உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே மாயமான பள்ளி மாணவன் சேலத்தில் மீட்பு

Published On 2022-10-20 09:58 GMT   |   Update On 2022-10-20 09:58 GMT
  • கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர். இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
  • நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளார்.

சேலம்:

கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர். இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் அந்த பகுதியில் உள்ள டியூசன் சென்டரில் டியூசன் படித்து வந்துள்ளார். டியூசன் சென்டரில் செல்போன் மாயமானது குறித்து நேற்று முன்தினம் மாணவனிடம் அந்த டியூசன் ஆசிரியர் விசாரித்துள்ளார். மேலும் அவரது தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டில் மாணவனை கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அவர், நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் அங்கிருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளார்.

பள்ளி சீருடையில் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவனை கண்ட பள்ளப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மாணவனுக்கு இரவு உணவு வாங்கி கொடுத்து உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே மாணவன் வீடு திரும்பாததால் அவரது தந்தை கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்திருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி புகழேந்தி கணேசன் மற்றும் மாணவனின் பெற்றோர் நேற்று நள்ளிரவு சேலம் வந்து மாணவனை அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News