search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    • கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது.
    • கோடை வெப்பத்தின் காரணமாக தற்போது ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மி.லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. குடிநீர் குழாய், மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் குடிநீர் சப்ளை அதிகரித்து 1020 மி.லிட்டர் மற்றும் 1060 மி.லிட்டராக வினியோகிக்கப்படுகிறது. கோடை வெப்பத்தின் காரணமாக தற்போது ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மி.லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு உள்ளது.

    சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதேபோல் வருகிற செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் சப்ளை இருக்கும். தற்போதைய நிலவரப்படி சென்னையில் தினமும் 1500 மில்லியன் லிட்டர் சப்ளை செய்யும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது என்றார்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடி நீர் ஏரிகளில் 8080 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2813 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2838 மி.கனஅடியும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1774 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் 8 மாதத்திற்கு தட்டுப்பாடின்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

    • பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் கிடைக்கும்.
    • மேயரின் செயலால் சிறுமி நன்றாக படித்து தலைமை பண்பு உயரும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி 43-வது வார்டு சோழன் நகரில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 15-வது நிதிக்குழு சார்பில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

    இன்று அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    திறப்பு விழாவிற்கு வந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தான் ஆள்துளை கிணறை தொடங்கி வைக்காமல் அந்தப் பகுதியை சேர்ந்த பள்ளி சிறுமி ஐஸ்வர்யா என்பவரை ஆழ்துளை கிணறை தொடங்கி வைக்க செய்தார்.

    தொடர்ந்து அந்த சிறுமியை ஊக்கப்படுத்தி நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேயர் சண். ராமநாதனின் இந்த செயலை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வரவேற்று பாராட்டினர்.

    மேலும் மேயரின் செயலால் சிறுமி நன்றாக படித்து தலைமை பண்பு உயரும் என்றனர்.

    தொடர்ந்து சிறுமிக்கு ஐஸ்வர்யா என்று தமிழில் பெயர் வைத்ததற்காக அவரது பெற்றோரை மேயர் சண் ராமநாதன் பாராட்டினார்.

    இந்த புதிய ஆழ்துளை கிணறு மூலம் சோழன் நகர், பாலாஜி நகர் பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் கிடைக்கும்.

    இதையடுத்து அந்தப் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து உடனே நிறைவேற்றுவதாக மேயர் சண். ராமநாதன் உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், கவுன்சிலர் ஹைஜாகனி, ஒப்பந்ததாரர் பாரி, குழாய் பொருத்துனர் பிரபாகர், 43- வது வார்டு செயலாளர் ராஜரத்தினம் என்ற ஜித்து, பகுதி பிரதிநிதி வாசிம்ராஜா, 45-வது வார்டு செயலாளர் சுரேஷ் ரோச் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் அருகே வெங்குளம் கிராமத்தில் குடிநீருக்காக கிராம மக்களே நிதிதிரட்டி கிணறுதோண்டி உள்ளனர்.
    ராமநாதபுரம்:

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வெள்ளா ஊராட்சி. இங்குள்ள வெங்குளம் கிராமத்தில் கடந்த காலங்களில் யூனியன் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதன்பின்னர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்கள் போடப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக குடிநீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. கண்மாயில் உள்ள கிணற்றில் தண்ணீர் வறண்டு ஊற்று ஊறியதும் ஒரு மணி நேரம் காத்திருந்து மக்கள் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கிராம மக்கள் குடிப்பதற்கும், அன்றாட உபயோகத்திற்கும் தேவைப்படும் தண்ணீருக்காக அவதிப்படும் நிலையை கண்ட இளைஞர்கள்,கிராமமக்கள் தாங்களே கிணறு தோண்ட முடிவு செய்தனர். இதற்காக இளைஞர்கள், கிராம மக்கள் நிதி அளித்து கண்மாய்க்கு 2 கிணறுகள் தோண்டி உள்ளனர். ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் கிணறுகளை தோண்டியதில் ஒரு கிணற்றில் உவர்ப்பு தன்மையுடனும், மற்றொன்றில் ஓரளவு நல்ல தண்ணீரும் கிடைத்துள்ளது.

    தற்போதைய நிலையில் இந்த கோடை வறட்சியை இந்த தண்ணீரை கொண்டு சமாளித்து கொள்ளலாம் என்று கிராமத்தினர் தெரிவித்தனர். தண்ணீருக்காக அரசை நம்பி எதிர்பார்த்து காத்திருக்காமல் வெங்குளம் கிராம மக்கள் தாங்களே நிதி திரட்டிகிணறு தோண்டி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டுள்ளது பாராட்டுக்குரியது.
    விருத்தாசலம் அருகே செம்மண் கலந்த குடிநீர் வினியோகம் செய்வதால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சி புதிய காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் இருந்து மினிகுடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதானது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மினிகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக இருந்தது.

    இதுகுறித்து பொதுமக்கள், ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதன் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரமாக இப்பகுதி மக்களுக்கு செம்மண் கலந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஆழ்துளை கிணற்றை முறையாக பராமரிக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் அலைந்து திரிகின்றனர். அதனால் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாநிலம் முழுவதும் அடுத்த 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான தண்ணீர் தமிழக அணைகளில் இருப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்து உள்ளதால், ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் தற்போது அதிகம் பேசப்படும் வார்த்தை ‘குடிநீர் தட்டுப்பாடு’ என்பது தான்.

    ஆனால் மாநிலம் முழுவதும் சுமார் 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தேவையான குடிநீர் வழங்குவதற்கு போதுமான நீர் தமிழக அணைகளில் இருப்பதாக மாநில குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் கூறியதாவது:-

    சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மேட்டூர் அணை மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தினசரி 1,016.07 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தினசரி ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    93 ஆயிரத்து 470 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 16 ஆயிரத்து 172 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் காவிரி மூலம் 120 நாட்களும், கொள்ளிடம் ஆறு மூலம் நூறு நாட்களுக்கும் குடிநீர் வினியோகிக்க முடியும்.

    மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறுவாணி அணை மற்றும் பில்லூர் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் சோலையாறு அணையில் 255 மில்லியன் கன அடியும், பரம்பிக்குளம் அணையில் 2 ஆயிரத்து 204 மில்லியன் கன அடியும், ஆழியாறு அணையில் 575 மி.க.அடியும், திருமூர்த்தி அணையில் 309 மி.க.அடியும், சிறுவாணியில் 22.04 மில்லியன் கன அடியும், பில்லூர் நீர்த்தேக்கத்தில் 1,182 மி.க.அடியும் தண்ணீர் உள்ளது.

    பரம்பிக்குளத்தில் இருந்து 150 நாட்களுக்கும், சிறுவாணியில் இருந்து 90 நாட்களுக்கும், பில்லூர் நீர்தேக்கத்தில் இருந்து 170 நாட்களுக்கும் குடிநீர் வழங்க முடியும். இதைப்போல சாத்தனூர் அணையில் 825 கனஅடி தண்ணீர் உள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்த 120 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    திருவண்ணாமலையில் குடிநீர்கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகரில் 1 முதல் 7 தெருக்களில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் வேலூர் ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகம் அருகே சாலை மறியல் செய்தனர்.

    சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவலறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், ஊராட்சி செயலாளர் உமாபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    விழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டு காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீரை நிரப்பும் மின் மோட்டார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென பழுதானது. அந்த மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்யாததால் கடந்த ஒரு வார காலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்ற முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் பழுதான மின் மோட்டாரை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 9.45 மணியளவில் பானாம்பட்டு மெயின்ரோட்டுக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இதன் காரணமாக விழுப்புரம்- பில்லூர் சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பழுதான மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 10.45 மணியளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக அந்த வழியாக பில்லூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சை அவர்கள் சிறைபிடித்தனர். குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எடுத்தால், தான் அந்த பஸ்சை அங்கிருந்து விடுவிப்பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பஸ்சையும் அங்கிருந்து அவர்கள் விடுவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



    ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள சக்திநகரில் கடந்த 7 மாதமாக குடிநீர் சரியாக வழங்காததை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று காலை ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் சக்திநகரில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, பாரதி, ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், 3 நாட்களில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

    இதனால் பல முறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் ஊராட்சி அலுவலக அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவர்த்ததை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சுண்டிபள்ளம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில், அப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மின்மாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதையடுத்து வேறு இடத்தில் உள்ள ஒரு மின் மாற்றியில் இருந்து சுண்டிபள்ளம் கிராமத்திற்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றும் மின்மோட்டார் மின்னழுத்தம் குறைவு காரணமாக வேலை செய்யவில்லை.

    இதனால் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப் படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நேற்று காலை 7 மணியளவில் சுண்டிபள்ளம் கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலையில் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலையரசன், செல்வக்குமார், வசந்த், திவாகர் மற்றும் மீன்சுருட்டி மின்சார உதவி பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் கூறுகையில், உடனடியாக பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    பெரம்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

    குடிநீர் வாரியம் லாரிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்தாலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.

    பெரம்பூர் தீட்டிதோட்டம் 1-வது தெரு முதல் 7-வது தெரு மற்றும் ஜானகிராமன் நகர் பகுதிக்கு குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. குழாய்களில் குடிநீர் வரும்போது கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    நிறம் மாறி வரும் தண்ணீர் குடிக்க இயலாத நிலையில் இருப்பதால் அதனை வீட்டு உபயோகத்திற்குதான் பயன்படுத்தும் நிலை உள்ளது.


    குடிநீர் தேவை அதிகரித்து வரும் கோடை காலத்தில் இப்பிரச்சினையை பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பேப்பர் மில் சாலைக்கு வந்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக சென்ற அரசு பஸ்கள் வழியில் நிறுத்தப்பட்டன. கார், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாத படி நின்றன.

    தகவல் அறிந்து செம்பியம் மற்றும் திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    ஆனாலும் 2 மணி நேரம் பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாற்று பாதை வழியாக சென்றனர்.

    இளம்பிள்ளை அருகே குடிநீர் கேட்டு நேற்று 3-வது நாளாக காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இளம்பிள்ளை:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த 13-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் அந்த பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக இப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.

    இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட முருகன் நகர், மோட்டூர் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி குடிநீர் சரிவர கிடைக்கவில்லை எனவும், குடிநீர் வசதி செய்து தர வேண்டியும், நேற்று ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் இளம்பிள்ளை-சின்னப்பம்பட்டி சாலையில் புவன கணபதி கோவில் அருகே திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பேரூராட்சி சார்பில், அப்பகுதி மக்களுக்கு உடனடியாக டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் வினியோகம் நடந்தது.
    ×