உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள்

Published On 2023-04-26 09:21 GMT   |   Update On 2023-04-26 09:21 GMT
  • போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கோவை,

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். பின்னர் இரவில் கலைந்து சென்றனர்.

இன்று 2-வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் சாலையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கூறியதாவது:-

10 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையங்கள் ஆக்குவதையும், 5 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளூர் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும்.காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

கோடை காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத கால விடுமுறை விட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியருக்கும் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News