கிரிக்கெட்

ஹர்திக் பாண்ட்யா கூறிய அந்த வார்த்தை தான் 47 ரன்கள் அடிக்க உதவியது: அக்சர் படேல்

Published On 2024-07-19 09:52 GMT   |   Update On 2024-07-19 09:52 GMT
  • இந்தியா 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது.
  • இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர்.

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 ஆண்டு கழித்து உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர்.

இறுதிப்போட்டியில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா அணி தடுமாறியபோது 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 31 பந்தில் 47 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் 4-வது இடத்தில் களமிறங்கியது குறித்து அக்சர் படேல் சமீபத்திய அளித்த பேட்டியில் கூறியதாவது:

போட்டியின் ஆரம்பத்திலேயே 3 விக்கெட் விழுந்ததும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தன்னை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பினர்.

ரிஷப் பண்ட் அவுட்டானபோது என்னுடைய பின்புறத்தில் நின்று கொண்டிருந்த ரோகித் பாய் பேட்டிங் செய்யத் தயாராகுமாறு சொன்னார்.

அடுத்த சில நிமிடங்களில் என்னிடம் ஓடி வந்த சஹால், பயிற்சியாளர் ராகுல் பாய் பேட்டிங் செய்வதற்கு தயாராகுமாறு சொன்னதாக சொன்னார். அப்போது எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. ஏனெனில் 2 விக்கெட் விழுந்த பின்பும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் சூரியகுமாரும் அவுட்டானார்.

எதைப் பற்றியும் யோசிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்போது களத்திற்குச் சென்ற என்னிடம் "எதற்காகவும் பதறாமல் பந்தை பார்த்து அடி" என ஹர்திக் பாண்ட்யா குஜராத்தி மொழியில் சொன்னார். அது என்னுடன் ஒட்டிக்கொண்டது. அதன்பின் நான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தேன். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது என தெரிவித்தார்.

Tags:    

Similar News