செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? பிரதமர் மோடி மதுரையில் பதில் சொல்ல வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2019-01-26 10:22 GMT   |   Update On 2019-01-26 11:07 GMT
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றினாரா என்பது குறித்து மதுரையில் பதில் சொல்ல வேண்டும் என்று முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #mkstalin #pmmodi #bjp

சென்னை:

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்காக வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை நாம் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

இந்தி மட்டுமல்ல எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்ல. ஒருவர் அறிவு வளர்ச்சிக்காக, ஆர்வத்தின் காரணமாக எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். பேசலாம். எழுதலாம். நாம் எதிர்ப்பது எந்தவொரு மொழியையும் அல்ல. மொழியின் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வர இருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்ட இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை வரவேற்கிறேன். தவறு என்று வாதிடவில்லை. ஆனால், இந்த நான்கரை ஆண்டு காலம் என்ன செய்தீர்கள் என்பது தான் மோடியைப் பார்த்து நான் வைக்கும் கேள்வி. மிகப் பெரிய மிருக பலத்தோடு ஆட்சி அமைத்தீர்களே நான்கரை வருடம் ஆகி விட்டது, இதுவரை என்ன செய்தீர்கள்?

2014-ம் ஆண்டு பாராளு மன்றத் தேர்தலுக்கு முன்னதாக மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வாய்க்கு வந்ததை எல்லாம் சொன்னீர்களே, வானத்தை கிழிப்பேன் வைகுண்டத்தை காட்டுவேன் என சொன்னீர்களே, எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்போம், திறப்போம் என்று சொன்னீர்களே. பதவிக்கு வந்ததும் இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் அமைப்போம், திறப்போம் என்று சொன்னீர்கள். இந்த ஐந்தில் ஒரு மாநிலத்தில்கூட எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை. இது தான் தேர்தலில் நீங்கள் தந்த உறுதி மொழியின் லட்சணமா?

2015-ம் ஆண்டு சொன்னார்கள் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று. இது 2019-ம் ஆண்டு. நான்காண்டு காலம் முடிந்து விட்டது. இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வரப் போகிறது. இரண்டு நாள் கழித்து தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப் போகிறார் என்றால் இந்த ஐந்தாண்டு காலத்தில் என்ன செய்தார்?


இந்தியா முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றுவோம் என்றார். 100 அல்ல 1 நகரமாவது ஸ்மார்ட் நகரமாக ஆக்கப்பட்டுள்ளதா? மோடி அவர்களே இன்னும் இரண்டு நாட்களில் வரவிருக்கிறீர்கள். இதனைச் சொல்லக்கூடிய தகுதி உங்களுக்கு இருக்கிறதா?

தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய 11 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவோம் என்றார்கள். ஸ்மார்ட் சிட்டி ஆக்கினார்களா இல்லையா? அந்த நகரத்தைச் சேர்ந்தவர்களைத் தான் நான் கேட்க விரும்புகிறேன். மோடி அவர்களால் ஸ்மார்ட் நகரங்களாக மாற்றப்பட்டு விட்டதா?

தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தார் மோடி. அப்போது ஒவ்வொரு ஊரில் பேசும் போதும் ஒவ்வொரு வாக்குறுதிகள் கொடுத்திருந்தார். அதை யெல்லாம் நிறைவேற்றி இருப்பார் என்று பார்த்தால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

ராமநாதபுரத்தில் பேசிய மோடி தமிழக மீனவர்களுக்கு இலங்கை நாட்டால் பிரச்சினை, குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டால் பிரச்னை. இரண்டையும் தீர்க்க ஒரு குழுவை அமைப்போம் என்றார். அமைத்தாரா மோடி? இதுவரை இல்லை?

இந்தியாவின் பிரதமராக மோடி தானே இருக்கிறார்? இவர் இரும்பு மனிதர் தானே? இல்லை. பித்தளை மனிதராக ஆகிவிட்டாரா?

எதையும் நிறைவேற்றாமல் ஓட்டுக் கேட்க வருகிறீர்களே, அறிவித்த அறிவிப்புகள் தூங்கிக் கொண்டிருக்கிறது. முடங்கிக் கிடக்கிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வோட்டுக் கேட்டு வருகிறீர்கள்? என்று நான் கேட்கிறேன்.

எதையுமே செய்யாமல், எவ்வித கூச்சமும் இல்லாமல் எப்படி மதுரைக்கு வருகிறீர்கள்? மதுரைக்கு வருகின்ற மோடி எய்ம்ஸ் கொண்டு வருவதற்கு கூட அல்ல, அடிக்கல் நாட்டுவதற்கு ஏன் ஐந்து ஆண்டுகள் ஆனது என்பதைச் சொல்ல வேண்டும்.

இப்போது இருக்கும் முதல்-அமைச்சர் ஊழல் செய்ததோடு மட்டு மல்லாமல், கொலை வழக்கிலும் சிக்கி இருக்கிறார்.

தி.மு.க நிச்சயமாக ஆட்சிக்கு வரும். ஆட்சிக்கு வரத்தான் போகிறது. நமக்கும் ஜெயலலிதாவுக்கும் எத்தனையோ கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், முதல்- அமைச்சராக இருந்து மறைந்திருக்கிறார். அவர் மரணத்துக்குக் காரணமானவர்களை கண்டறிந்து சிறையில் தள்ளுவது தான் தி.மு.க.வின் வேலை.

நியாயமாக 117 மெஜாரிட்டி இருக்க வேண்டும். ஆனால், இருப்பது 114. அதுவும் ஒன்று போய் விட்டது. ஓசூர், பெயர் கூட பாலகிருஷ்ண ரெட்டி. இப்பொழுது மந்திரிகள் பெயர் கூட ஞாபகத்தில் மக்களுக்கு இல்லை. 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. 11 எம்.எல்.ஏக்களின் தீர்ப்பு வருகிறதாம். அதோகதி. அதற்காக யாகம் நடத்தியதாக இப்போது வந்திருக்கும் செய்தி.

இப்படிப்பட்ட அடிமைத் தனமான, கோழைத்தனமான, ஒரு ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி, இதற்குத் துணைபோகும் பாசிச ஆட்சி இந்த இரண்டு அரசுகளையும் நாட்டை விட்டு விரட்ட உறுதியேற்போம், சபதமேற்போம். நம்முடைய தியாகிகள் பெயரால் உறுதியேற்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.  #mkstalin #pmmodi #bjp 

Tags:    

Similar News