கிரிக்கெட்

கடைசி டெஸ்ட் போட்டியை நேரில் காணும் இந்திய ஆஸ்திரேலிய பிரதமர்கள்

Published On 2023-03-06 12:28 GMT   |   Update On 2023-03-06 12:28 GMT
  • பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தினை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஒன்றாக ரசித்து பார்க்க இருக்கின்றனர்
  • இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான வலுவான இணைப்புக்கான அடையாளம் ஆகும்.

அகமதாபாத்:

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்த பயணத்தில் அந்நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலா துறை மந்திரி டான் பர்ரெல், வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவுக்கான மந்திரி மேடலின் கிங் உள்ளிட்டோரும் மற்றும் உயர்மட்ட வர்த்தக குழு ஒன்றும் வருகை தர இருக்கிறது.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8-ந்தேதி ஹோலி பண்டிகை தினத்தில் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வருகை தருகிறார். அதன்பின்னர் 9-ந்தேதி மும்பை நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அதே நாளில் அவர் டெல்லிக்கும் செல்கிறார் என தெரிவித்து உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான விரிவான செயல்திட்டம் சார்ந்த நட்புறவின் கீழான ஒத்துழைப்பு பற்றிய வருடாந்திர கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதுதவிர, பரஸ்பர நலன் சார்ந்த, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் இருவரும் விவாதிக்க உள்ளனர். இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அல்பானீஸ் சந்தித்து பேசுவார் என்று மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசின் இந்திய பயணம் பற்றி இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஓ பர்ரெல் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ஹோலி பண்டிகை தினத்தன்று மாலை வேளையில் அகமதாபாத் நகருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வருகை தருவார். ஹோலி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறேன்.

இந்த பயணத்தில், அகமதாபாத் நகரில் நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தினை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஒன்றாக ரசித்து பார்க்க இருக்கின்றனர் என கூறியுள்ளார். இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான வலுவான இணைப்புக்கான அடையாளம் ஆகும். ஆனால், இரு நாட்டு பிரதமர்களும் பரஸ்பர சுற்றுப்பயணம் மேற்கொள்வதனால், கிடைக்கும் உண்மையான பலனானது. இரு நாடுகளும் வெற்றி பெறும் என்பதே ஆகும் என குடிமக்களிடம் என்னால் கூற முடியும் என்று அவர் பேசியுள்ளார்.

Tags:    

Similar News