்திருந்தன. அவைகளை தேடி பிடித்தும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இப்படி பட்டாசுகள், துணி வகைகள், இனிப்பு மற்றும் கார வகைகள் ஆகியவற்றின் விற்பனை சென்னை முழுவதுமே மும்முரமாக நடைபெற்றது.

    தீபாவளியையொட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவை சேர்ந்த 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், 12 மோப்ப நாய்கள் மற்றும் அதன் பயிற்றுநர்களுடன் முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கோயம்பேடு, தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    நாளை வரை தினசரி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நடைபெறும் எனவும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் இச்சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும்.
    • புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.தர்மத்தை காக்க, அதர்மத்தை அழிக்க இறைவன் மகா விஷ்ணு தோன்றி நரகாசுரன் என்னும் அரக்கனை அழித்த திருநாளே தீபாவளி திருநாளாகும். இத்திருநாள் ஒளி மயமான எதிர்காலத்தை நமக்கு வழங்கட்டும். அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும். அ.தி.மு.க. 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிகரமான இவ்வாண்டில் காணுகின்ற தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

    அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில்லா தீபாவளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடந்தது.
    • முதலுதவி செய்வது எப்படி? போன்ற விவரங்களை கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறைஉதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன் மற்றும் வத்திராயிருப்பு நிலைய அலுவலர் பால நாகராஜ், தீ தடுப்பு குழு அலுவலர் மற்றும் பணியாளர்கள் விபத்தில்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வகுப்பும், முதலுதவி செய்வது எப்படி? போன்ற விவரங்களை கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடத்தினர்.

    • ஏழை மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
    • தீபாவளி பொருட்கள், ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பாலாஜி பிளாஸ்டிக் டிரேடர்ஸ் சார்பில் 5-வது ஆண்டு தீபாவளி பரிசு வழங்கும் விழா தெரழிலதிபர் சரவணன், இளம் தொழிலதிபர்கள் பாலாஜி, விஷ்வா ஆகியோர் தலைமையில் நடந்தது.

    தில்லை ரஹ்மான் முன்னிலை வகித்தார். கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் கபீர், ஜின்னா தெரு செய்யதுல் ஹசனாத் பள்ளிவாசல் நிர்வாக தலைவர் சையது சபிக், தொழிலதிபர் சேதுராஜா, கீழக்கரை இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழைகள் 500 பேருக்கு வேட்டி, சேலை, தீபாவளி பொருட்கள், ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

    • தீபாவளியையொட்டி கடந்த ஒரு வாரமாக பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
    • மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, பெரியகுளம், கம்பம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், தேனி, கம்பம், நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை யொட்டி பனியன் நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதுடன் ஒரு வாரம் வரை விடுமுறையும் அளிக்கப்படுவது வழக்கம்.

    இந்தாண்டு தீபாவளியையொட்டி கடந்த ஒரு வாரமாக பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. அதனைப்பெற்று கொண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு நேற்று மதியம் முதல் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேற்று மதியம் முதலே நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சாரை சாரையாக திருப்பூரில் இருந்து சென்ற வண்ணம் இருந்தனர். அவர்களின் வசதிக்கேற்ப திருப்பூர் புதிய, பழைய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

    இரவு ஏராளமான பயணிகள் குவிந்தனர். அவர்களின் வசதிக்காக விடிய விடிய திருப்பூரில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேலும் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் நேற்றிரவு பயணிகள் குவிந்தனர். இன்று காலையும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நெல்லை, நாகர்கோவில், திருச்சி, கரூர், உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயிலில் அதிகம் பேர் பயணித்தனர். பயணிகள் கூட்டம் உள்ள வரை தொடர்ந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு இதுவரை பஸ்கள், ரெயில்கள் மூலம் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, பெரியகுளம், கம்பம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. பல்லடம், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே உள்ள பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    கரூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு பஸ்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் திருப்பூர் குமார் நகர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே 60 அடி ரோட்டில் இருந்து இயக்கப்பட்டன.

    • அலங்காநல்லூரில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • தேசிய மாணவர் படை மற்றும் அரிமா சங்கம் சார்பில் விபத்தில்லாத தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் அரிமா சங்கம் சார்பில் விபத்தில்லாத தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அய்யப்பன் கோவில் முன்பிருந்து பஸ் நிலையம் வழியாக கேட்டுகடை வரை சென்று மீண்டும் பஸ் நிலையம் வந்தனர்.

    தலைமையாசிரியர் பிராக்ரன்ஸ் லதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி, அரிமா சங்க தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் மனோகரவேல் பாண்டியன், முன்னாள் தலைவர் ரகுபதி, நடராஜன், பிரபாகரன், தேசிய மாணவர் படை அலுவலர் காட்வின், நாட்டு நலப் பணி திட்ட செயலர் ஜெய்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புத்தாடை வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • கடைகளுக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்க வந்திருந்தனர்.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கி ழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி கட்ட விற்பனை இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாளை தீபாவளியை யொட்டி பொதுமக்கள் அதிகாலையில் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். இதற்காக கடந்த 2 நாட்களாக இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கடைசி நாளான இன்றும் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

    மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் பஜார் பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்தனர்.

    கூட்டம் அதிகரிப்பு

    மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு வரையிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்து காணப்பட்டது. பாளை சமாதானபுரம் மார்க்கெட் முதல் வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சந்திப்பு, டவுன் ரதவீதிகள் வரை கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ஜவுளிக்கடை மற்றும் பட்டாசு கடைகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். இதேபோல் பலகார கடைகள், பேக்கரிகள், பேன்சி கடைகள் மற்றும் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    போலீஸ் பாதுகாப்பு

    இதனால் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையொட்டி மாநகர பகுதியில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குறிப்பாக டவுன் ரதவீதிகள் மற்றும் வண்ணார்பேட்டையில் உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீசார் மோட்டார் சைக்கிள்களில் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பயணிகள் கூட்டம்

    சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ரெயில் மூலமாக இன்று காலை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதனால் அதிகாலை முதலே அங்கும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனையொட்டி பட்டாசு ஏதேனும் கொண்டு வருகிறார்களா? என்பதை ரெயில்வே போலீசார் கண்காணித்தனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்காக சிறப்பு ரெயில்களும், கூடுதல் பஸ்களும் விடப்பட்டு இருந்தது.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆலங்குளத்தில் தென்காசி பிரதான சாலை, அம்பை சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தன.

    சங்கரன்கோவில் டவுன் ரதவீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ராஜபாளையம் சாலை, கழுகுமலை சாலைகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் சாலையில் இன்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரையண்ட் நகர், அண்ணா நகர் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அலைமோதியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் டபுள்யூஜிசி ரோடு, சிவன் கோவில் பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்தன. இதேபோல் திருச்செந்தூர், கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, விளாத்திகுளம், எட்டயபுரம், சாத்தான்குளம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்பட புறநகர் பகுதிகளிலும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    • சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் 1808 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
    • 21, 22-ந் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் மொத்தம் 7208 பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்களுக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன. இந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் 1808 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. 21, 22-ந் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் மொத்தம் 7208 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 440 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரத்து 532 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த தகவலை சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

    ×