செய்திகள்

காதலியுடன் இருக்கும் படத்தை வெளியிடுவதாக கூறியதால் மாணவர் தற்கொலை

Published On 2018-05-30 08:25 GMT   |   Update On 2018-05-30 08:25 GMT
சேலத்தில் காதலியுடன் இருக்கும் படத்தை வெளியிடுவதாக மிரட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் ஜாகீர்ரெட்டிப் பட்டியை சேர்ந்தவர் அபினவ்(வயது 20). இவர் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தார். அவர் கடந்த வாரம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன் தொலைந்துபோன மன வருத்தத்தில் அவர் இந்த முடிவை எடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘திடீர்’ திருப்பமாக சிலர் அவரை பணம் கேட்டு மிரட்டியதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மாணவனுடைய பெற்றோர் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் மீது புகார் கொடுத்துள்ளனர். இதில், தனது மகனை சிலர் செல்போனில் மிரட்டி உள்ளனர். அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை செய்த கொண்ட மாணவன் அபினவ், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் பெற்றோருக்கு தெரிய வரவே, அந்த பெண்ணை திருமணம் செய்து தருமாறு அபினவ் தரப்பில் கேட்டுள்ளனர். இதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. காதலிக்கும் போது அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள் செல்போனில் இருந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த மாணவர்கள் சிலர் அபினவ் செல்போனை திருடி வைத்துக்கொண்டு மிரட்டி வந்துள்ளனர். பல லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததுடன், பணத்தை கொடுக்காவிட்டால் செல்போனில் உள்ள புகைப்படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

இது பற்றி தெரிந்ததும் அந்த பெண், தனது படங்கள் வெளிவந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவன் அபினவ் வேறுவழி தெரியாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்கொலை செய்த அன்று அபினவ் இறந்து விட்டாரா? என பார்ப்பதற்கு மிரட்டல் விடுத்த நண்பர்கள் வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது போலீசார் அபினவ் செல்போனுக்கு யாரெல்லாம் பேசினார்கள்? என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.இதையடுத்து மிரட்டல் விடுத்த மாணவர்கள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News