கோவில்பட்டி கட்டிட தொழிலாளி கொலை- தந்தையை அவமானப்படுத்தியதால் குத்திக்கொலை செய்தேன் - கைதானவர் வாக்குமூலம்
- முத்துராஜிடம் செல்போன் இல்லை என்பதால் தேடுவதில் போலீசாருக்கு சற்று சிரமம் இருந்தது.
- தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் முத்துராஜ் தொடர்பு கொண்டது தெரியவந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுக்கிராமம் அருகே உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (30). கட்டிட தொழிலாளி.
கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் (39). கட்டிட தொழிலாளியான இவர் பாலமுருகனிடம் ரூ10 ஆயிரம் கடன் பெற்று இருந்தாக தெரிகிறது.
இந்த பணம் கொடுங்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துராஜ், பாலமுருகனை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
கோவில்பட்டி கிழக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பெயரில் டி.எஸ்.பி. வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படையை சேர்ந்த நாரயணசாமி, ஏட்டு முருகன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் தலைமறைவாக இருந்த முத்துராஜை தேடி வந்தனர்.
முத்துராஜிடம் செல்போன் இல்லை என்பதால் தேடுவதில் போலீசாருக்கு சற்று சிரமம் இருந்தது. எனினும் வெளியூரில் உள்ள முத்துராஜ் உறவினர் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் முத்துராஜ் தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் அவர் மூலமாக முத்துராஜ் எங்கு இருக்கிறார் என்பது குறித்து விசாரித்த போது பாநாசத்தில் இருப்பதாகவும், அந்த நபரை சந்திக்க புதுக்கோட்டைக்கு வருவதாக முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முத்துராஜ் கூறியதாவது-
பாலமுருகனிடம் நான் 10 ஆயிரம் பணம் கடனாக பெற்று இருந்தேன். அதனை திருப்பி கொடுத்த பிறகும், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
சம்பவத்தன்று பாலமுருகன் எனது வீட்டிற்கு சென்று எனது தந்தை வடிவேலை அவதூறாக பேசினார்.
நான் வீட்டிற்கு வந்த பிறகு இது தெரிந்ததும், பாலமுருகனை சத்தம் போடுவதற்காக சென்ற போது மது போதையில் இருந்த பாலமுருகன் என்னையும் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டேன்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.