செய்திகள்

கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அதிவேகமாக செல்லும் பஸ்களால் பயணிகள் அச்சம்

Published On 2018-08-24 10:21 GMT   |   Update On 2018-08-24 10:21 GMT
கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அதிவேகமாக பஸ்கள் செல்வதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கூறியுள்ளனர்.
கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு வழியாக கோவை- பொள்ளாச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தவழியாக 130-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், தனியார்பஸ்களும் கோவை, பொள்ளாச்சி,வால்பாறை, உடுமலை, பழனி, மதுரை உள்ளிட்ட பல ஊர்களுக்கு கிணத்துக்கடவு வழியாக செல்கிறது.

தற்போது கோவை- ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி வரை உள்ள 26.85 கிலோமீடடர் தூரத்தில் உள்ள ரோடு 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவுபெற்று அதன்பின் இந்த வழியில் ரோட்டின் இருபுறங்களில் வழக்கம்போல் பஸ்கள் இயங்கும்.

புதிய சாலை கான்கிரீட் கலவையால் நவீன முறையில் அமைககப்பட்டு வருவதால் இந்த சாலையில் வாகனங்களில் பயணிப்பதற்கு சொகுசாக அமையும் என நெடுஞ்சாலைத்துறையினர் கூறினார்கள். இதில் கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் பாலம் கட்ட தூண்கள் அமைக்கும் பணிகளும், முள்ளுப்பாடி ரெயில்வே கேட் மற்ற பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தற்போது பொள்ளாச்சி ஆச்சிப்பட்டிமுதல் கிணத்துக்கடவு வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதால். ரோட்டில் இருபுறங்களிலும் தாறுமாறாக வாகனங்கள் செல்ல தொடங்கியுள்ளது .4 வழிச்சாலையில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் போவதற்கும் மற்றொரு பாதை வருவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இருபகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள ரோட்டிலும் எதிர்திசையிலும் வாகனங்கள் ஒரே ரோட்டில் தாறுமாறாக வருவதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுவருகிறது.

மேலும் பொள்ளாச்சி கிணத்துக்கடவு இடையே சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றதால் இந்த வழியில் தற்போது மீண்டும் தனியார் பஸ்களின் வேகம் அதிகரித்துள்ளது.

கோவையில் இருந்து மலுமிச்சம்பட்டி பகுதிக்கு வந்ததும் வேகம் எடுக்கும் பஸ்கள் மின்னல் வேகத்தில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில் பாளையம், ஆச்சிப்பட்டி வழியாக பொள்ளாச்சியை சென்றடைகிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதிவேகத்தில் வரும் தனியார் பஸ்களால் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சந்தேகவுண்டன்பாளையம், தாமரைக்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டு பலர் காயம்அடைந்தனர்.

சிலவிபத்தில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோதவாடி பிரிவு, அரசம்பாளையம் பிரிவு பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பஸ்கள் கட்டுப்படுத்த முடியாமல் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புகள் மீது மோதியும் ரோட்டோரம் பள்ளத்தில் இறங்கியும் உள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கூறினர். #tamilnews
Tags:    

Similar News