செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க ஏற்பாடு- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Published On 2018-06-07 09:52 GMT   |   Update On 2018-06-07 09:52 GMT
12-ம் வகுப்பு மாணவர்கள் விடுமுறை நாட்களில் பல்வேறு தொழிற்சாலைகளில் பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பல்வேறு உறுப்பினர்கள் பேசுகையில், “மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தற்போது மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் ஜவுளித்துறை உள்பட 12 தொழிற்துறைகளின் பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தவிர 12-ம் வகுப்பு மாணவர்கள் விடுமுறை நாட்களில் பல்வேறு தொழிற்சாலைகளில் பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சுய வேலைவாய்ப்பை பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இளமை ரகசியத்தை துரைமுருகன் சபையில் தெரிவிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கே.வி.குப்பம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லோகநாதன் தனது தொகுதிக்கு ஒரு புதிய வட்டம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயகுமார், “அம்மாவின் அரசு மக்கள் நலனுக்காக இதுவரை 72 வட்டங்களை அமைத்துள்ளது. இதுகுறித்தும் பரிசீலிக்கப்படும்” என்றார். அப்போது பேசிய துரைமுருகன் (தி.மு.க.), “அம்மாவின் அரசு 73-வது வட்டமாக அ.தி.மு.க. உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

உடனே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அம்மாவின் அரசு என்று குறிப்பிட்டதற்கு நன்றி. அவர் புதுப்பொலிவுடன் வண்ணமயமாக வந்திருக்கிறார். என்றும் 16 ஆக காட்சியளிக்கும் அவரது இளமையின் ரகசியம் என்ன என்பதை இங்கு தெரிவிக்க வேண்டும்” என்றார். இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்- சட்ட மசோதா தாக்கல்

சட்டசபையில் இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஒரு மசோதா தாக்கல் செய்தார். அதில் தீப்பெட்டி- பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதன் உரிமையாளர் ரூ.50 ஆயிரத்துக்கு காப்பீடு செய்வதை ரூ.1 லட்சமாக உயர்த்த வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் இன்னொரு சட்ட மசோதாவையும் அமைச்சர் தாக்கல் செய்தார். அதில் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களை செயல்படுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்துவதற்கு வகை செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது. #TNAssembly
Tags:    

Similar News