ரஞ்சி கோப்பை: தமிழ்நாட்டிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் விளாசினார் ஷர்துல் தாக்கூர்
- அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் தனது அதிரடி ஆட்டத்தால் 89 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பின்னர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்தார்.
தற்போது வரை, 322 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை மும்பை அணி இழந்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி 176 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.