செய்திகள்

ரபேல் ஊழலில் பிரதமருக்கு தொடர்பு: சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் - திருமாவளவன்

Published On 2019-02-09 05:09 GMT   |   Update On 2019-02-09 05:09 GMT
ரபேல் ஊழலில் பிரதமர் மோடி அரசின் பொய் வாக்குமூலத்தை நம்பி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். #Thirumavalavan #PMModi
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரபேல் விமான பேர ஊழலில் பிரதமர் அலுவலகம் ஈடுபட்டதும் அதனால் இந்திய அரசுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதும் ஆதாரப்பூர்வமாக ஆங்கில நாளேட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் உண்மை முழுமையாக வெளிப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் மீண்டும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

ரபேல் விமான பேரத்தில் அதற்கென நியமிக்கப்பட்ட குழு மட்டும்தான் ஈடுபட்டது வேறு எவரும் அதில் தலையிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.



ஆனால் மத்திய அரசு கூறியதற்கு மாறாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளோடு பிரதமர் அலுவலகம் பேரத்தில் ஈடுபட்டதும், அதனால் ஏற்கனவே இந்தியாவின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு இந்தியாவுக்கு நட்டம் ஏற்படும் நிலை உருவானதும், அதற்கு பாதுகாப்பு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததும் ஆவணங்களின் சான்றுகளோடு ஆங்கில நாளேட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, மோடி அரசின் பொய் வாக்குமூலத்தை நம்பி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thirumavalavan #PMModi
Tags:    

Similar News