- குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக காரிமங்கலம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் அந்தக் கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக காரிமங்கலம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப் இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் தலைமையில் காரிமங்கலம் அகரம் பிரிவு சாலை, மொரப்பூர் சாலை, பெரியாம்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரிமங்கலம் அருகே அகரம் பிரிவு சாலை அருகே பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற சொகுசு கார் அதி வேகமாக வந்தது. போலீசார் காரை நிறுத்த முற்பட்டபோது டிரைவர் சிறு தூரம் தள்ளி காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
போலீசார் சந்தேகம் அடைந்து காரை சோதனை செய்தபோது மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்தக் கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அந்த கார் எங்கிருந்து வந்தது? குட்கா கடத்தியவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.