கோவில்பட்டி என்.இ.சி. கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமை தாங்கினார்.
- மாணவர்கள் போதை பொருட்களின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று டி.எஸ்.பி. வெங்கடேஷ் பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் ஜூனியர் ஜே.சி.கிளப், நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமை தாங்கினார். முதல்வர் காளிதாசமுருகவேல் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் போதை பொருட்களின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். போதை பொருட்களின் பயன்பாட்டை வேரோடு அழிக்க வேண்டும். போதை பொருட்களின் தாக்கத்தினால் மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை இழக்க நேரிடும். எனவே, தாங்கள் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றார்.
கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டுப் பேசினார். தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, நேஷனல் பொறியியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் டி.எஸ்.பி. போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். மின் மற்றும் மின்னணுவியல் துறை உதவி பேராசிரியர் குமார் நன்றி கூறினார்.